நீதிமொழி 30:21-31

நீதிமொழி 30:21-31 TCV

“மூன்று காரியங்களால் பூமி நிலைகுலைகிறது, இல்லை, நான்காவது காரியத்தையோ அதினால் தாங்க முடியவில்லை: அரசனாகிவிடும் வேலைக்காரன், மூடனுக்கு அளவுக்கதிகமாய் உணவு கிடைப்பதும், யாராலும் விரும்பப்படாதிருந்தும் கடைசியில் திருமணமாகும் பெண், தன் எஜமானியின் இடத்தை அபகரிக்கும் வேலைக்காரியுமே. “பூமியில் மிகச்சிறிய உயிரினங்கள் நான்கு உண்டு, ஆனாலும் அவை மிகவும் ஞானமுள்ளவை: எறும்புகள் மிக வலிமை குறைந்த உயிரினங்கள்; ஆனாலும், அவை கோடைகாலத்தில் தங்கள் உணவைச் சேமித்து வைக்கின்றன; குறுமுயல்களும் வலுக்குறைந்த பிராணிகளே; ஆனாலும், உயரமான கற்பாறைகளின் வெடிப்பில் தங்களுக்கு வீடுகளை அமைக்கின்றன. வெட்டுக்கிளிகளுக்கோ அரசன் இல்லை, ஆனாலும் அவை ஒன்றாய் அணிவகுத்துச் செல்கின்றன; பல்லியையோ கையால் பிடித்துக்கொள்ளலாம், ஆனாலும் அது அரச மாளிகைகளிலும் காணப்படுகிறது. “வீர நடையுடைய மூன்று உண்டு, இல்லை, கம்பீரத் தோற்றமுடைய நான்காவதும் உண்டு: மிருகங்களில் வலிமைமிக்கது சிங்கம், அது எதைக் கண்டும் பின்வாங்குவதில்லை; கர்வத்துடன் நடக்கும் சேவல், வெள்ளாட்டுக்கடா ஆகியவையும்; தன் இராணுப்படை சூழ நிற்கும் அரசனுமே.