நீதிமொழிகள் 26:1-11

நீதிமொழிகள் 26:1-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

கோடைகாலத்தில் உறைபனியும் அறுவடை காலத்தில் மழையும் தகாததுபோல், மூடருக்கு மேன்மை பொருத்தமற்றது. சிறகடித்துப் பறக்கும் அடைக்கலான் குருவியைப்போலவும் விரைந்து பறக்கும் இரட்டைவால் குருவியைப்போலவும் காரணமின்றி இடப்பட்ட சாபமும் தங்காது. குதிரைக்கு சவுக்கும், கழுதைக்கு கடிவாளமும், மூடரின் முதுகிற்கு பிரம்பும் ஏற்றது. மூடர்களுக்கு அவர்களுடைய மூடத்தனத்தின்படி பதில் சொல்லாதே; சொன்னால் நீயும் அவர்களைப்போல் இருப்பாய். மூடருக்கு அவர்களுடைய மூடத்தனத்திற்கேற்ற பதிலைக் கொடு; இல்லாவிட்டால் அவர்கள் தங்களை ஞானமுள்ளவர்கள் என்று எண்ணிக்கொள்வார்கள். மூடருடைய கையில் செய்தி கொடுத்து அனுப்புவது, தன் காலைத் தானே வெட்டுவதைப் போலவும் கேடு விளைவிப்பது போலவும் இருக்கும். மூடரின் வாயிலுள்ள பழமொழி, பெலனற்றுத் தொங்கும் முடவரின் கால்கள்போல் இருக்கும். மூடருக்குக் கனத்தைக் கொடுப்பது, கவணிலே கல்லைக் கட்டுவதுபோல் இருக்கும். மூடரின் வாயிலுள்ள பழமொழி, குடிகாரனின் கையிலுள்ள முட்செடியைப் போலிருக்கும். மூடரையோ வழிப்போக்கரையோ கூலிக்கு அமர்த்துபவன், கண்டபடி அம்புகளை எய்து காயப்படுத்தும் வில்வீரனைப் போலிருக்கிறான். நாய் தான் கக்கினதை மீண்டும் தேடிப்போகிறது போல, மூடரும் தம் மூடத்தனத்திற்குத் திரும்புகிறார்கள்.

நீதிமொழிகள் 26:1-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

கோடைக்காலத்திலே உறைந்த பனியும், அறுப்புக்காலத்திலே மழையும் தகாததுபோல, மூடனுக்கு மகிமை தகாது. அடைக்கலான் குருவி அலைந்துபோவதுபோலவும், தகைவிலான் குருவி பறந்து போவதுபோலவும், காரணம் இல்லாமல் சொன்னசாபம் தங்காது. குதிரைக்குச் சவுக்கும், கழுதைக்குக் கடிவாளமும், மூடனுடைய முதுகுக்குப் பிரம்பும் ஏற்றது. மூடனுக்கு அவனுடைய மதியீனத்தின்படி மறுஉத்திரவு கொடுக்காதே; கொடுத்தால் நீயும் அவனைப்போல ஆவாய். மூடனுக்கு அவனுடைய மதியீனத்தின்படி மறுஉத்திரவு கொடு; கொடுக்காவிட்டால் அவன் தன்னுடைய பார்வைக்கு ஞானியாக இருப்பான். மூடன் கையிலே செய்தி அனுப்புகிறவன் தன்னுடைய கால்களையே வெட்டிக்கொண்டு நஷ்டத்தை அடைகிறான். நொண்டியின் கால்கள் குந்திக்குந்தி நடக்கும், அப்படியே மூடர்களின் வாயிலுள்ள உவமைச்சொல்லும் குந்தும். மூடனுக்கு மரியாதை கொடுக்கிறவன் கவணிலே கல்லைக்கட்டுகிறவன்போல் இருப்பான். மூடன் வாயில் அகப்பட்ட பழமொழி வெறியன் கையில் அகப்பட்ட முள். பலத்தவன் அனைவரையும் நோகச்செய்து, மூடனையும் வேலைவாங்குகிறான், மீறி நடக்கிறவர்களையும் வேலைவாங்குகிறான். நாயானது தான் கக்கினதை சாப்பிடும்படித் திரும்புவதுபோல, மூடனும் தன்னுடைய மூடத்தனத்திற்குத் திரும்புகிறான்.

நீதிமொழிகள் 26:1-11 பரிசுத்த பைபிள் (TAERV)

கோடைக்காலத்தில் பனி விழக்கூடாது. அறுவடை காலத்தில் மழை பெய்யக்கூடாது. அது போலவே ஜனங்கள் அறிவற்றவர்களைப் பெருமைப்படுத்தக் கூடாது. ஒருவன் உனக்குக் கேடு ஏற்படும்படி சபித்தால் அதற்காகக் கவலைப்படாதே. நீ தவறு செய்யாமல் இருந்தால் உனக்கு எந்தக் கேடும் ஏற்படாது. அவர்களின் வார்த்தைகள் நிற்காமல் பறந்து செல்லும் தடுக்க முடியாத பறவைகளைப் போன்றிருக்கும். குதிரைக்கு ஒரு சவுக்கு வேண்டும். கழுதைக்குக் கடிவாளம் வேண்டும். முட்டாளுக்கு அடிகொடுக்க வேண்டும். இங்கே ஒரு இக்கட்டான சூழ்நிலை. ஒரு முட்டாள் மூடத்தனமான கேள்வியைக் கேட்டால் நீயும் ஒரு மூடத்தனமான பதிலைக்கொடுக்கவேண்டாம். ஏனென்றால் நீயும் முட்டாளைப்போன்று தோன்றுவாய். ஆனால் ஒரு முட்டாள் ஒரு மூடத்தனமான கேள்வியைக் கேட்டால் நீயும் ஒரு மூடத்தனமான பதிலையே கூறவேண்டும். இல்லையெனில் அவன் தன்னை ஞானியாக நினைத்துக்கொள்வான். உனது செய்தியை ஒரு முட்டாள் எடுத்துச் செல்லும்படி அனுமதிக்காதே. நீ அவ்வாறு செய்தால் உனது காலை நீயே வெட்டிக்கொள்வது போன்றது. நீயே துன்பத்தைத் தேடிக்கொள்கிறாய். ஒரு முட்டாள் புத்திசாலித்தனத்தோடு பேச முயற்சிப்பது ஊனமான ஒருவன் நடக்க முயற்சிசெய்வது போன்றதாகும். ஒரு முட்டாளுக்குப் பெருமை சேர்ப்பது, கவணிலே கல்லைக் கட்டுவதுப் போல் இருக்கும். ஒரு முட்டாள் ஞானமுள்ள ஒன்றைச் சொல்ல முயல்வது ஒரு குடிகாரன் தன் கரத்திலுள்ள முள்ளை எடுக்க முயற்சி செய்வது போன்றதாகும். ஒரு முட்டாளையோ, அல்லது யாரோ ஒரு வழிப்போக்கனையோ வேலைக்கு வைத்துக்கொள்வது ஆபத்தானது. அவன் யாருக்குத் துன்பம் தருவான் என்பதைத் தீர்மானிக்க முடியாது. ஒரு நாய் எதையாவது தின்னும், பிறகு அதை வாந்தி எடுக்கும், பின் அதனையே தின்னும். இது போலவே முட்டாள்களும் மூடத்தனத்தையே திரும்பத் திரும்பச் செய்வார்கள்.

நீதிமொழிகள் 26:1-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

உஷ்ணகாலத்திலே உறைந்த பனியும், அறுப்புக்காலத்திலே மழையும் தகாததுபோல, மூடனுக்கு மகிமை தகாது. அடைக்கலான் குருவி அலைந்துபோவதுபோலும், தகைவிலான் குருவி பறந்து போவதுபோலும், காரணமில்லாமலிட்ட சாபம் தங்காது. குதிரைக்குச் சவுக்கும், கழுதைக்குக் கடிவாளமும், மூடனுடைய முதுகுக்குப் பிரம்பும் ஏற்றது. மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடாதே; கொடுத்தால் நீயும் அவனைப் போலாவாய். மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடு; கொடாவிட்டால் அவன் தன் பார்வைக்கு ஞானியாயிருப்பான். மூடன் கையிலே செய்தி அனுப்புகிறவன் தன் கால்களையே தறித்துக்கொண்டு நஷ்டத்தை அடைகிறான். நொண்டியின் கால்கள் குந்திக்குந்தி நடக்கும், அப்படியே மூடரின் வாயிலுள்ள உவமைச்சொல்லும் குந்தும். மூடனுக்குக் கனத்தைக் கொடுக்கிறவன் கவணிலே கல்லைக்கட்டுகிறவன்போலிருப்பான். மூடன் வாயில் அகப்பட்ட பழமொழி வெறியன் கையில் அகப்பட்ட முள்ளு. பெலத்தவன் அனைவரையும் நோகப்பண்ணி, மூடனையும் வேலைகொள்ளுகிறான், மீறி நடக்கிறவர்களையும் வேலைகொள்ளுகிறான். நாயானது தான் கக்கினதைத் தின்னும்படி திரும்புவதுபோல, மூடனும் தன் மூடத்தனத்துக்குத் திரும்புகிறான்.