நீதிமொழிகள் 26:1-11

நீதிமொழிகள் 26:1-11 TAERV

கோடைக்காலத்தில் பனி விழக்கூடாது. அறுவடை காலத்தில் மழை பெய்யக்கூடாது. அது போலவே ஜனங்கள் அறிவற்றவர்களைப் பெருமைப்படுத்தக் கூடாது. ஒருவன் உனக்குக் கேடு ஏற்படும்படி சபித்தால் அதற்காகக் கவலைப்படாதே. நீ தவறு செய்யாமல் இருந்தால் உனக்கு எந்தக் கேடும் ஏற்படாது. அவர்களின் வார்த்தைகள் நிற்காமல் பறந்து செல்லும் தடுக்க முடியாத பறவைகளைப் போன்றிருக்கும். குதிரைக்கு ஒரு சவுக்கு வேண்டும். கழுதைக்குக் கடிவாளம் வேண்டும். முட்டாளுக்கு அடிகொடுக்க வேண்டும். இங்கே ஒரு இக்கட்டான சூழ்நிலை. ஒரு முட்டாள் மூடத்தனமான கேள்வியைக் கேட்டால் நீயும் ஒரு மூடத்தனமான பதிலைக்கொடுக்கவேண்டாம். ஏனென்றால் நீயும் முட்டாளைப்போன்று தோன்றுவாய். ஆனால் ஒரு முட்டாள் ஒரு மூடத்தனமான கேள்வியைக் கேட்டால் நீயும் ஒரு மூடத்தனமான பதிலையே கூறவேண்டும். இல்லையெனில் அவன் தன்னை ஞானியாக நினைத்துக்கொள்வான். உனது செய்தியை ஒரு முட்டாள் எடுத்துச் செல்லும்படி அனுமதிக்காதே. நீ அவ்வாறு செய்தால் உனது காலை நீயே வெட்டிக்கொள்வது போன்றது. நீயே துன்பத்தைத் தேடிக்கொள்கிறாய். ஒரு முட்டாள் புத்திசாலித்தனத்தோடு பேச முயற்சிப்பது ஊனமான ஒருவன் நடக்க முயற்சிசெய்வது போன்றதாகும். ஒரு முட்டாளுக்குப் பெருமை சேர்ப்பது, கவணிலே கல்லைக் கட்டுவதுப் போல் இருக்கும். ஒரு முட்டாள் ஞானமுள்ள ஒன்றைச் சொல்ல முயல்வது ஒரு குடிகாரன் தன் கரத்திலுள்ள முள்ளை எடுக்க முயற்சி செய்வது போன்றதாகும். ஒரு முட்டாளையோ, அல்லது யாரோ ஒரு வழிப்போக்கனையோ வேலைக்கு வைத்துக்கொள்வது ஆபத்தானது. அவன் யாருக்குத் துன்பம் தருவான் என்பதைத் தீர்மானிக்க முடியாது. ஒரு நாய் எதையாவது தின்னும், பிறகு அதை வாந்தி எடுக்கும், பின் அதனையே தின்னும். இது போலவே முட்டாள்களும் மூடத்தனத்தையே திரும்பத் திரும்பச் செய்வார்கள்.