நீதிமொழிகள் 24:17-34
நீதிமொழிகள் 24:17-34 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
உன் பகைவன் விழும்போது நீ ஏளனம் செய்து மகிழாதே; அவன் தடுமாறும்போது, உன் இருதயத்தில் சந்தோஷமடையாதே. நீ மகிழ்ந்தால் யெகோவா அதைக்கண்டு அவன்மேலிருக்கும் தன் கோபத்தை விலக்கி உன்மேல் மனவருத்தமடைவார். தீமையானவர்களைக் குறித்து எரிச்சலடையாதே, கொடியவர்கள்மேல் பொறாமை கொள்ளாதே. ஏனெனில் தீய மனிதனுக்கு எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை இல்லை; கொடியவர்களின் விளக்கோ அணைந்துபோகும். என் மகனே, யெகோவாவுக்கும் அரசனுக்கும் பயந்து நட, கலகக்காரர்களுடன் நீ சேராதே. ஏனெனில், திடீரென அவர்களுக்கு அழிவு வரும், யெகோவாவும் அரசனும் எத்தகைய பேரழிவை அனுப்புவார்கள் என்று யாருக்குத் தெரியும்? ஞானிகளின் கூடுதலான பழமொழிகள் என்னவெனில்: நியாயத்தீர்ப்பில் பாரபட்சம் காட்டுவது நல்லதல்ல: குற்றவாளியைப் பார்த்து, “நீ குற்றமில்லாதவன்” எனச் சொல்பவனை மக்கள் சபிப்பார்கள், நாடுகள் அனைத்தும் அவனை வெறுப்பார்கள். ஆனால் குற்றவாளியைக் கடிந்துகொள்கிறவனுக்கு நலமுண்டாகும், அவர்கள்மேல் மிகுந்த ஆசீர்வாதம் பெருகும். நேர்மையான பதில் உதடுகளில் கொடுக்கும் முத்தத்தைப் போலிருக்கும். உன் வெளிவேலைகளை ஒழுங்குபடுத்தி, உன் வயல்வெளிகளை ஆயத்தப்படுத்து; அதின்பின், உனது வீட்டைக் கட்டு. காரணமின்றி உன் அயலானுக்கு விரோதமாக சாட்சி கூறாதே; பொய்களை சொல்ல உன் உதடுகளை நீ பயன்படுத்தலாமா? “அவன் எனக்குச் செய்ததுபோல நானும் அவனுக்குச் செய்வேன்” என்றோ, “அவன் செய்ததற்குத் தக்கதாக நானும் அவனைத் தண்டிப்பேன்” என்றோ நீ ஒருபோதும் சொல்லாதே. நான் சோம்பேறியின் வயலைக் கடந்து சென்றேன்; புத்தியில்லாதவனின் திராட்சைத் தோட்டத்தையும் கடந்து சென்றேன்; அதெல்லாம் முள்ளுக்காடாக இருந்தது; தரையெங்கும் களைகள் நிறைந்திருந்தன, தோட்டத்தின் கற்சுவரும் இடிந்து கிடந்தது. நான் பார்த்ததை என் இருதயத்தில் சிந்தித்தேன்; அப்பொழுது நான் கண்டதிலிருந்து ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டேன்: கொஞ்சம் நித்திரை செய்வேன், கொஞ்சம் தூங்குவேன், கொஞ்சம் என் கைகளை மடித்து ஓய்வெடுப்பேன் என்பாயானால், வறுமை கொள்ளைக்காரனைப்போல் உன்மேல் வரும்; பற்றாக்குறை ஆயுதம் தாங்கிய முரடனைப்போல உன்னைத் தாக்கும்.
நீதிமொழிகள் 24:17-34 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
உன் எதிரி விழும்போது சந்தோஷப்படாதே; அவன் இடறும்போது உன்னுடைய இருதயம் சந்தோஷப்படாமல் இருப்பதாக. யெகோவா அதைக் காண்பார், அது அவருடைய பார்வைக்கு தீங்காக இருக்கும்; அப்பொழுது அவனிடத்திலிருந்து அவர் தமது கோபத்தை நீக்கிவிடுவார். பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலாகாதே; துன்மார்க்கர்மேல் பொறாமை கொள்ளாதே. துன்மார்க்கனுக்கு நல்ல முடிவு இல்லை; துன்மார்க்கர்களுடைய விளக்கு அணைந்துபோகும். என் மகனே, நீ யெகோவாவுக்கும் ராஜாவுக்கும் பயந்து நட, கலகக்காரர்களோடு சேராதே. திடீரென அவர்களுடைய ஆபத்து எழும்பும்; அவர்கள் இருவரின் அழிவையும் அறிந்தவன் யார்? பின்னும் ஞானமுள்ளவர்களின் புத்திமதிகள் என்னவெனில்: நியாயத்திலே பாரபட்சம் நல்லதல்ல. துன்மார்க்கனைப் பார்த்து: நீதிமானாக இருக்கிறாய் என்று சொல்லுகிறவனை மக்கள் சபிப்பார்கள், குடிமக்கள் அவனை வெறுப்பார்கள். அவனைக் கடிந்துகொள்ளுகிறவர்கள்மேல் பிரியம் உண்டாகும், அவர்களுக்கு உத்தம ஆசீர்வாதம் கிடைக்கும். செம்மையான மறுமொழி சொல்லுகிறவன் உதடுகளை முத்தமிடுகிறவனுக்குச் சமம். வெளியில் உன்னுடைய வேலையைத் தயாராக்கி, வயலில் அதை ஒழுங்காக்கி, பின்பு உன்னுடைய வீட்டைக் கட்டு. நியாயமில்லாமல் பிறனுக்கு விரோதமாகச் சாட்சியாக ஏற்படாதே; உன்னுடைய உதடுகளினால் வஞ்சகம் பேசாதே. அவன் எனக்குச் செய்தபடி நானும் அவனுக்குச் செய்வேன், அவன் செய்த செயல்களுக்குத் தகுந்தபடி நானும் அவனுக்குச் சரிக்கட்டுவேன் என்று நீ சொல்லாதே. சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய திராட்சைத்தோட்டத்தையும் கடந்துபோனேன். இதோ, அதெல்லாம் முள்ளுக்காடாக இருந்தது; நிலத்தின் முகத்தை முட்கள் மூடினது, அதின் கற்சுவர் இடிந்துகிடந்தது. அதைக் கண்டு சிந்தனை செய்தேன்; அதை நோக்கிப் புத்தியடைந்தேன். இன்னும் கொஞ்சம் உறங்கட்டும், இன்னும் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு தூங்கட்டும் என்பாயோ? உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலவும் உன் வறுமை ஆயுதம் அணிந்தவனைப்போலவும் வரும்.
நீதிமொழிகள் 24:17-34 பரிசுத்த பைபிள் (TAERV)
உன் எதிரிக்குத் துன்பம் வரும்போது அதைக் கண்டு மகிழ்ச்சி அடையாதே. அவன் விழும்போதும் மகிழ்ச்சி அடையாதே. நீ அவ்வாறு செய்தால் கர்த்தர் அதனைக் காண்பார். அதற்காக கர்த்தர் மகிழ்ச்சியடையமாட்டார். கர்த்தர் உன் எதிரிக்கே உதவி செய்வார். தீயவர்களைக் குறித்து கவலைப்படாதே. அவர்களைக் கண்டு பொறாமையும் அடையாதே. தீயவர்களுக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை. அவர்களின் விளக்கு அணைந்துபோகும். மகனே! கர்த்தருக்கும் ராஜாவுக்கும் மரியாதை செய். அவர்களுக்கு எதிரானவர்களோடு சேராதே. ஏனென்றால் அத்தகையவர்கள் விரைவில் அழிக்கப்படுவார்கள். தேவனும் ராஜாவும் தம் எதிரிகளுக்கு எவ்வளவு துன்பத்தைக்கொடுப்பார்கள் என்பது உனக்குத் தெரியாது. இவை ஞானம் உள்ளவர்களின் வார்த்தைகள். ஒரு நீதிபதி நேர்மையாக இருக்கவேண்டும். ஒருவன் தெரிந்தவன் என்பதற்காக அவனுக்கு சார்பாக இருக்கக்கூடாது. ஒரு நீதிபதி தவறு செய்தவனை விடுதலை செய்து தீர்ப்பு அளித்தால், ஜனங்கள் அவனுக்கு எதிராக மாறுவார்கள். மற்ற நாட்டு ஜனங்களும்கூட அவனை இழிவாகக் கூறுவார்கள். ஆனால் ஒரு நீதிபதி தவறு செய்தவனைத் தண்டித்தால் அதற்காக ஜனங்கள் மகிழ்ச்சி அடைவார்கள். ஒரு நேர்மையான பதில் ஜனங்கள் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தும். அது உதடுகளில் இடுகிற முத்தத்தைப் போன்றது. உனது வயலில் நடுவதற்கு முன்னால் வீடு கட்டாதே. வாழ்வதற்கான வீட்டைக் கட்டும் முன்னால் உணவுக்காகப் பயிர் செய்வதற்கான உறுதியான ஏற்பாடுகளைச் செய்துக்கொள். சரியான காரணம் இல்லாமல் ஒருவனுக்கு எதிராகப் பேசாதே. பொய் சொல்லாதே. “அவன் என்னைக் காயப்படுத்தினான். எனவே அதுபோல் நானும் அவனைக் காயப்படுத்துவேன். அவன் எனக்குச் செய்ததற்காக நான் அவனைத் தண்டிப்பேன்” என்று சொல்லாதே. சோம்பேறியான ஒருவனுக்குச் சொந்தமான வயலைக் கடந்து நான் நடந்து சென்றேன். ஞானம் இல்லாத ஒருவனுக்குச் சொந்தமான திராட்சைத் தோட்டத்தின் வழியாக நான் நடந்து சென்றேன். அனைத்து இடங்களிலும் முட்செடிகள் வளர்ந்திருந்தன. தரையில் பயனற்ற புதர்களும் வளர்ந்திருந்தன. தோட்டத்தைச் சுற்றுலுமிருந்த சுவர்கள் உடைந்து விழுந்துகிடந்தன. நான் இவற்றைப் பார்த்து அதைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். பின் நான் இவற்றிலிருந்து ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டேன். ஒரு சிறு தூக்கம், ஒரு சிறு ஓய்வு, கைகளை மடக்கிக்கொண்டு சிறு தூக்கம் எனலாமா? இதுபோன்ற செயல்கள் விரைவில் உன்னை ஏழையாக்கிவிடும். உன்னிடம் ஒன்றும் இருக்காது. ஒரு திருடன் கதவை உடைத்துவந்து வீட்டிலுள்ள அனைத்தையும் எடுத்துப்போனதுபோல் இருக்கும்.
நீதிமொழிகள் 24:17-34 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
உன் சத்துரு விழும்போது சந்தோஷப்படாதே; அவன் இடறும்போது உன் இருதயம் களிகூராதிருப்பதாக. கர்த்தர் அதைக் காண்பார், அது அவர் பார்வைக்குப் பொல்லாப்பாயிருக்கும்; அப்பொழுது அவனிடத்தினின்று அவர் தமது கோபத்தை நீக்கிவிடுவார். பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலாகாதே; துன்மார்க்கர்மேல் பொறாமை கொள்ளாதே. துன்மார்க்கனுக்கு நல்முடிவு இல்லை; துன்மார்க்கருடைய விளக்கு அணைந்துபோகும். என் மகனே, நீ கர்த்தருக்கும் ராஜாவுக்கும் பயந்து நட, கலகக்காரரோடு கலவாதே. சடிதியில் அவர்களுடைய ஆபத்து எழும்பும்; அவர்கள் இருவரின் சங்காரத்தையும் அறிந்தவன் யார்? பின்னும் ஞானமுள்ளவர்களின் புத்திமதிகள் என்னவெனில்: நியாயத்திலே முகதாட்சிணியம் நல்லதல்ல. துன்மார்க்கனைப் பார்த்து: நீதிமானாயிருக்கிறாய் என்று சொல்லுகிறவனை ஜனங்கள் சபிப்பார்கள், பிரஜைகள் அவனை வெறுப்பார்கள். அவனைக் கடிந்துகொள்ளுகிறவர்கள்மேல் பிரியமுண்டாகும், அவர்களுக்கு உத்தம ஆசீர்வாதம் கிடைக்கும். செம்மையான மறுமொழி சொல்லுகிறவன் உதடுகளை முத்தமிடுகிறவனுக்குச் சமானம். வெளியில் உன் வேலையை எத்தனப்படுத்தி, வயலில் அதை ஒழுங்காக்கி, பின்பு உன் வீட்டைக் கட்டு, நியாயமின்றிப் பிறனுக்கு விரோதமாய்ச் சாட்சியாக ஏற்படாதே; உன் உதடுகளினால் வஞ்சகம் பேசாதே. அவன் எனக்குச் செய்தபிரகாரம் நானும் அவனுக்குச் செய்வேன், அவன் செய்த செய்கைக்குத்தக்கதாக நானும் அவனுக்குச் சரிக்கட்டுவேன் என்று நீ சொல்லாதே. சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய திராட்சத்தோட்டத்தையும் கடந்துபோனேன். இதோ, அதெல்லாம் முள்ளுக்காடாயிருந்தது; நிலத்தின் முகத்தைக் காஞ்சொறி மூடினது, அதின் கற்சுவர் இடிந்துகிடந்தது. அதைக் கண்டு சிந்தனைபண்ணினேன்; அதை நோக்கிப் புத்தியடைந்தேன். இன்னுங்கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங்கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ? உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலும் உன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலும் வரும்.