நீதிமொழி 24:17-34

நீதிமொழி 24:17-34 TCV

உன் பகைவன் விழும்போது நீ ஏளனம் செய்து மகிழாதே; அவன் தடுமாறும்போது, உன் இருதயத்தில் சந்தோஷமடையாதே. நீ மகிழ்ந்தால் யெகோவா அதைக்கண்டு அவன்மேலிருக்கும் தன் கோபத்தை விலக்கி உன்மேல் மனவருத்தமடைவார். தீமையானவர்களைக் குறித்து எரிச்சலடையாதே, கொடியவர்கள்மேல் பொறாமை கொள்ளாதே. ஏனெனில் தீய மனிதனுக்கு எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை இல்லை; கொடியவர்களின் விளக்கோ அணைந்துபோகும். என் மகனே, யெகோவாவுக்கும் அரசனுக்கும் பயந்து நட, கலகக்காரர்களுடன் நீ சேராதே. ஏனெனில், திடீரென அவர்களுக்கு அழிவு வரும், யெகோவாவும் அரசனும் எத்தகைய பேரழிவை அனுப்புவார்கள் என்று யாருக்குத் தெரியும்? ஞானிகளின் கூடுதலான பழமொழிகள் என்னவெனில்: நியாயத்தீர்ப்பில் பாரபட்சம் காட்டுவது நல்லதல்ல: குற்றவாளியைப் பார்த்து, “நீ குற்றமில்லாதவன்” எனச் சொல்பவனை மக்கள் சபிப்பார்கள், நாடுகள் அனைத்தும் அவனை வெறுப்பார்கள். ஆனால் குற்றவாளியைக் கடிந்துகொள்கிறவனுக்கு நலமுண்டாகும், அவர்கள்மேல் மிகுந்த ஆசீர்வாதம் பெருகும். நேர்மையான பதில் உதடுகளில் கொடுக்கும் முத்தத்தைப் போலிருக்கும். உன் வெளிவேலைகளை ஒழுங்குபடுத்தி, உன் வயல்வெளிகளை ஆயத்தப்படுத்து; அதின்பின், உனது வீட்டைக் கட்டு. காரணமின்றி உன் அயலானுக்கு விரோதமாக சாட்சி கூறாதே; பொய்களை சொல்ல உன் உதடுகளை நீ பயன்படுத்தலாமா? “அவன் எனக்குச் செய்ததுபோல நானும் அவனுக்குச் செய்வேன்” என்றோ, “அவன் செய்ததற்குத் தக்கதாக நானும் அவனைத் தண்டிப்பேன்” என்றோ நீ ஒருபோதும் சொல்லாதே. நான் சோம்பேறியின் வயலைக் கடந்து சென்றேன்; புத்தியில்லாதவனின் திராட்சைத் தோட்டத்தையும் கடந்து சென்றேன்; அதெல்லாம் முள்ளுக்காடாக இருந்தது; தரையெங்கும் களைகள் நிறைந்திருந்தன, தோட்டத்தின் கற்சுவரும் இடிந்து கிடந்தது. நான் பார்த்ததை என் இருதயத்தில் சிந்தித்தேன்; அப்பொழுது நான் கண்டதிலிருந்து ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டேன்: கொஞ்சம் நித்திரை செய்வேன், கொஞ்சம் தூங்குவேன், கொஞ்சம் என் கைகளை மடித்து ஓய்வெடுப்பேன் என்பாயானால், வறுமை கொள்ளைக்காரனைப்போல் உன்மேல் வரும்; பற்றாக்குறை ஆயுதம் தாங்கிய முரடனைப்போல உன்னைத் தாக்கும்.