நீதிமொழிகள் 17:1-5
நீதிமொழிகள் 17:1-5 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
சண்டையோடுகூடிய வீடுநிறைந்த கொழுமையான பதார்த்தங்களைப் பார்க்கிலும், அமரிக்கையோடே சாப்பிடும் வெறும் துணிக்கையே நலம். புத்தியுள்ள வேலைக்காரன் இலச்சையுண்டாக்குகிற புத்திரனை ஆண்டு, சகோதரருக்குள்ள சுதந்தரத்தில் பங்கடைவான். வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்; இருதயங்களைச் சோதிக்கிறவரோ கர்த்தர். துஷ்டன் அக்கிரம உதடுகள் சொல்வதை உற்றுக்கேட்கிறான்; பொய்யன் கேடுள்ள நாவுக்குச் செவிகொடுக்கிறான். ஏழையைப் பரியாசம்பண்ணுகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; ஆபத்தைக் குறித்துக் களிக்கிறவன் தண்டனைக்குத் தப்பான்.
நீதிமொழிகள் 17:1-5 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
சண்டை நடக்கும் ஒரு வீட்டின் நிறைவான விருந்தைவிட, சமாதானத்துடன் அமைதியாய் சாப்பிடும் காய்ந்த அப்பத்துண்டே சிறந்தது. விவேகமுள்ள வேலைக்காரன் அவமானத்தைக் கொண்டுவருகிற மகனை ஆளுவான், பின்பு அந்த வேலைக்காரன் குடும்பத்தில் ஒருவனைப்போல் சகோதரருடைய உரிமைச் சொத்திலும் பங்குபெறுவான். வெள்ளியை உலைக்கலமும் தங்கத்தை சூளையும் சோதிக்கும், ஆனால் இருதயத்தை சோதிக்கிறவர் யெகோவா. கொடியவர்கள் தீமையான பேச்சை ஆர்வமாய்க் கேட்கிறார்கள்; பொய்ப் பேசுபவர்கள் அவதூறைப் பேசும் நாவைக் கவனித்துக் கேட்கிறார்கள். ஏழைகளை ஏளனம் செய்பவர்கள் அவர்களை படைத்தவரையே அவமதிக்கிறார்கள்; பிறரின் துன்பத்தைக் கண்டு மகிழ்பவர்கள் தண்டனைக்குத் தப்புவதில்லை.
நீதிமொழிகள் 17:1-5 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
சண்டையோடுகூடிய வீடுநிறைந்த சுவையான உணவைவிட, சமாதானத்தோடு சாப்பிடும் வெறும் அப்பமே நலம். புத்தியுள்ள வேலைக்காரன் அவமானத்தை உண்டாக்குகிற மகனை ஆண்டு, சகோதரர்களுடைய சுதந்தரத்தில் பங்கை அடைவான். வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்; இருதயங்களைச் சோதிக்கிறவரோ யெகோவா. தீயவன் அக்கிரம உதடுகள் சொல்வதை உற்றுக்கேட்கிறான்; பொய்யன் கேடுள்ள நாவுக்குச் செவிகொடுக்கிறான். ஏழையைப் புறக்கணிக்கிறவன் அவனை உண்டாக்கினவரை சபிக்கிறான்; ஆபத்தைக் குறித்துக் மகிழ்கிறவன் தண்டனைக்குத் தப்பமாட்டான்.
நீதிமொழிகள் 17:1-5 பரிசுத்த பைபிள் (TAERV)
எப்பொழுதும் வாதமிடுகிறவர்களின் வீட்டில் முழுச்சாப்பாடு உண்பதைவிட, ஒரு துண்டு காய்ந்த ரொட்டியை சமாதானத்தோடு தின்பது நல்லது. அறிவுத்திறமுள்ள வேலைக்காரன் தன் எஜமானின் மூட குமாரனையும் அடக்கி ஆள்வான். அவ்வேலைக்காரன் குமாரனைப்போல நடத்தப்பட்டு, பரம்பரைச் சொத்தில் பங்கும்பெறுவான். பொன்னையும் வெள்ளியையும் தூய்மைப்படுத்தவே நெருப்பில் போடுகிறார்கள். ஆனால் ஜனங்கள் இதயங்களை கர்த்தர் ஒருவரே சுத்தம் செய்கிறார். தீயவர்கள் மற்றவர்கள் சொல்லும் தீயவற்றையே கவனிக்கின்றனர். பொய்யர்கள் பொய்யையே கவனிக்கின்றனர். சிலர் ஏழை ஜனங்களைக் கேலிச் செய்வார்கள். தொல்லைகளுக்கு உள்ளானவர்களைப் பார்த்து அவர்கள் சிரிப்பார்கள். தம்மைப் படைத்த தேவனை அவர்கள் மதிப்பதில்லை என்பதையே இது காட்டுகிறது. அத்தீய ஜனங்கள் தண்டிக்கப்படுவார்கள்.