நீதி 17

17
அத்தியாயம் 17
விவேகத்தினால் வரும் நன்மை
1சண்டையோடுகூடிய வீடுநிறைந்த சுவையான உணவைவிட,
சமாதானத்தோடு சாப்பிடும் வெறும் அப்பமே நலம்.
2புத்தியுள்ள வேலைக்காரன் அவமானத்தை உண்டாக்குகிற மகனை ஆண்டு,
சகோதரர்களுடைய சுதந்தரத்தில் பங்கை அடைவான்.
3வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்;
இருதயங்களைச் சோதிக்கிறவரோ யெகோவா.
4தீயவன் அக்கிரம உதடுகள் சொல்வதை உற்றுக்கேட்கிறான்;
பொய்யன் கேடுள்ள நாவுக்குச் செவிகொடுக்கிறான்.
5ஏழையைப் புறக்கணிக்கிறவன் அவனை உண்டாக்கினவரை சபிக்கிறான்;
ஆபத்தைக் குறித்துக் மகிழ்கிறவன் தண்டனைக்குத் தப்பமாட்டான்.
6பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோர்களுக்குக் கிரீடம்;
பிள்ளைகளின் மேன்மை அவர்களுடைய தகப்பன்மார்களே.
7மேன்மையானவைகளைப் பேசும் உதடு மூடனுக்குத் தகாது;
பொய் பேசும் உதடு பிரபுவுக்கு கொஞ்சம்கூட தகாது.
8லஞ்சம் வாங்குகிறவர்களின் பார்வைக்கு அது இரத்தினம்போல இருக்கும்;
அது பார்க்கும் திசையெல்லாம் காரியம் வாய்க்கும்.
9குற்றத்தை மூடுகிறவன் நட்பை நாடுகிறான்;
கேட்டதைச் சொல்லுகிறவன் உயிர் நண்பனையும் பிரித்துவிடுகிறான்.
10மூடனை நூறடி அடிப்பதைவிட,
புத்திமானை வாயினால் கண்டிப்பதே அதிகமாக உறைக்கும்.
11தீயவன் கலகத்தையே தேடுகிறான்;
கொடிய தூதன் அவனுக்கு விரோதமாக அனுப்பப்படுவான்.
12தன்னுடைய மதிகேட்டில் திரியும் மதியீனனுக்கு எதிர்ப்படுவதைவிட,
குட்டிகளைப் பறிகொடுத்த கரடிக்கு எதிர்ப்படுவது மேல்.
13நன்மைக்குத் தீமைசெய்கிறவன் எவனோ,
அவனுடைய வீட்டைவிட்டுத் தீமை நீங்காது.
14சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்துவிடுகிறதுபோல இருக்கும்;
ஆதலால் விவாதம் எழும்புமுன்பு அதை விட்டுவிடு.
15துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும்,
நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவனுமாகிய இந்த இருவரும் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள்.
16ஞானத்தை வாங்கும்படி மூடன் கையிலே பணம் என்னத்திற்கு?
அதின்மேல் அவனுக்கு மனமில்லையே.
17நண்பன் எல்லாக் காலத்திலும் நேசிப்பான்;
இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்.
18புத்தியீனன் தன்னுடைய நண்பனுக்காக உறுதியளித்துப் பிணைப்படுகிறான்.
19விவாதப்பிரியன் பாவப்பிரியன்;
தன்னுடைய வாசலை உயர்த்திக் கட்டுகிறவன் அழிவை நாடுகிறான்.
20மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையைக் கண்டடைவதில்லை;
பொய் நாவுள்ளவன் தீமையில் விழுவான்.
21மதிகெட்ட மகனைப் பெறுகிறவன் தனக்குச் சஞ்சலம் உண்டாக அவனைப் பெறுகிறான்;
மதியீனனுடைய தகப்பனுக்கு மகிழ்ச்சியில்லை.
22மனமகிழ்ச்சி நல்ல மருந்து;
முறிந்த ஆவியோ எலும்புகளை உலரச்செய்யும்.
23துன்மார்க்கன், நீதியின் வழியைப்புரட்ட மடியிலுள்ள லஞ்சத்தை வாங்குகிறான்.
24ஞானம் புத்திமானுக்கு முன்பாக இருக்கும்;
மூடனுடைய கண்களோ பூமியின் கடைசி எல்லைகள்வரை செல்லும்.
25மதிகெட்ட மகன் தன்னுடைய தகப்பனுக்குச் சலிப்பும்,
தன்னைப் பெற்றவர்களுக்குக் கசப்புமானவன்.
26நீதிமானைத் தண்டிப்பதும், நியாயம்செய்கிறவனைப் பிரபுக்கள் அடிக்கிறதும் தகுதியல்ல.
27அறிவாளி தன்னுடைய வார்த்தைகளை அடக்குகிறான்;
விவேகி குளிர்ந்த மனமுள்ளவன்.
28பேசாமலிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்;
தன்னுடைய உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

நீதி 17: IRVTam

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்