நீதிமொழிகள் 15:1-7
நீதிமொழிகள் 15:1-7 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
சாந்தமான பதில் கடுங்கோபத்தைத் தணிக்கும்; ஆனால் கடுஞ்சொல்லோ கோபத்தைத் தூண்டுகிறது. ஞானியின் நாவு அறிவை பயன்படுத்தும்; ஆனால் மூடரின் வாயோ மூடத்தனத்தை வெளிக்காட்டும். யெகோவாவின் கண்கள் எங்கும் நோக்கமாயிருக்கின்றன, அவை கொடியவர்களையும் நல்லவர்களையும் உன்னிப்பாய் கவனிக்கின்றன. சுகத்தைக் கொடுக்கும் நாவு ஒரு வாழ்வுதரும் மரம் போன்றது, ஆனால் வஞ்சனையுள்ள நாவோ உள்ளத்தை நொறுக்கும். மூடர் தமது பெற்றோர் தம்மை நற்கட்டுப்பாடு செய்யும்போது, அதை உதாசீனம் செய்கிறார்கள்; ஆனால் கண்டித்துத் திருத்துதலை ஏற்றுக்கொள்பவர்களோ விவேகிகள். நீதிமான்களின் வீட்டில் மிகுந்த செல்வம் உண்டு, ஆனால் கொடியவர்களின் வருமானமோ தொல்லையையே கொண்டுவரும். ஞானியின் உதடுகள் அறிவைப் பரப்பும், ஆனால் மூடர்களின் இருதயங்களோ நேர்மையானதில்லை.
நீதிமொழிகள் 15:1-7 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
சாந்தமான பதில் கடுங்கோபத்தை அடக்கும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும். ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; மூடர்களின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும். யெகோவாவின் கண்கள் எந்த இடத்திலுமிருந்து, நல்லவர்களையும், தீயவர்களையும் நோக்கிப்பார்க்கிறது. ஆரோக்கியமுள்ள நாவு ஜீவமரம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும். மூடன் தன்னுடைய தகப்பனுடைய புத்தியை அலட்சியப்படுத்துகிறான்; கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி. நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷம் உண்டு; துன்மார்க்கனுடைய வருமானத்திலோ துன்பம் உண்டு. ஞானிகளின் உதடுகள் அறிவை விதைக்கும்; மூடர்களின் இருதயமோ அப்படியல்ல.
நீதிமொழிகள் 15:1-7 பரிசுத்த பைபிள் (TAERV)
ஒரு சமாதானமான பதில் கோபத்தை மறையச்செய்யும். ஆனால் கடுமையான பதிலோ கோபத்தை அதிகப்படுத்தும். அறிவுள்ளவன் பேசும்போது மற்றவர்கள் அதைக் கேட்க விரும்புவார்கள். ஆனால் அறிவற்றவன் முட்டாள்தனமாகவே பேசுவான். எல்லா இடங்களிலும் என்ன நடைபெறுகிறது என்று கர்த்தர் பார்த்துக்கொண்டிருக்கிறார். நல்லவர்கள் தீயவர்கள் அனைவரையும் கர்த்தர் கவனித்துக்கொண்டிருக்கிறார். தயவான வார்த்தைகள் வாழ்வளிக்கும் மரம் போன்றது. ஆனால் பொய்யான வார்த்தைகள் மனிதனின் ஆவியை அழித்துவிடும். முட்டாள்தனமான மனிதன் தன் தந்தையின் அறிவுரைகளைக் கேட்க மறுத்துவிடுவான். ஆனால் அறிவுள்ளவனோ, ஜனங்கள் தனக்குப் போதிக்கவரும்போது கவனித்துக் கேட்கிறான். நல்லவர்கள் பலவற்றில் செல்வந்தர்களாக இருக்கிறார்கள். ஆனால் தீய மனிதனிடத்திலுள்ளவை அவனைத் துன்பத்திற்குக் காரணமாக்குகின்றன. அறிவுள்ளவர்கள் பேசும் பேச்சு உனக்குப் புதிய தகவல்களைத் தருபவையாக இருக்கும். அறிவில்லாதவர்கள் பேசுவதோ கேட்கப் பயனில்லாததாக இருக்கும்.
நீதிமொழிகள் 15:1-7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும். ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; மூடரின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும். கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும் தீயோரையும் நோக்கிப்பார்க்கிறது. ஆரோக்கியமுள்ள நாவு ஜீவவிருட்சம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும். மூடன் தன் தகப்பன் புத்தியை அலட்சியம்பண்ணுகிறான்; கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி. நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷமுண்டு; துன்மார்க்கனுடைய வருமானத்திலோ துன்பமுண்டு. ஞானிகளின் உதடுகள் அறிவை இறைக்கும்; மூடரின் இருதயமோ அப்படியல்ல.