நீதிமொழிகள் 14:7-16

நீதிமொழிகள் 14:7-16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மூடரின் வழியைவிட்டு விலகியிரு, ஏனெனில் அவர்களுடைய உதடுகளில் நீ அறிவைக் காணமாட்டாய். தங்கள் வழியைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பதே விவேகிகளின் ஞானம், ஆனால் மூடர்கள் தங்களையே ஏமாற்றிக்கொள்கிறார்கள். பாவத்திற்கு பரிகாரம் செய்வதை மூடர்கள் ஏளனம் செய்கிறார்கள், ஆனால் நீதிமான்களின் மத்தியில்தான் அதற்கு நல்லெண்ணம் காணப்படுகிறது. ஒவ்வொரு இருதயத்தின் கசப்பும் அதற்கு மட்டுமே தெரியும்; அதின் மகிழ்ச்சியையும் வேறு யாராலும் பகிர்ந்துகொள்ள முடியாது. கொடியவர்களின் வீடு அழிக்கப்படும், ஆனால் நீதிமான்களின் கூடாரமோ செழித்தோங்கும். மனிதனுக்கு சரியெனத் தோன்றும் வழி ஒன்று உண்டு; முடிவில் அது மரணத்திற்கே வழிநடத்தும். சிரிப்பிலும் மனதிற்குத் துக்கமுண்டு; மகிழ்ச்சியும்கூட துயரத்தில் முடிவடையலாம். பின்வாங்கிப் போகிற இருதயமுள்ளவர்கள் தங்கள் வழிகளுக்கான தண்டனையை முழுமையாக அனுபவிப்பார்கள்; நல்லவர்கள் தங்களுடைய வழிகளுக்கான வெகுமதியைப் பெறுவார்கள். அறிவில்லாதவர்கள் எதையும் நம்புகிறார்கள்; ஆனால் விவேகமுள்ளவர்கள் தங்கள் நடைகளைக் குறித்துக் கவனமாயிருப்பார்கள். ஞானமுள்ளவர்கள் யெகோவாவுக்குப் பயந்து, தீமைக்கு விலகி நடக்கிறார்கள்; ஆனால் மூடர்கள் மோசமான மனநிலையிலிருந்தும் பாதுகாப்பாய் உணர்கிறார்கள்.

நீதிமொழிகள் 14:7-16 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மூடனுடைய முகத்தைவிட்டு விலகிப்போ; அறிவுள்ள உதடுகளை அங்கே காணமாட்டாய். தன்னுடைய வழியைச் சிந்தித்துக்கொள்வது விவேகியின் ஞானம்; மூடர்களுடைய வஞ்சனையோ மூடத்தனம். மூடர்கள் பாவத்தைக்குறித்துப் பரியாசம்செய்கிறார்கள்; நீதிமான்களுக்குள்ளே தயவு உண்டு. இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும்; அதின் மகிழ்ச்சிக்கு அந்நியன் உடந்தை ஆகமாட்டான். துன்மார்க்கனுடைய வீடு அழியும்; செம்மையானவனுடைய கூடாரமோ செழிக்கும். மனிதனுக்குச் செம்மையாகத் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரணவழிகள். சிரிப்பிலும் மனதிற்குத் துக்கமுண்டு; அந்த மகிழ்ச்சியின் முடிவு சஞ்சலம். பின்வாங்கும் இருதயமுள்ளவன் தன்னுடைய வழிகளிலேயும், நல்ல மனிதனோ தன்னிலே தானும் திருப்தியடைவான். பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன்னுடைய நடையின்மேல் கவனமாக இருக்கிறான். ஞானமுள்ளவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்; மதியீனனோ கடுங்கோபம்கொண்டு துணிகரமாக இருக்கிறான்.

நீதிமொழிகள் 14:7-16 பரிசுத்த பைபிள் (TAERV)

முட்டாளோடு நட்புகொள்ளாதே. உனக்கு போதிக்கும் அளவுக்கு அவனிடம் எதுவும் இல்லை. புத்திசாலிகள் அறிவுள்ளவர்கள். ஏனென்றால் அவர்கள் தாம் செய்யப்போவதைப்பற்றி எச்சரிக்கையோடு சிந்திக்கிறார்கள். ஏமாற்றிப் பிழைத்துவிடலாம் என்று நினைக்கிற காரணத்தால் அறிவீனர்கள் முட்டாள்களாக இருக்கிறார்கள். மூடர்கள் தாம் செய்யும் தவறான செயல்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்ற கருத்தை ஏளனம் செய்கின்றனர். ஆனால் அறிவாளிகளோ ஏற்புடையவர்கள் ஆவதற்குப் பெரும் முயற்சி செய்வார்கள். ஒருவன் வருத்தமாயிருந்தால் அந்த வருத்தத்தை அவனால் மட்டுமே உணர்ந்துகொள்ள முடியும். இதுபோலவே ஒருவனது மகிழ்ச்சியையும் அவனால் மட்டுமே உணர்ந்துகொள்ள முடியும். தீயவனின் வீடு அழிக்கப்படும். நல்லவனின் வீடு என்றும் வாழும். ஜனங்கள் சில வழிகளைச் சரியானது என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவ்வழி மரணத்திற்கே அழைத்துச் செல்லும். ஒருவன் வெளியே சிரித்துக்கொண்டிருந்தாலும் உள்ளே சோகமாக இருக்கலாம். அச்சிரிப்புக்குப் பிறகும்கூட, அத்துயரமானது அவனோடேயே இருக்கிறது. தீயவர்கள் தாம் செய்யும் தவறுகளுக்குத் தண்டனை பெறுவார்கள். நல்லவர்கள் தாம் செய்யும் நற்செயல்களுக்காக விருது பெறுகிறார்கள். முட்டாள் தான் கேட்கிற அனைத்தையும் நம்புகிறான். ஆனால் அறிவுள்ளவனோ எல்லாவற்றைப்பற்றியும் ஆழமாகச் சிந்திக்கிறான். அறிவுள்ளவன் கர்த்தரை மதித்து, தீயவற்றிலிருந்து விலகி இருப்பான். ஆனால் அறிவற்றவனோ எதையும் சிந்திக்காமல் செய்வான்; எச்சரிக்கையாக இருக்கமாட்டான்.

நீதிமொழிகள் 14:7-16 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

மூடனுடைய முகத்துக்கு விலகிப்போ; அறிவுள்ள உதடுகளை அங்கே காணாய். தன் வழியைச் சிந்தித்துக்கொள்வது விவேகியின் ஞானம்; மூடர்களுடைய வஞ்சனையோ மூடத்தனம். மூடர் பாவத்தைக்குறித்துப் பரியாசம்பண்ணுகிறார்கள்; நீதிமான்களுக்குள்ளே தயை உண்டு. இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும்; அதின் மகிழ்ச்சிக்கு அந்நியன் உடந்தையாகான். துன்மார்க்கனுடைய வீடு அழியும்; செம்மையானவனுடைய கூடாரமோ செழிக்கும். மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரணவழிகள். நகைப்பிலும் மனதுக்குத் துக்கமுண்டு; அந்த மகிழ்ச்சியின் முடிவு சஞ்சலம். பின்வாங்கும் இருதயமுள்ளவன் தன் வழிகளிலேயும், நல்ல மனுஷனோ தன்னிலே தானும் திருப்தியடைவான். பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான். ஞானமுள்ளவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்; மதியீனனோ மூர்க்கங்கொண்டு துணிகரமாயிருக்கிறான்.