நீதிமொழிகள் 14:7-16

நீதிமொழிகள் 14:7-16 TAERV

முட்டாளோடு நட்புகொள்ளாதே. உனக்கு போதிக்கும் அளவுக்கு அவனிடம் எதுவும் இல்லை. புத்திசாலிகள் அறிவுள்ளவர்கள். ஏனென்றால் அவர்கள் தாம் செய்யப்போவதைப்பற்றி எச்சரிக்கையோடு சிந்திக்கிறார்கள். ஏமாற்றிப் பிழைத்துவிடலாம் என்று நினைக்கிற காரணத்தால் அறிவீனர்கள் முட்டாள்களாக இருக்கிறார்கள். மூடர்கள் தாம் செய்யும் தவறான செயல்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்ற கருத்தை ஏளனம் செய்கின்றனர். ஆனால் அறிவாளிகளோ ஏற்புடையவர்கள் ஆவதற்குப் பெரும் முயற்சி செய்வார்கள். ஒருவன் வருத்தமாயிருந்தால் அந்த வருத்தத்தை அவனால் மட்டுமே உணர்ந்துகொள்ள முடியும். இதுபோலவே ஒருவனது மகிழ்ச்சியையும் அவனால் மட்டுமே உணர்ந்துகொள்ள முடியும். தீயவனின் வீடு அழிக்கப்படும். நல்லவனின் வீடு என்றும் வாழும். ஜனங்கள் சில வழிகளைச் சரியானது என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவ்வழி மரணத்திற்கே அழைத்துச் செல்லும். ஒருவன் வெளியே சிரித்துக்கொண்டிருந்தாலும் உள்ளே சோகமாக இருக்கலாம். அச்சிரிப்புக்குப் பிறகும்கூட, அத்துயரமானது அவனோடேயே இருக்கிறது. தீயவர்கள் தாம் செய்யும் தவறுகளுக்குத் தண்டனை பெறுவார்கள். நல்லவர்கள் தாம் செய்யும் நற்செயல்களுக்காக விருது பெறுகிறார்கள். முட்டாள் தான் கேட்கிற அனைத்தையும் நம்புகிறான். ஆனால் அறிவுள்ளவனோ எல்லாவற்றைப்பற்றியும் ஆழமாகச் சிந்திக்கிறான். அறிவுள்ளவன் கர்த்தரை மதித்து, தீயவற்றிலிருந்து விலகி இருப்பான். ஆனால் அறிவற்றவனோ எதையும் சிந்திக்காமல் செய்வான்; எச்சரிக்கையாக இருக்கமாட்டான்.

நீதிமொழிகள் 14:7-16 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்