நீதிமொழிகள் 12:11-23
நீதிமொழிகள் 12:11-23 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
தன் நிலத்தைப் பயிரிடுகிறவன் ஆகாரத்தினால் திருப்தியடைவான்; வீணரைப் பின்பற்றுகிறவனோ மதியற்றவன். துன்மார்க்கன் துஷ்டருடைய வலையை விரும்புகிறான்; நீதிமானுடைய வேர் கனி கொடுக்கும். துன்மார்க்கனுக்கு அவன் உதடுகளின் துரோகமே கண்ணி; நீதிமானோ நெருக்கத்தினின்று நீங்குவான். அவனவன் தன் தன் வாயின் பலனால் திருப்தியடைவான்; அவனவன் கைக்கிரியையின் பலனுக்குத்தக்கதாக அவனவனுக்குக் கிடைக்கும். மதியீனனுடைய வழி அவன் பார்வைக்குச் செம்மையாயிருக்கும்; ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன். மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும்; இலச்சையை மூடுகிறவனோ விவேகி. சத்தியவாசகன் நீதியை வெளிப்படுத்துவான்; பொய்ச்சாட்சிக்காரனோ வஞ்சகத்தை வெளிப்படுத்துவான். பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு; ஞானமுள்ளவர்களுடைய நாவோ ஒளஷதம். சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; பொய்நாவோ ஒரு நிமிஷமாத்திரம் இருக்கும். தீங்கைப் பிணைக்கிறவர்களின் இருதயத்தில் இருக்கிறது கபடம்; சமாதானம்பண்ணுகிற ஆலோசனைக்காரருக்கு உள்ளது சந்தோஷம். நீதிமானுக்கு ஒரு கேடும் வராது; துன்மார்க்கரோ தீமையினால் நிறையப்படுவார்கள். பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம். விவேகமுள்ள மனுஷன் அறிவை அடக்கிவைக்கிறான்; மூடருடைய இருதயமோ மதியீனத்தைப் பிரசித்தப்படுத்தும்.
நீதிமொழிகள் 12:11-23 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
தங்கள் நிலத்தைப் பண்படுத்தி பயிரிடுகிறவர்களுக்கு நிறைவான உணவு கிடைக்கும், ஆனால் பகற்கனவு காண்பதில் நேரத்தை செலவிடுபவர்கள் மதியீனர்கள். தீயவர்களின் கொள்ளைப்பொருளுக்கு கொடியவர்கள் ஆசைப்படுகிறார்கள்; ஆனால் நீதிமான்களின் வேரோ நிலைநிற்கும். தீயவர் தங்களுடைய பாவப் பேச்சுக்களினால் அகப்பட்டுக் கொள்கிறார்கள், ஆனால் நீதிமான்கள் துன்பத்திற்குத் தப்புகிறார்கள். ஒருவருடைய பேச்சினால் அவருக்கு நன்மையும், அவருடைய கைவேலையினால் பலனும் பெறுகிறார். மூடருடைய வழி அவர்களுக்கு சரியானதாகவே காணப்படும், ஆனால் ஞானமுள்ளவர்கள் ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறார்கள். மூடர்கள் கோபத்தை உடனடியாக வெளிக்காட்டுவார்கள், ஆனால் விவேகிகள் ஏளனத்தைப் பொருட்படுத்தமாட்டார்கள். நேர்மையான சாட்சி உண்மையை சொல்கிறார்கள்; ஆனால் பொய்ச்சாட்சி பொய்களையே சொல்கிறார்கள். முன்யோசனையற்ற வார்த்தைகள் வாளைப்போல் குத்தும், ஆனால் ஞானமுள்ளவர்களின் நாவு சுகப்படுத்தும். உண்மைபேசும் உதடுகள் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும், ஆனால் பொய்பேசும் நாவு சொற்ப நேரமே நிலைக்கும். தீமையான சூழ்ச்சி செய்வோரின் இருதயங்களில் வஞ்சனை உண்டு, ஆனால் சமாதானத்திற்காக முயற்சிப்பவர்களுக்கு மகிழ்ச்சி உண்டு. நீதிமான்களுக்கு ஒரு தீங்கும் நேரிடாது, ஆனால் கொடியவர்கள் தொல்லையினால் நிரப்பப்படுவார்கள். பொய்பேசும் உதடுகளை யெகோவா அருவருக்கிறார், ஆனால் உண்மையானவர்களில் அவர் மகிழ்வார். விவேகமுள்ள மனிதர்கள் தன் அறிவைத் தனக்குள்ளே வைத்திருக்கிறார்கள்; ஆனால் மூடர்களின் இருதயமோ மூடத்தனத்தை வெளிப்படுத்தும்.
நீதிமொழிகள் 12:11-23 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
தன்னுடைய நிலத்தைப் பயிரிடுகிறவன் உணவினால் திருப்தியடைவான்; வீணர்களைப் பின்பற்றுகிறவனோ மதியற்றவன். துன்மார்க்கன் கெட்டவர்களுடைய வலையை விரும்புகிறான்; நீதிமானுடைய வேர் கனி கொடுக்கும். துன்மார்க்கனுக்கு அவனுடைய உதடுகளின் துரோகமே கண்ணி; நீதிமானோ நெருக்கத்திலிருந்து நீங்குவான். அவனவன் தன் தன் வாயின் பலனால் திருப்தியடைவான்; அவனவன் கைக்கிரியையின் பலனுக்குத்தக்கதாக அவனவனுக்குக் கிடைக்கும். மதியீனனுடைய வழி அவனுடைய பார்வைக்குச் செம்மையாக இருக்கும்; ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன். மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும்; அவமானத்தை மூடுகிறவனோ விவேகி. சத்தியவாசகன் நீதியை வெளிப்படுத்துவான்; பொய்சாட்சிக்காரனோ வஞ்சகத்தை வெளிப்படுத்துவான். பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு; ஞானமுள்ளவர்களுடைய நாவோ மருந்து. சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; பொய்நாவோ ஒரு நிமிடம்மாத்திரம் இருக்கும்; தீங்கை திட்டமிடுகிறவர்களின் இருதயத்தில் கபடம் இருக்கிறது; சமாதானம்செய்கிற ஆலோசனைக்காரர்களுக்கு உள்ளது சந்தோஷம். நீதிமானுக்கு ஒரு கேடும் வராது; துன்மார்க்கர்களோ தீமையினால் நிறையப்படுவார்கள். பொய் உதடுகள் யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்; உண்மையாக நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம். விவேகமுள்ள மனிதன் அறிவை அடக்கிவைக்கிறான்; மூடர்களுடைய இருதயமோ மதியீனத்தைப் பிரபலப்படுத்தும்.
நீதிமொழிகள் 12:11-23 பரிசுத்த பைபிள் (TAERV)
தன் நிலத்தில் வேலைசெய்கிற விவசாயி தனக்குரிய உணவைப் பெறுகிறான். ஆனால் பயனற்ற சிந்தனைகளில் நேரத்தை வீணாக்குகிறவன் முட்டாளாகிறான். தீயவர்கள் எப்போதும் தவறானவற்றைச் செய்யவே விரும்புவார்கள். ஆனால் நல்லவர்கள் வேர்களைப்போன்று ஆழமாகப் போகும் ஆற்றல் கொண்டுள்ளனர். தீயவன் முட்டாள்தனமானவற்றைச் சொல்லி அவ்வார்த்தைகளாலேயே அகப்பட்டுக்கொள்கிறான். ஆனால் நல்லவன் இத்தகைய துன்பங்களிலிருந்து தப்பித்துக்கொள்கிறான். ஒருவன் தான் சொல்கிற நல்லவற்றுக்காகப் பரிசுபெறுகிறான். இதுபோலவே அவன் செய்கிற வேலையும் பலனளிக்கிறது. அறிவில்லாதவன் தனது வழியையே சிறந்த வழி என்று நினைத்துக்கொள்கிறான். ஆனால் ஞானமுள்ளவனோ மற்றவர்கள் சொல்லுவதைக் கவனிக்கிறான். அறிவில்லாதவன் சுலபமாகக் கவலையடைகிறான். ஆனால் அறிவுள்ளவனோ மற்றவர்கள் தவறாகப் பேசுவதை மன்னித்துவிடுகிறான். ஒருவன் உண்மையைப் பேசுபவனாக இருந்தால் அவன் சொல்பவற்றில் நேர்மை இருக்கும். ஆனால் ஒருவன் பொய் சொன்னால் அது அவனைத் துன்பத்திற்கே அழைத்துச் செல்லும். ஒருவன் சிந்திக்காமல் பேசினால் அவ்வார்த்தைகள் வாளைப்போன்று மற்றவர்களை துன்புறுத்தும். ஆனால் ஞானமுள்ளவனோ தான் சொல்பவற்றில் எச்சரிக்கையாக இருப்பான். அவனது வார்த்தைகள் புண்ணைக் குணப்படுத்தும். ஒருவன் பொய் சொன்னால் அவ்வார்த்தைகள் வீணாகிப்போகும். ஆனால் உண்மை என்றென்றைக்கும் வாழும். தீயவர்கள் எப்பொழுதும் துன்பம் செய்யவே எண்ணுவார்கள். ஆனால் சமாதானத்திற்காக வேலைசெய்பவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். நல்லவர்கள் கர்த்தரால் பாதுகாப்பாக வைக்கப்படுவார்கள். ஆனால் தீயவர்களுக்கோ நிறைய துன்பங்கள் இருக்கும். கர்த்தர் பொய் சொல்லுபவர்களை வெறுக்கிறார். ஆனால் கர்த்தர் உண்மை சொல்பவர்களில் மகிழ்ச்சியாக இருக்கிறார். அறிவுள்ளவன் தனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் சொல்லமாட்டான். ஆனால் அறிவில்லாதவனோ எல்லாவற்றையும் சொல்லி தன்னை முட்டாளாகக் காட்டிக்கொள்வான்.