நீதி 12:11-23

நீதி 12:11-23 IRVTAM

தன்னுடைய நிலத்தைப் பயிரிடுகிறவன் உணவினால் திருப்தியடைவான்; வீணர்களைப் பின்பற்றுகிறவனோ மதியற்றவன். துன்மார்க்கன் கெட்டவர்களுடைய வலையை விரும்புகிறான்; நீதிமானுடைய வேர் கனி கொடுக்கும். துன்மார்க்கனுக்கு அவனுடைய உதடுகளின் துரோகமே கண்ணி; நீதிமானோ நெருக்கத்திலிருந்து நீங்குவான். அவனவன் தன் தன் வாயின் பலனால் திருப்தியடைவான்; அவனவன் கைக்கிரியையின் பலனுக்குத்தக்கதாக அவனவனுக்குக் கிடைக்கும். மதியீனனுடைய வழி அவனுடைய பார்வைக்குச் செம்மையாக இருக்கும்; ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன். மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும்; அவமானத்தை மூடுகிறவனோ விவேகி. சத்தியவாசகன் நீதியை வெளிப்படுத்துவான்; பொய்சாட்சிக்காரனோ வஞ்சகத்தை வெளிப்படுத்துவான். பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு; ஞானமுள்ளவர்களுடைய நாவோ மருந்து. சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; பொய்நாவோ ஒரு நிமிடம்மாத்திரம் இருக்கும்; தீங்கை திட்டமிடுகிறவர்களின் இருதயத்தில் கபடம் இருக்கிறது; சமாதானம்செய்கிற ஆலோசனைக்காரர்களுக்கு உள்ளது சந்தோஷம். நீதிமானுக்கு ஒரு கேடும் வராது; துன்மார்க்கர்களோ தீமையினால் நிறையப்படுவார்கள். பொய் உதடுகள் யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்; உண்மையாக நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம். விவேகமுள்ள மனிதன் அறிவை அடக்கிவைக்கிறான்; மூடர்களுடைய இருதயமோ மதியீனத்தைப் பிரபலப்படுத்தும்.