பிலிப்பியர் 4:10-20

பிலிப்பியர் 4:10-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இப்பொழுதாவது எனக்கு மீண்டும் உதவிசெய்ய உங்களுக்கு முடியுமாயிருப்பதைக்குறித்து கர்த்தரில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் என்னில் அக்கறை கொண்டிருந்தீர்கள் என்பது உண்மை. ஆனால் அதைக் காண்பிப்பதற்கு உங்களுக்குத் தருணம் கிடைக்கவில்லை என்பதும் எனக்குத் தெரியும். நான் தேவையுள்ளவனாக இருப்பதனால் இதைக் கூறவில்லை. ஏனெனில், நான் எந்தச் சூழ்நிலையிலும் மனநிறைவுடன் இருக்கக் கற்றுக்கொண்டேன். ஏழ்மையுடன் வாழவும், நிறைவுடன் வாழவும் எனக்குத் தெரியும். வயிறார சாப்பிட்டிருக்கவும், பசியாக இருக்கவும், நிறைவுடனும் தேவையுடனும் வாழவும், எப்பொழுதும் எல்லாச் சூழ்நிலைகளிலும், எப்படி மனநிறைவுடன் வாழ்வது என்பதன் இரகசியத்தையும் நான் கற்றுக்கொண்டுள்ளேன். எனக்குப் பெலன் கொடுக்கிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு. இப்படி இருந்தும், எனது கஷ்டங்களில் நீங்களும் பங்குகொண்டது நல்லதே. மேலும் பிலிப்பியர்களே, நான் மக்கெதோனியாவைவிட்டுப் புறப்பட்டுவந்து, உங்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கித்த ஆரம்ப நாட்களில், உங்களைத்தவிர வேறு எந்த ஒரு திருச்சபையும், கொடுக்கல் வாங்கல் காரியங்களில் என்னுடன் பங்குகொள்ளவில்லை என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்; ஏனெனில் நான் தெசலோனிக்கேயாவில் இருக்கையிலும் எனக்குத் தேவை இருந்தபோதெல்லாம், இரண்டொருதரம் எனக்கு நீங்கள் உதவி அனுப்பினீர்கள். நான் உங்கள் நன்கொடையைப் பெறுவதை நாடவில்லை. ஆனால் உங்கள் கணக்கில் நற்பலன்கள் அதிகரிக்கவேண்டும் என்றே விரும்புகிறேன். எனவே நான் எல்லாவற்றையும் முழுமையாகப் பெற்றுக்கொண்டேன். என்னிடம் இப்போது தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது. நான் நீங்கள் அனுப்பிய நன்கொடையை எப்பாப்பிராத்துவிடமிருந்து பெற்றுக்கொண்டேன், அவை இறைவனைப் பிரியப்படுத்துகிற நறுமணமுள்ள காணிக்கைகளும், ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய பலியும் ஆகும். என் இறைவன் கிறிஸ்து இயேசுவில் உள்ள தமது மகிமை நிறைந்த செல்வத்தின்படியே உங்கள் எல்லாக் குறைகளையும் நிறைவாக்குவார். நமது இறைவனும் பிதாவுமாய் இருக்கிறவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

பிலிப்பியர் 4:10-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

என்னை விசாரிப்பதற்கு நீங்கள் இப்பொழுது மீண்டும் அக்கறை கொண்டதினாலே கர்த்தருக்குள் மிகவும் சந்தோஷப்பட்டேன்; முன்னமே இப்படிச் செய்ய நினைத்தீர்கள், ஆனால் உதவிசெய்ய உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. என் குறைகளினால் நான் இப்படிச் சொல்லவில்லை; ஏனென்றால், நான் எந்த நிலைமையில் இருந்தாலும் மனதிருப்தியாக இருக்கக் கற்றுக்கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எந்த இடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாக இருக்கவும், பட்டினியாக இருக்கவும், பரிபூரணமடையவும், குறைவுபடவும் கற்றுக்கொண்டேன். என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலன் உண்டு. ஆனாலும் நீங்கள் என் உபத்திரவத்தில் என்னோடு பங்குகொண்டது நலமாக இருக்கிறது. மேலும், பிலிப்பியரே, நற்செய்தி ஊழியத்தின் ஆரம்பத்திலே நான் மக்கெதோனியாவிலிருந்து புறப்பட்டபோது, உங்களைத்தவிர வேறு எந்த சபையும் எனக்குப் பணம் கொடுத்து உதவிசெய்யவில்லை என்று உங்களுக்குத் தெரியும். நான் தெசலோனிக்கேயில் இருந்தபோதும், என் குறைவுகளில் உதவிசெய்ய நீங்கள் பலமுறை பணம் அனுப்பி உதவி செய்தீர்கள். உங்களுடைய உதவிகளை நான் தேடாமல், உங்களுடைய உதவிகளால் உங்களுக்கு வரும் பலன் பெருகுவதையே பார்க்க விரும்புகிறேன். எல்லாம் எனக்குக் கிடைத்தது, பரிபூரணமும் உண்டாயிருக்கிறது; உங்களால் அனுப்பப்பட்டவைகளை தேவனுக்குச் சுகந்த வாசனையாகவும், பிரியமான பலியாகவும் எப்பாப்பிரோதீத்துவின் கைகளினால் பெற்றுக்கொண்டதினால் நான் திருப்தியடைந்திருக்கிறேன். என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்களுடைய குறைகளையெல்லாம் கிறிஸ்து இயேசுவிற்குள் மகிமையிலே நிறைவாக்குவார். நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

பிலிப்பியர் 4:10-20 பரிசுத்த பைபிள் (TAERV)

மீண்டும் என்னிடம் நீங்கள் அக்கறை காட்டுவதற்காக எனக்கு கர்த்தருக்குள் மிகவும் மகிழ்ச்சி. நீங்கள் எப்பொழுதும் அக்கறை கொண்டவர்கள். ஆனால் அதை வெளிப்படுத்த உங்களுக்கு வேறு வழி இருக்கவில்லை. எனக்குத் தேவைகள் உள்ளன என்பதற்காக இவற்றையெல்லாம் நான் உங்களுக்குக் கூறவில்லை. எனக்கு இருக்கிற சூழ்நிலையில் நான் திருப்தி அடைந்த உணர்வில் இருக்கிறேன். ஏழ்மையில் இருக்கும்போது எப்படி வாழ்வது என்று நான் அறிந்திருக்கிறேன். செல்வம் இருக்கும்போதும் எப்படி வாழ்வது என்று நான் அறிந்திருக்கிறேன். எல்லாவற்றிலும் எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருப்பது எப்படி என்று எனக்குத் தெரியும். அந்த இரகசியத்தை நான் கற்றிருக்கிறேன். எனக்கு உண்ணுவதற்கு இருந்தபோதும் சரி, இல்லாதபோதும் சரி. நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேன். எனக்கு தேவையானவை அனைத்தும் இருந்தபோதும் சரி, இல்லாதபோதும் சரி, மகிழ்ச்சியுடன் நான் இருக்கக் கற்றிருக்கிறேன். கிறிஸ்துவின் மூலம் எனக்கு எல்லாவற்றையும் செய்ய வலிமை இருக்கிறது. ஏனென்றால் அவர் எனக்குப் பலத்தைக் கொடுக்கிறார். ஆனால் எனக்கு உதவி தேவைப்பட்டபோது நீங்கள் உதவி செய்தீர்கள் என்பது நன்று. பிலிப்பியில் இருக்கிற நீங்கள், அங்கே நான் நற்செய்தியைப் பிரச்சாரம் செய்யத் தொடங்கிய நிலையை எண்ணிப் பாருங்கள். மக்கதோனியாவை விட்டு நான் வந்தபோது எனக்கு ஆதரவு கொடுத்தது, உங்கள் சபை மட்டுமே. நான் தெசலோனிக்கேயில் இருந்தபோது எனக்குப் பலமுறை தேவைகளுக்கெல்லாம் அனுப்பி வைத்தீர்கள். உண்மையில், நான் உங்களிடமிருந்து பரிசுப் பொருள்களை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை. ஆனால் உங்கள் கணக்குக்குப் பலன் பெருகும்படியே நாடுகிறேன். எனக்குத் தேவைப்பட்டபோதெல்லாம் பொருள்கள் கிடைத்தன. தேவைக்கு அதிகமாகவும் கிடைக்கின்றன. உங்கள் பரிசை எப்பாப்பிரோதீத்து கொண்டு வந்ததன் மூலம் எனக்குத் தேவையான அனைத்தும் கிடைத்தன. உங்களது பரிசுகள் தேவனுக்கான மணமிக்க பலியைப்போல இருந்தன. அப்பலியை தேவன் ஏற்றுக்கொண்டார். அது அவருக்கு விருப்பமானதாயிற்று. இயேசு கிறிஸ்துவின் மகிமையால் நமது தேவன் மிக உயர்ந்த செல்வந்தராக இருக்கிறார். அவர் அச்செல்வத்தைப் பயன்படுத்தி உமக்குத் தேவையானவற்றையெல்லாம் கொடுப்பார். நமது பிதாவாகிய தேவனுக்கு மகிமை என்றென்றைக்கும் உண்டாவதாக. ஆமென்.

பிலிப்பியர் 4:10-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

என்னை விசாரிப்பதற்கு நீங்கள் இப்பொழுது மறுபடியும் மனமலர்ந்தபடியினாலே கர்த்தருக்குள் மிகவும் சந்தோஷப்பட்டேன்; இப்படிச் செய்ய எண்ணங்கொண்டிருந்தீர்கள், சமயம்மாத்திரம் உங்களுக்கு நேரிடவில்லை. என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை; ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன். என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு. ஆகிலும் நீங்கள் என் உபத்திரவத்தில் என்னோடே உடன்பட்டது நலமாயிருக்கிறது. மேலும், பிலிப்பியரே, சுவிசேஷத்தின் ஆரம்பத்திலே நான் மக்கெதோனியாவிலிருந்து புறப்பட்டபோது, கொடுக்கல் வாங்கல் காரியத்தில் நீங்கள்மாத்திரம் எனக்கு உடன்பட்டதேயல்லாமல், வேறொரு சபையும் உடன்படவில்லை என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். நான் தெசலோனிக்கேயிலிருந்தபோதும், என் குறைச்சலை நீக்கும்படி நீங்கள் இரண்டொருதரம் அனுப்பினீர்கள். உபகாரத்தை நான் நாடாமல், உங்கள் கணக்குக்குப் பலன் பெருகும்படியே நாடுகிறேன். எல்லாம் எனக்குக் கிடைத்தது, பரிபூரணமும் உண்டாயிருக்கிறது; உங்களால் அனுப்பப்பட்டவைகளைச் சுகந்த வாசனையும் தேவனுக்குப் பிரியமான உகந்தபலியுமாக எப்பாப்பிரோதீத்துவின் கையில் வரப்பற்றிக்கொண்டபடியால் நான் திருப்தியடைந்திருக்கிறேன். என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார். நம்முடைய பிதாவாகிய தேவனானவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.