இப்பொழுதாவது எனக்கு மீண்டும் உதவிசெய்ய உங்களுக்கு முடியுமாயிருப்பதைக்குறித்து கர்த்தரில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் என்னில் அக்கறை கொண்டிருந்தீர்கள் என்பது உண்மை. ஆனால் அதைக் காண்பிப்பதற்கு உங்களுக்குத் தருணம் கிடைக்கவில்லை என்பதும் எனக்குத் தெரியும். நான் தேவையுள்ளவனாக இருப்பதனால் இதைக் கூறவில்லை. ஏனெனில், நான் எந்தச் சூழ்நிலையிலும் மனநிறைவுடன் இருக்கக் கற்றுக்கொண்டேன். ஏழ்மையுடன் வாழவும், நிறைவுடன் வாழவும் எனக்குத் தெரியும். வயிறார சாப்பிட்டிருக்கவும், பசியாக இருக்கவும், நிறைவுடனும் தேவையுடனும் வாழவும், எப்பொழுதும் எல்லாச் சூழ்நிலைகளிலும், எப்படி மனநிறைவுடன் வாழ்வது என்பதன் இரகசியத்தையும் நான் கற்றுக்கொண்டுள்ளேன். எனக்குப் பெலன் கொடுக்கிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு. இப்படி இருந்தும், எனது கஷ்டங்களில் நீங்களும் பங்குகொண்டது நல்லதே. மேலும் பிலிப்பியர்களே, நான் மக்கெதோனியாவைவிட்டுப் புறப்பட்டுவந்து, உங்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கித்த ஆரம்ப நாட்களில், உங்களைத்தவிர வேறு எந்த ஒரு திருச்சபையும், கொடுக்கல் வாங்கல் காரியங்களில் என்னுடன் பங்குகொள்ளவில்லை என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்; ஏனெனில் நான் தெசலோனிக்கேயாவில் இருக்கையிலும் எனக்குத் தேவை இருந்தபோதெல்லாம், இரண்டொருதரம் எனக்கு நீங்கள் உதவி அனுப்பினீர்கள். நான் உங்கள் நன்கொடையைப் பெறுவதை நாடவில்லை. ஆனால் உங்கள் கணக்கில் நற்பலன்கள் அதிகரிக்கவேண்டும் என்றே விரும்புகிறேன். எனவே நான் எல்லாவற்றையும் முழுமையாகப் பெற்றுக்கொண்டேன். என்னிடம் இப்போது தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது. நான் நீங்கள் அனுப்பிய நன்கொடையை எப்பாப்பிராத்துவிடமிருந்து பெற்றுக்கொண்டேன், அவை இறைவனைப் பிரியப்படுத்துகிற நறுமணமுள்ள காணிக்கைகளும், ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய பலியும் ஆகும். என் இறைவன் கிறிஸ்து இயேசுவில் உள்ள தமது மகிமை நிறைந்த செல்வத்தின்படியே உங்கள் எல்லாக் குறைகளையும் நிறைவாக்குவார். நமது இறைவனும் பிதாவுமாய் இருக்கிறவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
கேளுங்கள் பிலிப்பியர் 4
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: பிலிப்பியர் 4:10-20
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்