எண்ணாகமம் 20:14-29

எண்ணாகமம் 20:14-29 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு மோசே காதேசிலிருந்து ஏதோமின் ராஜாவினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி, எங்கள் பிதாக்கள் எகிப்துக்குப் போனதும், நாங்கள் எகிப்திலே நெடுநாள் வாசம்பண்ணினதும், எகிப்தியர் எங்களையும் எங்கள் பிதாக்களையும் உபத்திரவப்படுத்தினதும், இவைகளினால் எங்களுக்கு நேரிட்ட எல்லா வருத்தமும் உமக்குத் தெரிந்திருக்கிறது. கர்த்தரை நோக்கி நாங்கள் மன்றாடினோம்; அவர் எங்களுக்குச் செவிகொடுத்து, ஒரு தூதனை அனுப்பி, எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; இப்பொழுது நாங்கள் உமது எல்லைக்கு உட்பட்ட காதேஸ் ஊரில் வந்திருக்கிறோம். நாங்கள் உமது தேசத்தின் வழியாய்க் கடந்துபோகும்படி உத்தரவு கொடுக்கவேண்டும்; வயல்வெளிகள் வழியாகவும், திராட்சத்தோட்டங்கள் வழியாகவும் நாங்கள் போகாமலும், துரவுகளின் தண்ணீரைக் குடியாமலும், ராஜபாதையாகவே நடந்து, உமது எல்லையைக் கடந்துபோகுமட்டும், வலதுபுறம் இடதுபுறம் சாயாதிருப்போம் என்று, உமது சகோதரனாகிய இஸ்ரவேல் சொல்லி அனுப்புகிறான் என்று சொல்லச்சொன்னான். அதற்கு ஏதோம்: நீ என் தேசத்தின் வழியாய்க் கடந்துபோகக்கூடாது; போனால் பட்டயத்தோடே உன்னை எதிர்க்கப் புறப்படுவேன் என்று அவனுக்குச் சொல்லச் சொன்னான். அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் அவனை நோக்கி: நடப்பான பாதையின் வழியாய்ப் போவோம்; நாங்களும் எங்கள் மிருகங்களும் உன் தண்ணீரைக் குடித்தால், அதற்குக் கிரயங்கொடுப்போம்; வேறொன்றும் செய்யாமல், கால்நடையாய் மாத்திரம் கடந்துபோவோம் என்றார்கள். அதற்கு அவன்: நீ கடந்துபோகக்கூடாது என்று சொல்லி, வெகு ஜனங்களோடும் பலத்த கையோடும் அவர்களை எதிர்க்கப் புறப்பட்டான். இப்படி ஏதோம் தன் எல்லைவழியாய்க் கடந்துபோகும்படி இஸ்ரவேலருக்கு உத்தரவு கொடுக்கவில்லை; ஆகையால் இஸ்ரவேலர் அவனை விட்டு விலகிப் போனார்கள். இஸ்ரவேல் புத்திரரான சபையார் எல்லாரும் காதேசை விட்டுப் பிரயாணப்பட்டு, ஓர் என்னும் மலைக்குப் போனார்கள். ஏதோம் தேசத்தின் எல்லைக்கு அருகான ஓர் என்னும் மலையிலே கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: ஆரோன் தன் ஜனத்தாரோடே சேர்க்கப்படுவான். மேரிபாவின் தண்ணீரைப்பற்றிய காரியத்தில் நீங்கள் என் வாக்குக்குக் கீழ்ப்படியாமற்போனபடியினால், நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கிற தேசத்தில் அவன் பிரவேசிப்பதில்லை. நீ ஆரோனையும் அவன் குமாரனாகிய எலெயாசாரையும் கூட்டிக்கொண்டு, அவர்களை ஓர் என்னும் மலையில் ஏறப்பண்ணி, ஆரோன் உடுத்தியிருக்கிற வஸ்திரங்களைக் கழற்றி, அவைகளை அவன் குமாரனாகிய எலெயாசாருக்கு உடுத்துவாயாக; ஆரோன் அங்கே மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்படுவான் என்றார். கர்த்தர் கட்டளையிட்டபடியே மோசே செய்தான்; சபையார் எல்லாரும் பார்க்க, அவர்கள் ஓர் என்னும் மலையில் ஏறினார்கள். அங்கே ஆரோன் உடுத்திருந்த வஸ்திரங்களை மோசே கழற்றி, அவைகளை அவன் குமாரனாகிய எலெயாசாருக்கு உடுத்தினான்; அப்பொழுது ஆரோன் அங்கே மலையின் உச்சியிலே மரித்தான்; பின்பு மோசேயும் எலெயாசாரும் மலையிலிருந்து இறங்கினார்கள். ஆரோன் ஜீவித்துப்போனான் என்பதைச் சபையார் எல்லாரும் கண்டபோது, இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரும் ஆரோனுக்காக முப்பது நாள் துக்கங்கொண்டாடினார்கள்.

எண்ணாகமம் 20:14-29 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பின்பு மோசே காதேசிலிருந்து தூதுவர்களை ஏதோம் அரசனிடம் அனுப்பி: “உமது சகோதரனான இஸ்ரயேல் சொல்வதாவது, எங்களுக்கு நேரிட்ட கஷ்டங்களையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர். எங்கள் முற்பிதாக்கள் எகிப்திற்குப் போனார்கள். நாங்களும் பல ஆண்டுகள் அங்கே குடியிருந்தோம். எகிப்தியர் எங்களையும், எங்கள் முற்பிதாக்களையும் துன்புறுத்தினார்கள். ஆனாலும் நாங்கள் யெகோவாவிடம் அழுதபோது அவர் எங்கள் அழுகையைக் கேட்டு, ஒரு தூதனை அனுப்பி எங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தார். “இப்போது நாங்கள் உமது பிரதேசத்தின் எல்லையிலுள்ள காதேஸ் என்னும் பட்டணத்தில் இருக்கிறோம். தயவுசெய்து உமது நாட்டின் வழியாகக் கடந்துசெல்ல எங்களை அனுமதியும். நாங்கள் எந்தவொரு வயலின் வழியாகவோ, திராட்சைத் தோட்டத்தின் வழியாகவோ செல்லமாட்டோம். எந்தவொரு கிணற்றிலிருந்து தண்ணீர் குடிக்கவுமாட்டோம்; நாங்கள் அரசனின் பெருந்தெருவழியாகவே போவோம். உமது நாட்டைக் கடந்து முடிக்கும்வரை வலதுபக்கமோ, இடது பக்கமோ திரும்பமாட்டோம் என்று சொல்லுங்கள்” என்றான். அவ்வாறே அவர்கள் சொன்னபோது, ஏதோம் பதிலாக, “நீங்கள் நாட்டின் வழியாகக் கடந்துபோக முடியாது. அப்படிப்போக முயற்சித்தால், நாங்கள் அணிவகுத்து வந்து உங்களை வாளினால் தாக்குவோம்” என்றான். திரும்பவும் இஸ்ரயேலர் அவனிடம்: “நாங்கள் உமது பிரதான வீதியிலே மாத்திரம் போவோம். நாங்களோ, எங்கள் வளர்ப்பு மிருகங்களோ உங்கள் தண்ணீரைக் குடித்தால் அதற்குரிய பணத்தை நாங்கள் தருவோம். நாங்கள் எங்கள் கால்களால் நடந்து உமது நாட்டைக் கடந்துசெல்ல மட்டும் விரும்புகிறோமே தவிர வேறோன்றும் இல்லை” என்றார்கள். அதற்கு அவன்: “நீங்கள் என் நாட்டின் வழியாகக் கடந்துசெல்லவே முடியாது” என்று பதிலளித்தான். பின்பு ஏதோம் அவர்களுக்கு எதிராகப் பெரிதும் வலிமையுமான படையுடன் புறப்பட்டு வந்தான். ஏதோமியர் இஸ்ரயேலரைத் தங்கள் பிரதேசத்தின் வழியாகக் கடந்துபோகவிட மறுத்தபடியால், இஸ்ரயேலர் அங்கிருந்து திரும்பிப் போனார்கள். முழு இஸ்ரயேல் சமுதாயமும் காதேஸை விட்டுப் புறப்பட்டு ஓர் என்னும் மலைக்கு வந்து சேர்ந்தார்கள். ஏதோமின் எல்லைக்கு அருகிலுள்ள ஓர் என்னும் மலையிலே யெகோவா மோசேக்கும், ஆரோனுக்கும் சொன்னதாவது, “ஆரோன் தன் முன்னோர்களுடன் சேர்க்கப்படப்போகிறான். நான் இஸ்ரயேலருக்குக் கொடுக்கப்போகும் நாட்டிற்குள் அவன் போவதில்லை. ஏனெனில் நீங்கள் இருவரும் மேரிபாவின் தண்ணீரண்டையில் எனது கட்டளைக்கு எதிராகக் கலகம் பண்ணினீர்கள். ஆகையால் நீ ஆரோனையும், அவன் மகன் எலெயாசாரையும் கூட்டிக்கொண்டு ஓர் மலைக்கு வா. அங்கே ஆரோனின் உடைகளைக் கழற்றி அவன் மகன் எலெயாசாருக்கு உடுத்து. ஏனெனில் ஆரோன் அங்கே இறந்து தன் முன்னோர்களுடன் சேர்க்கப்படுவான்” என்றார். யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே செய்தான். மக்கள் கூட்டம் முழுவதும் பார்த்துக்கொண்டிருக்கையில் அவர்கள் ஓர் என்னும் மலைக்குப் போனார்கள். அங்கே மோசே ஆரோனின் உடைகளைக் கழற்றி, அவன் மகன் எலெயாசாருக்கு உடுத்தினான். அங்கே அந்த மலை உச்சியில் ஆரோன் இறந்தான். மோசேயும், எலெயாசாரும் கீழே இறங்கிவந்தார்கள். முழு இஸ்ரயேல் சமுதாயமும் ஆரோன் இறந்துவிட்டதை அறிந்தபோது, அவனுக்காக அழுது முப்பது நாட்கள் துக்கங்கொண்டாடினார்கள்.

எண்ணாகமம் 20:14-29 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு மோசே காதேசிலிருந்து ஏதோமின் ராஜாவினிடத்திற்கு தூதுவர்களை அனுப்பி: எங்களுடைய முற்பிதாக்கள் எகிப்திற்குப் போனதும், நாங்கள் எகிப்திலே நெடுநாட்கள் வாசம்செய்ததும், எகிப்தியர்கள் எங்களையும் எங்களுடைய பிதாக்களையும் உபத்திரவப்படுத்தினதும், இவைகளினால் எங்களுக்கு நேரிட்ட எல்லா வருத்தமும் உமக்குத் தெரிந்திருக்கிறது. யெகோவாவை நோக்கி நாங்கள் மன்றாடினோம்; அவர் எங்களுக்குச் செவிகொடுத்து, ஒரு தூதனை அனுப்பி, எங்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்; இப்பொழுது நாங்கள் உமது எல்லைக்கு உட்பட்ட காதேஸ் ஊரில் வந்திருக்கிறோம். நாங்கள் உமது தேசத்தின் வழியாகக் கடந்துபோகும்படி அனுமதி கொடுக்கவேண்டும்; வயல்வெளிகள் வழியாகவும், திராட்சைத்தோட்டங்கள் வழியாகவும் நாங்கள் போகாமலும், கிணறுகளின் தண்ணீரைக் குடிக்காமலும், ராஜபாதையாகவே நடந்து, உமது எல்லையைக் கடந்துபோகும்வரை, வலதுபுறம் இடதுபுறம் சாயாமல் இருப்போம் என்று, உமது சகோதரனாகிய இஸ்ரவேல் சொல்லி அனுப்புகிறான்” என்று சொல்லச்சொன்னான். அதற்கு ஏதோம்: “நீ என்னுடைய தேசத்தின் வழியாகக் கடந்துபோக முடியாது; போனால் பட்டயத்தோடு உன்னை எதிர்க்கப் புறப்படுவேன் என்று அவனுக்குச் சொல்லச்சொன்னான். அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் அவனை நோக்கி: “நடப்பான பாதையின் வழியாகப் போவோம்; நாங்களும் எங்களுடைய மிருகங்களும் உன்னுடைய தண்ணீரைக் குடித்தால், அதற்குக் தகுந்த விலைகொடுப்போம்; வேறொன்றும் செய்யாமல், கால்நடையாக மட்டும் கடந்துபோவோம்” என்றார்கள். அதற்கு அவன்: “நீ கடந்துபோக முடியாது” என்று சொல்லி, கணக்கற்ற மக்களோடும் பலத்த கரங்களோடும், படையோடும் அவர்களை எதிர்க்கப் புறப்பட்டான். இப்படி ஏதோம் தன்னுடைய எல்லைவழியாகக் கடந்துபோகும்படி இஸ்ரவேலர்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை; ஆகையால் இஸ்ரவேலர்கள் அவனை விட்டு விலகிப் போனார்கள். இஸ்ரவேல் மக்களான சபையார் எல்லோரும் காதேசை விட்டுப் பயணப்பட்டு, ஓர் என்னும் மலைக்குப் போனார்கள். ஏதோம் தேசத்தின் எல்லைக்கு அருகான ஓர் என்னும் மலையிலே யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி: “ஆரோன் தன்னுடைய மக்களோடு சேர்க்கப்படுவான். மேரிபாவின் தண்ணீரைப்பற்றிய காரியத்தில் நீங்கள் என்னுடைய வாக்குக்குக் கீழ்ப்படியாமல் போனபடியால், நான் இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுக்கிற தேசத்தில் அவன் நுழைவதில்லை. நீ ஆரோனையும் அவனுடைய மகனாகிய எலெயாசாரையும் கூட்டிக்கொண்டு, அவர்களை ஓர் என்னும் மலையில் ஏறச்செய்து, ஆரோன் உடுத்தியிருக்கிற ஆடைகளைக் கழற்றி, அவைகளை அவனுடைய மகனாகிய எலெயாசாருக்கு உடுத்து; ஆரோன் அங்கே மரித்து, தன்னுடைய மக்களோடு சேர்க்கப்படுவான்” என்றார். யெகோவா கட்டளையிட்டபடியே மோசே செய்தான்; சபையார் எல்லோரும் பார்க்க, அவர்கள் ஓர் என்னும் மலையில் ஏறினார்கள். அங்கே ஆரோன் உடுத்தியிருந்த ஆடைகளை மோசே கழற்றி, அவைகளை அவனுடைய மகனாகிய எலெயாசாருக்கு உடுத்தினான்; அப்பொழுது ஆரோன் அங்கே மலையின் உச்சியிலே இறந்தான்; பின்பு மோசேயும் எலெயாசாரும் மலையிலிருந்து இறங்கினார்கள். ஆரோன் இறந்துபோனான் என்பதைச் சபையார் எல்லோரும் கண்டபோது, இஸ்ரவேல் வம்சத்தார் எல்லோரும் ஆரோனுக்காக 30 நாட்கள் துக்கம்கொண்டாடினார்கள்.

எண்ணாகமம் 20:14-29 பரிசுத்த பைபிள் (TAERV)

மோசே காதேசில் இருக்கும்போது, சிலரை ஏதோமின் ராஜாவிடம் பின்வரும் செய்தியோடு அனுப்பினான்: “உங்கள் சகோதரர்களாகிய இஸ்ரவேல் ஜனங்கள் உங்களுக்குச் சொல்லியது என்னவென்றால்: நாங்கள் அடைந்த துன்பங்களைப்பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். வெகு காலத்திற்கு முன்னர் நமது முற்பிதாக்கள் எகிப்துக்குள் சென்றனர். அங்கே நாங்கள் நீண்ட காலம் வாழ்ந்தோம். எகிப்து ஜனங்கள் எங்களிடம் கொடூரமாக நடந்துகொண்டனர். ஆனால் நாங்கள் கர்த்தரிடம் உதவி செய்யுமாறு கேட்டோம். கர்த்தர் எங்கள் குறையைக் கேட்டு தேவதூதனை அனுப்பி உதவினார். கர்த்தர் எங்களை எகிப்தைவிட்டு வெளியே அழைத்து வந்தார். “இப்போது நாங்கள் உங்கள் நாடு தொடங்குகிற காதேசில் இருக்கிறோம். நாங்கள் உங்கள் நாட்டின் வழியாகக் கடந்து செல்ல எங்களுக்கு அனுமதி தரவேண்டும். நாங்கள் வயல் அல்லது திராட்சை தோட்டத்தின் வழியாக நடந்து செல்லமாட்டோம். உங்கள் கிணறுகளிலிருந்து தண்ணீர் மொண்டு குடிக்கமாட்டோம். நாங்கள் ராஜபாதை வழியாக மட்டுமே செல்வோம். நாங்கள் அந்தச் சாலையிலிருந்து வலது புறமாகவோ இடதுபுறமாகவோ நகரமாட்டோம். நாங்கள் உங்கள் நாட்டைக் கடந்து செல்லும்வரை சாலையிலேயே தங்குவோம்” என்றனர். ஆனால் ஏதோம் ராஜாவோ, “நீங்கள் எங்கள் நாட்டின் வழியாக பயணம் செய்ய முயன்றால், பிறகு நாங்கள் வந்து உங்களோடு வாளால் சண்டையிடுவோம்” என்று பதில் அளித்தான். இஸ்ரவேல் ஜனங்களோ, “நாங்கள் ராஜபாதை வழியாக மட்டுமே பயணம் செய்வோம். உங்களுக்கு சொந்தமான தண்ணீரை நாங்களோ எங்கள் மிருகங்களோ குடித்தால் அதற்குரிய தொகையைத் தந்துவிடுவோம். நாங்கள் உங்கள் நாட்டின் வழியாக நடந்து செல்லவே விரும்புகிறோம். நாங்கள் உங்கள் நாட்டை எடுத்துக்கொள்ள விரும்பவில்லை” என்றனர். ஆனால் மீண்டும் ஏதோம் ராஜா, “எங்கள் நாட்டின் வழியாக நீங்கள் நடந்து செல்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்றான். பிறகு ஏதோம் ராஜா மிகப் பெரியதும், பலமுள்ளதுமான படையைக் கூட்டினான். அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களோடு போரிட வந்தனர். ஏதோம் ராஜா இஸ்ரவேல் ஜனங்களைத் தன் நாட்டின் வழியாகச் செல்ல அனுமதிக்க மறுத்துவிட்டான். அவர்கள் திரும்பி அந்த நாட்டைச் சுற்றிக்கொண்டு சென்றனர். இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் காதேசிலிருந்து பயணம் செய்து ஓர் என்னும் மலைக்குச் சென்றனர். அது ஏதோம் நாட்டின் எல்லைக்கருகில் இருந்தது. கர்த்தர் மோசேயிடமும், ஆரோனிடமும், “இது ஆரோன் மரிப்பதற்குரிய நேரம். அவன் தன் முற்பிதாக்களோடு போய்ச் சேருவான். நான் இஸ்ரவேல் ஜனங்களுக்கு வாக்களித்த நாட்டிற்குள் அவன் நுழையமாட்டான். ஏனென்றால் நீயும் ஆரோனும் எனது ஆணைகளுக்கு முழுமையாகக் கீழ்ப்படியவில்லை. மேரிபாவின் தண்ணீர் பற்றிய நிகழ்ச்சியில் தவறு செய்து விட்டீர்கள். “இப்போது, ஆரோனையும் அவனது குமாரன் எலெயாசாரையும் ஓர் என்னும் மலை மீது அழைத்து வா. ஆரோனின் சிறப்புக்குரிய ஆடையை அவனது குமாரன் எலெயாசாருக்கு அணிவித்து அழைத்து வா. ஆரோன் மலைமீது மரித்துப்போவான். அவன் தன் முற்பிதாக்களோடு போய்ச் சேருவான்” என்றார். கர்த்தருடைய ஆணைக்கு மோசே கீழ்ப்படிந்தான். ஓர் என்னும் மலையின் மீது மோசே, ஆரோன், எலெயாசார் ஆகியோர் ஏறினார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் அவர்கள் செல்வதைப் பார்த்தனர். மோசே, ஆரோனின் சிறப்புக்குரிய ஆடையை அகற்றி அதனை ஆரோனின் குமாரனான எலெயாசாருக்கு அணிவித்தான். பிறகு மலை உச்சியிலேயே ஆரோன் மரித்துப்போனான். மோசேயும் எலெயாசாரும் மலையிலிருந்து இறங்கி வந்தனர் ஆரோன் மரித்துப்போனதை இஸ்ரவேல் ஜனங்கள் அறிந்துகொண்டனர். எனவே அவர்கள் 30 நாட்களுக்குத் துக்கம் கொண்டாடினார்கள்.