எண்ணாகமம் 14:20-38

எண்ணாகமம் 14:20-38 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது கர்த்தர்: உன் வார்த்தையின்படியே மன்னித்தேன். பூமியெல்லாம் கர்த்தருடைய மகிமையினால் நிறைந்திருக்கும் என்று என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன். என் மகிமையையும், நான் எகிப்திலும் வனாந்தரத்திலும் செய்த என் அடையாளங்களையும் கண்டிருந்தும், என் சத்தத்துக்குச் செவிகொடாமல், இதனோடே பத்துமுறை என்னைப் பரீட்சைபார்த்த மனிதரில் ஒருவரும், அவர்கள் பிதாக்களுக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தைக் காணமாட்டார்கள்; எனக்குக் கோபம் உண்டாக்கினவர்களில் ஒருவரும் அதைக் காணமாட்டார்கள். என்னுடைய தாசனாகிய காலேப் வேறே ஆவியை உடையவனாயிருக்கிறபடியினாலும், உத்தமமாய் என்னைப் பின்பற்றி வந்தபடியினாலும், அவன் போய்வந்த தேசத்திலே அவனைச் சேரப்பண்ணுவேன்; அவன் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள். அமலேக்கியரும் கானானியரும் பள்ளத்தாக்கிலே குடியிருக்கிறபடியினால், நாளைக்கு நீங்கள் திரும்பி சிவந்த சமுத்திரத்துக்குப் போகிற வழியாய் வனாந்தரத்துக்குப் பிரயாணம்பண்ணுங்கள் என்றார். பின்னும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: எனக்கு விரோதமாய் முறுமுறுக்கிற இந்தப் பொல்லாத சபையாரை எதுவரைக்கும் பொறுப்பேன்? இஸ்ரவேல் புத்திரர் எனக்கு விரோதமாய் முறுமுறுக்கிறதைக் கேட்டேன். நீ அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் என் செவிகள் கேட்கச் சொன்ன பிரகாரம் உங்களுக்குச் செய்வேன் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார். இந்த வனாந்தரத்தில் உங்கள் பிரேதங்கள் விழும்; உங்களில் இருபது வயது முதல் அதற்கு மேற்பட்டவர்களாக எண்ணப்பட்டு, உங்கள் தொகைக்கு உட்பட்டவர்களும் எனக்கு விரோதமாய் முறுமுறுத்திருக்கிறவர்களுமாகிய அனைவரின் பிரேதங்களும் விழும். எப்புன்னேயின் குமாரன் காலேபும், நூனின் குமாரன் யோசுவாவும் தவிர, மற்றவர்களாகிய நீங்கள் நான் உங்களைக் குடியேற்றுவேன் என்று ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் பிரவேசிப்பதில்லை. கொள்ளையாவார்கள் என்று நீங்கள் சொன்ன உங்கள் குழந்தைகளையோ நான் அதில் பிரவேசிக்கச் செய்வேன்; நீங்கள் அசட்டைப்பண்ணின தேசத்தை அவர்கள் கண்டறிவார்கள். உங்கள் பிரேதங்களோ இந்த வனாந்தரத்திலே விழும். அவைகள் வனாந்தரத்திலே விழுந்து தீருமட்டும், உங்கள் பிள்ளைகள் நாற்பது வருஷம் வனாந்தரத்திலே திரிந்து, நீங்கள் சோரம்போன பாதகத்தைச் சுமப்பார்கள். நீங்கள் தேசத்தைச் சுற்றிப்பார்த்த நாற்பதுநாள் இலக்கத்தின்படியே, ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வருஷமாக, நீங்கள் நாற்பது வருஷம் உங்கள் அக்கிரமங்களைச் சுமந்து, என் உடன்படிக்கைக்கு வந்த மாறுதலை உணருவீர்கள். கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன்; எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடின இந்தப் பொல்லாத சபையார் யாவருக்கும் இப்படியே செய்வேன்; இந்த வனாந்தரத்திலே அழிவார்கள், இங்கே சாவார்கள் என்று சொல் என்றார். அந்த தேசத்தைச் சோதித்துப் பார்க்கும்படி மோசேயால் அனுப்பப்பட்டுத் திரும்பி, அந்த தேசத்தைக்குறித்துத் துர்ச்செய்தி கொண்டுவந்து, சபையார் எல்லாரும் அவனுக்கு விரோதமாய் முறுமுறுக்கும்படி அந்தத் துர்ச்செய்தியைச் சொன்னவர்களாகிய அந்த மனிதர் கர்த்தருடைய சந்நிதியில் வாதையினால் செத்தார்கள். தேசத்தைச் சுற்றிப் பார்க்கப்போன அந்த மனிதரில் நூனின் குமாரனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும் மாத்திரம் உயிரோடிருந்தார்கள்.

எண்ணாகமம் 14:20-38 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அதற்கு யெகோவா, “நீ கேட்டபடியே நான் அவர்களை மன்னித்துவிட்டேன். ஆனாலும் நான் வாழ்வது நிச்சயம்போலவும், யெகோவாவினுடைய மகிமை பூமியை நிரப்புவது நிச்சயம்போலவும், என் மகிமையையும், எகிப்திலுள்ள பாலைவனத்தில் நான் செய்த அற்புத அடையாளங்களையும் கண்டும், எனக்குக் கீழ்ப்படியாமல் என்னை பத்துமுறை சோதித்த எவனும், அவர்களுடைய முற்பிதாக்களுக்குத் தருவேன் என நான் ஆணையிட்டு வாக்குக்கொடுத்த நாட்டை ஒருபோதும் காணமாட்டான் என்பதும், என்னை அவமதித்து நடந்த எவனும் அதை ஒருபோதும் காணமாட்டான் என்பதும் நிச்சயம். ஆனால், என் பணியாளன் காலேப் ஒரு வித்தியாசமான ஆவி உடையவனாயும், தன் முழு இருதயத்தோடும் என்னைப் பின்பற்றுகிறவனாயும் இருப்பதால், அவன் போய்ப் பார்த்த அந்த நாட்டிற்குள் நான் அவனைக் கொண்டுவருவேன். அவனுடைய சந்ததிகளும் அதை உரிமையாக்கிக்கொள்வார்கள். அமலேக்கியரும், கானானியரும் பள்ளத்தாக்குகளில் வாழ்கிறார்கள். அதனால் நீங்கள் நாளைக்குச் செங்கடலுக்குப் போகிற வழியால் திரும்பவும் பாலைவனத்துக்குப் போங்கள்” என்றார். அத்துடன் யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும் சொன்னதாவது: “இந்த கொடுமையான சமுதாயம் எவ்வளவு காலத்திற்கு எனக்கு விரோதமாக முறுமுறுக்கும்? முறுமுறுக்கும் இந்த இஸ்ரயேலர்களின் முறையீட்டை நான் கேட்டிருக்கிறேன். எனவே நீ அவர்களிடம், ‘நான் வாழ்வது நிச்சயம்போலவே, எனக்கு கேட்கும்படி நீங்கள் முறுமுறுத்த அதே காரியங்களை நான் உங்களுக்குச் செய்வேன் என்பது நிச்சயம்’ என அவர்களுக்குச் சொல் என்று யெகோவா அறிவிக்கிறார். இப்பாலைவனத்திலே உங்கள் உடல்கள் விழும். குடிமதிப்பில் கணக்கெடுக்கப்பட்ட இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடையவர்களும், எனக்கு விரோதமாக முறுமுறுத்தவர்களுமான நீங்கள் ஒவ்வொருவரும் விழுவீர்கள். நான் என் கைகளை உயர்த்தி, ஆணையிட்டு, ‘நீங்கள் குடியிருப்பதற்காக வாக்குப்பண்ணிக்கொடுத்த நாட்டிற்குள் எப்புன்னேயின் மகன் காலேப்பையும், நூனின் மகன் யோசுவாவையும் தவிர வேறு எவனும் போவதில்லை’ என்று சொல்கிறேன். ‘சிறைபிடிக்கப்பட்டுப் போவார்களே’ என நீங்கள் சொன்ன உங்கள் பிள்ளைகளையோ, நீங்கள் புறக்கணித்த நாட்டின் பலனை அனுபவிப்பதற்கு அங்கு கொண்டுவருவேன். ஆனால் உங்களுக்கோவென்றால், உங்கள் உடல்கள் இப்பாலைவனத்திலேயே விழும். உங்கள் பிள்ளைகள் உங்கள் உண்மையற்ற தன்மையினால் உங்கள் கடைசி உடல் இப்பாலைவனத்தில் விழும் வரைக்கும், கஷ்டப்பட்டு, நாற்பது வருடங்களுக்கு இங்கு மேய்ப்பர்களாயிருப்பார்கள். நீங்கள் நாட்டை ஆராய்ந்த நாற்பது நாட்களிலும் உள்ள ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு வருடம் என்ற கணக்கின்படி, நாற்பது வருடங்களுக்கு உங்கள் பாவங்களுக்காக நீங்கள் கஷ்டப்பட்டு, என்னை எதிர்ப்பதால் வரும் விளைவு என்ன என்பதையும் அறிவீர்கள். யெகோவாவாகிய நானே சொல்லியிருக்கிறேன். எனக்கெதிராக ஒன்றுகூடிய இக்கொடுமையான மனிதர்கள் அனைவருக்குமே நான் நிச்சயமாக இக்காரியங்களைச் செய்வேன். அவர்கள் தங்கள் முடிவை இப்பாலைவனத்திலேயே சந்திப்பார்கள். இங்கேயே அவர்கள் சாவார்கள் என்றும் சொல்” என்றார். எனவே நாட்டை ஆராய்ந்து அறியும்படி மோசேயினால் அனுப்பப்பட்டுத் திரும்பிவந்து, அதைப்பற்றிப் பிழையான செய்தியைப் பரப்பி, அதனால் முழு மக்கள் சமுதாயத்தையும் அவனுக்கு எதிராக முறுமுறுக்கப் பண்ணினவர்களை இறைவன் அடித்தார். அவ்விதமாய் அந்நாட்டைப் பற்றிய பிழையான செய்தியைப் பரப்பக் காரணமாய் இருந்த இந்த மனிதர்கள் யெகோவாவுக்கு முன்பாக ஒரு கொள்ளைநோயினால் வாதிக்கப்பட்டு இறந்தார்கள். நாட்டை ஆராய்ந்து அறியச்சென்ற மனிதர்களில் நூனின் மகன் யோசுவா, எப்புன்னேயின் மகன் காலேப் ஆகியோர் மட்டும் உயிர்த்தப்பியிருந்தனர்.

எண்ணாகமம் 14:20-38 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது யெகோவா: “உன்னுடைய வார்த்தையின்படியே மன்னித்தேன். பூமியெல்லாம் யெகோவாவுடைய மகிமையினால் நிறைந்திருக்கும் என்று என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன். என்னுடைய மகிமையையும், நான் எகிப்திலும் வனாந்திரத்திலும் செய்த என்னுடைய அடையாளங்களையும் கண்டிருந்தும், என்னுடைய சத்தத்தை கேட்காமல், இதோடு பத்துமுறை என்னைப் பரீட்சைபார்த்த மனிதர்களில் ஒருவரும், அவர்களுடைய பிதாக்களுக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தைக் காணமாட்டார்கள்; எனக்குக் கோபம் உண்டாக்கினவர்களில் ஒருவரும் அதைக் காணமாட்டார்கள். என்னுடைய தாசனாகிய காலேப் வேறே ஆவியை உடையவனாக இருக்கிறபடியாலும், உத்தமமாக என்னைப் பின்பற்றி வந்தபடியாலும், அவன் போய் வந்த தேசத்திலே அவனைச் சேரும்படிச்செய்வேன்; அவனுடைய சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள். அமலேக்கியர்களும் கானானியர்களும் பள்ளத்தாக்கிலே குடியிருக்கிறபடியால், நாளைக்கு நீங்கள் திரும்பி சிவந்த சமுத்திரத்திற்குப்போகிற வழியாக வனாந்திரத்திற்குப் பயணம்செய்யுங்கள்” என்றார். பின்னும் யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி: “எனக்கு விரோதமாக முறுமுறுக்கிற இந்தப் பொல்லாத சபையாரை எதுவரைக்கும் பொறுப்பேன்? இஸ்ரவேல் மக்கள் எனக்கு விரோதமாக முறுமுறுக்கிறதைக் கேட்டேன். நீ அவர்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் என்னுடைய காதுகள் கேட்கச் சொன்னபடியே உங்களுக்குச் செய்வேன் என்பதை என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று யெகோவா உரைக்கிறார். இந்த வனாந்திரத்தில் உங்களுடைய பிரேதங்கள் விழும்; உங்களில் இருபது வயது முதல் அதற்கு மேற்பட்டவர்களாக எண்ணப்பட்டு, உங்கள் தொகைக்கு உட்பட்டவர்களும் எனக்கு விரோதமாக முறுமுறுத்திருக்கிறவர்களுமாகிய அனைவரின் பிரேதங்களும் விழும். எப்புன்னேயின் மகன் காலேபும், நூனின் மகன் யோசுவாவும் தவிர, மற்றவர்களாகிய நீங்கள் நான் உங்களைக் குடியேற்றுவேன் என்று ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் நுழைவதில்லை. கொள்ளையாவார்கள் என்று நீங்கள் சொன்ன உங்களுடைய குழந்தைகளையோ நான் அதில் நுழையச் செய்வேன்; நீங்கள் அசட்டைசெய்த தேசத்தை அவர்கள் கண்டறிவார்கள். உங்களுடைய பிரேதங்களோ இந்த வனாந்திரத்திலே விழும். அவைகள் வனாந்திரத்திலே விழுந்து தீரும்வரை, உங்களுடைய பிள்ளைகள் நாற்பது வருடங்கள் வனாந்திரத்திலே திரிந்து, நீங்கள் செய்த கலகங்களின் பலனைச் சுமப்பார்கள். நீங்கள் தேசத்தைச் சுற்றிப்பார்த்த நாற்பதுநாட்கள் இலக்கத்தின்படியே, ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வருடமாக, நீங்கள் நாற்பது வருடங்கள் உங்களுடைய அக்கிரமங்களைச் சுமந்து, என்னுடைய உடன்படிக்கைக்கு வந்த மாறுதலை உணருவீர்கள். யெகோவாவாகிய நான் இதைச் சொன்னேன்; எனக்கு விரோதமாகக் கூட்டங்கூடின இந்தப் பொல்லாத சபையார் யாவருக்கும் இப்படியே செய்வேன்; இந்த வனாந்திரத்திலே அழிவார்கள், இங்கே சாவார்கள் என்று சொல் என்றார். அந்தத் தேசத்தைச் சோதித்துப் பார்க்கும்படி மோசேயால் அனுப்பப்பட்டுத் திரும்பி, அந்தத் தேசத்தைக்குறித்துத் துர்ச்செய்தி கொண்டுவந்து, சபையார் எல்லோரும் அவனுக்கு விரோதமாக முறுமுறுக்கும்படி அந்தத் துர்ச்செய்தியைச் சொன்னவர்களாகிய அந்த மனிதர்கள் யெகோவாவுடைய சந்நிதியில் வாதையினால் செத்தார்கள். தேசத்தைச் சுற்றிப் பார்க்கப்போன அந்த மனிதர்களில் நூனின் மகனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் மகனாகிய காலேபும் மட்டும் உயிரோடு இருந்தார்கள்.

எண்ணாகமம் 14:20-38 பரிசுத்த பைபிள் (TAERV)

இதற்கு கர்த்தர், “ஆம்! நீ கேட்டுக்கொண்டபடியே இந்த ஜனங்களை மன்னித்துவிடுகிறேன். ஆனால் உனக்கு ஒரு உண்மையைக் கூறுகிறேன். நான் இந்த பூமியில் இருப்பது எவ்வளவு உண்மையோ, அதுபோலவே எனது மகிமையும் பூமியில் நிறைந்திருக்கும் என்பதும் உண்மையாகும். எகிப்திலிருந்து என்னால் அழைத்து வரப்பட்டவர்கள் எவரும் கானான் நாட்டைக் காணமாட்டார்கள். நான் எகிப்தில் செய்த அற்புதங்களையும் நான் பாலைவனத்தில் செய்த பெருஞ்செயல்களையும், அவர்கள் கண்டிருக்கிறார்கள். ஆனாலும், அவர்கள் எனக்குக் கீழ்ப்படியவில்லை. என்னைப் பத்துமுறை சோதித்திருக்கிறார்கள். நான் அவர்களின் முற்பிதாக்களிடம் அவர்களுக்கு ஒரு நாட்டைத் தருவதாக வாக்களித்தேன். ஆனால் எனக்கு எதிராக உள்ள எவரும் அந்த நாட்டிற்குள் நுழைய முடியாது. ஆனால் எனது ஊழியனான காலேப் வேறுபட்டவன். என்னை அவன் முழுமையாகப் பின்பற்றினான். எனவே அவனை ஏற்கெனவே அவன் பார்வையிட்ட நாட்டிற்குள் அழைத்துச் செல்வேன். அவனது ஜனங்கள் அந்நாட்டைப் பெற்றுக்கொள்வார்கள். அமலேக்கியரும், கானானியரும் இந்தப் பள்ளத்தாக்கில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். எனவே, நாளை இந்த இடத்தை விட்டுப் புறப்பட்டு செங்கடலுக்குச் செல்லும் சாலையின் மேலுள்ள பாலைவனத்துக்குச் செல்லுங்கள்” என்றார். கர்த்தர் மோசேயிடமும், ஆரோனிடமும், “இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்தத் தீய ஜனங்கள் எனக்கு எதிராக முறையிடுவார்கள்? நான் இவர்களின் முறையீடுகளையும், புலம்பல்களையும் பலமுறை கேட்டிருக்கிறேன். நீங்கள் முறையிட்டபடியே கர்த்தர் நிச்சயம் உங்களுக்குச் செய்வார் என்று அவர்களிடம் சொல். இதுதான் உங்களுக்கு நடை பெறப்போகிறது: நீங்கள் பாலைவனத்தில் மரித்துப்போவீர்கள். இருபதும் அதற்கு மேலும் வயதுள்ள, எண்ணி கணக்கிடப்பட்ட ஜனங்கள் மரிப்பார்கள். கர்த்தராகிய எனக்கு எதிராக முறையிட்டீர்கள். எனவே, நான் வாக்களித்திருந்த நாட்டிற்குள் எப்புன்னேயின் குமாரனான காலேபும், நூனின் குமாரனான யோசுவாவும் தவிர வேறு எவரும் நுழைய முடியாது. அந்நாட்டிலுள்ள உங்களது பகைவர்கள், உங்கள் பிள்ளைகளை அபகரித்துக்கொள்வார்கள் என்று அஞ்சி முறையிட்டீர்கள். ஆனால், நான் உங்களுக்குக் கூறுகிறேன், அந்தப் பிள்ளைகள் அந்நாட்டிற்குள் செல்வார்கள். நீங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்த மகிழ்ச்சியை அவர்கள் அனுபவிப்பார்கள். உங்களைப் பொறுத்தவரையில், நீங்கள் இந்தப் பாலைவனத்திலேயே மரித்துப் போவீர்கள். “உங்கள் பிள்ளைகள் இந்தப் பாலைவனத்தில் மேய்ப்பர்களாக 40 ஆண்டுகள் அலைந்து திரிவார்கள், நீங்கள் எனக்கு உண்மையுள்ளவர்களாக இல்லாததால், அவர்கள் துன்பப்படுவார்கள். நீங்கள் அனைவரும் இப்பாலைவனத்தில் மரித்து விழும்வரை அவர்கள் துன்பப்படுவார்கள். 40 ஆண்டுகள் உங்கள் பாவங்களுக்காக நீங்கள் துன்பப்படுவீர்கள். (நீங்கள் கானான் நாட்டைச் சுற்றி பார்த்தது 40 நாட்கள். ஒரு நாளுக்கு ஒரு ஆண்டு வீதம் 40 ஆண்டுகள்.) உங்களுக்கு எதிராக என்னை நிறுத்தி வைப்பது எவ்வளவு பயங்கரமானது என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். “நானே கர்த்தர். நான் சொல்லியிருக்கிறேன், தீய ஜனங்கள் அனைவருக்கும் நான் சொன்னபடியே செய்வேன் என்று உறுதியாய்க் கூறுகிறேன். இந்த ஜனங்கள் அனைவரும் எனக்கு எதிராக ஒன்று சேர்ந்தார்கள். எனவே அனைவரும் இப்பாலைவனத்திலேயே மரித்துப்போவார்கள்” என்றார். புதிய நாட்டைப் பார்வையிட்டு வருமாறு மோசே அனுப்பி வைத்தவர்களில் சிலர் இஸ்ரவேல் ஜனங்களிடம் வதந்தியைப் பரப்பினார்கள். அந்நாட்டிற்குள் நுழைகிற அளவிற்குத் தமக்குப் பலமில்லை என்றனர். இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் அவநம்பிக்கையைப் பரப்பியதற்கு இவர்களே பொறுப்பாகும். எனவே கர்த்தர் அந்த ஜனங்களை கொல்லும்படி நோயைக் கொண்டு வந்தார். ஆனால் நூனின் குமாரனான யோசுவாவும், எப்புன்னேயின் குமாரனான காலேபும் கானான் நாட்டை பார்வையிட்டவர்களில் இந்த இருவரையும் கர்த்தர் காப்பாற்றினார். மற்றவர்களைச் சாகடித்த அந்நோய் இவர்களுக்கு வரவில்லை.