அதற்கு யெகோவா, “நீ கேட்டபடியே நான் அவர்களை மன்னித்துவிட்டேன். ஆனாலும் நான் வாழ்வது நிச்சயம்போலவும், யெகோவாவினுடைய மகிமை பூமியை நிரப்புவது நிச்சயம்போலவும், என் மகிமையையும், எகிப்திலுள்ள பாலைவனத்தில் நான் செய்த அற்புத அடையாளங்களையும் கண்டும், எனக்குக் கீழ்ப்படியாமல் என்னை பத்துமுறை சோதித்த எவனும், அவர்களுடைய முற்பிதாக்களுக்குத் தருவேன் என நான் ஆணையிட்டு வாக்குக்கொடுத்த நாட்டை ஒருபோதும் காணமாட்டான் என்பதும், என்னை அவமதித்து நடந்த எவனும் அதை ஒருபோதும் காணமாட்டான் என்பதும் நிச்சயம். ஆனால், என் பணியாளன் காலேப் ஒரு வித்தியாசமான ஆவி உடையவனாயும், தன் முழு இருதயத்தோடும் என்னைப் பின்பற்றுகிறவனாயும் இருப்பதால், அவன் போய்ப் பார்த்த அந்த நாட்டிற்குள் நான் அவனைக் கொண்டுவருவேன். அவனுடைய சந்ததிகளும் அதை உரிமையாக்கிக்கொள்வார்கள். அமலேக்கியரும், கானானியரும் பள்ளத்தாக்குகளில் வாழ்கிறார்கள். அதனால் நீங்கள் நாளைக்குச் செங்கடலுக்குப் போகிற வழியால் திரும்பவும் பாலைவனத்துக்குப் போங்கள்” என்றார்.
அத்துடன் யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும் சொன்னதாவது: “இந்த கொடுமையான சமுதாயம் எவ்வளவு காலத்திற்கு எனக்கு விரோதமாக முறுமுறுக்கும்? முறுமுறுக்கும் இந்த இஸ்ரயேலர்களின் முறையீட்டை நான் கேட்டிருக்கிறேன். எனவே நீ அவர்களிடம், ‘நான் வாழ்வது நிச்சயம்போலவே, எனக்கு கேட்கும்படி நீங்கள் முறுமுறுத்த அதே காரியங்களை நான் உங்களுக்குச் செய்வேன் என்பது நிச்சயம்’ என அவர்களுக்குச் சொல் என்று யெகோவா அறிவிக்கிறார். இப்பாலைவனத்திலே உங்கள் உடல்கள் விழும். குடிமதிப்பில் கணக்கெடுக்கப்பட்ட இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடையவர்களும், எனக்கு விரோதமாக முறுமுறுத்தவர்களுமான நீங்கள் ஒவ்வொருவரும் விழுவீர்கள். நான் என் கைகளை உயர்த்தி, ஆணையிட்டு, ‘நீங்கள் குடியிருப்பதற்காக வாக்குப்பண்ணிக்கொடுத்த நாட்டிற்குள் எப்புன்னேயின் மகன் காலேப்பையும், நூனின் மகன் யோசுவாவையும் தவிர வேறு எவனும் போவதில்லை’ என்று சொல்கிறேன். ‘சிறைபிடிக்கப்பட்டுப் போவார்களே’ என நீங்கள் சொன்ன உங்கள் பிள்ளைகளையோ, நீங்கள் புறக்கணித்த நாட்டின் பலனை அனுபவிப்பதற்கு அங்கு கொண்டுவருவேன். ஆனால் உங்களுக்கோவென்றால், உங்கள் உடல்கள் இப்பாலைவனத்திலேயே விழும். உங்கள் பிள்ளைகள் உங்கள் உண்மையற்ற தன்மையினால் உங்கள் கடைசி உடல் இப்பாலைவனத்தில் விழும் வரைக்கும், கஷ்டப்பட்டு, நாற்பது வருடங்களுக்கு இங்கு மேய்ப்பர்களாயிருப்பார்கள். நீங்கள் நாட்டை ஆராய்ந்த நாற்பது நாட்களிலும் உள்ள ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு வருடம் என்ற கணக்கின்படி, நாற்பது வருடங்களுக்கு உங்கள் பாவங்களுக்காக நீங்கள் கஷ்டப்பட்டு, என்னை எதிர்ப்பதால் வரும் விளைவு என்ன என்பதையும் அறிவீர்கள். யெகோவாவாகிய நானே சொல்லியிருக்கிறேன். எனக்கெதிராக ஒன்றுகூடிய இக்கொடுமையான மனிதர்கள் அனைவருக்குமே நான் நிச்சயமாக இக்காரியங்களைச் செய்வேன். அவர்கள் தங்கள் முடிவை இப்பாலைவனத்திலேயே சந்திப்பார்கள். இங்கேயே அவர்கள் சாவார்கள் என்றும் சொல்” என்றார்.
எனவே நாட்டை ஆராய்ந்து அறியும்படி மோசேயினால் அனுப்பப்பட்டுத் திரும்பிவந்து, அதைப்பற்றிப் பிழையான செய்தியைப் பரப்பி, அதனால் முழு மக்கள் சமுதாயத்தையும் அவனுக்கு எதிராக முறுமுறுக்கப் பண்ணினவர்களை இறைவன் அடித்தார். அவ்விதமாய் அந்நாட்டைப் பற்றிய பிழையான செய்தியைப் பரப்பக் காரணமாய் இருந்த இந்த மனிதர்கள் யெகோவாவுக்கு முன்பாக ஒரு கொள்ளைநோயினால் வாதிக்கப்பட்டு இறந்தார்கள். நாட்டை ஆராய்ந்து அறியச்சென்ற மனிதர்களில் நூனின் மகன் யோசுவா, எப்புன்னேயின் மகன் காலேப் ஆகியோர் மட்டும் உயிர்த்தப்பியிருந்தனர்.