நெகேமியா 6:4-19
நெகேமியா 6:4-19 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அவர்கள் இந்தப்பிரகாரமாக நாலுதரம் எனக்குச் சொல்லியனுப்பினார்கள்; நானும் இந்தப்பிரகாரமாகவே அவர்களுக்கு மறுமொழி அனுப்பினேன். ஐந்தாந்தரமும் சன்பல்லாத்து அந்தப் பிரகாரமாகவே தன் வேலைக்காரனையும், அவன் கையிலே முத்திரைபோடாத ஒரு கடிதத்தையும் எனக்கு அனுப்பினான். அதிலே: நீரும் யூதரும் கலகம்பண்ண நினைக்கிறீர்கள் என்றும், அதற்காக நீர் அலங்கத்தைக் கட்டுகிறீர் என்றும், இவ்விதமாக நீர் அவர்களுக்கு ராஜாவாகப் போகிறீர் என்றும், யூதாவிலே ஒரு ராஜா இருக்கிறார் என்று உம்மைக்குறித்து எருசலேமிலே கூறுகிற தீர்க்கதரிசிகளையும் சம்பாதித்தீரென்றும் புறஜாதிகளுக்குள்ளே பிரஸ்தாபமாயிருக்கிறது, கஷ்மூவும் அப்படிச் சொல்லுகிறான்; இப்போதும் இந்தச் செய்தி ராஜாவுக்கு எட்டுமே; ஆகையால் நாம் ஒருவரோடொருவர் ஆலோசனை பண்ணுகிறதற்காக நீர் வரவேண்டும் என்று எழுதியிருந்தது. அதற்கு நான்: நீர் சொல்லுகிற அந்தக் காரியங்களில் ஒன்றும் நடக்கவில்லை; அவைகள் உம்முடைய மனோராஜ்யமே ஒழிய வேறல்ல என்று சொல்லியனுப்பினேன். அந்த வேலை நடந்தேறாதபடிக்கு, எங்கள் கை சலித்துப்போகும் என்று சொல்லி, அவர்கள் எல்லாரும் எங்களைப் பயமுறுத்தப்பார்த்தார்கள். ஆதலால் தேவனே, நீர் என் கைகளைத் திடப்படுத்தியருளும். மெகதாபெயேலின் குமாரனாகிய தெலாயாவின் மகன் செமாயா தன் வீட்டிலே அடைக்கப்பட்டிருக்கும்போது, நான் அவனிடத்தில் போனேன்; அப்பொழுது அவன்: நாம் இருவருமாய் தேவனுடைய வீடாகிய ஆலயத்துக்குள்ளே போய், தேவாலயத்தின் கதவுகளைப் பூட்டுவோம் வாரும்; உம்மைக் கொன்றுபோட வருவார்கள், இரவிலே உம்மைக் கொன்றுபோட வருவார்கள் என்றான். அதற்கு நான்: என்னைப்போன்ற மனிதன் ஓடிப்போவானோ? என்னைப் போன்றவன் உயிர் பிழைக்கும்படி தேவாலயத்திலே போய்ப் பதுங்குவானோ? நான் போவதில்லை என்றேன். தேவன் அவனை அனுப்பவில்லையென்றும், தொபியாவும் சன்பல்லாத்தும் அவனுக்குக் கூலிகொடுத்ததினால், அவன் எனக்கு விரோதமாய் அந்தத் தீர்க்கதரிசனத்தைச் சொன்னான் என்றும் அறிந்துகொண்டேன். நான் பயந்து அப்படிச் செய்து பாவங் கட்டிக்கொள்ளுகிறதற்கும், என்னை நிந்திக்கத்தக்க அபகீர்த்திக்கு முகாந்தரம் உண்டாக்குகிறதற்கும் அவனுக்குக் கைக்கூலி கொடுத்திருந்தார்கள். என் தேவனே, தொபியாவும் சன்பல்லாத்தும் செய்த இந்தச் செய்கைகளுக்குத்தக்கதாக நீர் அவர்களையும், நொவதியாள் என்னும் தீர்க்கதரிசியானவளையும், எனக்குப் பயமுண்டாக்கப்பார்த்த மற்ற தீர்க்கதரிசிகளையும் நினைத்துக்கொள்ளும். அப்படியே அலங்கமானது ஐம்பத்திரண்டு நாளைக்குள்ளே கட்டப்பட்டு, எலூல் மாதம் இருபத்தைந்தாந்தேதியிலே முடிந்தது. எங்கள் பகைஞர் எல்லாரும் அதைக் கேட்டபோதும், எங்கள் சுற்றுப்புறத்தாராகிய புறஜாதியான அனைவரும் கண்டபோதும், மிகவும் முனையற்றுப்போய், இந்தக் கிரியை எங்கள் தேவனால் கைகூடி வந்ததென்று அறிந்தார்கள். அந்த நாட்களில் யூதாவிலுள்ள பெரிய மனிதரிடத்திலிருந்து தொபியாவுக்குப் போகிறதும், தொபியாவினிடத்திலிருந்து அவர்களுக்கு வருகிறதுமான கடிதங்கள் அநேகமாயிருந்தது. அவன் ஆராகின் குமாரனாகிய செகனியாவுக்கு மருமகனாயிருந்ததும் அல்லாமல், அவன் குமாரனாகிய யோகனான் பெரகியாவின் குமாரனாகிய மெசுல்லாமின் குமாரத்தியை விவாகம் பண்ணியிருந்தபடியாலும், யூதாவில் அநேகர் அவனுக்கு ஆணையிட்டுக் கொடுத்திருந்தார்கள். அவன் செய்யும் நன்மைகளையும் அவர்கள் எனக்கு முன்பாக விவரித்து, என் வார்த்தைகளை அவனுக்குக் கொண்டுபோவார்கள்; தொபியா எனக்குப் பயமுண்டாகக் கடிதங்களை அனுப்புவான்.
நெகேமியா 6:4-19 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இதேவிதமாக நான்கு முறைகள் அவர்கள் செய்தி அனுப்பினார்கள். நானும் ஒவ்வொரு தடவையும் அதே பதிலை மீண்டும் கொடுத்தனுப்பினேன். சன்பல்லாத்து ஐந்தாம் முறையும் அதே செய்தியுடன் தன் வேலைக்காரனை என்னிடம் அனுப்பினான். அவனுடைய கையில் முத்திரையிடப்படாத கடிதம் ஒன்று இருந்தது. அந்தக் கடிதத்தில், “நீயும் யூதர்களும் கலகம் உண்டாக்குவதற்குத் திட்டமிட்டிருக்கிறீர்கள். அதனாலேயே நீங்கள் மதிலைக் கட்டுகிறீர்கள் என்ற செய்தி மற்ற மக்களுள் பரவுகிறது. கேசேமும் அவ்வாறே சொல்கிறான். மேலும் இந்த அறிக்கைகளின்படி நீர் அவர்களுக்கு அரசனாகப் போகிறீர். உம்மைக் குறித்து இதை பிரசித்தப்படுத்தும்படி, எருசலேமின் இறைவாக்கு உரைப்போரையும் நியமித்திருக்கிறீர். ‘யூதாவில் ஒரு அரசன் இருக்கிறார்!’ என்ற செய்தி அரசனுக்கு அறிவிக்கப்படும். ஆகையால் நீர் வாரும், நாம் ஒன்றுகூடி ஆலோசிப்போம்” என்று எழுதியிருந்தது. அதற்கு நான், “நீர் சொல்வதன்படி ஒன்றும் நடக்கவில்லை; இது உம்முடைய வெறும் கற்பனையே” என்று பதில் சொல்லி அனுப்பினேன். அவர்கள் எல்லோரும் எங்களைப் பயமுறுத்த நினைத்திருந்தார்கள். எங்களுடைய கைகள் வேலைசெய்ய முடியாதபடி சோர்ந்து போய்விடும், ஒருநாளும் இவ்வேலை முற்றுப் பெறமாட்டாது என்று நினைத்தார்கள். ஆனாலும் நானோ, “என் கைகளைப் பலப்படுத்தும்” என்று மன்றாடினேன். மெகதாபெயேலின் மகனான தெலாயாவின் மகனும், தன்னுடைய வீட்டில் அடைக்கப்பட்டவனுமான செமாயாவின் வீட்டுக்கு நான் ஒரு நாள் போனேன். அவன் என்னிடம், “ஆலயத்தினுள்ளே இறைவனுடைய வீட்டில் சந்திப்போம். ஆலயத்தின் கதவுகளை மூடுவோம். ஏனெனில் உம்மைக் கொல்ல மனிதர் வருகிறார்கள். உம்மைக் கொல்வதற்காக அவர்கள் இரவில் வருகிறார்கள்” என்றான். நான் அதற்குப் பதிலாக, “என்னைப்போன்ற ஒரு மனிதன் ஓடிப்போவானோ? என்னைப்போன்ற ஒருவன் தன் உயிரைக் காப்பாற்ற ஆலயத்திற்குள் போகவேண்டுமோ? நான் போகமாட்டேன்” என்றேன். மேலும் இறைவன் இவனை அனுப்பவில்லையெனவும், தொபியாவும், சன்பல்லாத்தும் அவனை கூலிக்காக அமர்த்தியபடியாலேயே அவன் எனக்கு எதிராகத் தீர்க்கதரிசனம் கூறினான் எனவும் நான் உணர்ந்தேன். நான் இதைச் செய்வதனால் பாவம் செய்யும்படியும், அதனால் அவர்கள் எனக்கு ஒரு கெட்டபெயரை உண்டாக்கி, என்னை அவமானப்படுத்தி, என்னைப் பயமுறுத்துவதற்காகவுமே அவன் கூலிக்கு அமர்த்தப்பட்டிருந்தான். “இறைவனே, தொபியாவும், சன்பல்லாத்தும் எனக்குச் செய்தவற்றிற்காக அவர்களை நினைவில்கொள்ளும். அத்துடன் பெண் இறைவாக்கினரான நொவதியாவையும், என்னைப் பயமுறுத்த முயற்சித்த மற்ற இறைவாக்கினர்களையும் நினைவில்கொள்ளும்.” எலூல் மாதம் இருபத்தைந்தாம் நாளன்று, ஐம்பத்திரண்டு நாட்களில் மதில் கட்டப்பட்டு முடிந்தது. இதைப்பற்றி எங்கள் பகைவர்கள் அனைவரும் கேள்விப்பட்டார்கள். எங்கள் இறைவனின் உதவியினாலேயே இந்த வேலைசெய்து முடிக்கப்பட்டது என எங்களைச் சுற்றியிருந்த யூதரல்லாதவர்களும் உணர்ந்ததினால் பயமடைந்து தங்கள் சுயநம்பிக்கையை இழந்தார்கள். மேலும் இந்த நாட்களில் யூதாவின் உயர்குடி மக்களிடமிருந்து தொபியாவுக்குப் பல கடிதங்கள் வந்துகொண்டிருந்தன. தொபியாவிடமிருந்தும், அவர்களுக்குப் பதில்கள் போய்க் கொண்டிருந்தன. தொபியா ஆராகின் மகன் செகனியாவுக்கு மருமகனாக இருந்ததாலும், தொபியாவின் மகன் யோகனான், பெரகியாவின் மகன் மெசுல்லாமின் மகளைத் திருமணம் செய்திருந்ததினாலும் யூதாவிலுள்ள அநேகர் அவனுடைய ஆணைக்குக் கீழ்ப்படிந்திருந்தார்கள். அவர்கள் என்முன் தொபியாவின் நற்செயல்களைப்பற்றி எனக்கு அறிவித்ததுடன் நான் சொல்பவற்றையும் அவனுக்கு போய்ச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். தொபியாவும் பயமுறுத்தும் கடிதங்களை எனக்கு அனுப்பினான்.
நெகேமியா 6:4-19 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அவர்கள் இந்தவிதமாக நான்குமுறை எனக்குச் சொல்லியனுப்பினார்கள்; நானும் இந்த விதமாகவே அவர்களுக்கு மறுமொழி அனுப்பினேன். ஐந்தாம் முறையும் சன்பல்லாத்து அந்த விதமாகவே தன்னுடைய வேலைக்காரனையும், அவன் கையிலே முத்திரைபோடாத ஒரு கடிதத்தையும் எனக்கு அனுப்பினான். அதிலே: நீரும் யூதர்களும் கலகம்செய்ய நினைக்கிறீர்கள் என்றும், அதற்காக நீர் மதிலைக் கட்டுகிறீர் என்றும், இந்த விதமாக நீர் அவர்களுக்கு ராஜாவாகப் போகிறீர் என்றும், யூதாவிலே ஒரு ராஜா இருக்கிறார் என்று உம்மைக்குறித்து எருசலேமிலே கூறுகிற தீர்க்கதரிசிகளையும் சம்பாதித்தீரென்றும் யூதரல்லாதவர்களுக்குள்ளே பிரபலமாக இருக்கிறது, கஷ்மூவும் அப்படிச் சொல்லுகிறான்; இப்போதும் இந்தச் செய்தி ராஜாவிற்கு எட்டுமே; ஆகையால் நாம் ஒருவரோடொருவர் ஆலோசனை செய்வதற்காக நீர் வரவேண்டும் என்று எழுதியிருந்தது. அதற்கு நான்: நீர் சொல்லுகிற அந்தக் காரியங்களில் ஒன்றும் நடக்கவில்லை; அவைகள் உம்முடைய மனதின் கற்பனையே அல்லாமல் வேறல்ல என்று சொல்லியனுப்பினேன். அந்த வேலை நடைபெறாமலிருக்க, எங்கள் கைகள் சோர்ந்துபோகும் என்று சொல்லி, அவர்கள் எல்லோரும் எங்களைப் பயமுறுத்தப்பார்த்தார்கள். ஆதலால் தேவனே, நீர் என்னுடைய கைகளைத் பலப்படுத்தியருளும். மெகதாபெயேலின் மகனாகிய தெலாயாவின் மகன் செமாயா தன்னுடைய வீட்டிலே அடைக்கப்பட்டிருக்கும்போது, நான் அவனிடத்தில் போனேன்; அப்பொழுது அவன்: நாம் இருவருமாக தேவனுடைய வீடாகிய ஆலயத்திற்குள்ளே போய், தேவாலயத்தின் கதவுகளைப் பூட்டுவோம் வாரும்; உம்மைக் கொன்றுபோட வருவார்கள், இரவிலே உம்மைக் கொன்றுபோட வருவார்கள் என்றான். அதற்கு நான்: என்னைப்போன்ற மனிதன் ஓடிப்போவானோ? என்னைப் போன்றவன் உயிர் பிழைக்கும்படி தேவாலயத்திலே போய்ப் பதுங்குவானோ? நான் போவதில்லை என்றேன். தேவன் அவனை அனுப்பவில்லையென்றும், தொபியாவும் சன்பல்லாத்தும் அவனுக்குக் பணம்கொடுத்ததால், அவன் எனக்கு விரோதமாக அந்தத் தீர்க்கதரிசனத்தைச் சொன்னான் என்றும் அறிந்துகொண்டேன். நான் பயந்து அவர்கள் சொன்னதைச்செய்து பாவம் செய்வதற்கும், என்னை அவமானப்படுத்த காரணத்தை ஏற்படுத்துவதற்கும் அவனுக்கு பணம் கொடுத்திருந்தார்கள். என்னுடைய தேவனே, தொபியாவும் சன்பல்லாத்தும் செய்த இந்தச் செய்கைகளுக்குத்தகுந்ததாக நீர் அவர்களையும், நொவதியாள் என்னும் தீர்க்கதரிசியானவளையும், எனக்கு பயமுண்டாக்கப்பார்த்த மற்றத் தீர்க்கதரிசிகளையும் நினைத்துக்கொள்ளும். அப்படியே மதிலானது ஐம்பத்திரண்டு நாட்களுக்குள்ளே கட்டப்பட்டு, எலூல் மாதம் இருபத்தைந்தாந்தேதியிலே முடிந்தது. எங்கள் எதிரிகள் எல்லோரும் அதைக் கேட்டபோதும், எங்களை சுற்றிலும் இருக்கிற யூதரல்லாதவர்கள் அனைவரும் கண்டபோதும், மிகவும் நம்பிக்கையற்றுப்போய், இந்த செயல் எங்கள் தேவனால் கைகூடி வந்ததென்று அறிந்தார்கள். அந்த நாட்களில் யூதாவிலுள்ள பெரிய மனிதர்களிடத்திலிருந்து தொபியாவுக்குப் போகிறதும், தொபியாவினிடத்திலிருந்து அவர்களுக்கு வருகிறதுமான கடிதங்கள் அநேகமாயிருந்தது. அவன் ஆராகின் மகனாகிய செகனியாவுக்கு மருமகனாக இருந்ததும் அல்லாமல், அவன் மகனாகிய யோகனான் பெரகியாவின் மகனாகிய மெசுல்லாமின் மகளை திருமணம் செய்திருந்ததாலும், யூதாவில் அநேகர் அவனுக்கு ஆணையிட்டுக் கொடுத்திருந்தார்கள். அவன் செய்யும் நன்மைகளையும் அவர்கள் எனக்கு முன்பாக விவரித்து, என்னுடைய வார்த்தைகளை அவனுக்குக் கொண்டுபோவார்கள்; தொபியா எனக்குப் பயமுண்டாகக் கடிதங்களை அனுப்புவான்.
நெகேமியா 6:4-19 பரிசுத்த பைபிள் (TAERV)
சன்பல்லாத்தும் கேஷேமும் அதே செய்தியை என்னிடம் நான்குமுறை அனுப்பினார்கள். ஒவ்வொருமுறையும் நான் அதே பதிலையே திரும்ப அனுப்பினேன். பிறகு, ஐந்தாவது தடவை, சன்பல்லாத் தனது உதவியாளனை என்னிடம் அதே செய்தியோடு அனுப்பினான். அதோடு அவனது கையில் முத்திரையிடப்படாத ஒரு கடிதமும் இருந்தது. அக்கடிதத்தில், “ஒரு வதந்தி சுற்றிக்கொண்டிருக்கிறது. எங்கெங்கும் ஜனங்கள் அதைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதோடு, கேஷேம் இதனை உண்மை என்று கூறுகிறான். நீயும் யூதர்களும் ராஜாவுக்கு எதிராகத்திரும்ப திட்டமிடுகிறீர்கள் என்று ஜனங்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதற்காகத் தான் நீங்கள் எருசலேம் சுவரைக் கட்டிக்கொண்டிருக்கிறீர்கள். நீ யூதர்களின் புதிய ராஜா ஆவாய் என்றும் ஜனங்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ‘யூதாவில் ஒரு ராஜா இருக்கிறான்’ என்று எருசலேமில் அறிக்கையிடுவதற்கு நீ தீர்க்கதரிசிகளைத் தேர்ந்தெடுக்கிறாய் என்றும் வதந்தி உள்ளது. “நெகேமியா, இப்பொழுது நான் உன்னை எச்சரிக்கிறேன். இதைப்பற்றி அர்தசஷ்டா ராஜாவும் கேள்விப்படுவான். எனவே வா, நாம் கூடி இதைப் பற்றி பேசுவோம்” என்று எழுதியிருந்தது. எனவே நான் சன்பல்லாத்துக்கு இந்தப் பதிலை அனுப்பினேன். அதில், “நீங்கள் சொல்லிக்கொண்டிருப்பது எதுவும் நடக்கவில்லை. உன் சொந்த தலைக்குள் நீயே எல்லாவற்றையும் சிந்தித்துக்கொண்டிருக்கிறாய்” என்று எழுதியிருந்தேன். எங்கள் பகைவர்கள் எங்களைப் பயமுறுத்தவே முயன்றனர். அவர்கள் தங்களுக்குள், “யூதர்கள் பயப்படுவார்கள். வேலைச் செய்துகொண்டிருப்பதில் சோர்வு அடைவார்கள். பிறகு சுவர் வேலை முடியாது” என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நான், “தேவனே என்னைப் பலப்படுத்தும்” என ஜெபம் செய்தேன். ஒரு நாள் தெலாயாவின் குமாரனாகிய செமாயாவின் வீட்டிற்குப் போனேன். தெலாயா, மெகதாபெயேலின் குமாரன். செமாயா தன் வீட்டிலேயே தங்கியிருந்தான். செமாயா, “நெகேமியா, நாம் தேவனுடைய ஆலயத்தில் சந்திப்போம். நாம் அந்த பரிசுத்தமான இடத்தின் உள்ளே போய் கதவுகளை மூடிக்கொள்வோம். ஏனென்றால் மனிதர்கள் உன்னைக் கொல்ல வருகின்றனர். இன்று இரவு உன்னைக் கொல்ல வருகின்றனர்” என்றான். ஆனால் நான் செமாயாவிடம், “என்னைப் போன்ற சாதாரண மனிதன் ஓடலாமா? என்னைப் போன்ற சாதாரண மனிதன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பரிசுத்தமான இடத்திற்கு ஓட முடியாது என்று நீ அறிவாய். நான் போகமாட்டேன்!” என்று சொன்னேன். செமாயாவை தேவன் அனுப்பியிருக்கவில்லை என்பதை நான் அறிவேன். அவன் எனக்கு எதிராகப் பிரச்சாரம் செய்துக்கொண்டிருக்கிறான் என்பதை நான் அறிவேன். ஏனென்றால் அவ்வாறு செய்வதற்கு அவனுக்குத் தொபியாவும் சன்பல்லாத்தும் சம்பளம் கொடுக்கிறார்கள். செமாயா, என்னைப் பயங்காட்டி அச்சமடைய செய்வதற்குக் கூலி பெற்றிருக்கிறான். நான் ஆலயத்தின் அந்தப் பாகத்திற்குப் போவதால் ஏற்படும் பாவத்தை செய்ய அவர்கள் இத்தகைய தீயகாரியங்களை எனக்கு எதிராக திட்டமிட்டுக்கொண்டிருந்தனர். பிறகு எனது பகைவர்களுக்கு என்னை நிந்திக்க ஒரு காரணம் கிடைத்துவிடும். அதன் மூலம் எனக்குக் கெட்ட பெயரைத் தருவார்கள். தேவனே தயவுசெய்து தொபியாவையும் சன்பல்லாத்தையும் அவர்கள் செய்துள்ள தீயவற்றையும் நினைவுக்கொள்ளும். பெண் தீர்க்கதரிசியான நொவதியாளும் மற்ற தீர்க்கதரிசிகளும் என்னைப் பயங்காட்ட முயன்றதை நினைவுக்கொள்ளும். எனவே, எருசலேம் சுவர் எலூல் மாதத்தின் 25வது நாளன்று கட்டி முடிக்கப்பட்டது. சுவரைக் கட்டிமுடிக்க 52 நாட்கள் ஆயிற்று. பிறகு எங்களது பகைவர்கள் எல்லாம் சுவர் கட்டி முடிக்கப்பட்டது என்பதைக் கேள்விப்பட்டனர். எங்களைச் சுற்றிலும் உள்ள நாட்டினர் சுவர் கட்டி முடிந்துவிட்டது என்பதைப் பார்த்தனர். எனவே அவர்கள் தமது தைரியத்தை இழந்தனர். ஏனென்றால் இவ்வேலை எங்கள் தேவனுடைய உதவியால் செய்யப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டனர். சுவர் வேலை முடிக்கப்பட்டிருந்த அந்த நாட்களில், யூதாவில் உள்ள பணக்கார ஜனங்கள் தொபியாவிற்குப் பல கடிதங்களை அனுப்பினர். தொபியாவும் அவற்றுக்குப் பதில் அனுப்பினான். அவர்கள் அக்கடிதங்களை அனுப்பினர். ஏனென்றால், யூதாவிலுள்ள பல ஜனங்கள் அவனுக்கு உண்மையாக இருப்பதாகச் சத்தியம் செய்துள்ளனர். இதற்கு காரணம், தொபியா செகனியாவிற்கு மருமகனாக இருந்தான். செகனியா ஆராகின் குமாரன். தொபியாவின் குமாரனான யோகனான் மெசுல்லாமின் குமாரத்தியை மண முடித்திருந்தான். மெசுல்லாம், பெரகியாவின் குமாரனாக இருந்தான். கடந்த காலத்தில் அந்த ஜனங்கள் தொபியாவிற்கு ஒரு சிறப்பான வாக்குறுதியைச் செய்துக் கொடுத்திருந்தனர். எனவே அந்த ஜனங்கள் என்னிடம் தொபியா எவ்வளவு நல்லவன் என்று சொல்லிக்கொண்டு இருந்தனர். நான் செய்துக்கொண்டிருந்ததையும் அவர்கள் தொபியாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார்கள். தொபியா என்னைப் பயங்காட்ட கடிதங்களை அனுப்பிக்கொண்டிருந்தான்.