நெகேமியா 6:4-19

நெகேமியா 6:4-19 TCV

இதேவிதமாக நான்கு முறைகள் அவர்கள் செய்தி அனுப்பினார்கள். நானும் ஒவ்வொரு தடவையும் அதே பதிலை மீண்டும் கொடுத்தனுப்பினேன். சன்பல்லாத்து ஐந்தாம் முறையும் அதே செய்தியுடன் தன் வேலைக்காரனை என்னிடம் அனுப்பினான். அவனுடைய கையில் முத்திரையிடப்படாத கடிதம் ஒன்று இருந்தது. அந்தக் கடிதத்தில், “நீயும் யூதர்களும் கலகம் உண்டாக்குவதற்குத் திட்டமிட்டிருக்கிறீர்கள். அதனாலேயே நீங்கள் மதிலைக் கட்டுகிறீர்கள் என்ற செய்தி மற்ற மக்களுள் பரவுகிறது. கேசேமும் அவ்வாறே சொல்கிறான். மேலும் இந்த அறிக்கைகளின்படி நீர் அவர்களுக்கு அரசனாகப் போகிறீர். உம்மைக் குறித்து இதை பிரசித்தப்படுத்தும்படி, எருசலேமின் இறைவாக்கு உரைப்போரையும் நியமித்திருக்கிறீர். ‘யூதாவில் ஒரு அரசன் இருக்கிறார்!’ என்ற செய்தி அரசனுக்கு அறிவிக்கப்படும். ஆகையால் நீர் வாரும், நாம் ஒன்றுகூடி ஆலோசிப்போம்” என்று எழுதியிருந்தது. அதற்கு நான், “நீர் சொல்வதன்படி ஒன்றும் நடக்கவில்லை; இது உம்முடைய வெறும் கற்பனையே” என்று பதில் சொல்லி அனுப்பினேன். அவர்கள் எல்லோரும் எங்களைப் பயமுறுத்த நினைத்திருந்தார்கள். எங்களுடைய கைகள் வேலைசெய்ய முடியாதபடி சோர்ந்து போய்விடும், ஒருநாளும் இவ்வேலை முற்றுப் பெறமாட்டாது என்று நினைத்தார்கள். ஆனாலும் நானோ, “என் கைகளைப் பலப்படுத்தும்” என்று மன்றாடினேன். மெகதாபெயேலின் மகனான தெலாயாவின் மகனும், தன்னுடைய வீட்டில் அடைக்கப்பட்டவனுமான செமாயாவின் வீட்டுக்கு நான் ஒரு நாள் போனேன். அவன் என்னிடம், “ஆலயத்தினுள்ளே இறைவனுடைய வீட்டில் சந்திப்போம். ஆலயத்தின் கதவுகளை மூடுவோம். ஏனெனில் உம்மைக் கொல்ல மனிதர் வருகிறார்கள். உம்மைக் கொல்வதற்காக அவர்கள் இரவில் வருகிறார்கள்” என்றான். நான் அதற்குப் பதிலாக, “என்னைப்போன்ற ஒரு மனிதன் ஓடிப்போவானோ? என்னைப்போன்ற ஒருவன் தன் உயிரைக் காப்பாற்ற ஆலயத்திற்குள் போகவேண்டுமோ? நான் போகமாட்டேன்” என்றேன். மேலும் இறைவன் இவனை அனுப்பவில்லையெனவும், தொபியாவும், சன்பல்லாத்தும் அவனை கூலிக்காக அமர்த்தியபடியாலேயே அவன் எனக்கு எதிராகத் தீர்க்கதரிசனம் கூறினான் எனவும் நான் உணர்ந்தேன். நான் இதைச் செய்வதனால் பாவம் செய்யும்படியும், அதனால் அவர்கள் எனக்கு ஒரு கெட்டபெயரை உண்டாக்கி, என்னை அவமானப்படுத்தி, என்னைப் பயமுறுத்துவதற்காகவுமே அவன் கூலிக்கு அமர்த்தப்பட்டிருந்தான். “இறைவனே, தொபியாவும், சன்பல்லாத்தும் எனக்குச் செய்தவற்றிற்காக அவர்களை நினைவில்கொள்ளும். அத்துடன் பெண் இறைவாக்கினரான நொவதியாவையும், என்னைப் பயமுறுத்த முயற்சித்த மற்ற இறைவாக்கினர்களையும் நினைவில்கொள்ளும்.” எலூல் மாதம் இருபத்தைந்தாம் நாளன்று, ஐம்பத்திரண்டு நாட்களில் மதில் கட்டப்பட்டு முடிந்தது. இதைப்பற்றி எங்கள் பகைவர்கள் அனைவரும் கேள்விப்பட்டார்கள். எங்கள் இறைவனின் உதவியினாலேயே இந்த வேலைசெய்து முடிக்கப்பட்டது என எங்களைச் சுற்றியிருந்த யூதரல்லாதவர்களும் உணர்ந்ததினால் பயமடைந்து தங்கள் சுயநம்பிக்கையை இழந்தார்கள். மேலும் இந்த நாட்களில் யூதாவின் உயர்குடி மக்களிடமிருந்து தொபியாவுக்குப் பல கடிதங்கள் வந்துகொண்டிருந்தன. தொபியாவிடமிருந்தும், அவர்களுக்குப் பதில்கள் போய்க் கொண்டிருந்தன. தொபியா ஆராகின் மகன் செகனியாவுக்கு மருமகனாக இருந்ததாலும், தொபியாவின் மகன் யோகனான், பெரகியாவின் மகன் மெசுல்லாமின் மகளைத் திருமணம் செய்திருந்ததினாலும் யூதாவிலுள்ள அநேகர் அவனுடைய ஆணைக்குக் கீழ்ப்படிந்திருந்தார்கள். அவர்கள் என்முன் தொபியாவின் நற்செயல்களைப்பற்றி எனக்கு அறிவித்ததுடன் நான் சொல்பவற்றையும் அவனுக்கு போய்ச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். தொபியாவும் பயமுறுத்தும் கடிதங்களை எனக்கு அனுப்பினான்.