நெகேமியா 2:12-20
நெகேமியா 2:12-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
நான் சில மனுஷரைக் கூட்டிக்கொண்டு, ராத்திரியில் எழுந்து நகரசோதனை செய்தேன்; ஆனாலும் எருசலேமுக்காகச் செய்யும்படி என் தேவன் என் மனதிலே வைத்ததை நான் ஒருவருக்கும் அறிவிக்கவில்லை; நான் ஏறிப்போன மிருகமேயல்லாமல் வேறொரு மிருகமும் என்னோடிருந்ததில்லை. நான் அன்று இராத்திரி பள்ளத்தாக்கின் வாசல் வழியாய்ப் புறப்பட்டு, வலுசர்ப்பத்துரவைக் கடந்து, குப்பைமேட்டு வாசலுக்கு வந்து, எருசலேமில் இடிந்துபோன அலங்கத்தையும், அக்கினியால் சுட்டெரிக்கப்பட்ட அதின் வாசல்களையும் பார்வையிட்டேன். அவ்விடத்தை விட்டு ஊருணிவாசலண்டைக்கும், ராஜாவின் குளத்தண்டைக்கும் போனேன்; நான் ஏறியிருந்த மிருகம் அங்கே நடந்துபோகிறதற்கு வழியில்லாதிருந்தது. அன்று இராத்திரியிலேயே நான் ஆற்றோரமாய்ப் போய், அலங்கத்தைப் பார்வையிட்டுத் திரும்பி, பள்ளத்தாக்கின் வாசல்வழியாய் வந்துவிட்டேன். நான் போனதும், நான் செய்ததும் அதிகாரிகள் ஒருவருக்கும் தெரியாது; அதுவரையிலும் நான் யூதருக்காகிலும், ஆசாரியர்கள் பெரியவர்கள் அதிகாரிகளுக்காகிலும், வேலைசெய்கிற மற்றவர்களுக்காகிலும் ஒன்றும் அறிவிக்கவில்லை. பின்பு நான் அவர்களை நோக்கி: எருசலேம் பாழாயிருக்கிறதையும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டுக்கிடக்கிறதையும், நாம் இருக்கிற சிறுமையையும் பார்க்கிறீர்களே; நாம் இனி நிந்தைக்குள்ளாயிராதபடிக்கு, எருசலேமின் அலங்கத்தைக் கட்டுவோம் வாருங்கள் என்று சொல்லி, என் தேவனுடைய கரம் என்மேல் நன்மையாக இருக்கிறதையும், ராஜா என்னோடே சொன்ன வார்த்தைகளையும் அவர்களுக்கு அறிவித்தேன்; அப்பொழுது அவர்கள்: எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்று சொல்லி, அந்த நல்ல வேலைக்குத் தங்கள் கைகளைத் திடப்படுத்தினார்கள். ஓரோனியனான சன்பல்லாத்தும், அம்மோனியனான தொபியா என்னும் ஊழியக்காரனும், அரபியனான கேஷேமும் இதைக் கேட்டபோது, எங்களைப் பரியாசம்பண்ணி, எங்களை நிந்தித்து: நீங்கள் செய்கிற இந்தக் காரியம் என்ன? நீங்கள் ராஜாவுக்கு விரோதமாகக் கலகம்பண்ணப்போகிறீர்களோ என்றார்கள். அதற்கு நான் மறுமொழியாக: பரலோகத்தின் தேவனானவர் எங்களுக்குக் காரியத்தைக் கைகூடிவரப்பண்ணுவார்; அவருடைய ஊழியக்காரராகிய நாங்கள் எழுந்து கட்டுவோம்; உங்களுக்கோவென்றால் எருசலேமிலே பங்குமில்லை பாத்தியமுமில்லை; உங்கள் பேர்விளங்க ஒன்றும் இல்லையென்று அவர்களுடனே சொன்னேன்.
நெகேமியா 2:12-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அதன்பின்பு ஒருசில மனிதர்களுடன் இரவுவேளையில் மதிலைப் பார்வையிட நான் சென்றேன். ஆனால் என் இறைவன் எருசலேமுக்காகச் செய்யும்படி எனது இருதயத்தில் தூண்டிய எதையும் நான் எவருக்கும் சொல்லவில்லை. நான் ஏறிச்சென்ற மிருகத்தைத் தவிர வேறு எந்த ஒரு மிருகமும் அங்கு இருக்கவில்லை. அன்றிரவே அங்கிருந்து பள்ளத்தாக்கு வாசல் வழியே வெளியே போய் வலுசர்ப்பத்தின் துரவையும், குப்பைமேட்டு வாசலையும் நோக்கிப் போய், உடைந்து கிடந்த எருசலேமின் மதில்களையும், நெருப்பால் சுட்டெரிக்கப்பட்ட அதின் வாசல் கதவுகளையும் பார்வையிட்டேன். அதன்பின் ஊற்று வாசலையும், அரசனின் குளத்தையும் நோக்கிப் போனேன்; ஆனால் நான் ஏறிச்சென்ற மிருகம் அதன் வழியாகச் செல்வதற்கு இடம் போதாமலிருந்தது. அதனால் நகரை இரவில் சுற்றி, பள்ளத்தாக்கு வழியாக மேலே வந்து, மேலும் மதிலைப் பார்வையிட்டேன். கடைசியாக பள்ளத்தாக்கு வாசல் வழியாய் திரும்பவும் உள்ளே வந்தேன். நான் எங்கே போயிருந்தேன் என்றோ, என்ன செய்துகொண்டிருந்தேன் என்றோ அதிகாரிகளுக்குத் தெரியாதிருந்தது; ஏனெனில் நான் யூதா மக்களுக்கோ, ஆசாரியருக்கோ, உயர்குடி மக்களுக்கோ, மற்ற எந்த அதிகாரிகளுக்கோ அல்லது வேலைசெய்யப்போகிற வேறு எவருக்குமோ ஒன்றுமே கூறவில்லை. பின்பு நான் அவர்களிடம், “நாங்கள் படும் கஷ்டத்தை நீங்கள் பார்க்கிறீர்களே, எருசலேம் பாழாய்க் கிடக்கிறது; அதன் வாசல் கதவுகளும் நெருப்பினால் எரிக்கப்பட்டுள்ளன. வாருங்கள், எருசலேமின் மதிலைத் திரும்பவும் கட்டுவோம். அப்பொழுது நாம் இனிமேலும் அவமானத்துடன் இருக்கமாட்டோம்” என்று கூறினேன். அத்துடன் நான் அவர்களுக்கு இறைவனின் கிருபையின்கரம் என்மேல் இருக்கிறதையும், அரசன் எனக்குச் சொன்னதைப்பற்றியும் கூறினேன். உடனே அவர்கள், “நாங்கள் மதிலைத் திரும்பவும் கட்டத் தொடங்குவோம்” எனப் பதிலளித்து, இந்த நல்ல வேலையைச் செய்யத் தொடங்கினார்கள். ஆனால் ஓரோனியனான சன்பல்லாத்தும், அம்மோனிய அலுவலகனான தொபியாவும், அரபியனான கேஷேமும் இதைப்பற்றிக் கேள்விப்பட்டபோது, எங்களை அவமதித்து, கேலி செய்தார்கள். அவர்கள், “நீங்கள் செய்யும் செயல் என்ன? அரசனுக்கு விரோதமாகக் கலகம் உண்டாக்குகிறீர்களோ?” என்று கேட்டார்கள். அதற்கு நான் அவர்களிடம், “பரலோகத்தின் இறைவன் எங்களுக்கு வெற்றி கொடுப்பார். அவருடைய அடியாராகிய நாங்கள் இதைத் திருப்பிக் கட்டத் தொடங்குவோம். ஆனால் உங்களுக்கோவெனில் எருசலேமில் பங்கோ, உரிமை கோரிக்கையோ, சரித்திரப் பூர்வமான உரிமையோ இல்லை” என்று கூறினேன்.
நெகேமியா 2:12-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
நான் சில மனிதர்களைக் கூட்டிக்கொண்டு, இரவில் எழுந்து நகரத்தைச் சோதனை செய்தேன்; ஆனாலும் எருசலேமிற்காகச் செய்யவேண்டிய காரியத்தை என்னுடைய தேவன் என்னுடைய மனதிலே வைத்ததை நான் ஒருவருக்கும் தெரிவிக்கவில்லை; நான் ஏறிப்போன மிருகத்தைத் தவிர வேறொரு மிருகமும் என்னுடன் இருந்ததில்லை. நான் அன்று இரவு பள்ளத்தாக்கின் வாசல் வழியாகப் புறப்பட்டு, வலுசர்ப்பக் கிணற்றைக் கடந்து, குப்பைமேட்டு வாசலுக்கு வந்து, எருசலேமில் இடிந்துபோன மதிலையும், அக்கினியால் சுட்டெரிக்கப்பட்ட அதின் வாசல்களையும் பார்வையிட்டேன். அந்த இடத்தைவிட்டு ஊற்றுவாசல் அருகிலும், ராஜாவின் குளத்தின் அருகிலும் போனேன்; நான் ஏறியிருந்த மிருகம் அங்கே நடந்துபோவதற்கு வழி இல்லாதிருந்தது. அன்று இரவிலேயே நான் ஆற்றோரமாகப் போய், மதிலைப் பார்வையிட்டுத் திரும்பி, பள்ளத்தாக்கின் வாசல்வழியாக வந்துவிட்டேன். நான் போனதும், நான் செய்ததும் அதிகாரிகள் ஒருவருக்கும் தெரியாது; அதுவரையிலும் நான் யூதருக்காவது, ஆசாரியர்கள் பெரியவர்கள் அதிகாரிகளுக்காவது, வேலைசெய்கிற மற்றவர்களுக்காவது ஒன்றும் தெரிவிக்கவில்லை. பின்பு நான் அவர்களை நோக்கி: எருசலேம் பாழாயிருப்பதையும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டுக்கிடப்பதையும், நாம் இருக்கிற சிறுமையையும் பார்க்கிறீர்களே; நாம் இனி அவமானம் அடையாமலிருக்க, எருசலேமின் மதிலைக் கட்டுவோம் வாருங்கள் என்று சொல்லி, என் தேவனுடைய கரம் என்மேல் நன்மையாக இருப்பதையும், ராஜா என்னோடு சொன்ன வார்த்தைகளையும் அவர்களுக்கு தெரிவித்தேன்; அப்பொழுது அவர்கள்: எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்று சொல்லி, அந்த நல்ல வேலைக்குத் தங்கள் கைகளை பலப்படுத்தினார்கள். ஓரோனியனான சன்பல்லாத்தும், அம்மோனியனான தொபியா என்னும் ஊழியக்காரனும், அரபியனான கேஷேமும் இதைக் கேட்டபோது, எங்களை கேலிசெய்து, எங்களை அவமதித்து: நீங்கள் செய்கிற இந்தக் காரியம் என்ன? நீங்கள் ராஜாவிற்கு விரோதமாகக் கலகம் செய்யப்போகிறீர்களோ என்றார்கள். அதற்கு நான் மறுமொழியாக: பரலோகத்தின் தேவனானவர் எங்களுக்குக் காரியத்தைக் கைகூடிவரச்செய்வார்; அவருடைய ஊழியக்காரர்களாகிய நாங்கள் எழுந்து கட்டுவோம்; உங்களுக்கோ எருசலேமிலே பங்குமில்லை பாத்தியமுமில்லை; உங்கள் பெயர்சொல்லப்பட ஒன்றும் இல்லையென்று அவர்களிடம் சொன்னேன்.
நெகேமியா 2:11-20 பரிசுத்த பைபிள் (TAERV)
நான் எருசலேமிற்குப் போனேன். நான் அங்கு மூன்று நாட்கள் தங்கினேன். பிறகு இரவில் நான் சில மனிதர்களோடு புறப்பட்டேன். எருசலேமிற்காக என்ன செய்யவேண்டும் என்று தேவன் என் இதயத்தில் வைத்திருக்கிறார் என்பதைப்பற்றி நான் எவரிடமும் சொல்லியிருக்கவில்லை. நான் சவாரி செய்து வந்த குதிரையைத் தவிர வேறு குதிரைகள் என்னிடம் இல்லை. இருட்டாக இருக்கும்போது நான் பள்ளத்தாக்கின் வாசல் வழியாகப் போய் வலுசர்ப்பத்துரவு மற்றும் குப்பைமேட்டு வாசலை நோக்கிச் சவாரி செய்தேன். உடைக்கப்பட்டிருந்த எருசலேமின் சுவர்களையும், நெருப்பால் எரிக்கப்பட்டிருந்த சுவர்களிலுள்ள வாசல்களையும் நான் பார்வையிட்டேன். பிறகு நான் அங்கிருந்து நீருற்று வாசலுக்கும் ராஜாவின் குளத்துக்கும் சென்றேன். ஆனால் நான் அருகில் நெருங்கும்போது எனது குதிரை செல்வதற்குப் போதிய இடம் இல்லை என்பதைக் கண்டுக்கொள்ள முடிந்தது. எனவே, இருட்டில் நான் பள்ளத்தாக்கிற்குச் சென்றேன். இறுதியாக நான் திரும்பி, பள்ளத்தாக்கின் வாசல் வழியாகத் திரும்பி வந்தேன். இஸ்ரவேலின் முக்கிய அதிகாரிகளும் மற்ற ஜனங்களும் நான் எங்கே போய் வந்தேன் என்பதையும், நான் என்ன செய்துக்கொண்டிருந்தேன் என்பதையும் அறியவில்லை. யூதர்கள், ஆசாரியர்கள், அரச குடும்பத்தினர், அதிகாரிகள், அந்தந்த வேலையைச் செய்யப்போகும் ஜனங்களுக்கும் நான் எதுவும் சொல்லவில்லை. பிறகு நான் அந்த ஜனங்களிடம், “இங்கே நமக்குள்ள துன்பத்தை உங்களால் பார்க்க முடியும். எருசலேம் பாழாகியிருக்கிறது. இதன் வாசல்கள் நெருப்பால் எரிக்கப்பட்டிருக்கின்றன. வாருங்கள் மீண்டும் நாம் எருசலேமின் சுவர்களைக் கட்டுவோம். அதன்பின் ஒருபோதும் நாம் அவமானமடைந்தவர்களாக இருக்கமாட்டோம்” என்றேன். நான் அந்த ஜனங்களிடம் தேவன் என்னிடம் கருணையோடு இருப்பதைப் பற்றியும் சொன்னேன். ராஜா என்னிடம் சொல்லியிருந்தவற்றைப் பற்றியும் நான் அவர்களிடம் சொன்னேன். பிறகு அந்த ஜனங்கள், “இப்பொழுது நாம் வேலையை ஆரம்பிக்கலாம்” என்று பதிலுரைத்தனர். எனவே இந்த நல்ல வேலையை நாங்கள் தொடங்கினோம். ஆனால் ஓரோனியனான சன்பல்லாத்தும் அம்மோனியனான தொபியா என்னும் வேலைக்காரனும் அரபியனான கேஷேமும் நாங்கள் மீண்டும் கட்டிக்கொண்டிருக்கிறோம் என்பதைக் கேள்விப்பட்டனர். அவர்கள் மிக இழிவான வழியில் எங்களைக் கேலிச் செய்தனர். அவர்கள், “நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் ராஜாவுக்கு எதிராகிக்கொண்டிருக்கிறீர்களா?” என்று கேட்டனர். ஆனால் நான் அந்த மனிதர்களிடம், “பரலோகத்தில் உள்ள தேவன் எங்களுக்கு கைக்கூடிவர உதவுவார். நாங்கள் தேவனுடைய அடியார்கள். நாங்கள் இந்த நகரத்தை மீண்டும் கட்டுவோம். இந்த வேலைக்கு நீங்கள் எங்களுக்கு உதவ முடியாமல் போகும். உங்கள் குடும்பத்தில் எவரும் இங்கே எருசலேமில் வாழவில்லை. இந்த நாட்டை நீங்கள் சொந்தம் கொள்ளவில்லை. இந்த இடத்தில் உங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை” என்று சொன்னேன்.