நெகேமியா 2:12-20

நெகேமியா 2:12-20 TCV

அதன்பின்பு ஒருசில மனிதர்களுடன் இரவுவேளையில் மதிலைப் பார்வையிட நான் சென்றேன். ஆனால் என் இறைவன் எருசலேமுக்காகச் செய்யும்படி எனது இருதயத்தில் தூண்டிய எதையும் நான் எவருக்கும் சொல்லவில்லை. நான் ஏறிச்சென்ற மிருகத்தைத் தவிர வேறு எந்த ஒரு மிருகமும் அங்கு இருக்கவில்லை. அன்றிரவே அங்கிருந்து பள்ளத்தாக்கு வாசல் வழியே வெளியே போய் வலுசர்ப்பத்தின் துரவையும், குப்பைமேட்டு வாசலையும் நோக்கிப் போய், உடைந்து கிடந்த எருசலேமின் மதில்களையும், நெருப்பால் சுட்டெரிக்கப்பட்ட அதின் வாசல் கதவுகளையும் பார்வையிட்டேன். அதன்பின் ஊற்று வாசலையும், அரசனின் குளத்தையும் நோக்கிப் போனேன்; ஆனால் நான் ஏறிச்சென்ற மிருகம் அதன் வழியாகச் செல்வதற்கு இடம் போதாமலிருந்தது. அதனால் நகரை இரவில் சுற்றி, பள்ளத்தாக்கு வழியாக மேலே வந்து, மேலும் மதிலைப் பார்வையிட்டேன். கடைசியாக பள்ளத்தாக்கு வாசல் வழியாய் திரும்பவும் உள்ளே வந்தேன். நான் எங்கே போயிருந்தேன் என்றோ, என்ன செய்துகொண்டிருந்தேன் என்றோ அதிகாரிகளுக்குத் தெரியாதிருந்தது; ஏனெனில் நான் யூதா மக்களுக்கோ, ஆசாரியருக்கோ, உயர்குடி மக்களுக்கோ, மற்ற எந்த அதிகாரிகளுக்கோ அல்லது வேலைசெய்யப்போகிற வேறு எவருக்குமோ ஒன்றுமே கூறவில்லை. பின்பு நான் அவர்களிடம், “நாங்கள் படும் கஷ்டத்தை நீங்கள் பார்க்கிறீர்களே, எருசலேம் பாழாய்க் கிடக்கிறது; அதன் வாசல் கதவுகளும் நெருப்பினால் எரிக்கப்பட்டுள்ளன. வாருங்கள், எருசலேமின் மதிலைத் திரும்பவும் கட்டுவோம். அப்பொழுது நாம் இனிமேலும் அவமானத்துடன் இருக்கமாட்டோம்” என்று கூறினேன். அத்துடன் நான் அவர்களுக்கு இறைவனின் கிருபையின்கரம் என்மேல் இருக்கிறதையும், அரசன் எனக்குச் சொன்னதைப்பற்றியும் கூறினேன். உடனே அவர்கள், “நாங்கள் மதிலைத் திரும்பவும் கட்டத் தொடங்குவோம்” எனப் பதிலளித்து, இந்த நல்ல வேலையைச் செய்யத் தொடங்கினார்கள். ஆனால் ஓரோனியனான சன்பல்லாத்தும், அம்மோனிய அலுவலகனான தொபியாவும், அரபியனான கேஷேமும் இதைப்பற்றிக் கேள்விப்பட்டபோது, எங்களை அவமதித்து, கேலி செய்தார்கள். அவர்கள், “நீங்கள் செய்யும் செயல் என்ன? அரசனுக்கு விரோதமாகக் கலகம் உண்டாக்குகிறீர்களோ?” என்று கேட்டார்கள். அதற்கு நான் அவர்களிடம், “பரலோகத்தின் இறைவன் எங்களுக்கு வெற்றி கொடுப்பார். அவருடைய அடியாராகிய நாங்கள் இதைத் திருப்பிக் கட்டத் தொடங்குவோம். ஆனால் உங்களுக்கோவெனில் எருசலேமில் பங்கோ, உரிமை கோரிக்கையோ, சரித்திரப் பூர்வமான உரிமையோ இல்லை” என்று கூறினேன்.