மாற்கு 5:1-20

மாற்கு 5:1-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அவர்கள் கடலைக் கடந்து, கதரேனருடைய நாட்டிற்குச் சென்றார்கள். இயேசு படகைவிட்டு இறங்கியவுடன், தீய ஆவி பிடித்திருந்த ஒருவன் கல்லறைகளிலிருந்து வெளியேறி, அவருக்கு எதிரே வந்தான். அவன் கல்லறைகளில் வாழ்ந்து கொண்டிருந்தான்; அவனைச் சங்கிலியினால்கூட ஒருவராலும் கட்ட முடியாதிருந்தது. பலமுறை அவனுடைய காலையும் கையையும் சங்கிலியினால் கட்டியபோதுங்கூட, அவன் சங்கிலிகளைத் தகர்த்து தனது கால்களிலுள்ள விலங்குகளை உடைத்துப் போடுவான். அவனை அடக்கிக் கட்டுப்படுத்த யாராலும் முடியாதிருந்தது. இரவும் பகலும் அவன் கல்லறைகளிலும் குன்றுகளிலும் கூச்சலிட்டுக் கொண்டும் தன்னைத்தானே கற்களினால் காயப்படுத்திக்கொண்டும் இருப்பான். இயேசுவைத் தூரத்தில் கண்டபோது, அவன் ஓடிப்போய் அவருக்கு முன்பாக முழங்காற்படியிட்டு விழுந்தான். அவன் உரத்த குரலில் சத்தமிட்டு, “இயேசுவே, மகா உன்னதமான இறைவனின் மகனே, என்னிடம் உமக்கு என்ன வேண்டும்? என்னைத் துன்புறுத்தவேண்டாம் என்று இறைவன் பெயரில் கேட்கிறேன்!” என்றான். ஏனெனில் இயேசு அவனிடம், “அசுத்த ஆவியே, இவனைவிட்டு வெளியே போ!” என்று சொல்லியிருந்தார். அப்பொழுது இயேசு அவனிடம், “உன் பெயர் என்ன?” என்று கேட்டார். “என் பெயர் லேகியோன். ஏனெனில், நாங்கள் அநேகராயிருக்கிறோம்” என்று அவன் பதிலளித்தான். அவர்களை அந்தப் பகுதியை விட்டு அனுப்பவேண்டாம் என்று அவன் திரும்பத்திரும்ப இயேசுவிடம் கெஞ்சிக்கேட்டான். அங்கே அருகேயிருந்த மலைப்பகுதியில், பன்றிகள் பெருங்கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன. பிசாசுகள் இயேசுவிடம், “எங்களை அந்தப் பன்றிகளுக்குள்ளே அனுப்பும்; அவைகளுக்குள்ளே புகுந்துகொள்ள அனுமதிகொடும்” என்று கெஞ்சிக்கேட்டன. இயேசு அவைகளுக்கு அனுமதி கொடுத்தார்; அந்தத் தீய ஆவிகள் வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. அந்தப் பன்றிக் கூட்டத்தில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் பன்றிகள் இருந்தன. அவை அந்த செங்குத்தான கரையோரத்திலிருந்து விரைந்தோடி, ஏரிக்குள் விழுந்து மூழ்கின. பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் ஓடிப்போய் பட்டணத்திலும் நாட்டுப்புறத்திலும் இதை அறிவித்தார்கள். நடந்தது என்ன என்று பார்க்கும்படி மக்கள், அங்கே சென்றார்கள். அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, பிசாசுகள் பிடித்திருந்தவன் உடை உடுத்தி, மனத்தெளிவுடன் உட்கார்ந்து இருப்பதைக் கண்டார்கள்; அதனால் அவர்கள் பயமடைந்தார்கள். நடந்ததைக் கண்டவர்கள், பிசாசு பிடித்தவனுக்கு நிகழ்ந்ததையும் பன்றிகளைப் பற்றியும் அங்கு வந்த மக்களுக்குச் சொன்னார்கள். அப்பொழுது அந்த மக்கள் இயேசுவை அந்தப் பகுதியைவிட்டுப் போய்விடும்படி வேண்டிக்கொள்ளத் தொடங்கினார்கள். இயேசு படகில் ஏறியபோது, பிசாசு பிடித்திருந்தவன் அவருடன் போகும்படி கெஞ்சிக்கேட்டான். இயேசு அவனைத் தன்னுடன் வர அனுமதிக்காமல் அவனிடம், “நீ உன் வீட்டிற்குப்போய் கர்த்தர் உனக்கு எவ்வளவு பெரிய காரியத்தைச் செய்தார் என்பதையும் உனக்குக் காண்பித்த இரக்கத்தையும் அவர்களுக்குச் சொல்” என்றார். அவன் புறப்பட்டுப்போய், இயேசு தனக்கு எவ்வளவு பெரிய காரியத்தைச் செய்தார் என்று தெக்கப்போலி நாட்டில் சொல்லத் தொடங்கினான். எல்லோரும் வியப்படைந்தார்கள்.

மாற்கு 5:1-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு அவர்கள் கடலுக்கு அக்கரையில் உள்ள கதரேனருடைய நாட்டிற்கு வந்தார்கள். அவர் படகில் இருந்து இறங்கினவுடனே, அசுத்தஆவியுள்ள ஒரு மனிதன் கல்லறைகளில் இருந்து அவருக்கு எதிராகவந்தான். அவன் கல்லறைகளிலே குடியிருந்து வந்தான்; அவனைச் சங்கிலிகளினால் கட்டவும் ஒருவனுக்கும் முடியவில்லை. அவன் பலமுறை விலங்குகளினாலும் சங்கிலிகளினாலும் கட்டப்பட்டும், சங்கிலிகளைத் தகர்த்து, விலங்குகளை உடைத்துப்போடுவான்; அவனை அடக்க ஒருவனுக்கும் முடியவில்லை. அவன் எப்பொழுதும் இரவும் பகலும், மலைகளிலும் கல்லறைகளிலும் இருந்து, சத்தம்போட்டு, கல்லுகளினால் தன்னைத்தானே காயப்படுத்திக்கொண்டிருந்தான். அவன் இயேசுவைத் தூரத்திலே பார்த்தபோது, ஓடிவந்து, அவரைப் பணிந்துகொண்டு: இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தவேண்டாம் என்று தேவனுடைய பெயரில் உம்மைக் கேட்டுக்கொள்ளுகிறேன் என்று அதிக சத்தமிட்டுச் சொன்னான். ஏனென்றால், அவர் அவனைப் பார்த்து: அசுத்தஆவியே, இந்த மனிதனைவிட்டு வெளியே போ என்று சொல்லியிருந்தார். அப்பொழுது அவர் அவனைப் பார்த்து: உன் பெயர் என்ன என்று கேட்டார். அதற்கு அவன்: நாங்கள் அநேகர் இருப்பதினால் என் பெயர் லேகியோன் என்று சொல்லி, தங்களை அந்தத் திசையிலிருந்து துரத்திவிடவேண்டாம் என்று அவரை அதிகமாக வேண்டிக்கொண்டான். அப்பொழுது, அந்த இடத்தில் மலையின் அருகில் அநேக பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தது. அந்தப் பிசாசுகள் அவரைப் பார்த்து: பன்றிகளுக்குள்ளே போக, அவைகளுக்குள் எங்களை அனுப்பும் என்று அவரை வேண்டிக்கொண்டன. இயேசு அவைகளுக்கு உத்தரவு கொடுத்தவுடனே, அசுத்தஆவிகள் புறப்பட்டுப் பன்றிகளுக்குள் போனது; உடனே ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகளுள்ள அந்தக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து ஓடி, கடலிலே பாய்ந்து, கடலில் அமிழ்ந்துபோனது. பன்றிகளை மேய்த்தவர்கள் ஓடி, இதைப் பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள். அப்பொழுது நடந்தவைகளைப் பார்ப்பதற்காக மக்கள் புறப்பட்டு; இயேசுவிடம் வந்து, லேகியோனாகிய பிசாசுகள் பிடித்திருந்தவன் புத்தி தெளிந்து, உடை அணிந்து, உட்கார்ந்திருப்பதைப் பார்த்து, பயந்தார்கள். பிசாசுகள் பிடித்திருந்தவனுக்கும் பன்றிகளுக்கும் நடந்தவைகளைப் பார்த்தவர்களும் அவர்களுக்கு விளக்கமாகச் சொன்னார்கள். அப்பொழுது தங்களுடைய எல்லைகளைவிட்டுப் போகவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள். அப்படியே அவர் படகில் ஏறும்பொழுது, பிசாசு பிடித்திருந்தவன், இயேசுவோடு வருவதற்கு தனக்கு அனுமதி கொடுக்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டான். இயேசு அவனுக்கு அனுமதி கொடுக்காமல்: நீ உன் குடும்பத்தாரிடம் உன் வீட்டிற்குப்போய், கர்த்தர் உனக்கு மனமிறங்கி, உனக்குச் செய்தவைகளை எல்லாம் அவர்களுக்குச் சொல் என்று சொன்னார். அப்படியே அவன்போய், இயேசு தனக்குச் செய்தவைகளை எல்லாம் தெக்கப்போலி என்னும் நாட்டில் பிரசித்தப்படுத்தினான்; எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.

மாற்கு 5:1-20 பரிசுத்த பைபிள் (TAERV)

இயேசுவும் அவரது சீஷர்களும் அக்கடலைக் கடந்து அக்கரைக்குச் சென்றார்கள். அங்கு கதரேனர் என்ற மக்கள் வாழ்ந்து வந்தனர். படகிலிருந்து இயேசு இறங்கியதும் இறந்த மக்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்த குகைகளிலிருந்து ஒரு மனிதன் வெளியே வந்தான். அந்த மனிதனை அசுத்த ஆவிகள் பிடித்திருந்தன. அவன் எப்போதும் கல்லறையிலேயே குடியிருந்தான். அவனை எவராலும் கட்டிப்போட முடியவில்லை. பலமுறை மக்கள் அவனது கைகளையும் கால்களையும் விலங்குகளாலும், சங்கிலிகளாலும் கட்டிப்போட்டிருந்தனர். ஆனால் அந்த மனிதன் அச்சங்கிலிகளையும் விலங்குகளையும் அறுத்து எறிந்துவிடுவான். அவனைக் கட்டுப்படுத்தும் பலமுள்ள மனிதன் எவனும் அங்கில்லை. இரவும், பகலும் அவன் கல்லறைக் குகைகளைச் சுற்றியும் மலைப் பகுதிகளிலும் திரிந்துகொண்டிருந்தான். அவன் கூக்குரலிட்டுக்கொண்டும், கற்களால் தன்னைக் காயப்படுத்திக்கொண்டும் இருந்தான். தொலைவில் இயேசு வந்துகொண்டிருக்கும்போதே அவரைப் பார்த்துவிட்டான் அவன். ஓடி வந்து அவர் முன்னால் பணிந்து நின்றான். இயேசு அவனிடம், “அசுத்த ஆவியே, இந்த மனிதனை விட்டு வெளியே போ” என்று சொன்னார். உடனே அவன் உரத்த குரலில் “இயேசுவே! மகா உன்னத தேவ குமாரனே! என்னிடம் என்ன விரும்புகிறீர்? என்னைத் துன்புறுத்த வேண்டாம் என்று தேவனிடம் ஆணையாய் உம்மைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்” என்றான் பிறகு இயேசு அவனிடம், “உன் பெயர் என்ன?” என்று கேட்டார். “என் பெயர் லேகியோன், ஏனென்றால் எனக்குள்ளே பல ஆவிகள் உள்ளன” என்று அவன் சொன்னான். அத்தோடு அவனுக்குள்ளே இருந்த ஆவிகள் தங்களை அந்தப் பகுதியைவிட்டுத் துரத்தக் கூடாது என்று மீண்டும், மீண்டும் கெஞ்சிக் கேட்டன. அப்பொழுது அந்த மலையருகே பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தன. அசுத்த ஆவிகள் இயேசுவிடம், “எங்களை அந்தப் பன்றிகளுக்குள்ளே அனுப்பிவிடுங்கள்” எனக் கேட்டுக்கொண்டன. அவ்வாறே போகும்படி இயேசு அனுமதி அளித்தார். அசுத்த ஆவிகள் அந்த மனிதனை விட்டு, விட்டு பன்றிகளுக்குள் புகுந்து கொண்டன. அப்பன்றிக் கூட்டம் மேட்டிலிருந்து ஓடி கடலுக்குள் பாய்ந்து கடலில் மூழ்கி இறந்தன. அவை ஏறக்குறைய 2,000 எண்ணிக்கை உடையதாக இருக்கும். பன்றிகளை மேய்த்துக்கொண்டிருந்தவர்கள் அவ்விடத்தை விட்டு ஓடிவிட்டார்கள். அவர்கள் பட்டணத்துக்கும், வயல்வெளிக்கும் சென்றார்கள். அங்கு சந்தித்த மக்களிடமெல்லாம் இதனைச் சொன்னார்கள். மக்களும் என்ன நடந்தது என்பதை அறிய வந்தனர். அவர்கள் இயேசுவிடம், வந்தார்கள். பல அசுத்த ஆவிகளால் பிடிக்கப்பட்டிருந்தவனையும், அவர்கள் பார்த்தார்கள். அவன் ஆடைகள் அணிந்து அமைதியாய் இயேசுவின் காலடியில் உட்கார்ந்துகொண்டிருந்தான். அவனது மனநிலை சரியாக இருந்தது. மக்கள் இவற்றைக் கண்டு அச்சப்பட்டனர். இயேசு செய்தவற்றைப் பார்த்திருந்த சிலரும் அங்கே இருந்தனர். இவர்கள் மற்றவர்களிடம் அசுத்த ஆவிகளால் பிடிக்கப்பட்டவனின் செயல்களையும் இயேசு அவனைக் குணப்படுத்தியதையும் கூறினர். அவர்கள் பன்றிகளுக்கு ஏற்பட்டதையும் சொன்னார்கள். பிறகு அந்த மக்கள், இயேசுவிடம் அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டுச் செல்லும்படி வேண்டினர். படகின் மூலம் அவ்விடத்தை விட்டுச் செல்ல இயேசு தயாரானார். பிசாசுகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட அந்த மனிதன் தன்னையும் இயேசுவோடு வர அனுமதிக்கும்படி வேண்டிக்கொண்டான். ஆனால் இயேசு அவனுக்கு அனுமதி கொடுக்கவில்லை. அவனிடம் இயேசு, “நீ வீட்டுக்குப் போ. உன் குடும்பத்தாரையும், நண்பர்களையும் சென்று பார்த்து உனக்காகக் கர்த்தர் செய்தவற்றை எல்லாம் அவர்களிடம் கூறு. அவர் உனக்குக் கருணை செய்தார் என்றும் கூறு” என்றார். எனவே அவன் அவ்விடத்தை விட்டுப் போய் தெக்கப்போலி பகுதி மக்களிடம் தனக்கு இயேசு செய்ததைக் கூற ஆரம்பித்தான். மக்கள் அவற்றைக் கேட்டு வியப்பு அடைந்தனர்.

மாற்கு 5:1-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு அவர்கள் கடலுக்கு அக்கரையிலுள்ள கதரேனருடைய நாட்டில் வந்தார்கள். அவர் படவிலிருந்து இறங்கினவுடனே, அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் பிரேதக்கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிராக வந்தான். அவனுடைய குடியிருப்பு கல்லறைகளிலே இருந்தது; அவனைச் சங்கிலிகளினாலும் கட்ட ஒருவனாலும் கூடாதிருந்தது. அவன் அநேகந்தரம் விலங்குகளினாலும் சங்கிலிகளினாலும் கட்டப்பட்டிருந்தும், சங்கிலிகளை முறித்து, விலங்குகளைத் தகர்த்துப்போடுவான்; அவனையடக்க ஒருவனாலும் கூடாதிருந்தது. அவன் எப்பொழுதும் இரவும் பகலும், மலைகளிலும் கல்லறைகளிலும் இருந்து, கூக்குரலிட்டு, கல்லுகளினாலே தன்னைக் காயப்படுத்திக்கொண்டிருந்தான். அவன் இயேசுவைத் தூரத்திலே கண்டபோது, ஓடிவந்து, அவரைப்பணிந்து கொண்டு: இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்கு தேவன்பேரில் உமக்கு ஆணையென்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். ஏனெனில் அவர் அவனை நோக்கி: அசுத்த ஆவியே, இந்த மனுஷனை விட்டுப் புறப்பட்டுப் போ என்று சொல்லியிருந்தார். அப்பொழுது அவர் அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார். அதற்கு அவன்: நாங்கள் அநேகராயிருக்கிறபடியால் என் பேர் லேகியோன் என்று சொல்லி, தங்களை அந்தத் திசையிலிருந்து துரத்திவிடாதபடிக்கு அவரை மிகவும் வேண்டிக்கொண்டான். அப்பொழுது, அவ்விடத்தில் மலையருகே அநேகம் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தது. அந்தப் பிசாசுகளெல்லாம் அவரை நோக்கி: பன்றிகளுக்குள்ளே போகும்படி, அவைகளுக்குள்ளே எங்களை அனுப்பும் என்று அவரை வேண்டிக்கொண்டன. இயேசு அவைகளுக்கு உத்தரவு கொடுத்தவுடனே, அசுத்த ஆவிகள் புறப்பட்டுப் பன்றிகளுக்குள் போயின; உடனே ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகளுள்ள அந்தக் கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து ஓடி, கடலிலே பாய்ந்து, கடலில் அமிழ்ந்து மாண்டன. பன்றிகளை மேய்த்தவர்கள் ஓடி, இதைப் பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள். அப்பொழுது சம்பவித்ததைப் பார்க்கும்படி ஜனங்கள் புறப்பட்டு; இயேசுவினிடத்தில் வந்து, லேகியோனாகிய பிசாசுகள் பிடித்திருந்தவன் வஸ்திரந்தரித்து, உட்கார்ந்து, புத்தி தெளிந்திருக்கிறதைக் கண்டு, பயந்தார்கள். பிசாசுகள் பிடித்திருந்தவனுக்கும் பன்றிகளுக்கும் சம்பவித்ததைக் கண்டவர்களும் அவர்களுக்கு விவரமாய்ச் சொன்னார்கள். அப்பொழுது தங்கள் எல்லைகளை விட்டுப்போகும்படி அவரை வேண்டிக்கொள்ளத் தொடங்கினார்கள். அப்படியே அவர் படவில் ஏறுகிறபொழுது, பிசாசு பிடித்திருந்தவன், அவரோடேகூட இருக்கும்படி தனக்கு உத்தரவுகொடுக்க அவரை வேண்டிக்கொண்டான். இயேசு அவனுக்கு உத்தரவுகொடாமல்: நீ உன் இனத்தாரிடத்தில் உன் வீட்டிற்குப்போய், கர்த்தர் உனக்கு இரங்கி, உனக்குச் செய்தவைகளையெல்லாம் அவர்களுக்கு அறிவியென்று சொன்னார். அந்தப்படி அவன் போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் தெக்கப்போலி என்னும் நாட்டில் பிரசித்தம்பண்ணத்தொடங்கினான்; எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்