மாற்கு 5:1-20

மாற்கு 5:1-20 TCV

அவர்கள் கடலைக் கடந்து, கதரேனருடைய நாட்டிற்குச் சென்றார்கள். இயேசு படகைவிட்டு இறங்கியவுடன், தீய ஆவி பிடித்திருந்த ஒருவன் கல்லறைகளிலிருந்து வெளியேறி, அவருக்கு எதிரே வந்தான். அவன் கல்லறைகளில் வாழ்ந்து கொண்டிருந்தான்; அவனைச் சங்கிலியினால்கூட ஒருவராலும் கட்ட முடியாதிருந்தது. பலமுறை அவனுடைய காலையும் கையையும் சங்கிலியினால் கட்டியபோதுங்கூட, அவன் சங்கிலிகளைத் தகர்த்து தனது கால்களிலுள்ள விலங்குகளை உடைத்துப் போடுவான். அவனை அடக்கிக் கட்டுப்படுத்த யாராலும் முடியாதிருந்தது. இரவும் பகலும் அவன் கல்லறைகளிலும் குன்றுகளிலும் கூச்சலிட்டுக் கொண்டும் தன்னைத்தானே கற்களினால் காயப்படுத்திக்கொண்டும் இருப்பான். இயேசுவைத் தூரத்தில் கண்டபோது, அவன் ஓடிப்போய் அவருக்கு முன்பாக முழங்காற்படியிட்டு விழுந்தான். அவன் உரத்த குரலில் சத்தமிட்டு, “இயேசுவே, மகா உன்னதமான இறைவனின் மகனே, என்னிடம் உமக்கு என்ன வேண்டும்? என்னைத் துன்புறுத்தவேண்டாம் என்று இறைவன் பெயரில் கேட்கிறேன்!” என்றான். ஏனெனில் இயேசு அவனிடம், “அசுத்த ஆவியே, இவனைவிட்டு வெளியே போ!” என்று சொல்லியிருந்தார். அப்பொழுது இயேசு அவனிடம், “உன் பெயர் என்ன?” என்று கேட்டார். “என் பெயர் லேகியோன். ஏனெனில், நாங்கள் அநேகராயிருக்கிறோம்” என்று அவன் பதிலளித்தான். அவர்களை அந்தப் பகுதியை விட்டு அனுப்பவேண்டாம் என்று அவன் திரும்பத்திரும்ப இயேசுவிடம் கெஞ்சிக்கேட்டான். அங்கே அருகேயிருந்த மலைப்பகுதியில், பன்றிகள் பெருங்கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன. பிசாசுகள் இயேசுவிடம், “எங்களை அந்தப் பன்றிகளுக்குள்ளே அனுப்பும்; அவைகளுக்குள்ளே புகுந்துகொள்ள அனுமதிகொடும்” என்று கெஞ்சிக்கேட்டன. இயேசு அவைகளுக்கு அனுமதி கொடுத்தார்; அந்தத் தீய ஆவிகள் வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. அந்தப் பன்றிக் கூட்டத்தில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் பன்றிகள் இருந்தன. அவை அந்த செங்குத்தான கரையோரத்திலிருந்து விரைந்தோடி, ஏரிக்குள் விழுந்து மூழ்கின. பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் ஓடிப்போய் பட்டணத்திலும் நாட்டுப்புறத்திலும் இதை அறிவித்தார்கள். நடந்தது என்ன என்று பார்க்கும்படி மக்கள், அங்கே சென்றார்கள். அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, பிசாசுகள் பிடித்திருந்தவன் உடை உடுத்தி, மனத்தெளிவுடன் உட்கார்ந்து இருப்பதைக் கண்டார்கள்; அதனால் அவர்கள் பயமடைந்தார்கள். நடந்ததைக் கண்டவர்கள், பிசாசு பிடித்தவனுக்கு நிகழ்ந்ததையும் பன்றிகளைப் பற்றியும் அங்கு வந்த மக்களுக்குச் சொன்னார்கள். அப்பொழுது அந்த மக்கள் இயேசுவை அந்தப் பகுதியைவிட்டுப் போய்விடும்படி வேண்டிக்கொள்ளத் தொடங்கினார்கள். இயேசு படகில் ஏறியபோது, பிசாசு பிடித்திருந்தவன் அவருடன் போகும்படி கெஞ்சிக்கேட்டான். இயேசு அவனைத் தன்னுடன் வர அனுமதிக்காமல் அவனிடம், “நீ உன் வீட்டிற்குப்போய் கர்த்தர் உனக்கு எவ்வளவு பெரிய காரியத்தைச் செய்தார் என்பதையும் உனக்குக் காண்பித்த இரக்கத்தையும் அவர்களுக்குச் சொல்” என்றார். அவன் புறப்பட்டுப்போய், இயேசு தனக்கு எவ்வளவு பெரிய காரியத்தைச் செய்தார் என்று தெக்கப்போலி நாட்டில் சொல்லத் தொடங்கினான். எல்லோரும் வியப்படைந்தார்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்