மாற்கு 14:32-64

மாற்கு 14:32-64 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அவர்கள் கெத்செமனே என்னும் ஒரு இடத்திற்குச் சென்றார்கள். அங்கு இயேசு தம்முடைய சீடர்களைப் பார்த்து, “நான் மன்றாடப்போகிறேன், அதுவரை இங்கே உட்கார்ந்திருங்கள்” என்றார். இயேசு பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் தம்முடன் கூட்டிக்கொண்டு சென்றார். அவர் மிகவும் துயருற்று கலக்கமடையத் தொடங்கினார். “என் ஆத்துமா மரணத்திற்கேதுவான துக்கத்தால் நிறைந்திருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி, விழிப்பாயிருங்கள்” என்றார். இயேசு சற்றுத் தூரமாய்ப் போய்த், தரையில் விழுந்து மன்றாடினார். முடியுமானால், அந்த வேளை தம்மை விட்டுக் கடந்து போகட்டும் என்று அவர் வேண்டிக் கொண்டார். அவர் தொடர்ந்து, “அப்பா பிதாவே, எல்லாவற்றையும் செய்ய உம்மால் இயலும். இந்தப் பாத்திரத்தை என்னைவிட்டு எடுத்துவிடும். ஆனால், என் சித்தத்தின்படியல்ல, உமது சித்தத்தின்படியே ஆகட்டும்” என்றார். பின்பு இயேசு தமது சீடர்களிடம் திரும்பிவந்தபோது, அவர்கள் நித்திரையாயிருப்பதைக் கண்டார். அவர் பேதுருவைப் பார்த்து, “சீமோனே, நீ நித்திரை செய்கிறாயோ? ஒருமணி நேரமாவது விழித்திருக்க உங்களால் முடியவில்லையா? விழித்திருந்து மன்றாடுங்கள், அப்பொழுது நீங்கள் சோதனைக்குள் விழமாட்டீர்கள். ஆவி ஆர்வமாயிருக்கிறது, ஆனால் உடலோ பலவீனமுள்ளது” என்றார். இயேசு மீண்டும் போய், அதேவிதமாகவே மன்றாடினார். இயேசு திரும்பவும் வந்தபோது சீடர்கள் மீண்டும் நித்திரையாயிருப்பதை அவர் கண்டார்; ஏனெனில் அவர்களுடைய கண்கள் தூக்க மயக்கத்தில் இருந்தன. அவரிடம் என்ன சொல்வதென்று அவர்களுக்குத் தெரியவில்லை. இயேசு மூன்றாம் முறையும் திரும்பிவந்து, சீடர்களைப் பார்த்து, “நீங்கள் இன்னும் நித்திரை செய்து இளைப்பாறுகிறீர்களோ? போதும்! வேளை வந்துவிட்டது. போதும்! மானிடமகனாகிய நான் பாவிகளின் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிறேன். எழுந்திருங்கள், நாம் போவோம்! என்னைக் காட்டிக்கொடுப்பவன் இதோ வருகிறான்!” என்றார். இயேசு பேசிக்கொண்டிருக்கையில், பன்னிரண்டு சீடர்களில் ஒருவனாகிய யூதாஸ் அங்கே வந்தான். அவனுடன் ஒரு கூட்ட மக்கள் வாள்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு வந்தார்கள். இவர்கள் தலைமை ஆசாரியர்களாலும், மோசேயின் சட்ட ஆசிரியர்களாலும், யூதரின் தலைவர்களாலும் அனுப்பப்பட்டிருந்தார்கள். இயேசுவைக் காட்டிக்கொடுப்பவன், தான் அவர்களுக்கு ஒரு சைகையைக் காண்பிப்பதாகச் சொல்லியிருந்தான்: “நான் யாரை முத்தமிடுகிறேனோ, அவரே இயேசு; அவரைக் கைதுசெய்து, காவலுடன் கூட்டிச் செல்லுங்கள்” என்று சொல்லியிருந்தான். யூதாஸ் இயேசுவுக்கு அருகில் வந்து, “போதகரே!” என்று சொல்லி, அவரை முத்தமிட்டான். அப்பொழுது அவர்கள் இயேசுவைப் பிடித்து, அவரைக் கைது செய்தார்கள். அவ்வேளையில், அங்கு நின்று கொண்டிருந்தவர்களில் ஒருவன், தன்னுடைய வாளை எடுத்து பிரதான ஆசாரியனின் வேலைக்காரனை வெட்டினான்; அவனுடைய காது வெட்டுண்டது. இயேசு அவர்களைப் பார்த்து, “நான் ஆபத்தான புரட்சியை உண்டாக்குகிறேனா, அதனாலேயா என்னைப் பிடிப்பதற்கு வாள்களுடனும் தடிகளுடனும் வந்திருக்கிறீர்கள்? ஒவ்வொரு நாளும் ஆலய முற்றத்திலே போதித்துக்கொண்டு, உங்களோடு தானே இருந்தேன். அப்பொழுது நீங்கள் என்னைக் கைதுசெய்யவில்லை. ஆம், வேதவசனங்கள் நிறைவேற வேண்டுமே” என்றார். அப்பொழுது எல்லோரும், இயேசுவைத் தனியே விட்டு ஓடிப்போனார்கள். இயேசுவைப் பின்பற்றிய ஒரு இளைஞன், மென்பட்டு மேலுடையை உடுத்திக் கொண்டவனாய் இருந்தான். அவர்கள் அவனைப் பிடிக்க முயன்றபோது, அவன் தன்னுடைய மேலுடையை விட்டுவிட்டு, நிர்வாணமாய்த் தப்பி ஓடினான். அவர்கள் இயேசுவை பிரதான ஆசாரியனிடம் கொண்டுப் போனார்கள். அங்கே எல்லா தலைமை ஆசாரியர்களும், யூதரின் தலைவர்களும், மோசேயின் சட்ட ஆசிரியர்களும் ஒன்றுகூடி இருந்தார்கள். பேதுரு சிறிது தூரத்தில் இயேசுவைப் பின்தொடர்ந்து போய், பிரதான ஆசாரியனுடைய முற்றத்திற்குள் போனான். அங்கே, அவன் காவலாளிகளுடன் நெருப்பின் அருகே உட்கார்ந்து குளிர்காய்ந்து கொண்டிருந்தான். தலைமை ஆசாரியர்களும், ஆலோசனைச் சங்கத்தில் இருந்த அனைவரும் இயேசுவுக்கு மரண தண்டனை கொடுப்பதற்காக, அவருக்கு எதிரான சாட்சியைத் தேடிக்கொண்டிருந்தார்கள்; ஆனால் அவர்களுக்கு ஒரு சாட்சியும் கிடைக்கவில்லை. பலர் இயேசுவுக்கு எதிராகப் பொய்ச்சாட்சி சொன்னார்கள். ஆனால் அவர்கள் சொன்னவை, ஒன்றுக்கொன்று ஒத்துப்போகவில்லை. பின்பு சிலர் எழுந்து நின்று, இயேசுவுக்கு எதிராக பொய்ச்சாட்சி கொடுத்தார்கள்: “மனிதருடைய கைகளினால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தை நான் இடித்துப்போட்டு பின்பு மூன்று நாட்களில், நான் கைகளினால் கட்டப்படாத, வேறொரு ஆலயத்தைக் கட்டுவேன் என்று இவன் சொன்னதை நாங்கள் கேட்டோம்” என்றார்கள். அப்பொழுதுங்கூட, அவர்களுடைய சாட்சி ஒன்றுக்கொன்று வேறுபட்டது. அப்பொழுது பிரதான ஆசாரியன் அவர்களுக்கு முன்பாக எழுந்து நின்று, இயேசுவிடம், “நீ பதில் சொல்லமாட்டாயோ? இவர்கள் உனக்கு எதிராய் கொடுக்கிற சாட்சி என்ன?” கேட்டான். ஆனால் இயேசுவோ ஒன்றும் பேசாதிருந்தார், பதில் எதுவும் சொல்லவில்லை. மீண்டும் பிரதான ஆசாரியன் அவரைப் பார்த்து, “நீ போற்றப்பட்டவரின் மகனான கிறிஸ்துவா?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “ஆம், நானே அவர், மானிடமகனாகிய நான் வல்லமையுள்ள இறைவனுடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்திருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள்” என்றார். அப்பொழுது பிரதான ஆசாரியன் தன்னுடைய உடைகளைக் கிழித்துக்கொண்டு, “இனியும் நமக்குச் சாட்சிகள் வேண்டுமோ? இவன் இறைவனை நிந்தித்துப் பேசியதை நீங்கள் கேட்டீர்களே. இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்றான். அவர்கள் எல்லோரும் இயேசுவை, இவன் சாக வேண்டியவன் எனத் தீர்ப்புக் கூறினார்கள்.

மாற்கு 14:32-64 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து: நான் ஜெபம்பண்ணும்வரை இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி; பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் தம்மோடு கூட்டிக்கொண்டுபோய், கலக்கமடையவும், வியாகுலப்படவும் தொடங்கினார். அப்பொழுது அவர்: என் ஆத்துமா மரணத்திற்கான துக்கத்தில் உள்ளது. நீங்கள் இங்கே தங்கி, விழித்திருங்கள் என்று சொல்லி, சற்று தள்ளிப்போய், தரையிலே விழுந்து, அந்த நேரம் தம்மைவிட்டுக் கடந்துபோகக்கூடுமானால் அது கடந்துபோகவேண்டும் என்று வேண்டிக்கொண்டு: அப்பா பிதாவே, எல்லாம் உம்மாலே முடியும்; இந்தப் பாத்திரத்தை என்னிடத்திலிருந்து எடுத்துப்போடும், ஆனாலும் என்னுடைய விருப்பத்தின்படி அல்ல, உம்முடைய விருப்பத்தின்படியே நடக்கட்டும் என்றார். பின்பு அவர் வந்து, அவர்கள் தூங்குகிறதைப் பார்த்து, பேதுருவைப் பார்த்து: சீமோனே, தூங்குகிறாயா? ஒருமணிநேரம் நீ விழித்திருக்கக்கூடாதா? நீங்கள் சோதனையில் விழாமலிருக்க விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். ஆவி உற்சாகமுள்ளதுதான், சரீரமோ பலவீனமுள்ளது என்றார். அவர் மீண்டும்போய் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்பண்ணினார். அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மீண்டும் தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தார்; அவர்களுடைய கண்கள் தூக்கமயக்கத்தில் இருந்ததால், தாங்கள் மறுமொழியாக அவருக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் இருந்தார்கள். அவர் மூன்றாம்முறை வந்து: இன்னும் நித்திரைசெய்து இளைப்பாறுகிறீர்களா? போதும், நேரம்வந்தது, இதோ, மனிதகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிறார். என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள், போகலாம் என்றார். உடனே, அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனுடன் பிரதான ஆசாரியர்களும், வேதபண்டிதர்களும் மூப்பர்களும் அனுப்பின மக்கள்கூட்டத்தினர், பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக்கொண்டுவந்தார்கள். அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் யாரை முத்தம் செய்கிறேனோ அவன்தான், அவனைப் பிடித்துக் கொண்டுபோங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். அவன் வந்தவுடனே, இயேசுவின் அருகில் சென்று: ரபீ, ரபீ, என்று சொல்லி, அவரை முத்தம்செய்தான். அப்பொழுது மக்கள்கூட்டத்தினர் அவர்மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள். அப்பொழுது அருகில் நின்ற சீடன் ஒருவன் கத்தியை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் காதை வெட்டினான். இயேசு அவர்களைப் பார்த்து: திருடனைப்பிடிக்கப் போகிறதைப்போல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்; நான் தினமும் உங்கள் நடுவிலே தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே; ஆனாலும் வேதவாக்கியங்கள் நிறைவேற வேண்டியதாக இருக்கிறது என்றார். அப்பொழுது எல்லோரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள். ஒரு வாலிபன் ஒரு போர்வையைமட்டும் தன்மேல் போர்த்துக்கொண்டு அவர் பின்னால் போனான்; அவனைப் பிடித்தார்கள். அவன் தன் போர்வையைப் போட்டுவிட்டு, நிர்வாணமாக அவர்களைவிட்டு ஓடிப்போனான். இயேசுவை அவர்கள் பிரதான ஆசாரியனிடத்தில் கொண்டுபோனார்கள்; அங்கே பிரதான ஆசாரியர்கள், மூப்பர்கள், வேதபண்டிதர்கள் எல்லோரும் கூடிவந்திருந்தார்கள். பேதுரு தூரத்திலே அவருக்குப் பின்னேசென்று, பிரதான ஆசாரியனுடைய அரண்மனைக்குள் வந்து, காவலர்களுடன் உட்கார்ந்து, நெருப்பின் அருகில் குளிர்க்காய்ந்துகொண்டிருந்தான். அப்பொழுது பிரதான ஆசாரியர்களும் ஆலோசனை சங்கத்தினர்கள் அனைவரும் இயேசுவைக் கொலைசெய்கிறதற்கு அவருக்கு எதிராகச் சாட்சிகளைத் தேடினார்கள்; சாட்சிசொல்ல ஒருவரும் வரவில்லை. அநேகர் அவருக்கு எதிராகப் பொய்சாட்சி சொல்லியும், அந்தச் சாட்சிகள் ஒத்துபோகவில்லை. அப்பொழுது சிலர் எழுந்து, கைகளால் கட்டப்பட்ட இந்த தேவாலயத்தை நான் இடித்துப்போட்டு, கைகளால் கட்டப்படாத வேறொன்றை மூன்று நாட்களுக்குள் கட்டுவேன் என்று இவன் சொன்னதை நாங்கள் கேட்டோம் என்று, அவருக்கு எதிராகப் பொய்சாட்சி சொன்னார்கள். அப்படிச் சொல்லியும் அவர்களுடைய சாட்சிகள் ஒத்துபோகவில்லை. அப்பொழுது பிரதான ஆசாரியன் எழுந்து நடுவே நின்று, இயேசுவைப் பார்த்து: இவர்கள் உனக்கு எதிராகச் சொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான். அவரோ ஒரு பதிலும் சொல்லாமல் மவுனமாக இருந்தார். மீண்டும் பிரதான ஆசாரியன் அவரைப் பார்த்து: நீ ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? என்று கேட்டான். அதற்கு இயேசு: நான் அவர்தான்; மனிதகுமாரன் சர்வவல்லவரின் வலதுபக்கத்தில் உட்கார்ந்து இருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் பார்ப்பீர்கள் என்றார். பிரதான ஆசாரியன் இதைக் கேட்டவுடனே, தன் உடைகளைக் கிழித்துக்கொண்டு: இதைவிட வேறுசாட்சிகள் நமக்கு வேண்டுமா? தேவனை அவமதிப்பதைக் கேட்டீர்களே, இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்றுக் கேட்டான். அதற்கு அவர்கள் எல்லோரும்: இவன் மரணத்திற்குத் தகுதியானவன் என்று தீர்மானம்பண்ணினார்கள்.

மாற்கு 14:32-64 பரிசுத்த பைபிள் (TAERV)

இயேசுவும், அவரது சீஷர்களும் கெத்செமனே என்று அழைக்கப்படும் இடத்துக்குச் சென்றனர். இயேசு “நான் பிரார்த்தனை செய்யும்போது எல்லாரும் இங்கே இருங்கள்” என்றார். இயேசு தன்னோடு பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரை அழைத்துச் சென்றார். அவர் மிகவும் வேதனைப்பட்டு, துன்பப்பட்டார். “என் ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது. என் இதயம் துயரத்தால் உடைந்து போயிருக்கிறது. இங்கேயே காத்திருங்கள், விழித்திருங்கள்” என்றார். இயேசு அவர்களிடமிருந்து விலகிச் சிறிது தூரம் சென்றார். அவர் அங்கு தரையில் விழுந்து அந்த வேளை தம்மை விட்டு நீங்கிப் போகக்கூடுமானால் நீங்கட்டும் என பிரார்த்தனை செய்தார். “ பிதாவே! உங்களால் எல்லாவற்றையும் செய்ய முடியும். துயரத்தின் பாத்திரத்தில் நான் அருந்தாதபடி செய்யுங்கள். ஆனாலும் நான் விரும்புகிறபடி இல்லாமல் உங்கள் விருப்பம் போல் எல்லாம் நடக்கட்டும்” என்றார். பிறகு இயேசு சீஷர்களிடம் வந்து, அவர்கள் தூங்குவதைக் கண்டார். அவர் பேதுருவிடம், “சீமோனே, ஏன் தூங்குகிறாய். எனக்காக ஒரு மணி நேரம் உன்னால் விழித்திருக்க முடியாதா? நீ சோதனைக்கு இடம் தாராதபடி விழித்திருந்து பிரார்த்தனை செய். உனது ஆத்துமா நல்லவற்றையே செய்ய விரும்புகிறது. ஆனால் உனது சரீரம் பலவீனமாக உள்ளது” என்றார். மீண்டும் இயேசு தனியே சென்று அதே வார்த்தைகளைச் சொல்லிப் பிரார்த்தனை செய்தார். பிறகு சீஷர்களிடம் திரும்பி வந்தார். மீண்டும் அவர்கள் தூங்குவதைப் பார்த்தார். அவர்களது கண்கள் மிகவும் சோர்ந்திருந்தன. இயேசுவிடம் என்ன சொல்லவேண்டும் என்பதை அவர்கள் அறியாதிருந்தனர். மூன்றாவது முறையாக இயேசு தனிப் பிரார்த்தனை செய்தபின் சீஷர்களிடம் திரும்பி வந்தார். அவர்களிடம், “நீங்கள் இன்னும் தூங்கிக்கொண்டும் இளைப்பாறிக்கொண்டுமிருக்கிறீர்கள், இதுபோதும். மனித குமாரன் பாவிகளின் கைகளில் ஒப்படைக்கப்படும் காலம் வந்துவிட்டது. எழும்புங்கள், நாம் போகவேண்டும். இதோ அவர்களிடம் என்னைக் காட்டிக்கொடுக்கிற மனிதன் வந்துவிட்டான்” என்றார். இயேசு இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போதே யூதாஸ் அங்கே வந்தான். அவன் பன்னிரண்டு சீஷர்களுள் ஒருவன். அவனோடு பலர் வந்தனர். அவர்கள் தலைமை ஆசாரியர்களாலும், வேதபாரகராலும், மூத்த யூதத்தலைவர்களாலும் அனுப்பப்பட்டிருந்தனர். அவர்களிடம் வாள்களும், தடிகளும் இருந்தன. யூதாஸ் அவர்களுக்கு ஒரு அடையாளம் கொடுத்து வைத்திருந்தான். அதன்படி, “நான் யாரை முத்தமிடுகிறேனோ அவர்தான் இயேசு. அவரைக் கைது செய்து பத்திரமாய்க் கொண்டு செல்லுங்கள்” என்று சொல்லி இருந்தான். அவன் இயேசுவிடம் வந்து அவரை முத்தமிட்டு “போதகரே” என்றான். உடனே அவர்கள் இயேசுவின் மேல் கை போட்டுக் கைது செய்தனர். இயேசுவின் அருகில் நின்ற ஒரு சீஷன் தன் வாளை உருவி இயேசுவைப் பிடித்தவனின் காதினை அறுத்தான். காது அறுபட்டவன் தலைமை ஆசாரியனின் வேலைக்காரன். இயேசுவோ, “ஒரு குற்றவாளியைப் பிடிக்க வருவதுபோல நீங்கள் வாளோடும் தடிகளோடும் வந்துள்ளீர்கள். நான் எப்போதும் உங்கள் மத்தியில் ஆலயத்தில்தானே உபதேசம் செய்து கொண்டிருந்தேன். அங்கே நீங்கள் என்னைக் கைது செய்யவில்லையே. எல்லாம் எழுதப்பட்டிருக்கிறபடி நடைபெற்றது” என்றார். அவரது சீஷர்கள் அவரைவிட்டு விலகி ஓடிச் சென்றார்கள். ஓர் வாலிபன் இயேசுவைப் பின் தொடர்ந்து வந்தான். அவன் ஒரு மேலாடை மட்டும் அணிந்திருந்தான். அவர்கள் அவனையும் பிடித்து இழுத்தார்கள். ஆனால் அவனோ மேலாடையைப் போட்டுவிட்டு நிர்வாணமாக ஓடினான். இயேசுவைக் கைது செய்தவர்கள் அவரைப் பிராதன ஆசாரியனின் வீட்டுக்குக் கொண்டு சென்றார்கள். அங்கே அனைத்து தலைமை ஆசாரியர்களும் முதிய யூதத்தலைவர்களும் வேதபாரகர்களும் கூடினர். பேதுருவும் இயேசுவைப் பின் தொடர்ந்து சென்றான். ஆனால் இயேசுவை நெருங்கவில்லை. தலைமை ஆசாரியனின் அரண்மனைக்குள் நுழைந்தான். அப்போது சில காவலர்கள் குளிர்காய்ந்து கொண்டிருந்தனர். பேதுருவும் நெருப்பருகில் சென்றான். தலைமை ஆசாரியரும், மற்றவர்களும் இயேசுவைக் கொல்லக் குற்றங்களை ஆராய்ந்து கொண்டிருந்தனர். யூத ஆலோசனைச் சங்கத்தினரால் இயேசுவைக் கொல்வதற்குரிய எவ்விதக் குற்றமும் கண்டுபிடிக்க முடியவில்லை. பலர் வந்து அவர் மீது தவறான குற்றச்சாட்டுகளைக் கூறிக்கொண்டிருந்தனர். ஆனால் அவை ஒன்றுக்கொன்று ஒத்துப் போகவில்லை. பின்பு சில மக்கள் எழுந்து அவர்மேல் தவறாகக் குற்றம் சாட்டினர். “‘நான் இந்த ஆலயத்தை இடித்துப் போடுவேன். இது மனிதர்களால் கட்டப்பட்டது. நான் வேறு ஆலயத்தை மூன்று நாட்களுக்குள் கட்டுவேன். அது மனிதர்களால் கட்டப்படாதது’ என்று இவன் கூற நாங்கள் கேட்டோம்” என்றார்கள். ஆனால் அப்படிச் சொல்லியும் அவர்கள் சாட்சி ஏற்றுக்கொள்ளப்படாமல் போயிற்று. தலைமை ஆசாரியன் அவர்களுக்குமுன் எழுந்து நின்றான். அவன் இயேசுவிடம், “இந்த மக்கள் உமக்கு எதிராகக் கூறுகின்றனர். இவற்றுக்கு உம் பதில் என்ன? இவர்கள் சொல்வது உண்மையா?” என்று கேட்டான். ஆனால் இயேசு எதுவும் கூறவில்லை. தலைமை ஆசாரியன் இயேசுவிடம், “நீர் கிறிஸ்துவா? ஆசீர்வதிக்கப்பட்ட தேவனின் குமாரனா?” என்று இன்னொரு கேள்வியைக் கேட்டான். இயேசுவோ, “ஆம். நான் தேவ குமாரன்தான். எதிர்காலத்தில் மனித குமாரன் சர்வ வல்லவரின் வலது பக்கத்தில் இருப்பதைக் காண்பீர்கள். பரலோக இராஜ்யத்தில் மேகங்களின் நடுவே மனித குமாரன் வருவதைப் பார்ப்பீர்கள்” என்றார். இதைக் கேட்டதும் தலைமை ஆசாரியனுக்குக் கோபம் வந்தது. அவன் தனது ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, “நமக்கு மேலும் சாட்சிகள் தேவையில்லை. தேவனுக்கு எதிராக இவன் சொல்வதை நீங்கள் கேட்டீர்கள். என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டான். அனைத்து மக்களும் இயேசுவைக் குற்றவாளி என்றனர். அவரைக் கொல்லப்பட வேண்டிய குற்றவாளி என்றனர்.

மாற்கு 14:32-64 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: நான் ஜெபம்பண்ணுமளவும் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி; பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் தம்மோடே கூட்டிக்கொண்டுபோய், திகிலடையவும், மிகவும் வியாகுலப்படவும் தொடங்கினார். அப்பொழுது அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி, விழித்திருங்கள் என்று சொல்லி, சற்று அப்புறம்போய், தரையிலே விழுந்து, அந்த வேளை தம்மைவிட்டு நீங்கிப்போகக்கூடுமானால் அது நீங்கவேண்டுமென்று வேண்டிக்கொண்டு: அப்பா பிதாவே, எல்லாம் உம்மாலே கூடும்; இந்தப் பாத்திரத்தை என்னிடத்திலிருந்து எடுத்துப்போடும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்றார். பின்பு அவர் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக்கண்டு, பேதுருவை நோக்கி: சீமோனே, நித்திரைபண்ணுகிறாயா? ஒரு மணிநேரம் நீ விழித்திருக்கக்கூடாதா? நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். அவர் மறுபடியும் போய் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்பண்ணினார். அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மறுபடியும் நித்திரைபண்ணுகிறதைக் கண்டார்; அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தபடியால், தாங்கள் மறுமொழியாக அவருக்குச் சொல்லுவது இன்னதென்று அறியாதிருந்தார்கள். அவர் மூன்றாந்தரம் வந்து: இனி நித்திரைப்பண்ணி இளைப்பாறுங்கள்; போதும், வேளை வந்தது, இதோ, மனுஷகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிறார். என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள், போவோம் என்றார் உடனே, அவர் இப்படிப் பேசுகையில், பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனோடேகூடப் பிரதான ஆசாரியரும், வேதபாரகரும் மூப்பரும் அனுப்பின திரளான ஜனங்கள், பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக்கொண்டுவந்தார்கள். அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன் தான், அவனைப் பிடித்துப் பத்திரமாய்க் கொண்டுபோங்கள் என்று அவர்களுக்குக் குறிப்புச் சொல்லியிருந்தான். அவன் வந்தவுடனே, அவரண்டையில் சேர்ந்து: ரபீ, ரபீ, என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான். அப்பொழுது அவர்கள் அவர்மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள். அப்பொழுது கூடநின்றவர்களில் ஒருவன் கத்தியை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதறவெட்டினான். இயேசு அவர்களை நோக்கி: கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்; நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே; ஆனாலும் வேதவாக்கியங்கள் நிறைவேற வேண்டியதாயிருக்கிறது என்றார். அப்பொழுது எல்லாரும் அவரை விட்டு ஓடிப்போனார்கள். ஒரு வாலிபன் ஒரு துப்பட்டியை மாத்திரம் தன்மேல் போர்த்துக்கொண்டு அவர் பின்னே போனான்; அவனைப் பிடித்தார்கள். அவன் தன் துப்பட்டியைப் போட்டுவிட்டு, நிர்வாணமாய் அவர்களை விட்டு ஓடிப்போனான். இயேசுவை அவர்கள் பிரதான ஆசாரியனிடத்தில் கொண்டுபோனார்கள்; அங்கே ஆசாரியர் மூப்பர் வேதபாரகர் எல்லாரும் கூடிவந்திருந்தார்கள். பேதுரு தூரத்திலே அவருக்குப் பின்சென்று, பிரதான ஆசாரியனுடைய அரமனைக்குள் வந்து, சேவகரோடேகூட உட்கார்ந்து, நெருப்பண்டையிலே குளிர்க்காய்ந்துகொண்டிருந்தான். அப்பொழுது பிரதான ஆசாரியரும் ஆலோசனைசங்கத்தாரனைவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாகச் சாட்சி தேடினார்கள்; அகப்படவில்லை. அநேகர் அவருக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லியும், அந்தச் சாட்சிகள் ஒவ்வவில்லை. அப்பொழுது சிலர் எழுந்து, கைவேலையாகிய இந்தத் தேவாலயத்தை நான் இடித்துப்போட்டு, கைவேலையல்லாத வேறொன்றை மூன்று நாளைக்குள்ளே கட்டுவேன் என்று இவன் சொன்னதை நாங்கள் கேட்டோம் என்று, அவருக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி சொன்னார்கள். அப்படிச் சொல்லியும் அவர்கள் சாட்சி ஒவ்வாமற்போயிற்று. அப்பொழுது பிரதான ஆசாரியன் எழுந்து நடுவே நின்று, இயேசுவை நோக்கி: இவர்கள் உனக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான். அவரோ ஒரு உத்தரவும் சொல்லாமல் பேசாதிருந்தார். மறுபடியும் பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? என்று கேட்டான். அதற்கு இயேசு: நான் அவர்தான்; மனுஷகுமாரன் சர்வவல்லவரின் வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என்றார். பிரதான ஆசாரியன் இதைக் கேட்டவுடனே, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? தேவதூஷணத்தைக் கேட்டீர்களே, உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது என்றான். அதற்கு அவர்களெல்லாரும்: இவன் மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்று தீர்மானம்பண்ணினார்கள்.