பின்பு கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து: நான் ஜெபம்பண்ணும்வரை இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி; பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் தம்மோடு கூட்டிக்கொண்டுபோய், கலக்கமடையவும், வியாகுலப்படவும் தொடங்கினார். அப்பொழுது அவர்: என் ஆத்துமா மரணத்திற்கான துக்கத்தில் உள்ளது. நீங்கள் இங்கே தங்கி, விழித்திருங்கள் என்று சொல்லி, சற்று தள்ளிப்போய், தரையிலே விழுந்து, அந்த நேரம் தம்மைவிட்டுக் கடந்துபோகக்கூடுமானால் அது கடந்துபோகவேண்டும் என்று வேண்டிக்கொண்டு: அப்பா பிதாவே, எல்லாம் உம்மாலே முடியும்; இந்தப் பாத்திரத்தை என்னிடத்திலிருந்து எடுத்துப்போடும், ஆனாலும் என்னுடைய விருப்பத்தின்படி அல்ல, உம்முடைய விருப்பத்தின்படியே நடக்கட்டும் என்றார். பின்பு அவர் வந்து, அவர்கள் தூங்குகிறதைப் பார்த்து, பேதுருவைப் பார்த்து: சீமோனே, தூங்குகிறாயா? ஒருமணிநேரம் நீ விழித்திருக்கக்கூடாதா? நீங்கள் சோதனையில் விழாமலிருக்க விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். ஆவி உற்சாகமுள்ளதுதான், சரீரமோ பலவீனமுள்ளது என்றார். அவர் மீண்டும்போய் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்பண்ணினார். அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மீண்டும் தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தார்; அவர்களுடைய கண்கள் தூக்கமயக்கத்தில் இருந்ததால், தாங்கள் மறுமொழியாக அவருக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் இருந்தார்கள். அவர் மூன்றாம்முறை வந்து: இன்னும் நித்திரைசெய்து இளைப்பாறுகிறீர்களா? போதும், நேரம்வந்தது, இதோ, மனிதகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிறார். என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள், போகலாம் என்றார்.
உடனே, அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனுடன் பிரதான ஆசாரியர்களும், வேதபண்டிதர்களும் மூப்பர்களும் அனுப்பின மக்கள்கூட்டத்தினர், பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக்கொண்டுவந்தார்கள். அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் யாரை முத்தம் செய்கிறேனோ அவன்தான், அவனைப் பிடித்துக் கொண்டுபோங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். அவன் வந்தவுடனே, இயேசுவின் அருகில் சென்று: ரபீ, ரபீ, என்று சொல்லி, அவரை முத்தம்செய்தான். அப்பொழுது மக்கள்கூட்டத்தினர் அவர்மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள். அப்பொழுது அருகில் நின்ற சீடன் ஒருவன் கத்தியை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் காதை வெட்டினான். இயேசு அவர்களைப் பார்த்து: திருடனைப்பிடிக்கப் போகிறதைப்போல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்; நான் தினமும் உங்கள் நடுவிலே தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே; ஆனாலும் வேதவாக்கியங்கள் நிறைவேற வேண்டியதாக இருக்கிறது என்றார். அப்பொழுது எல்லோரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள். ஒரு வாலிபன் ஒரு போர்வையைமட்டும் தன்மேல் போர்த்துக்கொண்டு அவர் பின்னால் போனான்; அவனைப் பிடித்தார்கள். அவன் தன் போர்வையைப் போட்டுவிட்டு, நிர்வாணமாக அவர்களைவிட்டு ஓடிப்போனான்.
இயேசுவை அவர்கள் பிரதான ஆசாரியனிடத்தில் கொண்டுபோனார்கள்; அங்கே பிரதான ஆசாரியர்கள், மூப்பர்கள், வேதபண்டிதர்கள் எல்லோரும் கூடிவந்திருந்தார்கள். பேதுரு தூரத்திலே அவருக்குப் பின்னேசென்று, பிரதான ஆசாரியனுடைய அரண்மனைக்குள் வந்து, காவலர்களுடன் உட்கார்ந்து, நெருப்பின் அருகில் குளிர்க்காய்ந்துகொண்டிருந்தான். அப்பொழுது பிரதான ஆசாரியர்களும் ஆலோசனை சங்கத்தினர்கள் அனைவரும் இயேசுவைக் கொலைசெய்கிறதற்கு அவருக்கு எதிராகச் சாட்சிகளைத் தேடினார்கள்; சாட்சிசொல்ல ஒருவரும் வரவில்லை. அநேகர் அவருக்கு எதிராகப் பொய்சாட்சி சொல்லியும், அந்தச் சாட்சிகள் ஒத்துபோகவில்லை. அப்பொழுது சிலர் எழுந்து, கைகளால் கட்டப்பட்ட இந்த தேவாலயத்தை நான் இடித்துப்போட்டு, கைகளால் கட்டப்படாத வேறொன்றை மூன்று நாட்களுக்குள் கட்டுவேன் என்று இவன் சொன்னதை நாங்கள் கேட்டோம் என்று, அவருக்கு எதிராகப் பொய்சாட்சி சொன்னார்கள். அப்படிச் சொல்லியும் அவர்களுடைய சாட்சிகள் ஒத்துபோகவில்லை. அப்பொழுது பிரதான ஆசாரியன் எழுந்து நடுவே நின்று, இயேசுவைப் பார்த்து: இவர்கள் உனக்கு எதிராகச் சொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான். அவரோ ஒரு பதிலும் சொல்லாமல் மவுனமாக இருந்தார். மீண்டும் பிரதான ஆசாரியன் அவரைப் பார்த்து: நீ ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? என்று கேட்டான். அதற்கு இயேசு: நான் அவர்தான்; மனிதகுமாரன் சர்வவல்லவரின் வலதுபக்கத்தில் உட்கார்ந்து இருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் பார்ப்பீர்கள் என்றார். பிரதான ஆசாரியன் இதைக் கேட்டவுடனே, தன் உடைகளைக் கிழித்துக்கொண்டு: இதைவிட வேறுசாட்சிகள் நமக்கு வேண்டுமா? தேவனை அவமதிப்பதைக் கேட்டீர்களே, இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்றுக் கேட்டான். அதற்கு அவர்கள் எல்லோரும்: இவன் மரணத்திற்குத் தகுதியானவன் என்று தீர்மானம்பண்ணினார்கள்.