மாற்கு 13:1-13

மாற்கு 13:1-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவர் தேவாலயத்தை விட்டுப் புறப்படும்போது, அவருடைய சீஷர்களில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, இதோ, இந்தக் கல்லுகள் எப்படிப்பட்டது! இந்தக் கட்டடங்கள் எப்படிப்பட்டது! பாரும் என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இந்தப் பெரிய கட்டடங்களைக் காண்கிறாயே, ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்றார். பின்பு, அவர் தேவாலயத்துக்கு எதிராக ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கையில், பேதுருவும் யாக்கோபும் யோவானும் அந்திரேயாவும் அவரிடத்தில் தனித்துவந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? இவைகளெல்லாம் நிறைவேறுங்காலத்துக்கு அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். ஏனெனில் அநேகர் வந்து, என் நாமத்தைக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள். யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படும்போது கலங்காதேயுங்கள்; இவைகள் சம்பவிக்கவேண்டியதே. ஆனாலும், முடிவு உடனே வராது. ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்; பஞ்சங்களும் கலகங்களும் உண்டாகும்; இவைகள் வேதனைகளுக்கு ஆரம்பம். நீங்களோ எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில் உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுப்பார்கள், நீங்கள் ஜெபஆலயங்களில் அடிக்கப்படுவீர்கள்; என்னிமித்தம் தேசாதிபதிகளுக்கும் ராஜாக்களுக்கும் சாட்சியாக அவர்களுக்குமுன்பாக நிறுத்தப்படுவீர்கள். சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷம் முந்திப் பிரசங்கிக்கப்படவேண்டும். அவர்கள் உங்களைக் கொண்டுபோய் ஒப்புக்கொடுக்கும்போது, நீங்கள் என்ன பேசுவோமென்று முன்னதாகக் கவலைப்படாமலும் சிந்தியாமலுமிருங்கள்; அந்நாழிகையிலே உங்களுக்கு எது அருள் செய்யப்படுமோ அதையே பேசுங்கள்; ஏனெனில் பேசுகிறவர்கள் நீங்களல்ல, பரிசுத்த ஆவியே பேசுகிறவர். அன்றியும் சகோதரன் சகோதரனையும், தகப்பன் பிள்ளையையும் மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றாருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி, அவர்களைக் கொலைசெய்வார்கள். என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள். முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.

மாற்கு 13:1-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசு ஆலயத்தைவிட்டுப் புறப்படுகையில், அவருடைய சீடர்களில் ஒருவன் அவரிடம், “போதகரே! பாரும். இவை எவ்வளவு பெரிய கற்கள்! இவை எவ்வளவு மாபெரும் கட்டிடங்கள்!” என்றான். அதற்கு இயேசு அவர்களிடம், “ஆம்; நீங்கள் இந்தப் பெரும் கட்டிடங்கள் எல்லாவற்றையும் காண்கிறீர்கள் அல்லவா? ஆனால் இங்கே, ஒரு கல்லின்மேல் இன்னொரு கல் இராதபடி, ஒவ்வொரு கல்லும் இடிக்கப்படும்” என்றார். பின்பு, ஆலயத்திற்கு எதிரேயுள்ள ஒலிவமலையில் இயேசு உட்கார்ந்திருக்கையில், பேதுரு, யாக்கோபு, யோவான், அந்திரேயா ஆகியோர் தனிமையாக அவரிடத்தில் வந்து, “இந்தக் காரியங்கள் எப்பொழுது நிகழும்? இவையெல்லாம் நிறைவேறப்போகிறது என்பதற்கு எது முன் அடையாளமாக இருக்கும்? எங்களுக்குச் சொல்லும்” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம்: “உங்களை யாரும் ஏமாற்றாதபடி விழிப்பாயிருங்கள். பலர் என்னுடைய பெயரால் வருவார்கள். ‘நான்தான் அவர்,’ என்று சொல்லி, பலரை ஏமாற்றுவார்கள். நீங்கள் யுத்தங்களையும், யுத்தங்களைப்பற்றிய செய்திகளையும் கேள்விப்படும்போது, பதற்றப்பட வேண்டாம். இவை நிகழ வேண்டியவையே. ஆனால் முடிவு வர, இன்னும் காலம் இருக்கிறது. நாட்டிற்கு விரோதமாய் நாடு எழும்பும், அரசிற்கெதிராய் அரசு எழும்பும். பல இடங்களில் பஞ்சங்களும், பூமியதிர்ச்சிகளும் ஏற்படும். இவை எல்லாம் பிரசவ வேதனையின் ஆரம்பமே. “அப்பொழுது, நீங்கள் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும். நீங்கள் நீதிமன்றங்களில் ஒப்புக்கொடுக்கப்படுவீர்கள். நீங்கள் ஜெப ஆலயங்களில் சவுக்கினால் அடிக்கப்படுவீர்கள். நீங்கள் என் நிமித்தம் ஆளுநர்களுக்கும், அரசர்களுக்கும் முன்பாக என் சாட்சிகளாய் நிற்பீர்கள். மேலும், எல்லா நாடுகளுக்கும் முதலில் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும். நீங்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்காகக் கொண்டுவரப்படும் போதெல்லாம், என்ன பேசவேண்டும் என்று முன்னதாகவே கவலைப்படாதிருங்கள். அந்த வேளையிலே, உங்கள் மனதில் என்ன கொடுக்கப்படுகின்றதோ, அதைச் சொல்லுங்கள். ஏனெனில் பேசுவது நீங்கள் அல்ல, உங்கள் மூலமாய் பரிசுத்த ஆவியானவரே பேசுகிறார். “சகோதரன் தன் சகோதரனைக் கொல்லும்படி காட்டிக்கொடுப்பான். தகப்பன் தனது பிள்ளையைக் கொல்லும்படி காட்டிக்கொடுப்பான். பிள்ளைகள் அவர்கள் பெற்றோருக்கு எதிராக எழும்பி, அவர்களைக் கொலைசெய்வார்கள். என் நிமித்தமாக எல்லோரும் உங்களை வெறுப்பார்கள். ஆனால் முடிவுவரை பொறுமையாய் இருப்பவனே இரட்சிக்கப்படுவான்.

மாற்கு 13:1-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இயேசு தேவாலயத்தைவிட்டுப் புறப்படும்போது, அவருடைய சீடர்களில் ஒருவன் அவரைப் பார்த்து: போதகரே, இதோ, இந்தக் கற்கள் எப்படிப்பட்டது! இந்தக் கட்டிடங்கள் எப்படிப்பட்டது! பாரும் என்றான். இயேசு அவனுக்கு மறுமொழியாக: இந்தப் பெரிய கட்டிடங்களைக் பார்க்கிறாயே, ஒரு கல்லின்மேல் ஒரு கல் இல்லாதபடி எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்றார். பின்பு, அவர் தேவாலயத்திற்கு எதிராக ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கும்போது, பேதுருவும் யாக்கோபும் யோவானும் அந்திரேயாவும் அவரிடம் தனிமையில் வந்து: இவைகள் எப்பொழுது நடக்கும்? இவைகளெல்லாம் நிறைவேறும் காலங்களுக்கு அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: ஒருவனும் உங்களை ஏமாற்றாதபடி எச்சரிக்கையாக இருங்கள். ஏனென்றால், அநேகர் வந்து, என் நாமத்தைச் சொல்லி: நானே கிறிஸ்து என்று, அநேகரை ஏமாற்றுவார்கள். யுத்தங்களையும், யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படும்போது கலங்காமல் இருங்கள்; இவைகள் நடக்கவேண்டியவைகள். ஆனாலும், முடிவு உடனே வராது. மக்களுக்கு எதிராக மக்களும், ராஜ்யத்திற்கு எதிராக ராஜ்யமும் எழும்பும்; பூமி அதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்; பஞ்சங்களும், கலகங்களும் உண்டாகும்; இவைகள் வேதனைகளுக்கு ஆரம்பம். நீங்களோ எச்சரிக்கையாக இருங்கள், ஏனென்றால், உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுப்பார்கள், நீங்கள் ஜெப ஆலயங்களில் அடிக்கப்படுவீர்கள்; என்னிமித்தம் தேசாதிபதிகளுக்கும் ராஜாக்களுக்கும் சாட்சியாக அவர்களுக்கு முன்பாக நிறுத்தப்படுவீர்கள். எல்லா தேசத்தின் மக்களுக்கும் நற்செய்தி முதலில் பிரசங்கிக்கப்படவேண்டும். அவர்கள் உங்களைக் கொண்டுபோய் ஒப்புக்கொடுக்கும்போது, நீங்கள் என்ன பேசவேண்டும் என்று கவலைப்படாமலும் சிந்திக்காமலும் இருங்கள்; அந்த நேரத்திலே உங்களுக்குக் கொடுக்கப்படுகிற வார்த்தைகளையே பேசுங்கள்; ஏனென்றால், பேசுகிறவர்கள் நீங்கள் இல்லை, பரிசுத்த ஆவியானவரே பேசுகிறவர். அன்றியும் சகோதரன் சகோதரனையும், தகப்பன் பிள்ளையையும் மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றோருக்கு எதிராகப் பிள்ளைகள் எழும்பி, அவர்களைக் கொலைசெய்ய ஒப்புக்கொடுப்பார்கள். என் நாமத்தினால் எல்லோராலும் பகைக்கப்படுவீர்கள். கடைசிவரைக்கும் நிலைத்து நிற்பவனே இரட்சிக்கப்படுவான்.

மாற்கு 13:1-13 பரிசுத்த பைபிள் (TAERV)

இயேசு ஆலயத்தைவிட்டுப் புறப்படும்போது அவரது சீஷர்களில் ஒருவன். “பாருங்கள் போதகரே! பெரிய, பெரிய கற்களோடு இந்த ஆலயம் பார்க்க எவ்வளவு அழகாக இருக்கிறது” என்று சொன்னான். இயேசுவோ, “நீ இந்தப் பெரிய கட்டிடத்தைப் பார்க்கிறாய். இவையெல்லாம் ஒரு காலத்தில் அழிந்துபோகும். ஒவ்வொரு கல்லும் தரையில் சிதறிப்போகும். ஒரு கல்லோடு இன்னொன்று சேராது போகும்,” என்றார். பிறகு ஒலிவ மலையின் மேலே ஓரிடத்தில் உட்கார்ந்தார். அவரோடு பேதுரு, யாக்கோபு, யோவான், அந்திரேயா ஆகியோர் இருந்தனர். அனைவரும் ஆலயத்தைப் பார்த்தனர். சீஷர்கள் இயேசுவிடம், “இவை எப்போது நடைபெறும் என்று எங்களுக்குச் சொல்லுங்கள். இவை நிகழும் காலத்தை நாம் எந்த அடையாளங்களால் அறிந்து கொள்ளமுடியும்?” என்று கேட்டனர். இயேசு சீஷர்களிடம், “எச்சரிக்கையாய் இருங்கள். யாரும் உங்களை ஏமாற்றாதபடிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள். பலர் வந்து என் பெயரைப் பயன்படுத்துவார்கள். அவர்கள், ‘நானே அவர்’ என்பார்கள். அவர்கள் மக்களை ஏமாற்றுவார்கள். போரைப் பற்றியும், போர்களைப் பற்றிய செய்திகளையும் நீங்கள் கேள்விப்படுவீர்கள். பயப்படாதீர்கள். உலக முடிவு ஏற்படும்முன் இவை நிகழ வேண்டும். நாடுகள் ஒன்றோடு ஒன்று போரிட்டுக்கொள்ளும். இராஜ்யங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும். மக்களுக்கு உண்ண உணவில்லை என்று சொல்லும் காலம் வரும். பல்வேறு இடங்களில் பூமி அதிர்ச்சிகள் ஏற்படும். இவை ஒரு குழந்தை பிறப்பதற்கு முன் ஏற்படும் வேதனைபோல உருவாகும். “நீங்கள் கவனமாயிருங்கள். மக்கள் உங்களைக் கைது செய்து நியாயம் வழங்குவார்கள். தங்கள் ஜெப ஆலயங்களில் உங்களை அடிப்பார்கள். நீங்கள் ஆளுநர்கள் முன்பும், மன்னர்களின் முன்பும், கட்டாயமாக நிறுத்தப்படுவீர்கள். என்னைப் பற்றி அவர்களிடம் நீங்கள் சொல்வீர்கள். நீங்கள் என்னைப் பின்பற்றுவதால் இவை உங்களுக்கு ஏற்படும். இவை நடைபெறுவதற்கு முன்னால் நற்செய்தியானது எல்லா மக்களுக்கும் பரப்பப்படும். நீங்கள் சொல்லப்போவதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். அந்த நேரத்தில் தேவன் பேசக் கொடுத்தவற்றை நீங்கள் பேசுங்கள். உண்மையில் அவற்றை நீங்கள் பேசுவதில்லை. உங்கள் மூலம் பரிசுத்த ஆவியானவரே பேசுவார். “சகோதரர்கள் ஒருவருக்கொருவர் எதிராகிச் சாவுக்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்கள். பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு எதிராகி அவர்களை மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள். பிள்ளைகள் தம் பெற்றோருக்கு எதிராகச் சண்டையிட்டு அவர்களைக் கொலை செய்ய வழி தேடுவார்கள். நீங்கள் என்னைப் பின்பற்றுவதால் மக்கள் அனைவரும் உங்களை வெறுப்பார்கள். இறுதிவரை உறுதியாக யார் இருக்கிறார்களோ அவர்களே இரட்சிக்கப்படுவார்கள்.