மாற் 13:1-13

மாற் 13:1-13 IRVTAM

இயேசு தேவாலயத்தைவிட்டுப் புறப்படும்போது, அவருடைய சீடர்களில் ஒருவன் அவரைப் பார்த்து: போதகரே, இதோ, இந்தக் கற்கள் எப்படிப்பட்டது! இந்தக் கட்டிடங்கள் எப்படிப்பட்டது! பாரும் என்றான். இயேசு அவனுக்கு மறுமொழியாக: இந்தப் பெரிய கட்டிடங்களைக் பார்க்கிறாயே, ஒரு கல்லின்மேல் ஒரு கல் இல்லாதபடி எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்றார். பின்பு, அவர் தேவாலயத்திற்கு எதிராக ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கும்போது, பேதுருவும் யாக்கோபும் யோவானும் அந்திரேயாவும் அவரிடம் தனிமையில் வந்து: இவைகள் எப்பொழுது நடக்கும்? இவைகளெல்லாம் நிறைவேறும் காலங்களுக்கு அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: ஒருவனும் உங்களை ஏமாற்றாதபடி எச்சரிக்கையாக இருங்கள். ஏனென்றால், அநேகர் வந்து, என் நாமத்தைச் சொல்லி: நானே கிறிஸ்து என்று, அநேகரை ஏமாற்றுவார்கள். யுத்தங்களையும், யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படும்போது கலங்காமல் இருங்கள்; இவைகள் நடக்கவேண்டியவைகள். ஆனாலும், முடிவு உடனே வராது. மக்களுக்கு எதிராக மக்களும், ராஜ்யத்திற்கு எதிராக ராஜ்யமும் எழும்பும்; பூமி அதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்; பஞ்சங்களும், கலகங்களும் உண்டாகும்; இவைகள் வேதனைகளுக்கு ஆரம்பம். நீங்களோ எச்சரிக்கையாக இருங்கள், ஏனென்றால், உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுப்பார்கள், நீங்கள் ஜெப ஆலயங்களில் அடிக்கப்படுவீர்கள்; என்னிமித்தம் தேசாதிபதிகளுக்கும் ராஜாக்களுக்கும் சாட்சியாக அவர்களுக்கு முன்பாக நிறுத்தப்படுவீர்கள். எல்லா தேசத்தின் மக்களுக்கும் நற்செய்தி முதலில் பிரசங்கிக்கப்படவேண்டும். அவர்கள் உங்களைக் கொண்டுபோய் ஒப்புக்கொடுக்கும்போது, நீங்கள் என்ன பேசவேண்டும் என்று கவலைப்படாமலும் சிந்திக்காமலும் இருங்கள்; அந்த நேரத்திலே உங்களுக்குக் கொடுக்கப்படுகிற வார்த்தைகளையே பேசுங்கள்; ஏனென்றால், பேசுகிறவர்கள் நீங்கள் இல்லை, பரிசுத்த ஆவியானவரே பேசுகிறவர். அன்றியும் சகோதரன் சகோதரனையும், தகப்பன் பிள்ளையையும் மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றோருக்கு எதிராகப் பிள்ளைகள் எழும்பி, அவர்களைக் கொலைசெய்ய ஒப்புக்கொடுப்பார்கள். என் நாமத்தினால் எல்லோராலும் பகைக்கப்படுவீர்கள். கடைசிவரைக்கும் நிலைத்து நிற்பவனே இரட்சிக்கப்படுவான்.

தொடர்புடைய காணொளிகள்