மாற்கு 12:28-34

மாற்கு 12:28-34 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மோசேயின் சட்ட ஆசிரியரில் ஒருவன் வந்து, அவர்கள் விவாதித்ததைக் கேட்டுக்கொண்டிருந்தான். இயேசு அவர்களுக்கு நல்ல பதில் கொடுத்தார் என்று அவன் கண்டபோது, அவன் அவரிடம், “கட்டளைகள் எல்லாவற்றிலும் மிக முக்கியமான கட்டளை எது?” என்று கேட்டான். அதற்கு இயேசு அவனிடம், “மிக முக்கியமான கட்டளை எது என்றால்: ‘இஸ்ரயேலே கேள், நம்முடைய இறைவனாகிய கர்த்தர், ஒருவரே கர்த்தர். உன் இறைவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பெலத்தோடும் அன்பு செலுத்து’ என்பதே. இரண்டாம் கட்டளை என்னவென்றால், ‘நீ உன்னில் அன்பு செலுத்துவது போலவே, உன் அயலானிடத்திலும் அன்பு செலுத்து.’ இவற்றைவிட, பெரிதான கட்டளை ஒன்றும் இல்லை” என்றார். அதற்கு அந்த மோசேயின் சட்ட ஆசிரியன், “போதகரே, நன்றாய்ச் சொன்னீர். இறைவன் ஒருவரே, அவரைத்தவிர வேறு இறைவனும் இல்லை என்று நீர் சொன்னது சரி. அவரை உன் முழு இருதயத்தோடும், உன் முழு மனதோடும், உன் முழு பெலத்தோடும் அன்பு செலுத்துவதும், தன்னில் தான் அன்பாயிருப்பதுபோல் தன் அயலானில் அன்பாய் இருப்பதுமே, எல்லா தகன காணிக்கைகளையும், பலிகளையும்விட மிக முக்கியமானது” என்றான். அவன் ஞானத்துடன் பதில் சொல்லியதை இயேசு கண்டபோது, அவர் அவனிடம், “நீ இறைவனுடைய அரசுக்குத் தூரமாக இல்லை” என்றார். அவ்வேளையிலிருந்து ஒருவரும் அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்கத் துணியவில்லை.

மாற்கு 12:28-34 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

வேதபண்டிதர்களில் ஒருவன் அவர்கள் வாக்குவாதம்பண்ணுகிறதைக்கேட்டு, அவர்களுக்கு நன்றாக பதில் சொன்னார் என்று அறிந்து, அவரிடம் வந்து: கட்டளைகளிலெல்லாம் பிரதான கட்டளை எது என்று கேட்டான். இயேசு அவனுக்கு மறுமொழியாக: கட்டளைகளிலெல்லாம் பிரதான கட்டளை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். உன் தேவனாகிய கர்த்தரிடம் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழு பலத்தோடும் அன்புசெலுத்துவாயாக என்பதே பிரதான கட்டளை. இதற்கு ஒப்பாக இருக்கிற இரண்டாம் கட்டளை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புசெலுத்துவதுபோல மற்றவனிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்பதே; இவைகளைவிட பெரிய கட்டளை வேறொன்றும் இல்லை என்றார். அதற்கு வேதபண்டிதன்: சரிதான் போதகரே, நீர் சொன்னது சத்தியம்; ஒரே தேவன் உண்டு, அவரைத்தவிர வேறொரு தேவன் இல்லை. முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழுப் பலத்தோடும் அவரிடத்தில் அன்பு செலுத்துகிறதும், தன்னிடத்தில் அன்பு செலுத்துகிறதுபோல மற்றவனிடத்தில் அன்பு செலுத்துகிறதுதான் தகனபலிகளையும் மற்ற எல்லா பலிகளையும்விட முக்கியமாக இருக்கிறது என்றான். அவன் ஞானமாக பதில் சொன்னதை இயேசு பார்த்து: நீ தேவனுடைய ராஜ்யத்திற்குத் தூரமானவன் இல்லை என்றார். அதன்பின்பு ஒருவரும் அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்கத் துணியவில்லை.

மாற்கு 12:28-34 பரிசுத்த பைபிள் (TAERV)

வேதபாரகர்களில் ஒருவன் இயேசுவிடம் வந்தான். அவன் இயேசுவும் சதுசேயர்களும், விவாதிப்பதைக் கேட்டான். இயேசு அவர்களுக்கு நல்ல பதில் கொடுப்பதைப் பார்த்தான். எனவே அவன் இயேசுவிடம், “கட்டளைகளுள் எது மிக முக்கியமானது?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “‘இஸ்ரவேலின் மக்களே! கவனியுங்கள். நமது தேவனாகிய கர்த்தரே உண்மையான ஒரே கர்த்தர். நீங்கள் அவரிடம் அன்பாய் இருக்க வேண்டும். அவரிடம் நீங்கள் முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழு இதயத்தோடும் முழு பலத்தோடும், அன்பாய் இருக்க வேண்டும்.’ இது முதல் கட்டளை. ‘உங்களை நீங்கள் எந்த அளவு நேசிக்கிறீர்களோ, அந்த அளவுக்கு அடுத்தவர்களையும் நேசிக்க வேண்டும்’ என்பது இரண்டாம் கட்டளை. இவற்றைவிட மிக முக்கியமான வேறு கட்டளைகள் எதுவும் இல்லை” என்றார். அதற்கு அந்த மனிதன், “போதகரே! இது ஒரு நல்ல பதில். நீங்கள் சரியான பதிலையே சொல்லி இருக்கிறீர்கள். கர்த்தர் ஒருவரே நம் தேவன். அவரைத் தவிர வேறு தேவன் இல்லை. ஒருவன் தேவனைத் தன் முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழு பலத்தோடும் நேசிக்க வேண்டும். ஒருவன் தன்னை நேசிப்பது போலவே மற்றவர்களையும் நேசிக்க வேண்டும். இந்தக் கட்டளைகளே, ஏனைய கட்டளைகளைக் காட்டிலும் முக்கியமானவை. இவை தகனபலிகள் போன்றவற்றைவிட மிக முக்கியமானவை” என்றான். அந்த மனிதன் புத்திசாலித்தனமாகப் பதில் கூறுவதை இயேசு அறிந்து கொண்டார். எனவே அவனிடம், “நீ தேவனின் இராஜ்யத்தை நெருங்கிவிட்டாய்” என்றார். அதற்குப் பிறகு ஒருவருக்கும் இயேசுவிடம் எந்தக் கேள்வியும் கேட்கும் தைரியம் வரவில்லை.

மாற்கு 12:28-34 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

வேதபாரகரில் ஒருவன் அவர்கள் தர்க்கம்பண்ணுகிறதைக்கேட்டு, அவர்களுக்கு நன்றாய் உத்தரவு சொன்னாரென்று அறிந்து, அவரிடத்தில் வந்து: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்று கேட்டான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே; இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்றார். அதற்கு வேதபாரகன்: சரிதான், போதகரே, நீர் சொன்னது சத்தியம்; ஒரே தேவன் உண்டு, அவரைத்தவிர வேறொரு தேவன் இல்லை. முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழுப் பலத்தோடும் அவரிடத்தில் அன்புகூருகிறதும், தன்னிடத்தில் அன்புகூருகிறதுபோல் பிறனிடத்தில் அன்புகூருகிறதுமே சர்வாங்க தகனம் முதலிய பலிகளைப் பார்க்கிலும் முக்கியமாயிருக்கிறது என்றான். அவன் விவேகமாய் உத்தரவுசொன்னதை இயேசு கண்டு: நீ தேவனுடைய ராஜ்யத்துக்குத் தூரமானவனல்ல என்றார். அதன்பின்பு ஒருவரும் அவரிடத்தில் யாதொரு கேள்வியுங்கேட்கத் துணியவில்லை.