மாற்கு 12:28-34

மாற்கு 12:28-34 TCV

மோசேயின் சட்ட ஆசிரியரில் ஒருவன் வந்து, அவர்கள் விவாதித்ததைக் கேட்டுக்கொண்டிருந்தான். இயேசு அவர்களுக்கு நல்ல பதில் கொடுத்தார் என்று அவன் கண்டபோது, அவன் அவரிடம், “கட்டளைகள் எல்லாவற்றிலும் மிக முக்கியமான கட்டளை எது?” என்று கேட்டான். அதற்கு இயேசு அவனிடம், “மிக முக்கியமான கட்டளை எது என்றால்: ‘இஸ்ரயேலே கேள், நம்முடைய இறைவனாகிய கர்த்தர், ஒருவரே கர்த்தர். உன் இறைவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பெலத்தோடும் அன்பு செலுத்து’ என்பதே. இரண்டாம் கட்டளை என்னவென்றால், ‘நீ உன்னில் அன்பு செலுத்துவது போலவே, உன் அயலானிடத்திலும் அன்பு செலுத்து.’ இவற்றைவிட, பெரிதான கட்டளை ஒன்றும் இல்லை” என்றார். அதற்கு அந்த மோசேயின் சட்ட ஆசிரியன், “போதகரே, நன்றாய்ச் சொன்னீர். இறைவன் ஒருவரே, அவரைத்தவிர வேறு இறைவனும் இல்லை என்று நீர் சொன்னது சரி. அவரை உன் முழு இருதயத்தோடும், உன் முழு மனதோடும், உன் முழு பெலத்தோடும் அன்பு செலுத்துவதும், தன்னில் தான் அன்பாயிருப்பதுபோல் தன் அயலானில் அன்பாய் இருப்பதுமே, எல்லா தகன காணிக்கைகளையும், பலிகளையும்விட மிக முக்கியமானது” என்றான். அவன் ஞானத்துடன் பதில் சொல்லியதை இயேசு கண்டபோது, அவர் அவனிடம், “நீ இறைவனுடைய அரசுக்குத் தூரமாக இல்லை” என்றார். அவ்வேளையிலிருந்து ஒருவரும் அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்கத் துணியவில்லை.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த மாற்கு 12:28-34