மாற்கு 12:13-17

மாற்கு 12:13-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பின்பு அவர்கள் இயேசுவை அவருடைய வார்த்தையைக் கொண்டே குற்றம் பிடிக்கும்படி, பரிசேயரில் சிலரையும், ஏரோதியரில் சிலரையும் அவரிடம் அனுப்பினார்கள். அவர்கள் இயேசுவிடம் வந்து, “போதகரே, நீர் நேர்மையானவரும், இறைவனின் வழியை சத்தியத்தின்படியே போதிக்கிறவருமாய் இருக்கிறீர். நீர் மனிதருக்கு முகதாட்சண்யம் காட்டாதவராய் இருப்பதால் ஆள்பார்த்து எதையும் செய்யமாட்டீர் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆகவே ரோமப் பேரரசன் சீசருக்கு வரி செலுத்துவது சரியானதா? இல்லையா? நாங்கள் அதைச் செலுத்த வேண்டுமா? செலுத்த வேண்டியதில்லையா?” என்று கேட்டார்கள். ஆனால் இயேசுவுக்கு அவர்களின் தந்திரம் தெரிந்திருந்தது. அவர் அவர்களிடம், “நீங்கள் ஏன் என்னை சோதிக்கிறீர்கள்? ஒரு வெள்ளிக்காசை நான் பார்ப்பதற்கு என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றார். அவர்கள் அந்த நாணயத்தைக் கொண்டுவந்தபோது, அவர் அவர்களிடம், “இந்த நாணயத்திலுள்ள உருவம் யாருடையது? இதில் பொறிக்கப்பட்டிருக்கும் எழுத்துக்கள் யாருடையவை?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ரோமப் பேரரசன் சீசருடையது” என்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், அப்படியானால், “சீசருடையதை சீசருக்கும், இறைவனுடையதை இறைவனுக்கும் கொடுங்கள்” என்றார். அவர் சொன்னதைக் கேட்டு அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

மாற்கு 12:13-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவர்கள், இயேசுவை அவரது பேச்சிலே சிக்கவைக்கும்படி, பரிசேயர்களிலும் ஏரோதியர்களிலும் சிலரை அவரிடம் அனுப்பினார்கள். அவர்கள் வந்து: போதகரே, நீர் சத்தியமுள்ளவர் என்றும், எவனைக்குறித்தும் உமக்குக் கவலையில்லை என்றும் அறிந்திருக்கிறோம், நீர் முகதாட்சிணியம் இல்லாதவராக தேவனுடைய வழிகளைச் சத்தியமாகப் போதிக்கிறீர், இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, இல்லையோ? நாம் வரி கொடுக்கலாமா, வேண்டாமா? என்று கேட்டார்கள். அவர்களுடைய தந்திரத்தை அவர் அறிந்து: நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்? நான் பார்ப்பதற்கு ஒரு பணத்தை என்னிடம் கொண்டுவாருங்கள் என்றார். அவர்கள் அதைக் கொண்டுவந்தார்கள். அப்பொழுது அவர்: இந்தப் படமும் மேலே உள்ள எழுத்தும் யாருடையது என்று கேட்டார்; ரோம அரசாங்கத்திற்கு உரியது என்றார்கள். அதற்கு இயேசு: அரசாங்கத்திற்குரியதை அரசாங்கத்திற்கும், தேவனுக்குரியதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். அவர்கள் அவரைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.

மாற்கு 12:13-17 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு யூதத்தலைவர்கள், சில பரிசேயர்களையும், ஏரோதியர்கள் என்னும் குழுவில் இருந்து சிலரையும் இயேசுவிடம் அனுப்பி வைத்தார்கள். ஏதாவது இயேசு தவறாகப் பேசினால் அவரைப் பிடிக்க வேண்டும் என்று விரும்பினர். பரிசேயர்களும், ஏரோதியர்களும் இயேசுவிடம் சென்றனர். “போதகரே! நீங்கள் ஒரு நேர்மையான மனிதர் என்று எங்களுக்குத் தெரியும். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி உங்களுக்கு எவ்வித அச்சமும் கிடையாது. அவர்கள் அனைவரும் உங்களுக்கு ஒரே மாதிரிதான். தேவனின் வழியைப் பற்றிய உண்மையையே நீங்கள் சொல்லிக்கொண்டு வருகிறீர்கள். இராயனுக்கு வரி கொடுப்பது சரியா இல்லையா என்பது பற்றிக் கூறுங்கள். நாங்கள் வரி கொடுக்கலாமா, வேண்டாமா?” என்று கேட்டனர். அவர்களின் தந்திரத்தை இயேசு அறிந்துகொண்டார். அவர், “எதை எதையோ சொல்லி என்னை ஏன் பிடிக்க முயற்சி செய்கிறீர்கள்? ஒரு வெள்ளிக்காசைக் கொண்டு வாருங்கள். நான் பார்க்கவேண்டும்” என்றார். அவர்கள் ஒரு காசைக் கொடுத்தார்கள். அவர்களிடம் இயேசு, “யாருடைய உருவப்படம் இந்தக் காசில் உள்ளது? யாருடைய பெயர் இதில் எழுதப்பட்டுள்ளது?” என்று கேட்டார். அவர்களோ அதற்கு, “இது இராயனுடைய படம், இதில் இராயனின் பெயருள்ளது” என்றனர். இயேசு அவர்களைப் பார்த்து, “இராயனுக்குரியதை இராயனுக்குக் கொடுங்கள், தேவனுக்குரியதை தேவனிடம் கொடுங்கள்” என்றார். அந்த மக்கள் அதைக் கேட்டு ஆச்சரியப்பட்டார்கள்.

மாற்கு 12:13-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவர்கள், பேச்சிலே அவரை அகப்படுத்தும்படிக்கு, பரிசேயரிலும் ஏரோதியரிலும் சிலரை அவரிடத்தில் அனுப்பினார்கள். அவர்கள் வந்து: போதகரே, நீர் சத்தியமுள்ளவரென்றும், எவனைக்குறித்தும் உமக்குக் கவலையில்லையென்றும் அறிந்திருக்கிறோம், நீர் முகதாட்சிணியம் இல்லாதவராய் தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறீர், இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ அல்லவோ? நாம் கொடுக்கலாமோ, கொடுக்கக்கூடாதோ? என்று கேட்டார்கள். அவர்களுடைய மாயத்தை அவர் அறிந்து: நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்? நான் பார்க்கும்படிக்கு ஒரு பணத்தை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார். அவர்கள் அதைக் கொண்டுவந்தார்கள். அப்பொழுது அவர்: இந்தச் சுரூபமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார்; இராயனுடையது என்றார்கள். அதற்கு இயேசு: இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். அவர்கள் அவரைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.