மாற்கு 12:13-17

மாற்கு 12:13-17 TCV

பின்பு அவர்கள் இயேசுவை அவருடைய வார்த்தையைக் கொண்டே குற்றம் பிடிக்கும்படி, பரிசேயரில் சிலரையும், ஏரோதியரில் சிலரையும் அவரிடம் அனுப்பினார்கள். அவர்கள் இயேசுவிடம் வந்து, “போதகரே, நீர் நேர்மையானவரும், இறைவனின் வழியை சத்தியத்தின்படியே போதிக்கிறவருமாய் இருக்கிறீர். நீர் மனிதருக்கு முகதாட்சண்யம் காட்டாதவராய் இருப்பதால் ஆள்பார்த்து எதையும் செய்யமாட்டீர் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆகவே ரோமப் பேரரசன் சீசருக்கு வரி செலுத்துவது சரியானதா? இல்லையா? நாங்கள் அதைச் செலுத்த வேண்டுமா? செலுத்த வேண்டியதில்லையா?” என்று கேட்டார்கள். ஆனால் இயேசுவுக்கு அவர்களின் தந்திரம் தெரிந்திருந்தது. அவர் அவர்களிடம், “நீங்கள் ஏன் என்னை சோதிக்கிறீர்கள்? ஒரு வெள்ளிக்காசை நான் பார்ப்பதற்கு என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றார். அவர்கள் அந்த நாணயத்தைக் கொண்டுவந்தபோது, அவர் அவர்களிடம், “இந்த நாணயத்திலுள்ள உருவம் யாருடையது? இதில் பொறிக்கப்பட்டிருக்கும் எழுத்துக்கள் யாருடையவை?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ரோமப் பேரரசன் சீசருடையது” என்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், அப்படியானால், “சீசருடையதை சீசருக்கும், இறைவனுடையதை இறைவனுக்கும் கொடுங்கள்” என்றார். அவர் சொன்னதைக் கேட்டு அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த மாற்கு 12:13-17