மாற்கு 10:32-52

மாற்கு 10:32-52 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அவர்கள் எருசலேமுக்குப் போய்க்கொண்டிருக்கும் வழியில், இயேசு அவர்களுக்கு முன்னால் போய்க்கொண்டிருந்தார்; சீடர்கள் வியப்படைந்தார்கள். அவரைப் பின்பற்றிச் சென்ற மற்றவர்களோ பயமடைந்திருந்தார்கள். மீண்டும் அவர் பன்னிரண்டு சீடர்களையும் ஒரு பக்கமாய் அழைத்துக் கொண்டுபோய், தமக்கு நிகழவிருப்பதைக் குறித்து அவர்களுக்குச் சொன்னார். “இதோ, நாம் எருசலேமுக்குப் போகிறோம். அங்கே மானிடமகனாகிய நான், தலைமை ஆசாரியரிடத்திலும் மோசேயின் சட்ட ஆசிரியர்களிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவேன். அவர்கள் என்னை மரண தண்டனைக்கு உட்படுத்துவார்கள். என்னை ஏளனம் செய்து, என்மேல் துப்பி, சவுக்கால் அடித்து, கொலை செய்யும்படி, யூதரல்லாதவர்களிடம் ஒப்புக்கொடுப்பார்கள். ஆகிலும், மூன்று நாட்களுக்குப்பின்பு, நான் உயிரோடு எழுந்திருப்பேன்” என்றார். அப்பொழுது செபெதேயுவின் மகன்களான யாக்கோபும், யோவானும் இயேசுவினிடம் வந்து, “போதகரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்யவேண்டும் என்று விரும்புகிறோம்” என்றார்கள். அதற்கு இயேசு, “நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும்” என்று கேட்டார். அவர்கள் அதற்குப் பதிலாக, “உமது மகிமையில் எங்களில் ஒருவன் உமது வலதுபக்கத்திலும், மற்றவன் உமது இடது பக்கத்திலும் உட்காரும்படி அனுமதியும். அதையே விரும்புகிறோம்” என்றார்கள். அதற்கு இயேசு, “நீங்கள் கேட்பது என்ன என்று நீங்கள் அறியாதிருக்கிறீர்கள். நான் குடிக்கும் பாத்திரத்திலிருந்து உங்களால் குடிக்க முடியுமா? அல்லது எனக்கிருக்கும் திருமுழுக்கில் உங்களால் பங்குகொள்ள முடியுமா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “எங்களால் முடியும்” என்றார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், “உண்மையாய் நான் குடிக்கும் பாத்திரத்திலிருந்து நீங்கள் குடிப்பீர்கள், எனக்கிருக்கும் திருமுழுக்கை நீங்களும் பெறுவீர்கள். ஆனால் எனது வலதுபக்கத்தில் உட்காருவதையோ, இடதுபக்கத்தில் உட்காருவதையோ அனுமதிப்பது எனக்குரியது அல்ல. இந்த இடங்கள் எவர்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிறதோ, அவர்களுக்கே உரியவை” என்றார். இதைக் கேட்ட மற்ற பத்துப்பேரும், யாக்கோபின்மேலும் யோவானின்மேலும் கோபமடைந்தார்கள். இயேசு சீடர்களை ஒன்றாய்க் கூப்பிட்டு, “யூதரல்லாதவர்களின் ஆளுநர்களாய் கருதப்படுகிறவர்கள், அவர்களை அடக்கி ஆளுகிறார்கள் என்றும், அவர்களுடைய உயர் அதிகாரிகள் அவர்கள்மேல் அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். ஆனால் உங்களுக்குள் அப்படியிருக்கக் கூடாது. உங்கள் மத்தியில் பெரியவனாய் இருக்க விரும்புகிறவன் யாரோ, அவன் உங்களுக்குப் பணிவிடை செய்கிறவனாக இருக்கவேண்டும். முதன்மையாயிருக்க விரும்புகிறவன் யாரோ, அவன் எல்லோருக்கும் அடிமையாயிருக்க வேண்டும். மானிடமகனாகிய நானும் பணிவிடையைப் பெற்றுக்கொள்ள அல்ல, பணிவிடை செய்யவே வந்தேன்; அநேகரை மீட்கும்படி என் உயிரைக் கொடுக்கவும் வந்தேன்” என்றார். அதற்குப் பின்பு இயேசுவும், அவருடைய சீடர்களும் எரிகோவுக்கு வந்துசேர்ந்ததும், அவர்களும், பெருங்கூட்டமாய் இருந்த மக்களும், பட்டணத்தைவிட்டுப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது திமேயுவின் மகனான பர்த்திமேயு என்னும் ஒரு குருடன், வீதியருகே உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான். நாசரேத்தைச் சேர்ந்த இயேசு வருகிறார் என அவன் கேள்விப்பட்டபோது, “இயேசுவே, தாவீதின் மகனே, என்மேல் இரக்கமாயிரும்!” என்று சத்தமாய்க் கூப்பிடத் தொடங்கினான். பலர் அவனைக் கண்டித்து, சத்தமிட வேண்டாம் என அவனுக்குச் சொன்னார்கள். ஆனால் அவனோ, “தாவீதின் மகனே, என்மேல் இரக்கமாயிரும்!” என்று இன்னும் அதிகமாய் சத்தமிட்டுக் கூப்பிட்டான். இயேசு அவ்விடத்தில் நின்று, “அவனைக் கூப்பிடுங்கள்” என்றார். அவர்கள் அந்தக் குருடனைக் கூப்பிட்டு, “தைரியமாய் இரு! எழுந்து நில்! இயேசு உன்னைக் கூப்பிடுகிறார்” என்றார்கள். அவன் தனது மேலுடையை எறிந்துவிட்டு, துள்ளி எழுந்து இயேசுவிடம் வந்தான். இயேசு அவனிடம், “நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்று விரும்புகிறாய்?” என்று கேட்டார். அதற்கு அந்தக் குருடன், “ஆண்டவரே, நான் பார்க்க விரும்புகிறேன்” என்றான். அப்பொழுது இயேசு, “நீ போ. உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியது” என்றார். உடனே அவன் பார்வையைப் பெற்று, அவ்வழியிலேயே இயேசுவைப் பின்பற்றிச் சென்றான்.

மாற்கு 10:32-52 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு அவர்கள் எருசலேமுக்குப் பயணமாகப் போகும்பொழுது, இயேசு அவர்களுக்கு முன்பே நடந்துபோனார்; அவர்கள் ஆச்சரியப்பட்டு, அவருக்குப் பின்னால் பயத்தோடு போனார்கள். அப்பொழுது அவர் பன்னிரண்டு சீடர்களையும் அழைத்து, தமக்கு நடக்கப்போகிறவைகளை அவர்களுக்கு மீண்டும் சொல்லத்தொடங்கினார்: இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; அங்கே மனிதகுமாரன் பிரதான ஆசாரியர்களிடத்திலும் வேதபண்டிதரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரணதண்டனைக்குள்ளாகத் தீர்த்து, யூதரல்லாதோர்களிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள். அவர்கள் அவரைப் பரிகாசம்பண்ணி, அவரை சாட்டையினால் அடித்து, அவர்மேல் துப்பி, அவரைக் கொலைசெய்வார்கள்; ஆனாலும் மூன்றாம்நாளிலே அவர் உயிரோடு எழுந்திருப்பார் என்றார். அப்பொழுது செபெதேயுவின் குமாரர்களாகிய யாக்கோபும் யோவானும் அவரிடம் வந்து: போதகரே, நாங்கள் எதைக்கேட்டாலும் அதை நீர் எங்களுக்குச் செய்யவேண்டும் என்று விரும்புகிறோம் என்றார்கள். அவர் அவர்களைப் பார்த்து: நான் உங்களுக்கு என்னசெய்யவேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள்: உமது மகிமையிலே, எங்களில் ஒருவன் உமது வலதுபக்கத்திலும், ஒருவன் உமது இடதுபக்கத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எங்களுக்கு அருள்செய்யவேண்டும் என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் கேட்பது என்ன என்று உங்களுக்கே தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் உங்களால் முடியுமா என்றார். அதற்கு அவர்கள்: முடியும் என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள். ஆனாலும் என் வலதுபக்கத்திலும் என் இடதுபக்கத்திலும் உட்கார்ந்திருக்கும்படி யாருக்கு ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களைத்தவிர, மற்றவர்களுக்கு அதை அருளுவது என் காரியமல்ல என்றார். மற்ற பத்துப்பேரும் அதைக்கேட்டு, யாக்கோபின்மேலும் யோவானின் மேலும் எரிச்சலானார்கள். அப்பொழுது, இயேசு அவர்களை அருகில் வரச்சொல்லி: யூதரல்லாதவர்களுக்கு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டவர்கள் அவர்களை ஆணவத்தோடு ஆளுகிறார்கள் என்றும், அவர்களில் பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாக அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். உங்களுக்குள்ளே அப்படி இருக்கக்கூடாது; உங்களில் யாராவது பெரியவனாக இருக்கவிரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாக இருக்கவேண்டும். உங்களில் யாராவது முதன்மையானவனாக இருக்கவிரும்பினால், அவன் எல்லோருக்கும் ஊழியக்காரனாக இருக்கவேண்டும். அப்படியே, மனிதகுமாரனும் மற்றவர்களிடம் ஊழியம் பெற வராமல், ஊழியம் செய்யவும், அநேகரை மீட்கத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார். பின்பு அவர்கள் எரிகோவிற்கு வந்தார்கள். அவரும் அவருடைய சீடர்களும் மக்கள் கூட்டமும் எரிகோவைவிட்டுப் புறப்படுகிறபோது, திமேயுவின் பார்வையற்ற மகனாகிய பர்திமேயு, வழியருகில் உட்கார்ந்து, பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான். அவன் நசரேயனாகிய இயேசு வருகிறார் என்று கேள்விப்பட்டு: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று சத்தமிட்டு கூப்பிடத் தொடங்கினான். அவனை அமைதியாக இருக்கச்சொல்லி மக்கள் அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று முன்பைவிட அதிகமாக சத்தமிட்டு கூப்பிட்டான். இயேசு நின்று, அவனை அழைத்துவரச் சொன்னார். அவர்கள் அந்தப் பார்வையற்றவனை அழைத்து: திடன்கொள், எழுந்திரு, உன்னை அழைக்கிறார் என்றார்கள். உடனே அவன் தன் மேலாடையை கழற்றிவிட்டு, எழுந்து, இயேசுவிடம் வந்தான். இயேசு அவனைப் பார்த்து: நான் உனக்கு என்னசெய்யவேண்டும் என்று விரும்புகிறாய் என்றார். அதற்கு அந்தப் பார்வையற்றவன்: ஆண்டவரே, நான் பார்வைபெறவேண்டும் என்றான். இயேசு அவனைப் பார்த்து: நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வைபெற்று, வழியிலே இயேசுவைப் பின்பற்றி அவர்பின்னே சென்றான்.

மாற்கு 10:32-52 பரிசுத்த பைபிள் (TAERV)

இயேசுவும் அவரோடு இருந்த மக்களும் அங்கிருந்து எருசலேமுக்குப் போகும் பாதையில் இருந்தனர். அவர்களுக்குத் தலைமையேற்று இயேசு அழைத்துச் சென்றார். இயேசுவின் சீஷர்கள் இதைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். ஆனால் அவர் பின்னால் போன மக்களோ அச்சப்பட்டனர். மீண்டும் இயேசு தன் பன்னிரண்டு சீஷர்களைக் கூட்டி அவர்களோடு தனியாகப் பேசினார். எருசலேமில் அவருக்கு என்ன நடக்கும் என்பதைப்பற்றிக் கூறினார். “நாம் எருசலேமுக்கு போய்க் கொண்டு இருக்கிறோம். மனிதகுமாரன் அங்கே தலைமை ஆசாரியர்களிடமும், வேதபாரகர்களிடமும் ஒப்படைக்கப்படுவார். அவர்கள் மனிதகுமாரன் சாக வேண்டும் என்று தீர்ப்பளிப்பர். அவர்கள் மனிதகுமாரனை யூதரல்லாதவர்களிடம் ஒப்படைப்பார்கள். அவர்கள் அவரைக் குறித்து நகைப்பர். அவர்மீது காறி உமிழ்வார்கள். வாரினால் அடிப்பார்கள். கொலை செய்வார்கள். அவரோ மரணமடைந்து மூன்றாம் நாள் உயிரோடு எழுவார்” என்றார். பிறகு செபெதேயுவின் குமாரர்களாகிய யாக்கோபும், யோவானும் இயேசுவிடம் வந்தார்கள். அவர்கள், “போதகரே நீங்கள் எங்களுக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்றனர். அவர்களிடம் இயேசு, “நான் உங்களுக்காக என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?” எனக் கேட்டார். “உங்கள் இராஜ்யத்தில் உங்களுக்கென்று மகிமை உள்ளது. எங்களில் ஒருவர் உங்கள் வலது பக்கத்திலும் இன்னும் ஒருவர் இடது பக்கத்திலும் இருக்க வாய்ப்புத்தர வேண்டும்” என்றனர். அதற்கு இயேசு, “நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்பது உங்களுக்குப் புரியவில்லை. நான் ஏற்கப்போகும் பாடுகளை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா? நான் ஞானஸ்நானம் பெறும் விதத்திலேயே நீங்களும் பெற்றுக்கொள்ள முடியுமா?” என்று கேட்டார். அவர்கள், “ஆமாம், எங்களால் முடியும்” என்றனர். இயேசு அவர்களிடம், “நான் படப்போகும் துன்பங்களை எல்லாம் நீங்களும் படவேண்டியதிருக்கும். நான் பெறப்போகும் ஞானஸ்நானத்தை நீங்களும் பெறவேண்டியதிருக்கும். எனக்கு வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் இருக்கப்போகின்றவர்களை என்னால் தீர்மானிக்க முடியாது. அந்த இடத்திற்காகச் சிலர் இருக்கின்றார்கள். அவர்களுக்காகவே அந்த இடங்கள் தயார் செய்யப்பட்டிருக்கின்றன” என்றார். ஏனைய பத்து சீஷர்களும் இயேசு சொல்வதைக் கேட்டனர். அவர்களுக்கு யாக்கோபு மீதும், யோவான் மீதும் கோபம் ஏற்பட்டது. இயேசு தன் சீஷர்களை எல்லாம் தம்மிடம் அழைத்தார். அவர்களிடம், “யூதர் அல்லாத மக்கள் ஆள்வோர்கள் எனக் கருதப்படுகின்றனர். இந்த ஆள்வோர்கள் தம் அதிகாரத்தை மக்கள்மீது செலுத்துவதையே பெரிதும் விரும்புகிறார்கள். அவர்களின் முக்கியத் தலைவர்கள் தம் அதிகாரத்தை மக்கள் மீது செலுத்துவதையே பெரிதும் விரும்புகிறார்கள் என்று நீங்கள் அறிவீர்கள். ஆனால், நீங்கள் மேற்கொள்ளும் வழி இதுவாக இருக்கக் கூடாது. உங்களில் ஒருவன் பெரியவனாக விரும்பினால் அவன் ஒரு வேலைக்காரனைப்போல மற்றவர்களுக்குச் சேவைசெய்ய வேணடும். உங்களில் ஒருவன் மிகவும் முக்கியஸ்தனாக விரும்பினால் அவன் அடிமையைப்போல உங்கள் எல்லாருக்கும் சேவை செய்ய வேண்டும். இது போலவே, மனித குமாரன் பிறருடைய பணிவிடைகளைப் பெறுவதற்காக வரவில்லை. அவர் மற்றவர்களுக்குப் பணிவிடை செய்யவே வந்துள்ளார். அவர் பல மக்களைக் காப்பாற்றுவதற்காகத் தன் உயிரைத் தர வந்துள்ளார்” என்றார். பிறகு அவர்கள் எரிகோ நகரத்துக்கு வந்தனர். இயேசு அந்த நகரத்தையும் விட்டுத் தன் சீஷர்களோடும், மற்ற சில மக்களோடும் வெளியேறினார். பர்திமேயு எனப்படும் (திமேயுவின் குமாரன்) ஒரு குருடன் சாலையோரத்தில் அமர்ந்திருந்தான். அவன் பிச்சைக் கேட்டுக்கொண்டிருந்தான். நாசரேத் ஊரைச் சேர்ந்த இயேசு வந்துகொண்டிருப்பதை அறிந்து சத்தமிட ஆரம்பித்தான். அவன், “தாவீதின் குமாரனாகிய இயேசுவே! எனக்கு உதவி செய்யும்” என்றான். பல மக்கள் அவனைப் பேசாமலிருக்கும்படி அதட்டினார்கள். ஆனால் அந்தக் குருடன் இன்னும் சத்தமாக, “தாவீதின் குமாரனே, எனக்கு உதவி செய்யும்” என்றான். அவ்விடத்தில் இயேசு, “அந்த மனிதனை இங்கே வரச் சொல்லுங்கள்” என்றார். எனவே அவர்கள் அக்குருடனை அழைத்தனர். அவர்கள், “மகிழ்ச்சியாய் இரு, எழுந்து வா, இயேசு உன்னை அழைக்கிறார்” என்றனர். அக்குருடன் விரைவாக எழுந்தான். அவன் தன் மேலாடையை அவ்விடத்தில் எறிந்துவிட்டு இயேசுவினருகில் சென்றான். இயேசு அவனிடம், “நான் உனக்காக என்ன செய்ய வேண்டும் என்று நீ விரும்புகிறாய்?” எனக் கேட்டார். அதற்கு அக்குருடன், “போதகரே! நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்” என்றான். “போ! நீ குணமானாய், ஏனெனில் நீ விசுவாசத்தோடு இருந்தாய்” என்று இயேசு சொன்னார். அதனால் அவன் பார்வை பெற்றான். அவன் இயேசுவைப் பின்தொடர்ந்து போனான்.

மாற்கு 10:32-52 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு அவர்கள் எருசலேமுக்குப் பிரயாணமாய்ப் போகையில், இயேசு அவர்களுக்கு முன்னே நடந்துபோனார்; அவர்கள் திகைத்து, அவருக்குப் பின்னே, பயத்தோடே போனார்கள். அப்பொழுது அவர் பன்னிருவரையும் அழைத்து, தமக்குச் சம்பவிக்கப்போகிறவைகளை அவர்களுக்கு மறுபடியும் சொல்லத்தொடங்கினார்: இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; அங்கே மனுஷகுமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும் வேதபாரகரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, புறத்தேசத்தாரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள். அவர்கள் அவரைப் பரியாசம்பண்ணி, அவரை வாரினால் அடித்து, அவர்மேல் துப்பி, அவரைக் கொலைசெய்வார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார். அப்பொழுது செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அவரிடத்தில் வந்து: போதகரே, நாங்கள் கேட்டுக்கொள்ளப்போகிறதை நீர் எங்களுக்குச் செய்யவேண்டுமென்று விரும்புகிறோம் என்றார்கள். அவர் அவர்களை நோக்கி: நான் உங்களுக்கு என்னசெய்யவேண்டுமென்று விரும்புகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள்: உமது மகிமையிலே, எங்களில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எங்களுக்கு அருள்செய்யவேண்டும் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்கே தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும், உங்களால் கூடுமா என்றார். அதற்கு அவர்கள்: கூடும் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள். ஆனாலும் என் வலதுபாரிசத்திலும் என் இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எவர்களுக்கு ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார். மற்ற பத்துப்பேரும் அதைக் கேட்டு, யாக்கோபின்மேலும் யோவானின் மேலும் எரிச்சலானார்கள். அப்பொழுது, இயேசு அவர்களைக் கிட்டவரச்செய்து: புறஜாதியாருக்கு அதிகாரிகளாக எண்ணப்பட்டவர்கள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், அவர்களில் பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாய் அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன். உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் எல்லாருக்கும் ஊழியக்காரனாயிருக்கக்கடவன். அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார். பின்பு அவர்கள் எரிகோவுக்கு வந்தார்கள். அவரும் அவருடைய சீஷர்களும் திரளான ஜனங்களும் எரிகோவைவிட்டுப் புறப்படுகிறபோது, திமேயுவின் மகனாகிய பர்திமேயு என்கிற ஒரு குருடன், வழியருகே உட்கார்ந்து, பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான். அவன் நசரேயனாகிய இயேசு வருகிறாரென்று கேள்விப்பட்டு: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிடத் தொடங்கினான். அவன் பேசாதிருக்கும்படி அநேகர் அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று முன்னிலும் அதிகமாய்க் கூப்பிட்டான். இயேசு நின்று, அவனை அழைத்துவரச் சொன்னார். அவர்கள் அந்தக் குருடனை அழைத்து: திடன்கொள், எழுந்திரு, உன்னை அழைக்கிறார் என்றார்கள். உடனே அவன் தன் மேல்வஸ்திரத்தை எறிந்துவிட்டு, எழுந்து, இயேசுவினிடத்தில் வந்தான். இயேசு அவனை நோக்கி: நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்றார். அதற்கு அந்தக் குருடன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான். இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்­சித்தது என்றார். உடனே அவன் பார்வையடைந்து, வழியிலே இயேசுவுக்குப் பின்சென்றான்.