மாற்கு 10:32-52

மாற்கு 10:32-52 TCV

அவர்கள் எருசலேமுக்குப் போய்க்கொண்டிருக்கும் வழியில், இயேசு அவர்களுக்கு முன்னால் போய்க்கொண்டிருந்தார்; சீடர்கள் வியப்படைந்தார்கள். அவரைப் பின்பற்றிச் சென்ற மற்றவர்களோ பயமடைந்திருந்தார்கள். மீண்டும் அவர் பன்னிரண்டு சீடர்களையும் ஒரு பக்கமாய் அழைத்துக் கொண்டுபோய், தமக்கு நிகழவிருப்பதைக் குறித்து அவர்களுக்குச் சொன்னார். “இதோ, நாம் எருசலேமுக்குப் போகிறோம். அங்கே மானிடமகனாகிய நான், தலைமை ஆசாரியரிடத்திலும் மோசேயின் சட்ட ஆசிரியர்களிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவேன். அவர்கள் என்னை மரண தண்டனைக்கு உட்படுத்துவார்கள். என்னை ஏளனம் செய்து, என்மேல் துப்பி, சவுக்கால் அடித்து, கொலை செய்யும்படி, யூதரல்லாதவர்களிடம் ஒப்புக்கொடுப்பார்கள். ஆகிலும், மூன்று நாட்களுக்குப்பின்பு, நான் உயிரோடு எழுந்திருப்பேன்” என்றார். அப்பொழுது செபெதேயுவின் மகன்களான யாக்கோபும், யோவானும் இயேசுவினிடம் வந்து, “போதகரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்யவேண்டும் என்று விரும்புகிறோம்” என்றார்கள். அதற்கு இயேசு, “நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும்” என்று கேட்டார். அவர்கள் அதற்குப் பதிலாக, “உமது மகிமையில் எங்களில் ஒருவன் உமது வலதுபக்கத்திலும், மற்றவன் உமது இடது பக்கத்திலும் உட்காரும்படி அனுமதியும். அதையே விரும்புகிறோம்” என்றார்கள். அதற்கு இயேசு, “நீங்கள் கேட்பது என்ன என்று நீங்கள் அறியாதிருக்கிறீர்கள். நான் குடிக்கும் பாத்திரத்திலிருந்து உங்களால் குடிக்க முடியுமா? அல்லது எனக்கிருக்கும் திருமுழுக்கில் உங்களால் பங்குகொள்ள முடியுமா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “எங்களால் முடியும்” என்றார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், “உண்மையாய் நான் குடிக்கும் பாத்திரத்திலிருந்து நீங்கள் குடிப்பீர்கள், எனக்கிருக்கும் திருமுழுக்கை நீங்களும் பெறுவீர்கள். ஆனால் எனது வலதுபக்கத்தில் உட்காருவதையோ, இடதுபக்கத்தில் உட்காருவதையோ அனுமதிப்பது எனக்குரியது அல்ல. இந்த இடங்கள் எவர்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிறதோ, அவர்களுக்கே உரியவை” என்றார். இதைக் கேட்ட மற்ற பத்துப்பேரும், யாக்கோபின்மேலும் யோவானின்மேலும் கோபமடைந்தார்கள். இயேசு சீடர்களை ஒன்றாய்க் கூப்பிட்டு, “யூதரல்லாதவர்களின் ஆளுநர்களாய் கருதப்படுகிறவர்கள், அவர்களை அடக்கி ஆளுகிறார்கள் என்றும், அவர்களுடைய உயர் அதிகாரிகள் அவர்கள்மேல் அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். ஆனால் உங்களுக்குள் அப்படியிருக்கக் கூடாது. உங்கள் மத்தியில் பெரியவனாய் இருக்க விரும்புகிறவன் யாரோ, அவன் உங்களுக்குப் பணிவிடை செய்கிறவனாக இருக்கவேண்டும். முதன்மையாயிருக்க விரும்புகிறவன் யாரோ, அவன் எல்லோருக்கும் அடிமையாயிருக்க வேண்டும். மானிடமகனாகிய நானும் பணிவிடையைப் பெற்றுக்கொள்ள அல்ல, பணிவிடை செய்யவே வந்தேன்; அநேகரை மீட்கும்படி என் உயிரைக் கொடுக்கவும் வந்தேன்” என்றார். அதற்குப் பின்பு இயேசுவும், அவருடைய சீடர்களும் எரிகோவுக்கு வந்துசேர்ந்ததும், அவர்களும், பெருங்கூட்டமாய் இருந்த மக்களும், பட்டணத்தைவிட்டுப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது திமேயுவின் மகனான பர்த்திமேயு என்னும் ஒரு குருடன், வீதியருகே உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான். நாசரேத்தைச் சேர்ந்த இயேசு வருகிறார் என அவன் கேள்விப்பட்டபோது, “இயேசுவே, தாவீதின் மகனே, என்மேல் இரக்கமாயிரும்!” என்று சத்தமாய்க் கூப்பிடத் தொடங்கினான். பலர் அவனைக் கண்டித்து, சத்தமிட வேண்டாம் என அவனுக்குச் சொன்னார்கள். ஆனால் அவனோ, “தாவீதின் மகனே, என்மேல் இரக்கமாயிரும்!” என்று இன்னும் அதிகமாய் சத்தமிட்டுக் கூப்பிட்டான். இயேசு அவ்விடத்தில் நின்று, “அவனைக் கூப்பிடுங்கள்” என்றார். அவர்கள் அந்தக் குருடனைக் கூப்பிட்டு, “தைரியமாய் இரு! எழுந்து நில்! இயேசு உன்னைக் கூப்பிடுகிறார்” என்றார்கள். அவன் தனது மேலுடையை எறிந்துவிட்டு, துள்ளி எழுந்து இயேசுவிடம் வந்தான். இயேசு அவனிடம், “நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்று விரும்புகிறாய்?” என்று கேட்டார். அதற்கு அந்தக் குருடன், “ஆண்டவரே, நான் பார்க்க விரும்புகிறேன்” என்றான். அப்பொழுது இயேசு, “நீ போ. உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியது” என்றார். உடனே அவன் பார்வையைப் பெற்று, அவ்வழியிலேயே இயேசுவைப் பின்பற்றிச் சென்றான்.

மாற்கு 10:32-52 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்