மத்தேயு 26:6-30

மத்தேயு 26:6-30 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசு பெத்தானியாவில் குஷ்டவியாதியாயிருந்த சீமோனுடைய வீட்டில் இருந்தபோது, ஒரு பெண் மிகவும் விலை உயர்ந்த நறுமணத்தைலம் உள்ள, வெள்ளைக்கல் குடுவையுடன் அவரிடத்தில் வந்தாள். அவர் சாப்பாட்டுப் பந்தியில் இருக்கையில், அவள் அந்த நறுமணத் தைலத்தை அவருடைய தலையின்மேல் ஊற்றினாள். சீடர்கள் இதைக் கண்டபோது ஆத்திரமடைந்து, “ஏன் இந்த வீண்செலவு? இந்த நறுமணத் தைலத்தை நல்ல விலைக்கு விற்று, அந்தப் பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே” என்றார்கள். இயேசு இதை அறிந்து அவர்களிடம், “ஏன் இந்தப் பெண்ணுக்குத் தொல்லை கொடுக்கிறீர்கள்? அவள் ஒரு சிறந்த நோக்கத்துடனேயே இந்தக் காரியத்தை எனக்கு செய்திருக்கிறாள். ஏழைகள் எப்பொழுதும் உங்களுடன் இருப்பார்கள், ஆனால் நான் எப்பொழுதும் உங்களுடன் இருக்கமாட்டேன். இவள் இந்த நறுமணத் தைலத்தை என் உடலின்மேல் ஊற்றி, என் அடக்கத்திற்கு ஆயத்தமாகவே இதைச் செய்தாள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், உலகம் முழுவதும் எங்கெல்லாம் இந்த நற்செய்தி அறிவிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் இவள் செய்ததும், இவளுடைய நினைவாகச் சொல்லப்படும்” என்றார். பின்னர் யூதாஸ்காரியோத்து என அழைக்கப்படும் பன்னிரண்டு சீடர்களில் ஒருவன் தலைமை ஆசாரியர்களிடம் போய், “நான் இயேசுவை உங்களிடம் ஒப்புக்கொடுத்தால், நீங்கள் எனக்கு என்ன கொடுப்பீர்கள்?” என்று கேட்டான். அவர்கள் முப்பது வெள்ளிக்காசை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள். அவ்வேளையிலிருந்து யூதாஸ், இயேசுவைக் காட்டிக்கொடுப்பதற்கான வாய்ப்பைத் தேடிக்கொண்டிருந்தான். புளிப்பில்லாத அப்பப் பண்டிகையின் முதலாம் நாளிலே, சீடர்கள் இயேசுவிடம் வந்து, “பஸ்கா உணவைச் சாப்பிடும்படி, நாங்கள் எங்கே உமக்காக ஆயத்தம் பண்ணவேண்டும் என்று விரும்புகிறீர்?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு, “பட்டணத்திற்குள்ளே நான் குறிப்பிடும் மனிதனிடம் போய், ‘போதகர் உமக்குச் சொல்கிறதாவது: நியமிக்கப்பட்ட எனது வேளை நெருங்கிவிட்டது. நான் உமது வீட்டில், எனது சீடர்களுடன் பஸ்காவைக் கொண்டாடப் போகிறேன்’ என்று சொல்லுங்கள்” என்றார். இயேசுவின் சீடர்கள் தங்களுக்கு அவர் சொன்னபடியே செய்து, பஸ்காவை ஆயத்தம் செய்தார்கள். மாலை வேளையானபோது, இயேசு பன்னிரண்டு சீடர்களோடு பந்தியில் அமர்ந்திருந்தார். அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்” என்றார். அப்பொழுது அவர்கள் மிகவும் துக்கமடைந்து, ஒருவன்பின் ஒருவனாக அவரிடம், “ஆண்டவரே, நிச்சயமாக அது நான் இல்லை அல்லவா?” என்று கேட்கத் தொடங்கினார்கள். அதற்குப் பதிலாக இயேசு அவர்களிடம், “பாத்திரத்தில் என்னோடுகூட கை போட்டவனே, என்னைக் காட்டிக்கொடுப்பான். மானிடமகனாகிய என்னைக்குறித்து எழுதியிருக்கிறபடியே நான் போகிறேன். ஆனால் மானிடமகனாகிய என்னைக் காட்டிக்கொடுக்கிறவனுக்கு ஐயோ! அவன் பிறக்காமலே இருந்திருந்தால் அது அவனுக்கு நலமாய் இருந்திருக்கும்” என்றார். அப்பொழுது இயேசுவைக் காட்டிக்கொடுக்கப் போகிறவனான யூதாஸ், “போதகரே, நிச்சயமாக நீர் என்னைக் குறிக்கவில்லை அல்லவா?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “நீயே அதை சொல்லிவிட்டாயே!” என்று பதிலளித்தார். அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், இயேசு அப்பத்தை எடுத்து இறைவனுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு தம்முடைய சீடர்களுக்குக் கொடுத்து அவர்களிடம், “இதை வாங்கிச் சாப்பிடுங்கள்; இது எனது உடல்” என்றார். பின்பு அவர் பாத்திரத்தையும் எடுத்து, இறைவனுக்கு நன்றி செலுத்தி, அதை அவர்களுக்குக் கொடுத்தார். அவர் அவர்களிடம், “நீங்கள் எல்லோரும் இதிலிருந்து குடியுங்கள். இது என்னுடைய உடன்படிக்கையின் இரத்தமாயிருக்கிறது, அநேகருடைய பாவங்களின் மன்னிப்புக்காக இது சிந்தப்படுகிறது” என்று சொன்னார். “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், இவ்வேளையிலிருந்து, என் பிதாவின் அரசில் இதைப் புதியதாக உங்களோடு நான் குடிக்கும் நாள்வரைக்கும், இந்த திராட்சைப்பழ இரசத்தைக் குடிக்கமாட்டேன்” என்றார். அவர்கள் ஒரு துதிப்பாடலைப் பாடிய பின்பு, ஒலிவமலைக்குச் சென்றார்கள்.

மத்தேயு 26:6-30 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இயேசு பெத்தானியாவில் குஷ்டரோகியாக இருந்த சீமோன் வீட்டில் இருக்கும்போது, ஒரு பெண் விலையேறப்பெற்ற பரிமள தைலமுள்ள வெள்ளைக்கல் ஜாடியைக் கொண்டுவந்து, அவர் உணவு பந்தியிலிருக்கும்போது, அந்தத் தைலத்தை அவர் தலையின்மேல் ஊற்றினாள். அவருடைய சீடர்கள் அதைக் கண்டு கோபமடைந்து: இந்த வீண் செலவு என்னத்திற்கு? இந்தத் தைலத்தை அதிக விலைக்கு விற்று, தரித்திரர்களுக்குக் கொடுக்கலாமே என்றார்கள். இயேசு அதை அறிந்து, அவர்களைப் பார்த்து: நீங்கள் இந்தப் பெண்ணை ஏன் தொந்தரவு படுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்செயலைச் செய்திருக்கிறாள். தரித்திரர்கள் எப்போதும் உங்களிடம் இருக்கிறார்கள்; நானோ எப்போதும் உங்களிடம் இருக்கமாட்டேன். இவள் இந்தத் தைலத்தை என் சரீரத்தின்மேல் ஊற்றினது என்னை அடக்கம் செய்வதற்கு சமமான செய்கையாக இருக்கிறது. இந்த நற்செய்தி உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அப்பொழுது, பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியர்களிடத்திற்குப்போய்: நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க ஒத்துக்கொண்டார்கள். அதுமுதல் அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்கு நேரம் பார்த்துக்கொண்டிருந்தான். புளிப்பில்லாத அப்பப்பண்டிகையின் முதல்நாளிலே, சீடர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே உமக்கு ஆயத்தம்செய்ய விருப்பமாக இருக்கிறீர் என்று கேட்டார்கள். அதற்கு அவர்: நீங்கள் நகரத்திலே இன்னானிடத்திற்குப்போய்: என் வேளை சமீபமாக இருக்கிறது, உன் வீட்டிலே என் சீடர்களோடுகூட பஸ்காவை ஆசரிப்பேன் என்று போதகர் சொல்லுகிறார் என்று அவனுக்குச் சொல்லுங்கள் என்றார். இயேசு கற்பித்தபடி சீடர்கள்போய், பஸ்காவை ஆயத்தம் செய்தார்கள். மாலைநேரமானபோது, பன்னிரண்டுபேரோடும் அவர் பந்தியிருந்தார். அவர்கள் உணவு உண்ணும்போது, அவர்: உங்களிலொருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அப்பொழுது, அவர்கள் மிகவும் துக்கமடைந்து, அவரைப் பார்த்து: ஆண்டவரே, நானோ, நானோ? என்று ஒவ்வொருவராகக் கேட்கத்தொடங்கினார்கள். அவர் மறுமொழியாக: என்னோடுகூடத் தட்டில் கையிடுகிறவனே என்னைக் காட்டிக்கொடுப்பான். மனிதகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆனாலும், எந்த மனிதனால் மனிதகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனிதனுக்கு ஐயோ; அந்த மனிதன் பிறக்காதிருந்தானானால் அவனுக்கு நலமாக இருக்கும் என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவரைப் பார்த்து: ரபீ, நானோ? என்றான்; அதற்கு அவர்: நீ சொன்னபடிதான் என்றார். அவர்கள் உணவு உண்ணும்போது, இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீடர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிச்சாப்பிடுங்கள், இது என்னுடைய சரீரமாக இருக்கிறது என்றார். பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, நன்றிசெலுத்தி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லோரும் இதிலே பானம்பண்ணுங்கள்; இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புதிய ஒப்பந்தத்திற்குரிய என்னுடைய இரத்தமாக இருக்கிறது. இதுமுதல் இந்தத் திராட்சைப்பழரசத்தை புதிதானதாக உங்களோடுகூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம்பண்ணும் நாள்வரை இதைப் பானம்பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அவர்கள் துதிப்பாட்டைப் பாடினபின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போனார்கள்.

மத்தேயு 26:6-30 பரிசுத்த பைபிள் (TAERV)

இயேசு பெத்தானியாவில் இருந்தார். தொழுநோயாளியான சீமோன் வீட்டிற்கு சென்றிருந்தார். அப்பொழுது ஒரு பெண் அவரிடம் வந்தாள். அவளிடம் ஒரு வெள்ளைக் கல் ஜாடியில் நிறைய மிக விலையுயர்ந்த வாசனைத் தைலம் இருந்தது. அப்பெண் இயேசுவின் தலைமீது அவ்வாசனைத் தைலத்தை அவர் உணவு அருந்திக்கொண்டிருந்தபொழுது ஊற்றினாள். அப்பெண் இவ்வாறு செய்ததைக் கண்ட இயேசுவின் சீஷர்கள் அவள்மீது எரிச்சல் அடைந்தார்கள், “வாசனைத் தைலத்தை ஏன் வீணாக்குகிறாய்? அதை நல்ல விலைக்கு விற்றால் கிடைக்கும் பணத்தை ஏழைகளுக்குக் கொடுக்கலாமே?” என்று கடிந்து கொண்டார்கள். ஆனால் நடந்ததை அறிந்த இயேசு, “இப்பெண்ணை ஏன் தொந்தரவுபடுத்துகிறீர்கள்? இவள் எனக்கு ஒரு நற்செயலைச் செய்திருக்கிறாள். ஏழைகள் எப்பொழுதும் உங்களுடன் இருப்பார்கள். ஆனால் நான் எப்பொழுதும் உங்களுடன் இருக்கமாட்டேன். வாசனைத் தைலத்தை என் தலைமீது ஊற்றி இப்பெண் நான் மரித்தப்பின் அடக்கம் செய்வதற்கான ஆயத்தத்தைச் செய்திருக்கிறாள். நான் உண்மையைச் சொல்லுகிறேன், உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் நற்செய்தி சொல்லப்படும். நற்செய்தி சொல்லப்படும் எல்லா இடங்களிலும் இப்பெண் செய்த செயலும் சொல்லப்படும். அப்பொழுது மக்கள் அவளை நினைவுகூர்வார்கள்” என்றார். யூதா ஸ்காரியோத்து என்று பெயர் கொண்ட இயேசுவின் சீஷர்களில் ஒருவன் தலைமை ஆசாரியனிடம் பேசுவதற்குச் சென்றான். யூதாஸ், “நான் இயேசுவை உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதற்கு நீங்கள் எனக்கு எவ்வளவு பணம் தருவீர்கள்?” என்று கேட்டான். தலைமை ஆசாரியர்கள் யூதாஸ்க்கு முப்பது வெள்ளி நாணயங்களைக் கொடுத்தார்கள். அப்பொழுதிலிருந்து, யூதாஸ் ஆசாரியர்களிடம் இயேசுவை ஒப்படைக்கத்தக்க நேரத்திற்குக் காத்திருந்தான். புளிப்பில்லாத அப்பம் உண்ணும் பண்டிகையின் முதல் நாளன்று, சீஷர்கள் இயேசுவிடம் வந்து, “பஸ்கா விருந்துண்ண உமக்காக ஏற்பாடுகளைச் செய்யக் காத்திருக்கிறோம். எங்கே உணவுக்கு ஏற்பாடு செய்ய விரும்புகிறீர்?” என்று கேட்டார்கள். அவர்களுக்கு மறுமொழியாக இயேசு, “நகருக்குள் செல்லுங்கள். அங்கே எனக்கு அறிமுகமான ஒருவரிடம் சென்று, போதகர் கூறுவதாகக் கூறுங்கள், ‘குறிக்கப்பட்ட வேளை நெருங்கிவிட்டது. நான் என் சீஷர்களுடன் உன் வீட்டில் பஸ்கா விருந்துண்பேன்’, என்று கூறுங்கள்” என்று கூறினார். இயேசுவின் சீஷர்கள் அவரது சொற்படியே அவர் சொன்னவற்றைச் செய்தார்கள். அவர்கள் பஸ்கா விருந்தைத் தயார் செய்தார்கள். அன்று மாலை இயேசுவும் அவரது பன்னிரண்டு சீஷர்களும் மேஜையில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது இயேசு கூறினார், “உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன். உங்களில் ஒருவன் விரைவில் என்னை எதிரிகளிடம் பிடித்துக் கொடுப்பான்” என்றார். அதைக் கேட்ட சீஷர்கள் மிகவும் கவலையடைந்தார்கள். ஒவ்வொரு சீஷரும் இயேசுவிடம், “ஆண்டவரே, நிச்சமாய் அது நானல்ல!” என்றனர். அதற்கு இயேசு, “நான் கை கழுவும் பாத்திரத்திலேயே கை கழுவுகின்றவனே எனக்கு எதிராவான். மனித குமாரன் இறப்பார். இது நடக்குமென வேதவாக்கியம் சொல்கிறது. மனித குமாரனைக் கொல்வதற்குக் காட்டிக் கொடுக்கிறவனுக்கு மிகுந்த தீமை விளையும். அதைவிட அவன் பிறக்காமலேயே இருந்திருக்கலாம்” என்றார். பின் யூதாஸ் இயேசுவிடம், “போதகரே! நான் நிச்சயம் உங்களுக்கு எதிராகத் திரும்பமாட்டேன்!” என்றான். (இயேசுவை எதிரிகளிடம் காட்டிக்கொடுக்கப் போகிறவன் யூதாஸ் தான்) அதற்கு இயேசு, “இல்லை. நீ தான் என்னைக் காட்டிக் கொடுப்பாய்” என்றார். அவர்கள் உணவு அருந்திக்கொண்டிருந்த பொழுது, இயேசு சிறிது அப்பத்தைக் கையிலெடுத்தார். அந்த அப்பத்துக்காக தேவனுக்கு நன்றி கூறி அதைப் பங்கிட்டார். அதைத் தம் சீஷர்களுக்கு கொடுத்து, “இந்த அப்பத்தை எடுத்து சாப்பிடுங்கள். இந்த அப்பமே என் சரீரம்” என்று சொன்னார். பின் இயேசு ஒரு கோப்பை திராட்சை இரசத்தை எடுத்து, அதற்காக தேவனுக்கு நன்றி கூறினார். அதைத் தமது சீஷர்களுக்குக் கொடுத்த இயேசு, “நீங்கள் ஒவ்வொருவரும் இதைக் குடியுங்கள். இந்த திராட்சை இரசம் என் இரத்தம், என் இரத்தத்தின் மூலம் (மரணம்) தேவனுக்கும் மக்களுக்குமான புதிய உடன்படிக்கை துவங்குகிறது. இந்த இரத்தம் பலருக்கும் தங்கள் பாவங்களைக் கழுவிக்கொள்வதற்காக அளிக்கப்படுகிறது. நான் உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன், அதாவது, நாம் மீண்டும் என் பிதாவின் இராஜ்யத்தில் ஒன்று சேர்ந்து திராட்சை இரசத்தைப் புதியதாய் பானம் பண்ணும்வரைக்கும் நான் இதை அருந்தமாட்டேன்” என்று கூறினார். சீஷர்கள் அனைவரும் ஒரு பாடலைப் பாடினார்கள். பின்பு அவர்கள் ஒலிவ மலைக்குச் சென்றார்கள்.

மத்தேயு 26:6-30 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இயேசு பெத்தானியாவில் குஷ்டரோகியாயிருந்த சீமோன் வீட்டில் இருக்கையில், ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற பரிமளதைலமுள்ள வெள்ளைக்கல்பரணியைக் கொண்டுவந்து, அவர் போஜனபந்தியிலிருக்கும்போது, அந்தத் தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றினாள். அவருடைய சீஷர்கள் அதைக் கண்டு விசனமடைந்து: இந்த வீண்செலவு என்னத்திற்கு? இந்தத் தைலத்தை உயர்ந்த விலைக்கு விற்று, தரித்திரருக்குக் கொடுக்கலாமே என்றார்கள். இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் இந்த ஸ்திரீயை ஏன் தொந்தரவுபடுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள், தரித்திரர் எப்போதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்; நானோ எப்போதும் உங்களிடத்தில் இரேன். இவள் இந்தத் தைலத்தை என் சரீரத்தின்மேல் ஊற்றினது என்னை அடக்கம்பண்ணுவதற்கு எத்தனமான செய்கையாயிருக்கிறது. இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அப்பொழுது, பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்: நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க உடன்பட்டார்கள். அதுமுதல் அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்குச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தான். புளிப்பில்லாத அப்பப்பண்டிகையின் முதல்நாளிலே, சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே உமக்கு ஆயத்தம்பண்ணச் சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள். அதற்கு அவர்: நீங்கள் நகரத்திலே இன்னானிடத்திற்குப் போய்: என் வேளை சமீபமாயிருக்கிறது, உன் வீட்டிலே என் சீஷரோடேகூடப் பஸ்காவை ஆசரிப்பேன் என்று போதகர் சொல்லுகிறார் என்று அவனுக்குச் சொல்லுங்கள் என்றார். இயேசு கற்பித்தபடி சீஷர்கள் போய், பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள். சாயங்காலமானபோது, பன்னிருவரோடுங்கூட அவர் பந்தியிருந்தார். அவர்கள் போஜனம்பண்ணுகையில், அவர்: உங்களிலொருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அப்பொழுது, அவர்கள் மிகவும் துக்கமடைந்து, அவரை நோக்கி: ஆண்டவரே, நானோ, நானோ? என்று ஒவ்வொருவராய்க் கேட்கத்தொடங்கினார்கள். அவர் பிரதியுத்தரமாக: என்னோடேகூடத் தாலத்தில் கையிடுகிறவனே என்னைக் காட்டிக்கொடுப்பான். மனுஷகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆகிலும், எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ; அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவரை நோக்கி: ரபீ, நானோ? என்றான்; அதற்கு அவர்: நீ சொன்னபடிதான் என்றார். அவர்கள் போஜனம்பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார். பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்; இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது. இதுமுதல் இந்தத் திராட்சப்பழரசத்தை நவமானதாய் உங்களோடுகூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம்பண்ணும் நாள்வரைக்கும் இதைப் பானம்பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடினபின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப் போனார்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்