மத் 26:6-30

மத் 26:6-30 IRVTAM

இயேசு பெத்தானியாவில் குஷ்டரோகியாக இருந்த சீமோன் வீட்டில் இருக்கும்போது, ஒரு பெண் விலையேறப்பெற்ற பரிமள தைலமுள்ள வெள்ளைக்கல் ஜாடியைக் கொண்டுவந்து, அவர் உணவு பந்தியிலிருக்கும்போது, அந்தத் தைலத்தை அவர் தலையின்மேல் ஊற்றினாள். அவருடைய சீடர்கள் அதைக் கண்டு கோபமடைந்து: இந்த வீண் செலவு என்னத்திற்கு? இந்தத் தைலத்தை அதிக விலைக்கு விற்று, தரித்திரர்களுக்குக் கொடுக்கலாமே என்றார்கள். இயேசு அதை அறிந்து, அவர்களைப் பார்த்து: நீங்கள் இந்தப் பெண்ணை ஏன் தொந்தரவு படுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்செயலைச் செய்திருக்கிறாள். தரித்திரர்கள் எப்போதும் உங்களிடம் இருக்கிறார்கள்; நானோ எப்போதும் உங்களிடம் இருக்கமாட்டேன். இவள் இந்தத் தைலத்தை என் சரீரத்தின்மேல் ஊற்றினது என்னை அடக்கம் செய்வதற்கு சமமான செய்கையாக இருக்கிறது. இந்த நற்செய்தி உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அப்பொழுது, பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியர்களிடத்திற்குப்போய்: நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க ஒத்துக்கொண்டார்கள். அதுமுதல் அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்கு நேரம் பார்த்துக்கொண்டிருந்தான். புளிப்பில்லாத அப்பப்பண்டிகையின் முதல்நாளிலே, சீடர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே உமக்கு ஆயத்தம்செய்ய விருப்பமாக இருக்கிறீர் என்று கேட்டார்கள். அதற்கு அவர்: நீங்கள் நகரத்திலே இன்னானிடத்திற்குப்போய்: என் வேளை சமீபமாக இருக்கிறது, உன் வீட்டிலே என் சீடர்களோடுகூட பஸ்காவை ஆசரிப்பேன் என்று போதகர் சொல்லுகிறார் என்று அவனுக்குச் சொல்லுங்கள் என்றார். இயேசு கற்பித்தபடி சீடர்கள்போய், பஸ்காவை ஆயத்தம் செய்தார்கள். மாலைநேரமானபோது, பன்னிரண்டுபேரோடும் அவர் பந்தியிருந்தார். அவர்கள் உணவு உண்ணும்போது, அவர்: உங்களிலொருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அப்பொழுது, அவர்கள் மிகவும் துக்கமடைந்து, அவரைப் பார்த்து: ஆண்டவரே, நானோ, நானோ? என்று ஒவ்வொருவராகக் கேட்கத்தொடங்கினார்கள். அவர் மறுமொழியாக: என்னோடுகூடத் தட்டில் கையிடுகிறவனே என்னைக் காட்டிக்கொடுப்பான். மனிதகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆனாலும், எந்த மனிதனால் மனிதகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனிதனுக்கு ஐயோ; அந்த மனிதன் பிறக்காதிருந்தானானால் அவனுக்கு நலமாக இருக்கும் என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவரைப் பார்த்து: ரபீ, நானோ? என்றான்; அதற்கு அவர்: நீ சொன்னபடிதான் என்றார். அவர்கள் உணவு உண்ணும்போது, இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீடர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிச்சாப்பிடுங்கள், இது என்னுடைய சரீரமாக இருக்கிறது என்றார். பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, நன்றிசெலுத்தி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லோரும் இதிலே பானம்பண்ணுங்கள்; இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புதிய ஒப்பந்தத்திற்குரிய என்னுடைய இரத்தமாக இருக்கிறது. இதுமுதல் இந்தத் திராட்சைப்பழரசத்தை புதிதானதாக உங்களோடுகூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம்பண்ணும் நாள்வரை இதைப் பானம்பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அவர்கள் துதிப்பாட்டைப் பாடினபின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போனார்கள்.