மத்தேயு 26:51-75
மத்தேயு 26:51-75 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அவ்வேளையில் இயேசுவுடன் இருந்தவர்களில் ஒருவன் தனது வாளை உருவி பிரதான ஆசாரியனின் வேலைக்காரனின் காதை வெட்டினான். இயேசு அவனிடம், “உன் வாளை அதன் உறையிலே போடு, ஏனெனில் வாளை எடுக்கிற அனைவரும் வாளினாலேயே சாவார்கள். என் பிதாவை நோக்கி, என்னால் கூப்பிட முடியாது என்று நீ நினைக்கிறாயா? நான் கேட்டால் அவர் உடனே எனக்காக பன்னிரண்டுக்கும் அதிகமான தூதர் சேனையை அனுப்புவார் அல்லவா? ஆனால் நான் அப்படிச் செய்தால், இவ்விதமாக நிகழவேண்டும் என்று சொல்கிற வேதவசனம், எப்படி நிறைவேறும்?” என்றார். அவ்வேளையில் இயேசு அந்தப் பெருங்கூட்டத்தைப் பார்த்து, “நான் ஆபத்தான புரட்சியை உண்டாக்குகிறேனா, அதனாலேயா என்னைப் பிடிப்பதற்கு நீங்கள் வாள்களுடனும் தடிகளுடனும், வந்திருக்கிறீர்கள்? நான் ஒவ்வொரு நாளும் ஆலய முற்றத்தில் உட்கார்ந்து போதித்துக் கொண்டிருந்தேனே; அப்பொழுது நீங்கள் என்னைக் கைதுசெய்யவில்லை. ஆனால் இறைவாக்கினர் எழுதி வைத்தவை நிறைவேறும்படியே இவையெல்லாம் நிகழ்கின்றன” என்றார். அப்பொழுது சீடர்கள் எல்லோரும் இயேசுவைத் தனியே விட்டுவிட்டு ஓடிப்போனார்கள். இயேசுவைக் கைது செய்தவர்கள், அவரைப் பிரதான ஆசாரியன் காய்பாவிடம் கூட்டிச்சென்றார்கள். அங்கே மோசேயின் சட்ட ஆசிரியர்களும் யூதரின் தலைவர்களும் கூடியிருந்தார்கள். பேதுரு சிறிது தூரத்தில் இயேசுவைப் பின்தொடர்ந்து போய், பிரதான ஆசாரியனுடைய முற்றம் வரைக்கும் போனான். அவன் உள்ளேப் போய் நடக்கப்போவதை அறியும்படி காவலருடன் உட்கார்ந்திருந்தான். தலைமை ஆசாரியர்களும், ஆலோசனைச் சங்கத்தில் இருந்த அனைவரும் இயேசுவுக்கு மரண தண்டனை கொடுப்பதற்காக, அவருக்கு எதிரான சாட்சியைத் தேடிக்கொண்டிருந்தார்கள்; ஆனால் அவர்களுக்கு கிடைக்கவில்லை. பல பொய் சாட்சிகள் முன்வந்தார்கள். ஆனால், அவர்களுக்கு ஏற்ற சாட்சியம் கிடைக்கவில்லை. கடைசியாக இரண்டு பொய் சாட்சிகள் முன்வந்தார்கள். அவர்களோ, “இவன் இறைவனுடைய ஆலயத்தை இடித்துப்போடவும், அதை மூன்று நாட்களில் திரும்பக் கட்டவும் தன்னால் முடியும் என்று சொன்னான்” என்றார்கள். அப்பொழுது பிரதான ஆசாரியன் எழுந்து நின்று இயேசுவிடம், “பதில் சொல்லமாட்டாயோ? இவர்கள் உனக்கு எதிராய் கொடுக்கிற சாட்சி என்ன?” கேட்டான். ஆனால் இயேசுவோ ஒன்றும் பேசாதிருந்தார். பிரதான ஆசாரியன் அவரிடம், “உயிருள்ள இறைவன் பெயரில் ஆணையிட்டுக் கேட்கிறேன்: நீ இறைவனின் மகனான கிறிஸ்து என்றால், அதை எங்களுக்குச் சொல்” என்றான். இயேசு அதற்குப் பதிலாக, “ஆம், நீர் சொல்கிறபடிதான்; ஆனால் நான் உங்கள் எல்லோருக்கும் சொல்கிறேன்: இதுமுதல் மானிடமகனாகிய நான் வல்லமையுள்ள இறைவனுடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்திருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள்” என்றார். அப்பொழுது பிரதான ஆசாரியன் தன்னுடைய உடைகளைக் கிழித்துக்கொண்டு, “இவன் இறைவனை நிந்தித்துப் பேசுகிறான்! இனியும் நமக்குச் சாட்சிகள் வேண்டுமோ? பாருங்கள், இவன் இறைவனை நிந்தித்துப் பேசியதை நீங்கள் இப்பொழுது கேட்டீர்களே. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “இவன் சாக வேண்டியவன்” என்றார்கள். பின்பு அவர்கள் அவருடைய முகத்தில் துப்பி, அவரைக் குட்டினார்கள். மற்றவர்கள் அவரை முகத்தில் அறைந்து, “கிறிஸ்துவே, உம்மை அடித்தது யார் என்று இறைவாக்குச் சொல்லும்” என்றார்கள். பேதுரு வெளியே முற்றத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தான், அப்பொழுது ஒரு வேலைக்காரப் பெண் அவனிடம் வந்து, “நீயும் கலிலேயாவைச் சேர்ந்த இயேசுவுடன் இருந்தாயே” என்றாள். அதற்கு அவன், “நீ என்ன பேசுகிறாய் என்றே எனக்குத் தெரியாது” என்று சொல்லி எல்லோருக்கும் முன்பாக அவரை மறுதலித்தான். பின்பு பேதுரு வெளியே முற்ற வாசலுக்குச் சென்றான்; அங்கே வேறொரு வேலைக்காரி அவனைக் கண்டு, அங்கிருந்த மக்களிடம், “இவன் நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவோடு இருந்தவன்” என்றாள். அதற்கு அவன், “அந்த மனிதனை எனக்குத் தெரியாது” என்று சத்தியம் செய்து மீண்டும் மறுதலித்தான். சிறிது நேரத்திற்குப் பின்பு அங்கு நின்றவர்கள் பேதுருவிடம் போய், “நிச்சயமாகவே நீ அவர்களில் ஒருவன். நீ பேசும் விதம் உன்னைக் காட்டிக்கொடுக்கிறது” என்றார்கள். அப்பொழுது பேதுரு, “அந்த மனிதனை எனக்குத் தெரியாது” என்று சபிக்கவும் சத்தியம் பண்ணவும் தொடங்கினான். உடனே சேவல் கூவியது. “சேவல் கூவுவதற்கு முன்னே, நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய்” என்று இயேசு சொன்ன வார்த்தைகளைப் பேதுரு நினைவுகூர்ந்தான். அவன் வெளியே போய் மனங்கசந்து அழுதான்.
மத்தேயு 26:51-75 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அப்பொழுது இயேசுவோடிருந்தவர்களில் ஒருவன் கையை நீட்டித் தன் பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் காது அறுந்துபோக வெட்டினான். அப்பொழுது, இயேசு அவனைப் பார்த்து: உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற அனைவரும் பட்டயத்தால் அழிந்துபோவார்கள். நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதர்களை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா? அப்படிச் செய்வேனானால், இவ்விதமாக நடைபெறவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார். அந்த நேரத்திலே இயேசு மக்களைப் பார்த்து: திருடனைப்பிடிக்கப் புறப்படுகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்; நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே உட்கார்ந்து தேவாலயத்தில் உபதேசம் செய்துகொண்டிருந்தேன்; அப்பொழுது, நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே. ஆனாலும் தீர்க்கதரிசிகள் எழுதியிருக்கிற வசனங்கள் நிறைவேறும்படி இவைகளெல்லாம் நடைபெறுகிறது என்றார். அப்பொழுது, சீடர்களெல்லோரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள். இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அங்கே வேதபண்டிதர்களும் மூப்பர்களும் கூடிவந்திருந்தார்கள். பேதுரு, தூரத்திலே அவருக்குப் பின்னேசென்று, பிரதான ஆசாரியனுடைய அரண்மனை வரைக்கும் வந்து, உள்ளே நுழைந்து, முடிவைப் பார்க்கும்படி காவலாளிகளோடு உட்கார்ந்தான். பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் சங்கத்தினர்கள் அனைவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி தேடினார்கள்; ஒருவரும் கிடைக்கவில்லை; அநேகர் வந்து பொய்ச்சாட்சி சொல்லியும் அவர்கள் சாட்சி ஏற்புடையதாயில்லை; கடைசியிலே இரண்டு பொய்ச்சாட்சிகள் வந்து: தேவனுடைய ஆலயத்தை இடித்துப்போடவும், மூன்று நாட்களுக்குள்ளே அதைக் கட்டவும் என்னாலே ஆகும் என்று இவன் சொன்னான் என்றார்கள். அப்பொழுது, பிரதான ஆசாரியன் எழுந்திருந்து, அவரைப் பார்த்து: இவர்கள் உனக்கு விரோதமாக சாட்சி சொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்றான். இயேசுவோ பேசாமலிருந்தார். அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரைப் பார்த்து: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான். அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; அன்றியும், மனிதகுமாரன் சர்வவல்லவருடைய வலதுபக்கத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அப்பொழுது பிரதான ஆசாரியன் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு: இவன் தேவனை நிந்தித்தான்; இனி சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? இதோ, இவன் நிந்தித்ததை இப்பொழுது கேட்டீர்களே. உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது என்று கேட்டான். அதற்கு அவர்கள்: மரணத்திற்குப் பாத்திரனாக இருக்கிறான் என்றார்கள். அப்பொழுது, அவருடைய முகத்தில் துப்பி, அவரைக் குட்டினார்கள்; சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து: கிறிஸ்துவே, உம்மை அடித்தவன் யார்? அதை ஞான தரிசனத்தினால் எங்களுக்குச் சொல்லும் என்றார்கள். அந்தநேரத்தில் பேதுரு வெளியே வந்து அரண்மனை முற்றத்தில் உட்கார்ந்திருந்தான். அப்பொழுது, வேலைக்காரி ஒருத்தி அவனிடத்தில் வந்து: நீயும் கலிலேயனாகிய இயேசுவோடுகூட இருந்தாய் என்றாள். அதற்கு அவன்: நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது என்று எல்லோருக்கும் முன்பாக மறுதலித்தான். அவன், வாசல் மண்டபத்திற்குப்போனபொழுது வேறொருத்தி அவனைக் கண்டு: இவனும் நசரேயனாகிய இயேசுவோடுகூட இருந்தான் என்று அங்கே இருந்தவர்களுக்குச் சொன்னாள். அவனோ: அந்த மனிதனை நான் அறியேன் என்று சத்தியம் செய்து, மறுபடியும் மறுதலித்தான். சிறிதுநேரத்திற்குப்பின்பு அங்கே நின்றவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: உண்மையாகவே நீயும் அவர்களில் ஒருவன்; உன் பேச்சு உன்னை காட்டிக்கொடுக்கிறது என்றார்கள். அப்பொழுது அவன்: அந்த மனிதனைத் தெரியாது என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம் செய்யவும் தொடங்கினான். உடனே சேவல் கூவியது. அப்பொழுது பேதுரு: சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று இயேசு தன்னிடத்தில் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொண்டு, வெளியேபோய், மனங்கசந்து அழுதான்.
மத்தேயு 26:51-75 பரிசுத்த பைபிள் (TAERV)
இது நடந்தபொழுது, இயேசுவுடன் இருந்த சீஷர்களில் ஒருவன் தன் அரிவாளை எடுத்தான். அச்சீஷன் தலைமை ஆசாரியனின் வேலைக்காரனை அரிவாளால் தாக்கி அவனது காதை வெட்டினான். இயேசு அச்சீஷனைப் பார்த்து, “அரிவாளை அதன் உறையில் போடு. அரிவாளை எடுப்பவன் அரிவாளாலே சாவான். நான் என் பிதாவைக் கேட்டால் அவர் எனக்கு பன்னிரண்டு தேவ தூதர் படைகளும் அதற்கு அதிகமாகவும் அனுப்புவார் என்பதை நிச்சயமாக நீ அறிவாய். ஆனால் இது இப்படியே வேதவாக்கியங்கள் கூறுகிறபடியே நடக்க வேண்டும்” என்றார். பின்னர் இயேசு தம்மைப் பிடிக்க வந்தவர்கள் அனைவரையும் நோக்கி, “ஒரு குற்றவாளியைப் போல என்னைப் பிடிக்க அரிவாள் தடிகளுடன் வந்திருக்கிறீர்கள். நான் ஒவ்வொரு நாளும் ஆலயத்தில் போதனை செய்தேன். ஆனால், என்னை அங்கே கைது செய்யவில்லை. தீர்க்கதரிசிகள் எழுதி வைத்துள்ளபடியே இவை அனைத்தும் நடந்துள்ளன” என்று கூறினார். பின்பு இயேசுவின் எல்லா சீஷர்களும் அவரைத் தனியே விட்டு ஓடிப்போனார்கள். இயேசுவைக் கைது செய்தவர்கள் அவரை தலைமை ஆசாரியனான காய்பா வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு வேதபாரகர்களும் மற்ற யூதத் தலைவர்களும் கூடியிருந்தார்கள். இயேசுவைத் தொடர்ந்து வந்த பேதுரு அவர் அருகில் செல்லவில்லை. பேதுரு இயேசுவைத் தொடர்ந்து தலைமை ஆசாரியனின் வீட்டு முற்றத்தை அடைந்தான். இயேசுவுக்கு என்ன நடக்கும் என்பதைக் காண பேதுரு உள்ளே நுழைந்து காவல்காரர்களுடன் அமர்ந்தான். தலைமை ஆசாரியனும் யூத ஆலோசனைச் சங்கமும் இயேசுவைக் கொல்ல அவரிடம் ஏதேனும் குற்றம் காண முயற்சித்தார்கள். இயேசு தவறு செய்தார் என சொல்லக்கூடிய மக்களைத் தேட முயற்சித்தார்கள். பலரும் வந்து இயேசுவைப் பற்றிப் பொய்யான செய்திகளைக் கூறினர். ஆனாலும் இயேசுவைக் கொல்லத்தக்க காரணம் எதையும் யூத ஆலோசனைச் சங்கம் காணவில்லை. பிறகு இருவர் வந்து, “நான் தேவனின் ஆலயத்தை இடித்து விட்டு மூன்றே நாட்களில் மீண்டும் அதைக் கட்டுவேன் என்று இவன் (இயேசு) கூறினான்” என்றார்கள். பின் தலைமை ஆசாரியன் எழுந்திருந்து இயேசுவைப் பார்த்து, “இவர்கள் உமக்கு எதிராக ஆதாரங்களைக் கொடுக்கிறார்கள், இவர்கள், உம்மேல் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு உம்மிடம் ஏதும் பதில் உள்ளதா? இவர்கள் கூறுவது உண்மையா?” என்று கேட்டார். ஆனால், இயேசு ஏதும் பதில் கூறவில்லை. மீண்டும் தலைமை ஆசாரியன் இயேசுவிடம், “நான் உன்னை உறுதி மொழிக்கு உட்படுத்துகிறேன். ஜீவனுள்ள தேவனின் வல்லமையின் பெயரால் ஆணையிடுகிறேன். உண்மையைச் சொல் நீயா தேவகுமாரனாகிய கிறிஸ்து?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “ஆம் நான் தான், ஆனால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். எதிர்காலத்தில் தேவனுடைய வலது பக்கத்தில் மனிதகுமாரன் அமர்ந்திருப்பதைக் காண்பீர்கள். மேலும் வானத்து மேகங்களின் மீது மனித குமாரன் வருவதைக் காண்பீர்கள்” என்று விடையளித்தார். இதைக்கேட்ட தலைமை ஆசாரியன் மிகக் கோபமடைந்தான். தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, “இவன் தேவனுக்கு எதிரானவைகளைப் பேசுகிறான். வேறு சாட்சியம் எதுவும் தேவையில்லை. தேவனுக்கு எதிராக இவன் கூறியவற்றை நீங்கள் எல்லோரும் கேட்டீர்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று சொன்னான். யூதர்கள் அனைவரும், “இவன் குற்றவாளி. இவன் (இறக்க) மரிக்க வேண்டும்” என்றார்கள். பின் அங்கிருந்தவர்கள் இயேசுவின் முகத்தில் காறி உமிழ்ந்தார்கள். அவரைத் தங்கள் கையால் அடித்தார்கள். மற்றவர்கள் அவரது கன்னத்தில் அறைந்தார்கள். அவர்கள் இயேசுவைப் பார்த்து, “நீ தீர்க்கதரிசி என்பதைக் காட்டு. கிறிஸ்துவே, உன்னை அடித்தது யார் என்பதைக் கூறு” என்று கேட்டார்கள். அப்பொழுது, முற்றத்தில் அமர்ந்திருந்த பேதுருவிடம் ஒரு வேலைக்காரப்பெண் வந்து, “கலிலேயாக்காரனான அம்மனிதன் இயேசுவுடன் நீயும் இருந்தாயல்லவா?” எனக் கேட்டாள். ஆனால் பேதுரு, தான் ஒருபோதும் இயேசுவுடன் இருந்ததில்லை என அங்கிருந்தவர்களிடம் கூறினான். பேதுரு, “நீ என்ன பேசுகிறாய் என்றே எனக்குத் தெரியவில்லை” என்று கூறினான். பின்பு, முற்றத்தை விட்டுச்சென்ற பேதுருவை, வாயிற்கதவருகில் வேறொரு பெண் பார்த்தாள். அங்கிருந்தவர்களிடம் அப்பெண், “நசரேயனாகிய இயேசுவுடன் இருந்தது இவன்தான்” என்று சொன்னாள். மீண்டும் பேதுரு தான் ஒருபோதும் இயேசுவுடன் இருந்ததில்லை எனக் கூறினான், “தேவனின் மீது ஆணையாக இம்மனிதன் இயேசுவை எனக்குத் தெரியாது” என பேதுரு கூறினான். சிறிது நேரம் கழித்து அங்கு நின்றிருந்த சிலர் பேதுருவிடம் சென்று, “இயேசுவின் சீஷர்களில் நீயும் ஒருவன் என்பது எங்களுக்குத் தெரியும். நீ பேசுவதிலிருந்து எங்களுக்கு அது தெரிகிறது” என்று கூறினார்கள். பின் சாபமிடத் துவங்கிய பேதுரு, “தேவன் மேல் ஆணையாக எனக்கு இயேசுவைத் தெரியாது” என்றான். பேதுரு இதைக் கூறிய பின் சேவல் கூவியது. அப்போது, “சேவல் கூவுவதற்குமுன் என்னை உனக்குத் தெரியாது என நீ மூன்று முறை கூறுவாய்” என இயேசு கூறியதைப் பேதுரு ஞாபகப்படுத்திக் கொண்டான். பின்பு வெளியில் சென்ற பேதுரு மிகுந்த மனக் கசப்புடன் அழுதான்.
மத்தேயு 26:51-75 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அப்பொழுது இயேசுவோடிருந்தவர்களில் ஒருவன் கைநீட்டித் தன் பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான். அப்பொழுது, இயேசு அவனை நோக்கி: உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்துபோவார்கள். நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா? அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்கவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார். அந்த வேளையிலே இயேசு ஜனங்களை நோக்கி: கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்; நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே உட்கார்ந்து தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது, நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே. ஆகிலும் தீர்க்கதரிசிகள் எழுதியிருக்கிற வசனங்கள் நிறைவேறும்படி இவைகளெல்லாம் சம்பவிக்கிறது என்றார். அப்பொழுது, சீஷர்களெல்லாரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள். இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அங்கே வேதபாரகரும் மூப்பரும் கூடிவந்திருந்தார்கள். பேதுரு, தூரத்திலே அவருக்குப் பின்சென்று, பிரதான ஆசாரியனுடைய அரமனைவரைக்கும் வந்து, உள்ளே பிரவேசித்து, முடிவைப் பார்க்கும்படி சேவகரோடே உட்கார்ந்தான். பிரதான ஆசாரியரும் மூப்பரும் சங்கத்தார் யாவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி தேடினார்கள். ஒருவரும் அகப்படவில்லை; அநேகர் வந்து பொய்ச்சாட்சி சொல்லியும் அவர்கள் சாட்சி ஒவ்வவில்லை; கடைசியிலே இரண்டு பொய்ச்சாட்சிகள் வந்து: தேவனுடைய ஆலயத்தை இடித்துப்போடவும், மூன்று நாளைக்குள்ளே அதைக் கட்டவும் என்னாலே ஆகும் என்று இவன் சொன்னான் என்றார்கள். அப்பொழுது, பிரதான ஆசாரியன் எழுந்திருந்து, அவரை நோக்கி: இவர்கள் உனக்கு விரோதமாய்ச் சாட்சிசொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்றான். இயேசுவோ பேசாமலிருந்தார். அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான். அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; அன்றியும், மனுஷகுமாரன் சர்வவல்லவருடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அப்பொழுது பிரதான ஆசாரியன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: இவன் தேவதூஷணம் சொன்னான்; இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? இதோ, இவன் தூஷணத்தை இப்பொழுது கேட்டீர்களே. உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது என்று கேட்டான். அதற்கு அவர்கள்: மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றார்கள். அப்பொழுது, அவருடைய முகத்தில் துப்பி, அவரைக் குட்டினார்கள்; சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து: கிறிஸ்துவே, உம்மை அடித்தவன் யார்? அதை ஞானதிருஷ்டியினால் எங்களுக்குச் சொல்லும் என்றார்கள். அத்தருணத்தில் பேதுரு வெளியே வந்து அரமனை முற்றத்தில் உட்கார்ந்திருந்தான். அப்பொழுது, வேலைக்காரி ஒருத்தி அவனிடத்தில் வந்து: நீயும் கலிலேயனாகிய இயேசுவோடேகூட இருந்தாய் என்றாள். அதற்கு அவன்: நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது என்று எல்லாருக்கும் முன்பாக மறுதலித்தான். அவன், வாசல் மண்டபத்திற்குப்போனபொழுது வேறொருத்தி அவனைக் கண்டு: இவனும் நசரேயனாகிய இயேசுவோடேகூட இருந்தான் என்று அங்கே இருந்தவர்களுக்குச் சொன்னான். அவனோ: அந்த மனுஷனை நான் அறியேன் என்று ஆணையிட்டு, மறுபடியும் மறுதலித்தான். சற்றுநேரத்துக்குப்பின்பு அங்கே நின்றவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: மெய்யாகவே நீயும் அவர்களில் ஒருவன்; உன் பேச்சு உன்னை வெளிப்படுத்துகிறது என்றார்கள். அப்பொழுது அவன்: அந்த மனுஷனை அறியேன் என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம்பண்ணவும் தொடங்கினான். உடனே சேவல் கூவிற்று. அப்பொழுது பேதுரு: சேவல் கூவுகிறதற்குமுன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று இயேசு தன்னிடத்தில் சொன்ன வசனத்தை நினைத்துக்கொண்டு, வெளியே போய், மனங்கசந்து அழுதான்.