இது நடந்தபொழுது, இயேசுவுடன் இருந்த சீஷர்களில் ஒருவன் தன் அரிவாளை எடுத்தான். அச்சீஷன் தலைமை ஆசாரியனின் வேலைக்காரனை அரிவாளால் தாக்கி அவனது காதை வெட்டினான்.
இயேசு அச்சீஷனைப் பார்த்து, “அரிவாளை அதன் உறையில் போடு. அரிவாளை எடுப்பவன் அரிவாளாலே சாவான். நான் என் பிதாவைக் கேட்டால் அவர் எனக்கு பன்னிரண்டு தேவ தூதர் படைகளும் அதற்கு அதிகமாகவும் அனுப்புவார் என்பதை நிச்சயமாக நீ அறிவாய். ஆனால் இது இப்படியே வேதவாக்கியங்கள் கூறுகிறபடியே நடக்க வேண்டும்” என்றார்.
பின்னர் இயேசு தம்மைப் பிடிக்க வந்தவர்கள் அனைவரையும் நோக்கி, “ஒரு குற்றவாளியைப் போல என்னைப் பிடிக்க அரிவாள் தடிகளுடன் வந்திருக்கிறீர்கள். நான் ஒவ்வொரு நாளும் ஆலயத்தில் போதனை செய்தேன். ஆனால், என்னை அங்கே கைது செய்யவில்லை. தீர்க்கதரிசிகள் எழுதி வைத்துள்ளபடியே இவை அனைத்தும் நடந்துள்ளன” என்று கூறினார். பின்பு இயேசுவின் எல்லா சீஷர்களும் அவரைத் தனியே விட்டு ஓடிப்போனார்கள்.
இயேசுவைக் கைது செய்தவர்கள் அவரை தலைமை ஆசாரியனான காய்பா வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு வேதபாரகர்களும் மற்ற யூதத் தலைவர்களும் கூடியிருந்தார்கள். இயேசுவைத் தொடர்ந்து வந்த பேதுரு அவர் அருகில் செல்லவில்லை. பேதுரு இயேசுவைத் தொடர்ந்து தலைமை ஆசாரியனின் வீட்டு முற்றத்தை அடைந்தான். இயேசுவுக்கு என்ன நடக்கும் என்பதைக் காண பேதுரு உள்ளே நுழைந்து காவல்காரர்களுடன் அமர்ந்தான்.
தலைமை ஆசாரியனும் யூத ஆலோசனைச் சங்கமும் இயேசுவைக் கொல்ல அவரிடம் ஏதேனும் குற்றம் காண முயற்சித்தார்கள். இயேசு தவறு செய்தார் என சொல்லக்கூடிய மக்களைத் தேட முயற்சித்தார்கள். பலரும் வந்து இயேசுவைப் பற்றிப் பொய்யான செய்திகளைக் கூறினர். ஆனாலும் இயேசுவைக் கொல்லத்தக்க காரணம் எதையும் யூத ஆலோசனைச் சங்கம் காணவில்லை. பிறகு இருவர் வந்து, “நான் தேவனின் ஆலயத்தை இடித்து விட்டு மூன்றே நாட்களில் மீண்டும் அதைக் கட்டுவேன் என்று இவன் (இயேசு) கூறினான்” என்றார்கள்.
பின் தலைமை ஆசாரியன் எழுந்திருந்து இயேசுவைப் பார்த்து, “இவர்கள் உமக்கு எதிராக ஆதாரங்களைக் கொடுக்கிறார்கள், இவர்கள், உம்மேல் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு உம்மிடம் ஏதும் பதில் உள்ளதா? இவர்கள் கூறுவது உண்மையா?” என்று கேட்டார். ஆனால், இயேசு ஏதும் பதில் கூறவில்லை.
மீண்டும் தலைமை ஆசாரியன் இயேசுவிடம், “நான் உன்னை உறுதி மொழிக்கு உட்படுத்துகிறேன். ஜீவனுள்ள தேவனின் வல்லமையின் பெயரால் ஆணையிடுகிறேன். உண்மையைச் சொல் நீயா தேவகுமாரனாகிய கிறிஸ்து?” என்று கேட்டான்.
அதற்கு இயேசு, “ஆம் நான் தான், ஆனால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். எதிர்காலத்தில் தேவனுடைய வலது பக்கத்தில் மனிதகுமாரன் அமர்ந்திருப்பதைக் காண்பீர்கள். மேலும் வானத்து மேகங்களின் மீது மனித குமாரன் வருவதைக் காண்பீர்கள்” என்று விடையளித்தார்.
இதைக்கேட்ட தலைமை ஆசாரியன் மிகக் கோபமடைந்தான். தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, “இவன் தேவனுக்கு எதிரானவைகளைப் பேசுகிறான். வேறு சாட்சியம் எதுவும் தேவையில்லை. தேவனுக்கு எதிராக இவன் கூறியவற்றை நீங்கள் எல்லோரும் கேட்டீர்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று சொன்னான்.
யூதர்கள் அனைவரும், “இவன் குற்றவாளி. இவன் (இறக்க) மரிக்க வேண்டும்” என்றார்கள்.
பின் அங்கிருந்தவர்கள் இயேசுவின் முகத்தில் காறி உமிழ்ந்தார்கள். அவரைத் தங்கள் கையால் அடித்தார்கள். மற்றவர்கள் அவரது கன்னத்தில் அறைந்தார்கள். அவர்கள் இயேசுவைப் பார்த்து, “நீ தீர்க்கதரிசி என்பதைக் காட்டு. கிறிஸ்துவே, உன்னை அடித்தது யார் என்பதைக் கூறு” என்று கேட்டார்கள்.
அப்பொழுது, முற்றத்தில் அமர்ந்திருந்த பேதுருவிடம் ஒரு வேலைக்காரப்பெண் வந்து, “கலிலேயாக்காரனான அம்மனிதன் இயேசுவுடன் நீயும் இருந்தாயல்லவா?” எனக் கேட்டாள்.
ஆனால் பேதுரு, தான் ஒருபோதும் இயேசுவுடன் இருந்ததில்லை என அங்கிருந்தவர்களிடம் கூறினான். பேதுரு, “நீ என்ன பேசுகிறாய் என்றே எனக்குத் தெரியவில்லை” என்று கூறினான்.
பின்பு, முற்றத்தை விட்டுச்சென்ற பேதுருவை, வாயிற்கதவருகில் வேறொரு பெண் பார்த்தாள். அங்கிருந்தவர்களிடம் அப்பெண், “நசரேயனாகிய இயேசுவுடன் இருந்தது இவன்தான்” என்று சொன்னாள்.
மீண்டும் பேதுரு தான் ஒருபோதும் இயேசுவுடன் இருந்ததில்லை எனக் கூறினான், “தேவனின் மீது ஆணையாக இம்மனிதன் இயேசுவை எனக்குத் தெரியாது” என பேதுரு கூறினான்.
சிறிது நேரம் கழித்து அங்கு நின்றிருந்த சிலர் பேதுருவிடம் சென்று, “இயேசுவின் சீஷர்களில் நீயும் ஒருவன் என்பது எங்களுக்குத் தெரியும். நீ பேசுவதிலிருந்து எங்களுக்கு அது தெரிகிறது” என்று கூறினார்கள்.
பின் சாபமிடத் துவங்கிய பேதுரு, “தேவன் மேல் ஆணையாக எனக்கு இயேசுவைத் தெரியாது” என்றான். பேதுரு இதைக் கூறிய பின் சேவல் கூவியது. அப்போது, “சேவல் கூவுவதற்குமுன் என்னை உனக்குத் தெரியாது என நீ மூன்று முறை கூறுவாய்” என இயேசு கூறியதைப் பேதுரு ஞாபகப்படுத்திக் கொண்டான். பின்பு வெளியில் சென்ற பேதுரு மிகுந்த மனக் கசப்புடன் அழுதான்.