மத்தேயு 24:29-51

மத்தேயு 24:29-51 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“அந்த நாட்களின் பெருந்துன்பம் முடிந்த உடனேயே, “ ‘சூரியன் இருள் அடையும், சந்திரன் தனது வெளிச்சத்தைக் கொடாதிருக்கும்; வானத்தின் நட்சத்திரங்கள் விழும், வானத்தின் அதிகாரங்கள் அசைக்கப்படும்.’ “அவ்வேளையில், மானிடமகனாகிய நான் திரும்பி வருவதன் அறிகுறி ஆகாயத்தில் தோன்றும். பூமியிலுள்ள ஜனங்களெல்லாம் புலம்புவார்கள். மானிடமகனாகிய நான் அதிகாரத்துடனும், மிக்க மகிமையுடனும், ஆகாயத்து மேகங்கள்மேல் வருவதை, அவர்கள் காண்பார்கள். நான் என் தூதர்களை சத்தமான எக்காள அழைப்புடன் அனுப்பி, என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை, வானத்தின் ஒரு முனையிலிருந்து, மறுமுனை வரைக்குமுள்ள நான்கு திசைகளிலுமிருந்து சேர்த்துக்கொள்வேன். “இப்பொழுது அத்திமரத்திலிருந்து இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்: அதில் சிறு கிளைகள் தோன்றி இலைகள் வரும்போது, கோடைகாலம் நெருங்குகிறது என்று அறிகிறீர்கள். அவ்வாறே இவற்றையெல்லாம் நீங்கள் காணும்போது, முடிவுகாலம் நெருங்கி வாசலருகே வந்துவிட்டது என்று அறிந்துகொள்ளுங்கள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இந்தக் காரியங்களெல்லாம் நடந்துமுடியும் வரைக்கும், நிச்சயமாகவே இந்தத் தலைமுறை ஒழிந்துபோகாது. வானமும் பூமியும் ஒழிந்துபோகும், ஆனால் என் வார்த்தைகளோ ஒருபோதும் ஒழிந்துபோகாது. “அந்த நாளையோ, அந்த நேரத்தையோ ஒருவனும் அறியமாட்டான். ஏன், பரலோகத்திலிருக்கிற தூதர்களுக்கும் மானிடமகனாகிய எனக்கும் தெரியாது; ஆனால் பிதா மட்டுமே அதை அறிவார். நோவாவின் நாட்களில் இருந்ததுபோலவே, மானிடமகனாகிய எனது வருகையின் நாட்களிலும் இருக்கும். ஏனெனில் பெருவெள்ளத்திற்கு முன்பு இருந்த நாட்களில், நோவா பேழைக்குள் போகும்வரைக்கும் மக்கள் சாப்பிட்டுக்கொண்டும் குடித்துக்கொண்டும், திருமணம் செய்துகொண்டும், திருமணம் செய்துகொடுத்துக்கொண்டும் இருந்தார்கள். பெருவெள்ளம் வந்து அவர்கள் எல்லோரையும் அடித்துக்கொண்டு போகும்வரைக்கும், என்ன நடக்கும் என்பதைப்பற்றி அவர்கள் ஒன்றுமே அறியாதிருந்தார்கள். இதைப்போலவே, மானிடமகனாகிய எனது வருகையின் போதும் இருக்கும். இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் எடுத்துக்கொள்ளப்படுவான், மற்றவன் விட்டுவிடப்படுவான். இரண்டு பெண்கள் திரிகைக் கல்லில் அரைத்துக் கொண்டிருப்பார்கள்; ஒருத்தி எடுத்துக்கொள்ளப்படுவாள், மற்றவள் விட்டுவிடப்படுவாள். “ஆகையால் விழிப்பாயிருங்கள், ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என்று உங்களுக்குத் தெரியாதே. நீங்கள் இதை விளங்கிக்கொள்ளுங்கள்: திருடன் இரவில் எந்த நேரம் வருவான் என்று வீட்டின் சொந்தக்காரன் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து தன் வீட்டைத் திருடன் உடைத்து நுழையாதபடி பார்த்துக்கொள்வானே. எனவே நீங்களும் ஆயத்தமாயிருக்க வேண்டும். ஏனெனில், மானிடமகனாகிய நான் நீங்கள் எதிர்பாராத நேரத்திலே வருவேன். “அப்படியானால் உண்மையும் ஞானமும் உள்ள வேலைக்காரன் யார்? அவனே தனது வீட்டில் உள்ள வேலைக்காரருக்கு ஏற்றவேளையில் உணவைக் கொடுக்கும்படி, எஜமான் பொறுப்பாக வைத்த வேலைக்காரன். தனது எஜமான் திரும்பி வரும்போது, அவ்வாறே செய்கிறவனாகக் காணப்படுகிற வேலைக்காரன் ஆசீர்வதிக்கப்பட்டவன். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், அவன் தனது உடைமைகள் எல்லாவற்றிற்கும், அவனையே பொறுப்பாக வைப்பான். ஆனால் அந்த வேலைக்காரன் கொடியவனாய் இருந்து, ‘எனது எஜமான் நீண்ட காலமாய் தொலைவில் இருக்கிறார்’ என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, தனது உடன்வேலைக்காரர்களை அடிக்கவும், குடிகாரருடன் சேர்ந்து சாப்பிட்டு, குடித்து, வெறிகொள்ளவும் தொடங்கினால், அந்த வேலைக்காரனின் எஜமான் அவன் எதிர்பாராத ஒரு நாளிலும், அவன் அறிந்திராத வேளையிலும் வருவான். எஜமான் வந்து அவனைப் பயங்கரமான தண்டனைக்குள்ளாக்கி, வேஷக்காரருக்குரிய இடத்தில் தள்ளிவிடுவான்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் இருக்கும்.”

மத்தேயு 24:29-51 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அந்தநாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் இருளடையும், சந்திரன் ஒளியைக் கொடுக்காமல் இருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் வல்லமைகள் அசைக்கப்படும். அப்பொழுது மனிதகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனிதகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள எல்லாக் கோத்திரத்தார்களும் கண்டு புலம்புவார்கள். வலுவாகத் தொனிக்கும் எக்காளசத்தத்தோடு அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒருமுனைமுதல் மறுமுனைவரைக்கும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்கள். அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் நெருங்கிவிட்டது என்று அறிவீர்கள். அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் பார்க்கும்போது அவர் நெருக்கமாக வாசலின் அருகே வந்திருக்கிறார் என்று தெரிந்துகொள்ளுங்கள். இவைகளெல்லாம் சம்பவிக்கும் முன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாது என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். வானமும் பூமியும் ஒழிந்துபோகும், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை. அந்த நாளையும் அந்த நேரத்தையும் என் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள். நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனிதகுமாரன் வரும்காலத்திலும் நடக்கும். எப்படியென்றால், பெருவெள்ளத்திற்கு முன்னான காலத்திலே நோவா கப்பலுக்குள் பிரவேசிக்கும் நாள்வரை, மக்கள் புசித்தும் குடித்தும், பெண் எடுத்தும் பெண் கொடுத்தும், பெருவெள்ளம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகும்வரை உணராமல் இருந்தார்கள்; அப்படியே மனிதகுமாரன் வரும்காலத்திலும் நடக்கும். அப்பொழுது, இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான். இரண்டு பெண்கள் மாவு அரைத்துக்கொண்டிருப்பார்கள்; ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள். உங்களுடைய ஆண்டவர் எந்த நேரத்திலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள். திருடன் இரவிலே எந்த நேரத்திலே வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கொள்ளையடிக்கவிடமாட்டான் என்று அறிவீர்கள். நீங்கள் நினைக்காத நேரத்திலே மனிதகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாக இருங்கள். ஏற்ற நேரத்திலே தன் வேலைக்காரர்களுக்கு ஆகாரங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்மையும் விவேகமுமுள்ள வேலைக்காரன் யார்? எஜமான் வரும்போது அப்படிச் செய்கிறவனாகக் காணப்படுகிற வேலைக்காரனே பாக்கியவான். தன் ஆஸ்திகள் எல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அந்த வேலைக்காரனோ பொல்லாதவனாக இருந்து: என் எஜமான் வர நாளாகும் என்று தன் உள்ளத்திலே சொல்லிக்கொண்டு, தன் உடன்வேலைக்காரர்களை அடிக்கவும், குடிகாரர்களோடு புசிக்கவும் குடிக்கவும் தொடங்கினால், அந்த வேலைக்காரன் நினைக்காத நாளிலும், அறியாத நேரத்திலும், அவனுடைய எஜமான் வந்து, அவனைக் கடினமாகத் தண்டித்து, மாயக்காரர்களோடு அவனுக்குப் பங்கை நியமிப்பான்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.

மத்தேயு 24:29-51 பரிசுத்த பைபிள் (TAERV)

“அந்த நாட்களின் துன்பம் தீர்ந்தவுடன் கீழ்க்கண்டது நடக்கும்: “‘சூரியன் இருளாக மாறும், சந்திரன் ஒளியைக் கொடுக்காது. வானிலிருந்து நட்சத்திரங்கள் உதிரும், வானில் அனைத்தும் மாறும்.’ “அப்பொழுது மனித குமாரனின் வருகையை அறிவிக்கும் அடையாளம் வானில் தெரியும். உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் கதறுவார்கள், வானத்து மேகங்களின் மீது மனித குமாரன் வருவதைக் காண்பார்கள். மகத்தான வல்லமையுடனும் மிகுந்த மகிமையுடனும் மனிதகுமாரன் வருவார். அவர், ஒரு எக்காளத்தைச் சத்தமாய் ஊதி அதன் மூலம் தம் தூதர்களை எல்லாத் திசைகளுக்கும் அனுப்புவார். உலகின் எல்லா பகுதியிலிருந்தும் தேவதூதர்கள் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை ஒன்று சேர்ப்பார்கள். “அத்திமரம் நமக்கு ஒரு பாடத்தைப் போதிக்கிறது. அத்தி மரத்தின் கிளைகள் பசுமையடைந்து இலைகள் துளிர்விட்டு வளரும்பொழுது கோடை காலம் அருகில் உள்ளது என அறிகிறீர்கள். “அதே போலத்தான் நான் நடக்கப் போவதாகக் கூறிய செயல்களைப் பொறுத்தவரையிலும், அவை நடக்கும்பொழுது காலம் நெருங்கிவிட்டதை அறியலாம். நான் உண்மையைச் சொல்கிறேன், இன்றைய மனிதர்கள் வாழும் காலத்திலேயே அவை அனைத்தும் நடக்கும். உலகம் முழுவதும் வானமும் பூமியும் உள்ளாக அழியும். ஆனால் எனது வார்த்தைகள் அழியாது. “அந்த நேரம் அல்லது நாள் எப்பொழுது வரும் என்பது யாருக்கும் தெரியாது. பரலோகத்திலிருக்கும் தேவ குமாரனும் தேவதூதர்களும் கூட அதை அறியமாட்டார்கள். பிதாவானவர் மட்டுமே அறிவார். “நோவாவின் காலத்தில் நடந்ததைப் போலவே, மனித குமாரன் வரும்போதும் நடக்கும். நோவாவின் காலத்தில் வெள்ளம் வருமுன்னர், மக்கள் குடித்துக்கொண்டும் சாப்பிட்டுக்கொண்டுமிருந்தார்கள். மக்கள் தம் பிள்ளைகளின் திருமணங்களை நடத்திக்கொண்டிருந்தார்கள். நோவா கப்பலில் ஏறுகிறவரைக்கும் மக்கள் அவற்றைச் செய்து கொண்டிருந்தார்கள். நடந்துகொண்டிருந்ததை அம்மக்களில் யாரும் அறிந்திருக்கவில்லை. பின்னர், வெள்ளம் வந்து அவர்கள் அனைவரையும் அழித்துப்போட்டது. “அதைப் போலவே மனிதகுமாரன் வரும்பொழுதும் நடக்கும். இரண்டு ஆண்கள் வயலில் வேலை செய்துகொண்டிருக்க ஒருவன் விடப்பட்டு மற்றவன் எடுத்துச்செல்லப்படுவான். எந்திரத்தில் மாவு அரைத்துக் கொண்டிருக்கும் பெண்கள் இருவரில், ஒருத்தி விடப்பட்டு மற்றவள் கொண்டுசெல்லப்படுவாள். “ஆகவே, எப்பொழுதும் ஆயத்தமாக இருங்கள். உங்கள் கர்த்தர் வருகிற நேரம் உங்களுக்குத் தெரியாது. இதை, ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், திருடன் வரும் நேரத்தை வீட்டுக்காரன் அறிந்திருந்தால், திருடனுக்காக வீட்டுக்காரன் காத்திருப்பான். மேலும் திருடன் வீட்டில் நுழையாதபடி எச்சரிக்கையுடன் இருப்பான். இதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, நீங்களும் ஆயத்தமாக இருக்கவேண்டும். நீங்கள் எதிர்பார்க்காதபொழுது மனித குமாரன் வருவார். “புத்தியுள்ள நம்பிக்கைக்குரிய வேலையாள் யார்? தன் மற்ற வேலைக்காரர்களுக்குத் தக்க நேரத்தில் உணவளிக்கும் வேலைக்காரனை எஜமானன் நம்புகிறான். எஜமானனின் நம்பிக்கைக்குரிய அவ்வேலைக்காரன் யார்? அவ்வேலைக்காரன் எஜமானன் வரும் நேரத்தில் தன் வேலையை சரியாகச் செய்கிறதைக் கண்டால் அவ்வேலைக்காரன் மகிழ்ச்சியடைகிறான். நான் உண்மையைச் சொல்கிறேன். தனக்குரிய எல்லாவற்றையும் மேற்பார்வை செய்யும் பொறுப்பையும் அந்த வேலைக்காரன் வசம் ஒப்படைப்பான். “ஆனால், அவ்வேலைக்காரன் தீய எண்ணம் கொண்டு, தன் எஜமானன் விரைவில் வரமாட்டான் என எண்ணினால் என்ன ஆகும்? உடன் வேலைக்காரர்களையெல்லாம் அடித்து உதைத்து எல்லா உணவையும் உண்டுவிட்டு தன்னைப் போன்றவர்களுடன் உண்டு குடிக்க முனைவான். அவன் எதிர்ப்பாராத நேரத்தில் எஜமானன் வருவான். பின்னர் அவ்வேலைக்காரனைத் தண்டிப்பான். மாயமானவர்களின் இடத்திற்கு அவனை அனுப்பி வைப்பான். அங்கே உள்ளவர்கள் கூக்குரலிட்டுக் கொண்டு வேதனையினால் பற்களைக் கடித்துக் கொண்டிருப்பார்கள்.

மத்தேயு 24:29-51 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும். அப்பொழுது மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். வலுவாய்த் தொனிக்கும் எக்காளசத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்கள். அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள். அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள். இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை. அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள். நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும். அப்பொழுது, இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான். இரண்டு ஸ்திரீகள் எந்திரம் அரைத்துக்கொண்டிருப்பார்கள்; ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள். உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள். திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டானென்று அறிவீர்கள். நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள். ஏற்றவேளையிலே தன் வேலைக்காரருக்குப் போஜனங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் யாவன்? எஜமான் வரும்போது அப்படிச் செய்கிறவனாகக் காணப்படுகிற ஊழியக்காரனே பாக்கியவான். தன் ஆஸ்திகள் எல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பானென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அந்த ஊழியக்காரனோ பொல்லாதவனாயிருந்து: என் ஆண்டவன் வர நாள் செல்லும் என்று தன் உள்ளத்திலே சொல்லிக்கொண்டு, தன் உடன்வேலைக்காரரை அடிக்கத்தொடங்கி, வெறியரோடே புசிக்கவும் குடிக்கவும் தலைப்பட்டால், அந்த ஊழியக்காரன் நினையாத நாளிலும், அறியாத நாழிகையிலும், அவனுடைய எஜமான் வந்து, அவனைக் கடினமாய்த் தண்டித்து, மாயக்காரரோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.