அந்தநாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் இருளடையும், சந்திரன் ஒளியைக் கொடுக்காமல் இருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் வல்லமைகள் அசைக்கப்படும். அப்பொழுது மனிதகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனிதகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள எல்லாக் கோத்திரத்தார்களும் கண்டு புலம்புவார்கள். வலுவாகத் தொனிக்கும் எக்காளசத்தத்தோடு அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒருமுனைமுதல் மறுமுனைவரைக்கும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்கள். அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் நெருங்கிவிட்டது என்று அறிவீர்கள். அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் பார்க்கும்போது அவர் நெருக்கமாக வாசலின் அருகே வந்திருக்கிறார் என்று தெரிந்துகொள்ளுங்கள். இவைகளெல்லாம் சம்பவிக்கும் முன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாது என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். வானமும் பூமியும் ஒழிந்துபோகும், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.
அந்த நாளையும் அந்த நேரத்தையும் என் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள். நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனிதகுமாரன் வரும்காலத்திலும் நடக்கும். எப்படியென்றால், பெருவெள்ளத்திற்கு முன்னான காலத்திலே நோவா கப்பலுக்குள் பிரவேசிக்கும் நாள்வரை, மக்கள் புசித்தும் குடித்தும், பெண் எடுத்தும் பெண் கொடுத்தும், பெருவெள்ளம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகும்வரை உணராமல் இருந்தார்கள்; அப்படியே மனிதகுமாரன் வரும்காலத்திலும் நடக்கும். அப்பொழுது, இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான். இரண்டு பெண்கள் மாவு அரைத்துக்கொண்டிருப்பார்கள்; ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள். உங்களுடைய ஆண்டவர் எந்த நேரத்திலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள். திருடன் இரவிலே எந்த நேரத்திலே வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கொள்ளையடிக்கவிடமாட்டான் என்று அறிவீர்கள். நீங்கள் நினைக்காத நேரத்திலே மனிதகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாக இருங்கள். ஏற்ற நேரத்திலே தன் வேலைக்காரர்களுக்கு ஆகாரங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்மையும் விவேகமுமுள்ள வேலைக்காரன் யார்? எஜமான் வரும்போது அப்படிச் செய்கிறவனாகக் காணப்படுகிற வேலைக்காரனே பாக்கியவான். தன் ஆஸ்திகள் எல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அந்த வேலைக்காரனோ பொல்லாதவனாக இருந்து: என் எஜமான் வர நாளாகும் என்று தன் உள்ளத்திலே சொல்லிக்கொண்டு, தன் உடன்வேலைக்காரர்களை அடிக்கவும், குடிகாரர்களோடு புசிக்கவும் குடிக்கவும் தொடங்கினால், அந்த வேலைக்காரன் நினைக்காத நாளிலும், அறியாத நேரத்திலும், அவனுடைய எஜமான் வந்து, அவனைக் கடினமாகத் தண்டித்து, மாயக்காரர்களோடு அவனுக்குப் பங்கை நியமிப்பான்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.