மத்தேயு 24:15-35

மத்தேயு 24:15-35 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“எனவே இறைவாக்கினன் தானியேல் மூலம் சொல்லப்பட்ட, ‘பாழாக்குகிற அருவருப்பு’ ஆலயப் பரிசுத்த இடத்தில் நிற்கிறதை நீங்கள் காணும்பொழுது, வாசிக்கிற நீங்கள் அதை விளங்கிக்கொள்ளுங்கள். அப்பொழுது யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும். வீட்டின் கூரைமேல் இருக்கிற எவனும், வீட்டிலிருந்து எதையாவது எடுக்கும்படி உள்ளே போகாதிருக்கட்டும். வயலில் இருக்கும் யாரும், தனது மேலுடையை எடுத்துக்கொள்ளும்படி திரும்பிப் போகாதிருக்கட்டும். அந்நாட்களில் கர்ப்பவதிகளின் நிலைமையும், பால் கொடுக்கும் தாய்மாரின் நிலைமையும் எவ்வளவு பயங்கரமாயிருக்கும்! நீங்கள் ஓடிப்போவது குளிர்க்காலத்தில் அல்லது ஓய்வுநாளில் நேரிடாதபடி ஜெபம் பண்ணுங்கள். ஏனெனில், உலகத் தொடக்கத்திலிருந்து இன்றுவரை ஏற்பட்டிருக்காத பெரும் துன்பம் அக்காலத்தில் ஏற்படும். அதற்குப் பின்பு ஒருபோதும் ஏற்படவும் மாட்டாது. “அந்த நாட்கள் குறைக்கப்படாவிட்டால், ஒருவரும் தப்பமாட்டார்கள். ஆனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் நிமித்தம், அந்த நாட்கள் குறைக்கப்படும். அக்காலத்தில் யாராவது உங்களிடம் வந்து, ‘இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார்!’ அல்லது, ‘அதோ, அங்கே இருக்கிறார்!’ என்று சொன்னால், அதை நம்பவேண்டாம். ஏனெனில் பொய் கிறிஸ்துக்களும் பொய் தீர்க்கதரிசிகளும் தோன்றுவார்கள். முடியுமானால், இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் ஏமாற்றும்படி அவர்கள் பெரிதான அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். பாருங்கள், அக்காலம் வருமுன்பே, நான் உங்களுக்குச் சொல்லி எச்சரிக்கிறேன். “ஆகவே யாராவது உங்களிடம், ‘அதோ அங்கே அவர், வெளியே பாலைவனத்தில் இருக்கிறார்’ என்று சொன்னால், அங்கே போகாதிருங்கள்; ‘இதோ இங்கே அவர், உள்ளறையில் இருக்கிறார்’ என்று சொன்னால், அதையும் நம்பாதிருங்கள். ஏனெனில் கிழக்கிலிருந்து வரும் மின்னல் மேற்கிலும் தெரிவது போலவே, மானிடமகனாகிய என்னுடைய வருகையும் இருக்கும். எங்கேயாவது பிணம் கிடந்தால், அங்கே கழுகுகள் ஒன்றுகூடும். “அந்த நாட்களின் பெருந்துன்பம் முடிந்த உடனேயே, “ ‘சூரியன் இருள் அடையும், சந்திரன் தனது வெளிச்சத்தைக் கொடாதிருக்கும்; வானத்தின் நட்சத்திரங்கள் விழும், வானத்தின் அதிகாரங்கள் அசைக்கப்படும்.’ “அவ்வேளையில், மானிடமகனாகிய நான் திரும்பி வருவதன் அறிகுறி ஆகாயத்தில் தோன்றும். பூமியிலுள்ள ஜனங்களெல்லாம் புலம்புவார்கள். மானிடமகனாகிய நான் அதிகாரத்துடனும், மிக்க மகிமையுடனும், ஆகாயத்து மேகங்கள்மேல் வருவதை, அவர்கள் காண்பார்கள். நான் என் தூதர்களை சத்தமான எக்காள அழைப்புடன் அனுப்பி, என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை, வானத்தின் ஒரு முனையிலிருந்து, மறுமுனை வரைக்குமுள்ள நான்கு திசைகளிலுமிருந்து சேர்த்துக்கொள்வேன். “இப்பொழுது அத்திமரத்திலிருந்து இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்: அதில் சிறு கிளைகள் தோன்றி இலைகள் வரும்போது, கோடைகாலம் நெருங்குகிறது என்று அறிகிறீர்கள். அவ்வாறே இவற்றையெல்லாம் நீங்கள் காணும்போது, முடிவுகாலம் நெருங்கி வாசலருகே வந்துவிட்டது என்று அறிந்துகொள்ளுங்கள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இந்தக் காரியங்களெல்லாம் நடந்துமுடியும் வரைக்கும், நிச்சயமாகவே இந்தத் தலைமுறை ஒழிந்துபோகாது. வானமும் பூமியும் ஒழிந்துபோகும், ஆனால் என் வார்த்தைகளோ ஒருபோதும் ஒழிந்துபோகாது.

மத்தேயு 24:15-35 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மேலும், பாழாக்குகிற அருவருப்பைக்குறித்து தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே, வாசிக்கிறவன் சிந்திக்கவேண்டும். நீங்கள் அதைப் பரிசுத்த இடத்தில் நிற்பதைப் பார்க்கும்போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவேண்டும். வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டிலே எதையாவது எடுப்பதற்கு இறங்காமலிருக்கவேண்டும். வயலில் இருக்கிறவன் தன் ஆடைகளை எடுப்பதற்குத் திரும்பாமலிருக்கவேண்டும். அந்த நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ. நீங்கள் ஓடிப்போவது மழைக் காலத்திலாவது, ஓய்வுநாளிலாவது, நடக்காதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள். ஏனென்றால், உலகம் உண்டானதுமுதல் இதுவரைக்கும் நடக்காததும், இனிமேலும் நடைபெறாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும். அந்த நாட்கள் குறைக்கப்படாமலிருந்தால், ஒருவன்கூட தப்பிப்போவதில்லை; தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தம் அந்த நாட்கள் குறைக்கப்படும். அப்பொழுது, இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கே இருக்கிறார் என்று எவனாவது சொன்னால் நம்பாதீர்கள். ஏனென்றால், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். ஆகவே: அதோ, வனாந்திரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால், புறப்படாமலிருங்கள்; இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதீர்கள். மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனிதகுமாரனுடைய வருகையும் இருக்கும். பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும். அந்தநாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் இருளடையும், சந்திரன் ஒளியைக் கொடுக்காமல் இருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் வல்லமைகள் அசைக்கப்படும். அப்பொழுது மனிதகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனிதகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள எல்லாக் கோத்திரத்தார்களும் கண்டு புலம்புவார்கள். வலுவாகத் தொனிக்கும் எக்காளசத்தத்தோடு அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒருமுனைமுதல் மறுமுனைவரைக்கும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்கள். அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் நெருங்கிவிட்டது என்று அறிவீர்கள். அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் பார்க்கும்போது அவர் நெருக்கமாக வாசலின் அருகே வந்திருக்கிறார் என்று தெரிந்துகொள்ளுங்கள். இவைகளெல்லாம் சம்பவிக்கும் முன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாது என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். வானமும் பூமியும் ஒழிந்துபோகும், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.

மத்தேயு 24:15-35 பரிசுத்த பைபிள் (TAERV)

“அழிவை ஏற்படுத்துகிற கொடிய காரியத்தைப்பற்றி தீர்க்கதரிசி தானியேல் கூறியுள்ளார். ‘இக்கொடியதை தேவாலயத்தில் நின்றிருக்க நீங்கள் காண்பீர்கள்.’ (இதைப் படிக்கிற நீங்கள் அது என்னவென்பதை அறிந்துகொள்ளவேண்டும்.) அந்நேரத்தில், யூதேயாவில் வசிப்பவர்கள் மலைகளுக்கு ஓடிவிட வேண்டும். கொஞ்சம் கூட நேரத்தை வீணாக்காமல் ஓடிவிட வேண்டும். வீட்டின் கூரையின் மீதிருப்பவன், வீட்டிலுள்ள பொருட்களை வெளியே எடுப்பதற்காக கீழே இறங்கக் கூடாது. வயலில் வேலை செய்து கொண்டிருக்கிறவன், தன் மேலாடையை எடுக்க திரும்பி வீட்டிற்குச் செல்லக் கூடாது. “கர்ப்பிணிகளுக்கும் கைக் குழந்தையுடைய பெண்களுக்கும் மோசமான காலம் அது. இச்செயல்கள் நடந்து நீங்கள் தப்பிச்செல்லும் நாள் ஓய்வு நாளாகவோ குளிர் காலமாகவோ இருக்காதிருக்கப் பிரார்த்தியுங்கள். ஏனென்றால், அக்காலத்தில் துன்பங்கள் அதிகரிக்கும். உலகம் தோன்றிய நாள் முதலாக இல்லாத அளவிற்கு அப்பொழுது துன்பங்கள் ஏற்படும். அதைவிட மோசமானது பிற்காலத்தில் ஏற்படாது. “அக்கொடிய காலத்தை குறுகியதாக்க தேவன் முடிவு செய்துள்ளார். அவ்வாறு குறுகியதாகாவிடில், பின் ஒருவரும் உயிர் பிழைத்திருக்க முடியாது. ஆனால், தான் தேர்ந்தெடுத்தவர்களுக்கு உதவ தேவன் அக்கொடிய காலத்தை குறுகியதாக்குவார். “அப்போது ஒரு சிலர் உங்களிடம், ‘அங்கே பார், கிறிஸ்து!’ என்று சொல்லக் கூடும். அல்லது வேறு சிலர், ‘இயேசு இங்கே இருக்கிறார்’ என்று சொல்லக் கூடும். ஆனால் அவர்களை நம்பாதீர்கள். கள்ளக் கிறிஸ்துகளும் கள்ளத் தீர்க்கத்தரிசிகளும் தோன்றி மகத்தான செயல்களையும் அதிசயங்களையும் செய்வார்கள். அவற்றை அவர்கள் தேவன் தேர்ந்தெடுத்தவர்களிடம் செய்து காட்டுவார்கள். முடிந்தால் தேவனுடைய மக்களை ஏமாற்ற அவர்கள் முயற்சிப்பார்கள். ஆனால், அவை நடப்பதற்கு முன்பே நான் உங்களை எச்சரிக்கிறேன். “‘கிறிஸ்து வனாந்தரத்தில் இருக்கிறார்,’ என்று யாரேனும் ஒருவன் உங்களிடம் சொல்லக்கூடும். அதை நம்பி, நீங்கள் வனாந்திரத்திற்கு கிறிஸ்துவைத் தேடிச் செல்லாதீர்கள். வேறொருவன், ‘கிறிஸ்து அந்த அறையில் இருக்கிறார்’ என்று சொல்லக் கூடும். ஆனால் அதை நம்பாதீர்கள். மனித குமாரன் தோன்றும் பொழுது யாவரும் அவரைக் காண இயலும். வானில் தோன்றும் மின்னலைப் போல எல்லோரும் அதைப் பார்க்க இயலும். கழுகுகள் வட்டமிடும் இடத்தில் பிணம் இருப்பதை நீங்கள் அறிவது போல எனது வருகை நன்கு புலப்படும். “அந்த நாட்களின் துன்பம் தீர்ந்தவுடன் கீழ்க்கண்டது நடக்கும்: “‘சூரியன் இருளாக மாறும், சந்திரன் ஒளியைக் கொடுக்காது. வானிலிருந்து நட்சத்திரங்கள் உதிரும், வானில் அனைத்தும் மாறும்.’ “அப்பொழுது மனித குமாரனின் வருகையை அறிவிக்கும் அடையாளம் வானில் தெரியும். உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் கதறுவார்கள், வானத்து மேகங்களின் மீது மனித குமாரன் வருவதைக் காண்பார்கள். மகத்தான வல்லமையுடனும் மிகுந்த மகிமையுடனும் மனிதகுமாரன் வருவார். அவர், ஒரு எக்காளத்தைச் சத்தமாய் ஊதி அதன் மூலம் தம் தூதர்களை எல்லாத் திசைகளுக்கும் அனுப்புவார். உலகின் எல்லா பகுதியிலிருந்தும் தேவதூதர்கள் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை ஒன்று சேர்ப்பார்கள். “அத்திமரம் நமக்கு ஒரு பாடத்தைப் போதிக்கிறது. அத்தி மரத்தின் கிளைகள் பசுமையடைந்து இலைகள் துளிர்விட்டு வளரும்பொழுது கோடை காலம் அருகில் உள்ளது என அறிகிறீர்கள். “அதே போலத்தான் நான் நடக்கப் போவதாகக் கூறிய செயல்களைப் பொறுத்தவரையிலும், அவை நடக்கும்பொழுது காலம் நெருங்கிவிட்டதை அறியலாம். நான் உண்மையைச் சொல்கிறேன், இன்றைய மனிதர்கள் வாழும் காலத்திலேயே அவை அனைத்தும் நடக்கும். உலகம் முழுவதும் வானமும் பூமியும் உள்ளாக அழியும். ஆனால் எனது வார்த்தைகள் அழியாது.

மத்தேயு 24:15-35 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

மேலும், பாழாக்குகிற அருவருப்பைக்குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே, வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன். நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள். வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டிலே எதையாகிலும் எடுப்பதற்கு இறங்காதிருக்கக்கடவன். வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரங்களை எடுப்பதற்குத் திரும்பாதிருக்கக்கடவன். அந்நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ. நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலாவது, ஓய்வுநாளிலாவது, சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள். ஏனெனில், உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும். அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும். அப்பொழுது, இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள். ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். ஆகையால்: அதோ, வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால், புறப்படாதிருங்கள்; இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள். மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும். பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும். அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும். அப்பொழுது மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். வலுவாய்த் தொனிக்கும் எக்காளசத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்கள். அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள். அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள். இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.