“எனவே இறைவாக்கினன் தானியேல் மூலம் சொல்லப்பட்ட, ‘பாழாக்குகிற அருவருப்பு’ ஆலயப் பரிசுத்த இடத்தில் நிற்கிறதை நீங்கள் காணும்பொழுது, வாசிக்கிற நீங்கள் அதை விளங்கிக்கொள்ளுங்கள். அப்பொழுது யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும். வீட்டின் கூரைமேல் இருக்கிற எவனும், வீட்டிலிருந்து எதையாவது எடுக்கும்படி உள்ளே போகாதிருக்கட்டும். வயலில் இருக்கும் யாரும், தனது மேலுடையை எடுத்துக்கொள்ளும்படி திரும்பிப் போகாதிருக்கட்டும். அந்நாட்களில் கர்ப்பவதிகளின் நிலைமையும், பால் கொடுக்கும் தாய்மாரின் நிலைமையும் எவ்வளவு பயங்கரமாயிருக்கும்! நீங்கள் ஓடிப்போவது குளிர்க்காலத்தில் அல்லது ஓய்வுநாளில் நேரிடாதபடி ஜெபம் பண்ணுங்கள். ஏனெனில், உலகத் தொடக்கத்திலிருந்து இன்றுவரை ஏற்பட்டிருக்காத பெரும் துன்பம் அக்காலத்தில் ஏற்படும். அதற்குப் பின்பு ஒருபோதும் ஏற்படவும் மாட்டாது.
“அந்த நாட்கள் குறைக்கப்படாவிட்டால், ஒருவரும் தப்பமாட்டார்கள். ஆனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் நிமித்தம், அந்த நாட்கள் குறைக்கப்படும். அக்காலத்தில் யாராவது உங்களிடம் வந்து, ‘இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார்!’ அல்லது, ‘அதோ, அங்கே இருக்கிறார்!’ என்று சொன்னால், அதை நம்பவேண்டாம். ஏனெனில் பொய் கிறிஸ்துக்களும் பொய் தீர்க்கதரிசிகளும் தோன்றுவார்கள். முடியுமானால், இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் ஏமாற்றும்படி அவர்கள் பெரிதான அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். பாருங்கள், அக்காலம் வருமுன்பே, நான் உங்களுக்குச் சொல்லி எச்சரிக்கிறேன்.
“ஆகவே யாராவது உங்களிடம், ‘அதோ அங்கே அவர், வெளியே பாலைவனத்தில் இருக்கிறார்’ என்று சொன்னால், அங்கே போகாதிருங்கள்; ‘இதோ இங்கே அவர், உள்ளறையில் இருக்கிறார்’ என்று சொன்னால், அதையும் நம்பாதிருங்கள். ஏனெனில் கிழக்கிலிருந்து வரும் மின்னல் மேற்கிலும் தெரிவது போலவே, மானிடமகனாகிய என்னுடைய வருகையும் இருக்கும். எங்கேயாவது பிணம் கிடந்தால், அங்கே கழுகுகள் ஒன்றுகூடும்.
“அந்த நாட்களின் பெருந்துன்பம் முடிந்த உடனேயே,
“ ‘சூரியன் இருள் அடையும்,
சந்திரன் தனது வெளிச்சத்தைக் கொடாதிருக்கும்;
வானத்தின் நட்சத்திரங்கள் விழும்,
வானத்தின் அதிகாரங்கள் அசைக்கப்படும்.’
“அவ்வேளையில், மானிடமகனாகிய நான் திரும்பி வருவதன் அறிகுறி ஆகாயத்தில் தோன்றும். பூமியிலுள்ள ஜனங்களெல்லாம் புலம்புவார்கள். மானிடமகனாகிய நான் அதிகாரத்துடனும், மிக்க மகிமையுடனும், ஆகாயத்து மேகங்கள்மேல் வருவதை, அவர்கள் காண்பார்கள். நான் என் தூதர்களை சத்தமான எக்காள அழைப்புடன் அனுப்பி, என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை, வானத்தின் ஒரு முனையிலிருந்து, மறுமுனை வரைக்குமுள்ள நான்கு திசைகளிலுமிருந்து சேர்த்துக்கொள்வேன்.
“இப்பொழுது அத்திமரத்திலிருந்து இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்: அதில் சிறு கிளைகள் தோன்றி இலைகள் வரும்போது, கோடைகாலம் நெருங்குகிறது என்று அறிகிறீர்கள். அவ்வாறே இவற்றையெல்லாம் நீங்கள் காணும்போது, முடிவுகாலம் நெருங்கி வாசலருகே வந்துவிட்டது என்று அறிந்துகொள்ளுங்கள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இந்தக் காரியங்களெல்லாம் நடந்துமுடியும் வரைக்கும், நிச்சயமாகவே இந்தத் தலைமுறை ஒழிந்துபோகாது. வானமும் பூமியும் ஒழிந்துபோகும், ஆனால் என் வார்த்தைகளோ ஒருபோதும் ஒழிந்துபோகாது.