மத்தேயு 22:27-40

மத்தேயு 22:27-40 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள். ஆகையால், உயிர்த்தெழுதலில் அவ்வேழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? அவர்கள் எல்லாரும் அவளை விவாகம்பண்ணியிருந்தார்களே என்று கேட்டார்கள்? இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள். உயிர்த்தெழுதலில் கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப்போல் இருப்பார்கள்; மேலும் மரித்தோர் உயிர்த்தெழுதலைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன் என்று தேவனால் உங்களுக்கு உரைக்கப்பட்டிருக்கிறதை நீங்கள் வாசிக்கவில்லையா? தேவன் மரித்தோருக்குத் தேவனாயிராமல், ஜீவனுள்ளோருக்கு தேவனாயிருக்கிறார் என்றார். ஜனங்கள் இதைக் கேட்டு, அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். அவர் சதுசேயரை வாயடைத்தார் என்று பரிசேயர் கேள்விப்பட்டு, அவரிடத்தில் கூடிவந்தார்கள். அவர்களில் நியாயசாஸ்திரி ஒருவன் அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது என்று கேட்டான். இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.

மத்தேயு 22:27-40 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

கடைசியாக அந்தப் பெண்ணும் இறந்துபோனாள். அப்படியானால், இறந்தவர்கள் உயிருடன் எழுந்திருக்கும்போது, அவள் யாருக்கு மனைவியாய் இருப்பாள்? ஏழு சகோதரர்களும் அவளைத் திருமணம் செய்தார்களே” என்றார்கள். இயேசு அவர்களுக்குப் பதிலாக, “நீங்கள் வேதவசனங்களையும் இறைவனுடைய வல்லமையையும் அறியவில்லை. அதனால்தான் நீங்கள் தவறான எண்ணம் கொண்டவர்களாய் இருக்கிறீர்கள். உயிர்த்தெழுதலில் மக்கள் திருமணம் செய்வதும் இல்லை, திருமணம் செய்துகொடுப்பதும் இல்லை; அவர்கள் பரலோகத்திலுள்ள தூதரைப் போல் இருப்பார்கள். இறந்தவர்களின் உயிர்த்தெழுதலைக் குறித்து, இறைவன் உங்களுக்குச் சொன்னதை நீங்கள் வாசிக்கவில்லையா? ‘நானே ஆபிரகாமின் இறைவன், ஈசாக்கின் இறைவன், யாக்கோபின் இறைவன்’ அவர் இறந்தவர்களின் இறைவன் அல்ல, உயிருள்ளவர்களின் இறைவன்” என்றார். மக்கள் கூட்டம் இதைக் கேட்டபோது, அவருடைய போதனைகளைக் குறித்து வியப்படைந்தார்கள். இயேசு சதுசேயர்களை வாயடைத்துப் போகச் செய்தார் என்று கேள்விப்பட்டபோது, பரிசேயர் ஒன்றுகூடி அவரிடம் வந்தார்கள். அவர்களில் மோசேயின் சட்டத்தில் தேறின ஒருவன் ஒரு கேள்வியைக் கேட்டு அவரைச் சோதித்தான்: “போதகரே, மோசேயின் சட்டத்தில் மிகப்பெரிய கட்டளை எது?” என்றான். இயேசு அவனுக்குப் பதிலாக, “உன் இறைவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்பு கூருவாயாக. இதுவே முதலாவதும் பெரியதுமான கட்டளை. இரண்டாவதும் இதைப் போன்றதே: நீ உன்னில் அன்பாய் இருப்பதுபோல, உன் அயலானிலும் அன்பாய் இரு. முழு மோசேயின் சட்டமும், இறைவாக்குகளும் இந்த இரண்டு கட்டளைகளிலும் அடங்கி இருக்கின்றன” என்றார்.

மத்தேயு 22:27-40 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எல்லோருக்கும்பின்பு அந்த பெண்ணும் மரித்துப்போனாள். ஆகவே, உயிர்த்தெழுதலில் அந்த ஏழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாக இருப்பாள்? அவர்கள் எல்லோரும் அவளைத் திருமணம் செய்திருந்தார்களே என்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தவறாகப் புரிந்துகொள்ளுகிறீர்கள். உயிர்த்தெழுதலில் பெண் எடுப்பதும் இல்லை, கொடுப்பதும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதர்களைப்போல இருப்பார்கள்; மேலும் மரித்தோர் உயிர்த்தெழுதலைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாக இருக்கிறேன் என்று தேவனால் உங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறதை நீங்கள் வாசிக்கவில்லையா? தேவன் மரித்தோருக்கு தேவனாக இல்லாமல், ஜீவனுள்ளோருக்கு தேவனாக இருக்கிறார் என்றார். மக்கள் இதைக்கேட்டு, அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். அவர் சதுசேயர்களைப் பேசவிடாமல் வாயடைத்தார் என்று பரிசேயர்கள் கேள்விப்பட்டு, அவரிடத்தில் கூடிவந்தார்கள். அவர்களில் நியாயப்பண்டிதன் ஒருவன் அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கட்டளை முதன்மையானது என்று கேட்டான். இயேசு அவனைப் பார்த்து: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புசெலுத்துவாயாக; இது முதலாம் பெரிய கட்டளை. இதற்கு இணையாக இருக்கிற இரண்டாம் கட்டளை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புசெலுத்துவதுபோல மற்றவனிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்பதே. இவ்விரண்டு கட்டளைகளிலும் நியாயப்பிரமாணம் முழுவதும், தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.

மத்தேயு 22:27-40 பரிசுத்த பைபிள் (TAERV)

இறுதியாக அப்பெண்ணும் இறந்தாள். ஏழு பேர் அவளை மணந்தார்கள். எனவே, மரணத்திலிருந்து அவர்கள் உயிர்த்தெழும்பொழுது அவள் யாருடைய மனைவியாக இருப்பாள்?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு, “வேத வாக்கியங்கள் என்ன கூறுகிறது என்பது உங்களுக்குத் தெரியாததால் உங்களுக்குப் புரியவில்லை. மேலும் தேவனின் வல்லமையைக்குறித்து உங்களுக்குத் தெரியவில்லை. மனிதர்கள் மரணத்திலிருந்து உயிர்த்தெழும்பொழுது, அவர்களுக்குத் திருமணங்கள் நடக்கமாட்டா. உயிர்த்தெழும் அனைவரும் பரலோகத்திலிருக்கும் தேவதூதர்களுக்கு ஒப்பாவார்கள். மரணத்திலிருந்து உயிர்த்தெழுவதைக் குறித்து தேவன் என்ன சொல்லியுள்ளார் என்பதைப் படித்திருக்கிறீர்களல்லவா? தேவன், ‘ஆபிரகாமின் தேவன் நானே, ஈசாக்கின் தேவன் நானே, யாக்கோபின் தேவன் நானே’ அவர்களின் தேவன் என்று தேவன் தம்மைப்பற்றி கூறினார். அவர் இறந்தவர்களின் தேவன் அல்ல. அவர் வாழ்கிறவர்களின் தேவன்” என்றார். அதைக் கேட்ட அனைவரும் இயேசுவின் போதனையைக் கண்டு வியந்தனர். சதுசேயர்களால் வாதிட இயலாதபடி இயேசு பதில் அளித்தார் என்று பரிசேயர்கள் அறிந்தனர். எனவே, பரிசேயர்கள் ஒன்று கூடினார்கள். ஒரு பரிசேயன் மோசேயின் சட்டத்தை நன்கு கற்றவன். அவன் இயேசுவைச் சோதிக்க ஒரு கேள்வி கேட்டான், “மோசேயின் சட்டங்களில் எது மிக முக்கியமானது?” என்று அந்தப் பரிசேயன் கேட்டான். இயேசு அதற்கு, “‘உன் தேவனாகிய கர்த்தரை நேசிக்க வேண்டும். முழு இதயத்தோடும் ஆத்துமாவோடும் முழு மனதோடும் அவரை நேசிக்க வேண்டும்.’ இது தான் முதலாவது மிக முக்கியமானதுமான கட்டளை. இரண்டாவது கட்டளையும் முதலாவது கட்டளைப் போன்றதே ‘நீ உன்னை நேசிப்பதைப்போலவே மற்றவர்களையும் நேசிக்க வேண்டும்.’ எல்லா கட்டளைகளும், தீர்க்கதரிசிகளின் எழுத்துக்களும் இந்த இரண்டு கட்டளைகளை அடிப்படையாகக் கொண்டவைதான்” என்றார்.