மத்தேயு 22:27-40

மத்தேயு 22:27-40 TCV

கடைசியாக அந்தப் பெண்ணும் இறந்துபோனாள். அப்படியானால், இறந்தவர்கள் உயிருடன் எழுந்திருக்கும்போது, அவள் யாருக்கு மனைவியாய் இருப்பாள்? ஏழு சகோதரர்களும் அவளைத் திருமணம் செய்தார்களே” என்றார்கள். இயேசு அவர்களுக்குப் பதிலாக, “நீங்கள் வேதவசனங்களையும் இறைவனுடைய வல்லமையையும் அறியவில்லை. அதனால்தான் நீங்கள் தவறான எண்ணம் கொண்டவர்களாய் இருக்கிறீர்கள். உயிர்த்தெழுதலில் மக்கள் திருமணம் செய்வதும் இல்லை, திருமணம் செய்துகொடுப்பதும் இல்லை; அவர்கள் பரலோகத்திலுள்ள தூதரைப் போல் இருப்பார்கள். இறந்தவர்களின் உயிர்த்தெழுதலைக் குறித்து, இறைவன் உங்களுக்குச் சொன்னதை நீங்கள் வாசிக்கவில்லையா? ‘நானே ஆபிரகாமின் இறைவன், ஈசாக்கின் இறைவன், யாக்கோபின் இறைவன்’ அவர் இறந்தவர்களின் இறைவன் அல்ல, உயிருள்ளவர்களின் இறைவன்” என்றார். மக்கள் கூட்டம் இதைக் கேட்டபோது, அவருடைய போதனைகளைக் குறித்து வியப்படைந்தார்கள். இயேசு சதுசேயர்களை வாயடைத்துப் போகச் செய்தார் என்று கேள்விப்பட்டபோது, பரிசேயர் ஒன்றுகூடி அவரிடம் வந்தார்கள். அவர்களில் மோசேயின் சட்டத்தில் தேறின ஒருவன் ஒரு கேள்வியைக் கேட்டு அவரைச் சோதித்தான்: “போதகரே, மோசேயின் சட்டத்தில் மிகப்பெரிய கட்டளை எது?” என்றான். இயேசு அவனுக்குப் பதிலாக, “உன் இறைவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்பு கூருவாயாக. இதுவே முதலாவதும் பெரியதுமான கட்டளை. இரண்டாவதும் இதைப் போன்றதே: நீ உன்னில் அன்பாய் இருப்பதுபோல, உன் அயலானிலும் அன்பாய் இரு. முழு மோசேயின் சட்டமும், இறைவாக்குகளும் இந்த இரண்டு கட்டளைகளிலும் அடங்கி இருக்கின்றன” என்றார்.