மத்தேயு 22:1-14

மத்தேயு 22:1-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மீண்டும் இயேசு அவர்களோடு உவமைகள் மூலம் பேசி, பரலோக அரசைப் பற்றிச் சொன்னதாவது: “பரலோக அரசு ஒரு அரசன் தனது மகனின் திருமண விருந்தை ஆயத்தப்படுத்தியதற்கு ஒப்பாயிருக்கிறது. விருந்துக்கு அழைக்கப்பட்டவர்களை வரும்படி அழைப்பதற்கு, அவன் தன் வேலைக்காரர்களை அவர்களிடம் அனுப்பினான். அவர்களோ வர மறுத்துவிட்டார்கள். “அவன் இன்னும் சில வேலைக்காரர்களை அனுப்பி, ‘அழைக்கப்பட்டவர்களிடம், நான் என்னுடைய விருந்தை ஆயத்தம் செய்திருக்கிறேன்: சிறப்பான விருந்து உங்களுக்கென்று படைக்கப்பட்டு, எல்லாம் ஆயத்தமாய் இருக்கின்றன. திருமண விருந்துக்கு வாருங்கள் என்று சொல்லுங்கள்’ என்றான். “ஆனால் அழைக்கப்பட்டவர்களோ, அதைக் கவனிக்காமல் தங்கள் வேலைகளுக்குச் சென்றார்கள்; ஒருவன் வயலுக்கும் வேறொருவன் தனது வியாபாரத்துக்கும் போனான். மற்றவர்களோ, அரசனுடைய வேலைக்காரர்களைப் பிடித்துத் துன்புறுத்தி அவர்களைக் கொன்றார்கள். அரசன் கடுங்கோபமடைந்தான். அவன் தனது படைகளை அனுப்பி, அந்தக் கொலைகாரர்களை அழித்து, அவர்களுடைய பட்டணத்தை எரித்தான். “பின்பு அரசன் தன் வேலைக்காரர்களிடம், ‘திருமண விருந்து ஆயத்தமாயிருக்கிறது. ஆனால் நான் அழைத்தவர்களோ, அதற்குத் தகுதியற்றவர்களாய்ப் போனார்கள். இப்பொழுது வீதிகளின் சந்திகளுக்குப் போங்கள், நீங்கள் காண்கிறவர்கள் யாராயிருந்தாலும் விருந்துக்கு அழைத்து வாருங்கள்’ என்றான். எனவே வேலைக்காரர்கள் வெளியே வீதிகளில் போய், நல்லவர்களும் கெட்டவர்களுமான தாங்கள் கண்ட எல்லா மக்களையும் கூட்டிச் சேர்த்தார்கள். திருமண மண்டபம் விருந்தாளிகளால் நிரம்பியது. “அரசன் விருந்தினரைப் பார்க்க உள்ளே வந்தபோது, திருமண உடை உடுத்தியிராத ஒருவன் அங்கேயிருப்பதைக் கண்டான். அரசன், ‘நண்பனே, திருமண உடையின்றி, நீ எப்படி இங்கே வந்தாய்?’ என்று கேட்டான். அவன் பேச்சற்று நின்றான். “அப்பொழுது அரசன் ஏவலாட்களிடம், ‘அவனுடைய கையையும் காலையும் கட்டி, வெளியே இருளில் தள்ளுங்கள், அங்கே பற்கடிப்பும் அழுகையும் இருக்கும்’ என்றான். “ஏனெனில் அநேகர் அழைக்கப்படுகிறார்கள், ஆனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் சிலர்.”

மத்தேயு 22:1-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இயேசு மறுபடியும் அவர்களோடு உவமைகளாகப் பேசிச் சொன்னது என்னவென்றால்: பரலோகராஜ்யம் தன் குமாரனுக்கு திருமணம் செய்த ஒரு ராஜாவிற்கு ஒப்பாக இருக்கிறது. அழைக்கப்பட்டவர்களைத் திருமணத்திற்கு வரச்சொல்லும்படி அவன் தன் வேலைக்காரர்களை அனுப்பினான்; அவர்களோ வர விருப்பமில்லாதிருந்தார்கள். அப்பொழுது அவன் வேறு வேலைக்காரர்களை அழைத்து: நீங்கள் போய், இதோ, என் விருந்தை ஆயத்தம் செய்தேன், என் எருதுகளும், கொழுத்த கன்றுக்குட்டிகளும் அடிக்கப்பட்டது, எல்லாம் ஆயத்தமாக இருக்கிறது; திருமணத்திற்கு வாருங்கள் என்று அழைக்கப்பட்டவர்களுக்குச் சொல்லுங்களென்று அனுப்பினான். அழைக்கப்பட்டவர்களோ அதை அசட்டைசெய்து, ஒருவன் தன் வயலுக்கும், ஒருவன் தன் வியாபாரத்திற்கும் போய்விட்டார்கள். மற்றவர்கள் அவனுடைய வேலைக்காரர்களைப்பிடித்து, அவமானப்படுத்தி, கொலைசெய்தார்கள். ராஜா அதைக் கேள்விப்பட்டு, கோபமடைந்து, தன் படைகளை அனுப்பி, அந்தக் கொலைபாதகர்களை அழித்து, அவர்கள் பட்டணத்தையும் சுட்டெரித்தான். அப்பொழுது, அவன் தன் வேலைக்காரர்களைப் பார்த்து: திருமணவிருந்து ஆயத்தமாக இருக்கிறது, அழைக்கப்பட்டவர்களோ அதற்கு தகுதியற்றவர்களாக போனார்கள். ஆகவே, நீங்கள் வீதிகளிலேபோய், காணப்படுகிற அனைவரையும் திருமணத்திற்கு அழைத்துக்கொண்டு வாருங்கள் என்றான். அந்த வேலைக்காரர்கள் புறப்பட்டு, வழிகளிலேபோய், தாங்கள் கண்ட நல்லவர்கள் பொல்லாதவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டுவந்தார்கள்; திருமண மண்டபம் விருந்தாளிகளால் நிறைந்திருந்தது. விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே நுழைந்தபோது, திருமணஆடை அணிந்திராத ஒரு மனிதனை அங்கே பார்த்து: நண்பனே, நீ திருமணஆடை இல்லாதவனாக இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்; அதற்கு அவன் பேசாமலிருந்தான். அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரர்களைப் பார்த்து: இவனுடைய கையையும் காலையும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான். அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.

மத்தேயு 22:1-14 பரிசுத்த பைபிள் (TAERV)

இயேசு மேலும் சிலவற்றை உவமைகளின் மூலம் மக்களுக்கு எடுத்துக் கூறினார். “பரலோக இராஜ்யமானது தன் மகனது திருமண விருந்துக்கு ஏற்பாடு செய்த மன்னன் ஒருவனுக்கு ஒப்பாகும். அம்மன்னன் விருந்துண்ண சிலரை அழைத்தான். விருந்து தயாரானபொழுது தன் வேலைக்காரர்களை அனுப்பி அவர்களை அழைத்துவரச் சொன்னான். ஆனால் அவர்களோ மன்னனது விருந்துக்கு வர மறுத்து விட்டார்கள். “பின் மன்னன் மேலும் சில வேலைக்காரர்களை அனுப்பினான். தன் வேலைக்காரர்களிடம் மன்னன் இவ்வாறு சொல்லியனுப்பினான். ‘நான் ஏற்கெனவே அவர்களை விருந்துண்ண அழைத்துவிட்டேன். எனவே, அவர்களிடம், என்னிடமிருந்த சிறந்த காளைகளையும் கன்றுகளையும் உண்பதற்காக அடித்துள்ளேன். எல்லாம் தயாராக உள்ளன. திருமண விருந்துண்ண வாருங்கள்! என்று கூறுங்கள்’ என்றான். “வேலைக்காரர்கள் சென்று அவர்களை அழைத்தார்கள். ஆனால் அவர்களோ வேலைக்காரர்களின் அழைப்பைப் பொருட்படுத்தவில்லை. வேறு வேலைகளைக் கவனிக்க அவர்கள் சென்று விட்டார்கள். ஒருவன் தன் வயலில் வேலை செய்யவும் மற்றொருவன் தன் வியாபாரத்தைக் கவனிக்கவும், சென்றனர். வேறு சிலரோ வேலைக்காரர்களைப் பிடித்து அடித்துக் கொன்றுவிட்டனர். கோபமடைந்த மன்னன் தன் வேலைக்காரர்களைக் கொன்றவர்களைக் கொல்வதற்காகத் தனது படையை அனுப்பினான். மன்னனது படை அவர்களது நகரத்தையே எரித்தது. “அதன் பிறகு, மன்னன் தன் வேலைக்காரர்களைப் பார்த்து, ‘திருமண விருந்து தயாராக உள்ளது. நான் அவர்களை விருந்துக்கு அழைத்தேன். ஆனால் அவர்களோ எனது விருந்துக்கு வருமளவிற்கு நல்லவரல்லர். ஆகவே, தெரு முனைகளுக்குச் செல்லுங்கள். உங்கள் கண்ணில் படுகிறவர்கள் அனைவரையும் விருந்துக்கு அழையுங்கள். எனது விருந்துக்கு வரச் சொல்லுங்கள்’ என்று சொன்னான். எனவே, மன்னனது வேலைக்காரர்கள் தெருக்களுக்குச் சென்று கண்ணில் பட்டவர்களை அழைத்து வந்தனர். வேலைக்காரர்கள் நல்லவர்களையும் தீயவர்களையும் திருமணவிருந்து தயாராகவிருந்த இடத்துக்கு அழைத்து வந்தார்கள். அந்த இடம் விருந்தினர்களால் நிரம்பியது. “மன்னன் விருந்தினர் அனைவரையும் காண்பதற்காக வந்தான். திருமணத்திற்கு வர ஏற்றதாக உடையணிந்திராத ஒருவனை மன்னன் கண்டான். மன்னன் அவனிடம், ‘நண்பனே, நீ எப்படி உள்ளே வந்தாய்? திருமணத்திற்கு வர ஏற்றதாக நீ உடை அணிந்திருக்கவில்லையே?’ என்று கேட்டான். ஆனால் அம்மனிதனோ எதுவும் பேசவில்லை. எனவே, மன்னன் தன் வேலைக்காரர்களிடம், ‘இவனது கையையும் காலையும் கட்டுங்கள். இவனை இருளில் எறியுங்கள். அங்கு, மக்கள் வேதனையால் பற்களைக் கடித்துக் கொள்வார்கள்’ என்று சொன்னான். “ஆம், பலர் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் சிலர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்” என்று இயேசு சொன்னார்.

மத்தேயு 22:1-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இயேசு மறுபடியும் அவர்களோடே உவமைகளாய்ப் பேசிச் சொன்னது என்னவென்றால்: பரலோகராஜ்யம் தன் குமாரனுக்குக் கலியாணஞ்செய்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது. அழைக்கப்பட்டவர்களைக் கலியாணத்திற்கு வரச்சொல்லும்படி அவன் தன் ஊழியக்காரரை அனுப்பினான்; அவர்களோ வர மனதில்லாதிருந்தார்கள். அப்பொழுது அவன் வேறு ஊழியக்காரரை அழைத்து: நீங்கள் போய், இதோ, என் விருந்தை ஆயத்தம்பண்ணினேன், என் எருதுகளும் கொழுத்த ஜெந்துக்களும் அடிக்கப்பட்டது, எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது; கலியாணத்திற்கு வாருங்கள் என்று அழைக்கப்பட்டவர்களுக்குச் சொல்லுங்களென்று அனுப்பினான். அழைக்கப்பட்டவர்களோ அதை அசட்டைபண்ணி, ஒருவன் தன் வயலுக்கும், ஒருவன் தன் வியாபாரத்துக்கும் போய்விட்டார்கள். மற்றவர்கள் அவன் ஊழியக்காரரைப் பிடித்து, அவமானப்படுத்தி, கொலைசெய்தார்கள். ராஜா அதைக் கேள்விப்பட்டு, கோபமடைந்து, தன் சேனைகளை அனுப்பி, அந்தக் கொலைபாதகரை அழித்து, அவர்கள் பட்டணத்தையும் சுட்டெரித்தான். அப்பொழுது, அவன் தன் ஊழியக்காரரை நோக்கி: கலியாண விருந்து ஆயத்தமாயிருக்கிறது, அழைக்கப்பட்டவர்களோ அதற்கு அபாத்திரராய்ப் போனார்கள். ஆகையால், நீங்கள் வழிச்சந்திகளிலே போய், காணப்படுகிற யாவரையும் கலியாணத்திற்கு அழைத்துக்கொண்டுவாருங்கள் என்றான். அந்த ஊழியக்காரர் புறப்பட்டு, வழிகளிலே போய், தாங்கள் கண்ட நல்லார் பொல்லார் யாவரையும் கூட்டிக்கொண்டுவந்தார்கள்; கலியாணசாலை விருந்தாளிகளால் நிறைந்தது. விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே பிரவேசித்தபோது, கலியாண வஸ்திரம் தரித்திராத ஒரு மனுஷனை அங்கே கண்டு: சிநேகிதனே, நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்; அதற்கு அவன் பேசாமலிருந்தான். அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரரை நோக்கி: இவனைக் கையுங்காலும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான். அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்