மத்தேயு எழுதிய சுவிசேஷம் 22:1-14

மத்தேயு எழுதிய சுவிசேஷம் 22:1-14 TAERV

இயேசு மேலும் சிலவற்றை உவமைகளின் மூலம் மக்களுக்கு எடுத்துக் கூறினார். “பரலோக இராஜ்யமானது தன் மகனது திருமண விருந்துக்கு ஏற்பாடு செய்த மன்னன் ஒருவனுக்கு ஒப்பாகும். அம்மன்னன் விருந்துண்ண சிலரை அழைத்தான். விருந்து தயாரானபொழுது தன் வேலைக்காரர்களை அனுப்பி அவர்களை அழைத்துவரச் சொன்னான். ஆனால் அவர்களோ மன்னனது விருந்துக்கு வர மறுத்து விட்டார்கள். “பின் மன்னன் மேலும் சில வேலைக்காரர்களை அனுப்பினான். தன் வேலைக்காரர்களிடம் மன்னன் இவ்வாறு சொல்லியனுப்பினான். ‘நான் ஏற்கெனவே அவர்களை விருந்துண்ண அழைத்துவிட்டேன். எனவே, அவர்களிடம், என்னிடமிருந்த சிறந்த காளைகளையும் கன்றுகளையும் உண்பதற்காக அடித்துள்ளேன். எல்லாம் தயாராக உள்ளன. திருமண விருந்துண்ண வாருங்கள்! என்று கூறுங்கள்’ என்றான். “வேலைக்காரர்கள் சென்று அவர்களை அழைத்தார்கள். ஆனால் அவர்களோ வேலைக்காரர்களின் அழைப்பைப் பொருட்படுத்தவில்லை. வேறு வேலைகளைக் கவனிக்க அவர்கள் சென்று விட்டார்கள். ஒருவன் தன் வயலில் வேலை செய்யவும் மற்றொருவன் தன் வியாபாரத்தைக் கவனிக்கவும், சென்றனர். வேறு சிலரோ வேலைக்காரர்களைப் பிடித்து அடித்துக் கொன்றுவிட்டனர். கோபமடைந்த மன்னன் தன் வேலைக்காரர்களைக் கொன்றவர்களைக் கொல்வதற்காகத் தனது படையை அனுப்பினான். மன்னனது படை அவர்களது நகரத்தையே எரித்தது. “அதன் பிறகு, மன்னன் தன் வேலைக்காரர்களைப் பார்த்து, ‘திருமண விருந்து தயாராக உள்ளது. நான் அவர்களை விருந்துக்கு அழைத்தேன். ஆனால் அவர்களோ எனது விருந்துக்கு வருமளவிற்கு நல்லவரல்லர். ஆகவே, தெரு முனைகளுக்குச் செல்லுங்கள். உங்கள் கண்ணில் படுகிறவர்கள் அனைவரையும் விருந்துக்கு அழையுங்கள். எனது விருந்துக்கு வரச் சொல்லுங்கள்’ என்று சொன்னான். எனவே, மன்னனது வேலைக்காரர்கள் தெருக்களுக்குச் சென்று கண்ணில் பட்டவர்களை அழைத்து வந்தனர். வேலைக்காரர்கள் நல்லவர்களையும் தீயவர்களையும் திருமணவிருந்து தயாராகவிருந்த இடத்துக்கு அழைத்து வந்தார்கள். அந்த இடம் விருந்தினர்களால் நிரம்பியது. “மன்னன் விருந்தினர் அனைவரையும் காண்பதற்காக வந்தான். திருமணத்திற்கு வர ஏற்றதாக உடையணிந்திராத ஒருவனை மன்னன் கண்டான். மன்னன் அவனிடம், ‘நண்பனே, நீ எப்படி உள்ளே வந்தாய்? திருமணத்திற்கு வர ஏற்றதாக நீ உடை அணிந்திருக்கவில்லையே?’ என்று கேட்டான். ஆனால் அம்மனிதனோ எதுவும் பேசவில்லை. எனவே, மன்னன் தன் வேலைக்காரர்களிடம், ‘இவனது கையையும் காலையும் கட்டுங்கள். இவனை இருளில் எறியுங்கள். அங்கு, மக்கள் வேதனையால் பற்களைக் கடித்துக் கொள்வார்கள்’ என்று சொன்னான். “ஆம், பலர் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் சிலர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்” என்று இயேசு சொன்னார்.