மத்தேயு 21:33-44
மத்தேயு 21:33-44 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
வேறொரு உவமையைக் கேளுங்கள்: வீட்டெஜமானாகிய ஒரு மனுஷன் இருந்தான், அவன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, அதில் ஒரு ஆலையை நாட்டி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாக விட்டு, புறதேசத்துக்குப் போயிருந்தான். கனிகாலம் சமீபித்தபோது, அதின் கனிகளை வாங்கிக்கொண்டுவரும்படி தன் ஊழியக்காரரைத் தோட்டக்காரரிடத்தில் அனுப்பினான். தோட்டக்காரர் அந்த ஊழியக்காரரைப்பிடித்து, ஒருவனை அடித்து, ஒருவனைக் கொலைசெய்து, ஒருவனைக் கல்லெறிந்து கொன்றார்கள். பின்னும் அவன் முந்தினவர்களிலும் அதிகமான வேறே ஊழியக்காரரை அனுப்பினான்; அவர்களையும் அப்படியே செய்தார்கள். கடைசியிலே அவன்: என் குமாரனுக்கு அஞ்சுவார்கள் என்று சொல்லி, தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான். தோட்டக்காரர் குமாரனைக் கண்டபோது: இவன் சுதந்தரவாளி; இவனைக் கொன்று, இவன் சுதந்தரத்தைக் கட்டிக்கொள்ளுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு; அவனைப் பிடித்துத் திராட்சத்தோட்டத்திற்குப் புறம்பே தள்ளிக் கொலைசெய்தார்கள். அப்படியிருக்க, திராட்சத்தோட்டத்தின் எஜமான் வரும்போது, அந்தத் தோட்டக்காரரை என்ன செய்வான் என்று கேட்டார். அதற்கு அவர்கள்: அந்தக் கொடியரைக் கொடுமையாய் அழித்து, ஏற்ற காலங்களில் தனக்குக் கனிகளைக் கொடுக்கத்தக்க வேறே தோட்டக்காரரிடத்தில் திராட்சத்தோட்டத்தைக் குத்தகையாகக் கொடுப்பான் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று, அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது என்று நீங்கள் வேதத்தில் ஒருக்காலும் வாசிக்கவில்லையா? ஆகையால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும். இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
மத்தேயு 21:33-44 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“மேலும் ஒரு உவமையைக் கேளுங்கள்: நிலத்தின் உரிமையாளன் ஒருவன் இருந்தான். அவன் ஒரு திராட்சைத் தோட்டத்தை உண்டாக்கினான். அவன் அதைச் சுற்றி வேலியடைத்து, பழங்களைப் பிழியும் தொட்டியையும் ஒரு காவல் கோபுரத்தையும் கட்டினான். பின்பு அவன், அந்தத் திராட்சைத் தோட்டத்தை சில விவசாயிகளுக்கு குத்தகைக்குக் கொடுத்துவிட்டு, ஒரு பயணத்தை மேற்கொண்டான். அறுவடைக்காலம் வந்தபோது, அவன் தனது வேலைக்காரர்களிடம் தனக்குரிய பங்கைப் பெற்றுக்கொண்டு வரும்படி குத்தகைக்காரரிடம் அனுப்பினான். “குத்தகைக்காரர்களோ அவனுடைய வேலையாட்களைப் பிடித்து, ஒருவனை அடித்து, இன்னொருவனைக் கொலைசெய்து, மற்றவனைக் கல்லால் எறிந்தார்கள். பின்பு சொந்தக்காரன், தனது மற்ற வேலையாட்களை அவர்களிடம் அனுப்பினான். முதலில் அனுப்பினவர்களைப் பார்க்கிலும் இன்னும் பலரை அனுப்பினான்; அந்தக் குத்தகைக்காரர்களோ, அவர்களையும் அவ்விதமாகவே நடத்தினார்கள். அவன், ‘தன் மகனுக்கு மதிப்புக் கொடுப்பார்கள்’ என்று சொல்லி, தன் மகனை கடைசியாக அவர்களிடம் அனுப்பினான். “ஆனால் குத்தகைக்காரர் மகனைக் கண்டபோது, ‘இவனே உரிமையாளன். வாருங்கள், இவனைக் கொலைசெய்து, இவனுடைய உரிமைச்சொத்தை நாம் எடுத்துக்கொள்வோம்’ என்று ஒருவரோடொருவர் தங்களிடையே பேசிக்கொண்டார்கள். அப்படியே அவர்கள் அவனைப் பிடித்து திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளி, அவனைக் கொலைசெய்தார்கள். “ஆகவே, திராட்சைத் தோட்டத்தின் உரிமையாளன் வரும்போது, அந்த குத்தகைக்காரரை அவன் என்ன செய்வான்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “அவன் அந்தக் கொடியவர்களை கொடுமையாக அழித்துப் போட்டு திராட்சைத் தோட்டத்தையும் அறுவடைக்காலத்தில் விளைச்சலில் தனக்குரிய பங்கைத் தனக்குக் கொடுக்கக்கூடிய, வேறு குத்தகைக்காரருக்குக் கொடுப்பான்” என்று பதிலளித்தார்கள். இயேசு அவர்களிடம், “ ‘வீடு கட்டுகிறவர்கள் புறக்கணித்துத் தள்ளிவிட்ட கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று; கர்த்தரே இதைச் செய்தார். இது நமது கண்களுக்கு ஆச்சரியமாய் இருக்கிறது’ என்ற நீங்கள் வேதத்தில் ஒருபோதும் வாசிக்கவில்லையா? “ஆகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், இறைவனுடைய அரசு உங்களிடமிருந்து எடுக்கப்படும். அது அதற்கேற்ற கனிகொடுக்கும் மக்களுக்கே கொடுக்கப்படும். இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் துண்டுகளாக நொறுங்கிப் போவான். இந்தக் கல் யார்மேல் விழுகிறதோ, அவனை நசுக்கிப்போடும்” என்றார்.
மத்தேயு 21:33-44 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
வேறொரு உவமையைக் கேளுங்கள்: வீட்டெஜமானாகிய ஒரு மனிதன் இருந்தான், அவன் ஒரு திராட்சைத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, அதில் ஒரு ஆலையை உருவாக்கி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரர்களுக்கு அதைக் குத்தகைக்கு விட்டு, வெளிதேசத்திற்குச் சென்றிருந்தான். அறுவடைக்காலம் நெருங்கியபோது, அதின் கனிகளை வாங்கிக்கொண்டுவரும்படி தன் வேலைக்காரர்களைத் தோட்டக்காரர்களிடத்தில் அனுப்பினான். தோட்டக்காரர்கள் அந்த வேலைக்காரர்களைப்பிடித்து, ஒருவனை அடித்து, ஒருவனைக் கொலைசெய்து, ஒருவனைக் கல்லெறிந்து கொன்றார்கள். பின்னும் அவன் முந்தினவர்களிலும் அதிகமான வேறு வேலைக்காரர்களை அனுப்பினான்; அவர்களையும் அப்படியே செய்தார்கள். அவன்: என் குமாரனுக்கு பயப்படுவார்கள் என்று சொல்லி, தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான். தோட்டக்காரர்கள் குமாரனைக் கண்டபோது: இவனே வாரிசு; இவனைக் கொன்று, இவனுடைய சொத்தை எடுத்துக்கொள்ளுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு; அவனைப் பிடித்துத் திராட்சைத்தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொலைசெய்தார்கள். அப்படியிருக்க, திராட்சைத்தோட்டத்தின் எஜமான் வரும்போது, அந்தத் தோட்டக்காரர்களை என்ன செய்வான் என்று கேட்டார். அதற்கு அவர்கள்: அந்தக் கொடியவர்களைக் கொடுமையாக அழித்து, ஏற்றக் காலங்களில் தனக்குக் கனிகளைக் கொடுக்கக்கூடிய வேறு தோட்டக்காரர்களிடத்தில் திராட்சைத்தோட்டத்தைக் குத்தகைக்குக் கொடுப்பான் என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லானது, அது கர்த்தராலே ஆனது, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று நீங்கள் வேதத்தில் ஒருபோதும் வாசிக்கவில்லையா? ஆகவே, தேவனுடைய ராஜ்யம் உங்களிடமிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகின்ற மக்களுக்குக் கொடுக்கப்படும். இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
மத்தேயு 21:33-44 பரிசுத்த பைபிள் (TAERV)
“இந்த உவமையைக் கேளுங்கள். ஒரு மனிதனுக்கு ஒரு தோட்டமிருந்தது. அவன் அதில் திராட்சை பயிரிட்டான். தன் தோட்டத்தைச் சுற்றிலும் மதில் சுவரெழுப்பி திராட்சை இரசம் சேகரிக்கும் குழியையும் வெட்டினான். பின் ஒரு கோபுரத்தையும் கட்டினான். பிறகு தோட்டத்தை சில விவசாயிகளுக்குக் குத்தகைக்குக் கொடுத்துவிட்டு ஒரு பயணம் மேற்கொண்டான். பின்னர், திராட்சைப் பழங்களைப் பறிக்கவேண்டிய காலம் வந்தபொழுது, தனது வேலைக்காரர்களை குத்தகைக்காரர்களிடம் விளைச்சலில் தனது பங்கை வாங்கி வர அனுப்பினான். “ஆனால் அவ்விவசாயிகளோ வேலைக்காரர்களைப் பிடித்து அவர்களில் ஒருவனை அடித்துவிட்டார்கள். மற்றொரு வேலைக்காரனைக் கொன்றார்கள். மற்றொரு வேலைக்காரனைக் கல்லால் அடித்துக் கொன்றார்கள். எனவே தோட்டத்துச் சொந்தக்காரன் மேலும் சில வேலைக்காரர்களை அனுப்பினான். முதலில் அனுப்பிய ஆட்களைவிட அதிக எண்ணிக்கையில் இப்பொழுது ஆட்களை அனுப்பினான். ஆனால் குத்தகை எடுத்த விவசாயிகள் முதலில் செய்தது போலவே இம்முறையும் செய்தார்கள். ஆகவே, தோட்டக்காரன் தன் குமாரனை அனுப்ப முடிவு செய்தான்! ‘விவசாயிகள் என் குமாரனுக்கு மதிப்பு கொடுப்பார்கள்’ என்று அவன் நினைத்தான். “ஆனால் குமாரனைக் கண்ட விவசாயிகள் தங்களுக்குள், ‘இவன் நிலச் சொந்தக்காரனின் குமாரன். நிலம் இவனுக்கே சொந்தமாகும். நாம் இவனைக் கொன்றால் நிலம் நமக்குச் சொந்தமாகிவிடும்’ என்று பேசிக்கொண்டனர். எனவே, அந்த விவசாயிகள் திராட்சைத் தோட்டத்துச் சொந்தக்காரனின் குமாரனைத் தோட்டத்திற்கு வெளியில் எறிந்து கொன்றார்கள். “திராட்சைத் தோட்டத்துச் சொந்தக்காரனே வரும்பொழுது அவன் அந்த விவசாயிகளை என்ன செய்வான்?” என்று இயேசு கேட்டார். அதற்கு யூத ஆசாரியர்களும் தலைவர்களும், “அவன் நிச்சயம் அந்தத் தீயவர்களைக் கொல்வான். பின் தனது நிலத்தை மற்றவர்களுக்குக் குத்தகைக்கு விடுவான். அதாவது அறுவடை காலத்தில் தனக்கு சேரவேண்டிய பங்கைச் தனக்கு அளிக்கும் விவசாயிகளுக்கு குத்தகைக்கு விடுவான்” என்றனர். இயேசு அவர்களுக்குக் கூறினார், “நீங்கள் வேதவாக்கியங்களில் கட்டாயம் படித்திருப்பீர்கள்: “‘கட்டிடம் கட்டியவர்கள் விரும்பாத கல்லே மூலைக் கல்லாயிற்று. இது கர்த்தரின் செயல், நமக்கு வியப்பானது.’ “எனவே தேவனுடைய இராஜ்யம் உங்களிடமிருந்து பறிக்கப்படும் என்பதை நான் உங்களுக்குக் கூறுகிறேன். தம் இராஜ்யத்தில் தேவன் விரும்பும் செயல்களைச் செய்பவர்களுக்கே தேவனுடைய இராஜ்யம் கிட்டும். இக்கல்லின் மீது விழுகிறவன் துண்டுகளாக நொறுங்கிவிடுவான். மேலும் இக்கல் ஒருவன் மீது வீழ்ந்தால் அவன் நசுங்கிப் போவான்” என்று கூறினார்.