மத்தேயு எழுதிய சுவிசேஷம் 21:33-44

மத்தேயு எழுதிய சுவிசேஷம் 21:33-44 TAERV

“இந்த உவமையைக் கேளுங்கள். ஒரு மனிதனுக்கு ஒரு தோட்டமிருந்தது. அவன் அதில் திராட்சை பயிரிட்டான். தன் தோட்டத்தைச் சுற்றிலும் மதில் சுவரெழுப்பி திராட்சை இரசம் சேகரிக்கும் குழியையும் வெட்டினான். பின் ஒரு கோபுரத்தையும் கட்டினான். பிறகு தோட்டத்தை சில விவசாயிகளுக்குக் குத்தகைக்குக் கொடுத்துவிட்டு ஒரு பயணம் மேற்கொண்டான். பின்னர், திராட்சைப் பழங்களைப் பறிக்கவேண்டிய காலம் வந்தபொழுது, தனது வேலைக்காரர்களை குத்தகைக்காரர்களிடம் விளைச்சலில் தனது பங்கை வாங்கி வர அனுப்பினான். “ஆனால் அவ்விவசாயிகளோ வேலைக்காரர்களைப் பிடித்து அவர்களில் ஒருவனை அடித்துவிட்டார்கள். மற்றொரு வேலைக்காரனைக் கொன்றார்கள். மற்றொரு வேலைக்காரனைக் கல்லால் அடித்துக் கொன்றார்கள். எனவே தோட்டத்துச் சொந்தக்காரன் மேலும் சில வேலைக்காரர்களை அனுப்பினான். முதலில் அனுப்பிய ஆட்களைவிட அதிக எண்ணிக்கையில் இப்பொழுது ஆட்களை அனுப்பினான். ஆனால் குத்தகை எடுத்த விவசாயிகள் முதலில் செய்தது போலவே இம்முறையும் செய்தார்கள். ஆகவே, தோட்டக்காரன் தன் குமாரனை அனுப்ப முடிவு செய்தான்! ‘விவசாயிகள் என் குமாரனுக்கு மதிப்பு கொடுப்பார்கள்’ என்று அவன் நினைத்தான். “ஆனால் குமாரனைக் கண்ட விவசாயிகள் தங்களுக்குள், ‘இவன் நிலச் சொந்தக்காரனின் குமாரன். நிலம் இவனுக்கே சொந்தமாகும். நாம் இவனைக் கொன்றால் நிலம் நமக்குச் சொந்தமாகிவிடும்’ என்று பேசிக்கொண்டனர். எனவே, அந்த விவசாயிகள் திராட்சைத் தோட்டத்துச் சொந்தக்காரனின் குமாரனைத் தோட்டத்திற்கு வெளியில் எறிந்து கொன்றார்கள். “திராட்சைத் தோட்டத்துச் சொந்தக்காரனே வரும்பொழுது அவன் அந்த விவசாயிகளை என்ன செய்வான்?” என்று இயேசு கேட்டார். அதற்கு யூத ஆசாரியர்களும் தலைவர்களும், “அவன் நிச்சயம் அந்தத் தீயவர்களைக் கொல்வான். பின் தனது நிலத்தை மற்றவர்களுக்குக் குத்தகைக்கு விடுவான். அதாவது அறுவடை காலத்தில் தனக்கு சேரவேண்டிய பங்கைச் தனக்கு அளிக்கும் விவசாயிகளுக்கு குத்தகைக்கு விடுவான்” என்றனர். இயேசு அவர்களுக்குக் கூறினார், “நீங்கள் வேதவாக்கியங்களில் கட்டாயம் படித்திருப்பீர்கள்: “‘கட்டிடம் கட்டியவர்கள் விரும்பாத கல்லே மூலைக் கல்லாயிற்று. இது கர்த்தரின் செயல், நமக்கு வியப்பானது.’ “எனவே தேவனுடைய இராஜ்யம் உங்களிடமிருந்து பறிக்கப்படும் என்பதை நான் உங்களுக்குக் கூறுகிறேன். தம் இராஜ்யத்தில் தேவன் விரும்பும் செயல்களைச் செய்பவர்களுக்கே தேவனுடைய இராஜ்யம் கிட்டும். இக்கல்லின் மீது விழுகிறவன் துண்டுகளாக நொறுங்கிவிடுவான். மேலும் இக்கல் ஒருவன் மீது வீழ்ந்தால் அவன் நசுங்கிப் போவான்” என்று கூறினார்.