மத்தேயு 2:16-20

மத்தேயு 2:16-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாய் விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலைசெய்தான். புலம்பலும் அழுகையும் மிகுந்த துக்கங்கொண்டாடலுமாகிய கூக்குரல் ராமாவிலே கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, அவைகள் இல்லாதபடியால் ஆறுதலடையாதிருக்கிறாள் என்று, எரேமியா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று. ஏரோது இறந்தபின்பு, கர்த்தருடைய தூதன் எகிப்திலே யோசேப்புக்குச் சொப்பனத்தில் காணப்பட்டு: நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்துக்குப் போ; பிள்ளையின் பிராணனை வாங்கத்தேடினவர்கள் இறந்துபோனார்கள் என்றான்.

மத்தேயு 2:16-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஏரோது தான் அறிஞர்களால் ஏமாற்றப்பட்டதை அறிந்தபொழுது, கடுங்கோபம் கொண்டான். அதனால் அவன் தான் அறிஞர்களிடம் கேட்டறிந்த காலத்தின்படி, பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ள இரண்டு வயதிற்குட்பட்ட எல்லா ஆண் குழந்தைகளையும் கொலைசெய்தான். அப்பொழுது இறைவாக்கினன் எரேமியா மூலமாகக் கூறப்பட்டது நிறைவேறியது: “ராமாவிலே ஒரு குரல் கேட்கிறது, அழுகையும் பெரும் புலம்பலும் கேட்கின்றன, ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுகிறாள். அவர்களை இழந்ததினால், ஆறுதல் பெற மறுக்கிறாள்.” ஏரோது இறந்தபின், கர்த்தருடைய தூதன் எகிப்தில் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, “எழுந்திரு, குழந்தையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரயேல் நாட்டுக்குப் போ; குழந்தையின் உயிரையெடுக்கத் தேடினவர்கள் இறந்துவிட்டார்கள்” என்றான்.

மத்தேயு 2:16-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் ஏமாற்றப்பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாக விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் எல்லா எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண் பிள்ளைகளையும் கொலைசெய்தான். “புலம்பலும் அழுகையும் மிகுந்த துக்கங்கொண்டாடலுமாகிய கூக்குரல் ராமாவிலே கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, அவைகள் இல்லாதபடியால் ஆறுதலடையாமல் இருக்கிறாள்” என்று, எரேமியா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது அப்பொழுது நிறைவேறியது. ஏரோது மரித்தபின்பு, கர்த்தருடைய தூதன் எகிப்திலே யோசேப்புக்குக் கனவில் தோன்றி: “நீ எழுந்து, பிள்ளையையும், தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்திற்குப் போ; பிள்ளையின் உயிரையெடுக்கத் தேடினவர்கள் மரித்துப்போனார்கள்” என்றான்.

மத்தேயு 2:16-20 பரிசுத்த பைபிள் (TAERV)

ஞானிகள் தன்னைச் சந்திக்காமல் சென்றுவிட்டதை அறிந்த ஏரோது மிகுந்த கோபமுற்றான். குழந்தை பிறந்த காலத்தை ஏரோது ஞானிகளிடமிருந்து அறிந்திருந்தான். இதற்குள் இரண்டு வருடங்களாகி இருந்தன. எனவே, பெத்லகேமிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள எல்லா ஆண் குழந்தைகளையும் கொல்ல ஏரோது ஆணையிட்டான். ஆகவே, இரண்டும் அதற்குக் குறைவான வயதுடையதுமாகிய எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றுவிட ஆணையிட்டான். தீர்க்கதரிசி எரேமியாவின் மூலமாக தேவன் கீழ்க்கண்டவாறு சொன்னது நடந்தேறியது. “ராமாவிலே ஒரு குரல் கேட்டது. துக்கத்தின் மிகுதியில் வந்த கதறல் அது. தன் குழந்தைகளுக்காக அழுகிறாள், ராகேல். அவளைத் தேற்ற முடியாது, ஏனெனில் அவளது குழந்தைகள் இறந்துவிட்டன.” ஏரோது இறந்தபின், யோசேப்பின் கனவில் கர்த்தருடைய தூதன் ஒருவன் தோன்றினான். இது யோசேப்பு எகிப்தில் இருக்கும்போது நடந்தது. தூதன் அவனிடம், “எழுந்திரு! குழந்தையையும் அதன் தாயையும் அழைத்துக் கொண்டு இஸ்ரவேலுக்குச் செல். ஏனெனில் குழந்தையைக் கொல்ல முயன்றவர்கள் இப்பொழுது இறந்துவிட்டனர்” என்றான்.