மத்தேயு 2

2
அறிஞர்கள் வருகை
1யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தபின், ஏரோது அரசனாக இருந்தபொழுது, கிழக்கிலிருந்து அறிஞர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். 2அவர்கள், “யூதருக்கு அரசனாகப் பிறந்தவர் எங்கே இருக்கிறார்? நாங்கள் அவருடைய நட்சத்திரத்தைக் கிழக்கிலே கண்டோம். அவரை வழிபட வந்திருக்கிறோம்” என்றார்கள்.
3ஏரோது அரசன் இதைக் கேட்டபோது, அவனும் அவனோடுகூட எருசலேம் மக்கள் எல்லோரும் கலக்கமடைந்தார்கள். 4அப்பொழுது அவன் எல்லா தலைமை ஆசாரியர்களையும், மோசேயின் சட்ட ஆசிரியர்களையும் ஒன்றுகூட்டி, “கிறிஸ்து எங்கே பிறப்பார்?” எனக் கேட்டான். 5அவர்களோ, “யூதேயாவிலுள்ள பெத்லகேமில்” என்றார்கள், “ஏனெனில் இறைவாக்கினன் எழுதியிருப்பது இதுவே:
6“ ‘யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேமே,
யூதாவை ஆளுபவர்களில் நீ அற்பமானவனல்ல;
ஏனெனில், உன்னிலிருந்து ஆளுநர் ஒருவர் வருவார்.
அவர் எனது மக்களான இஸ்ரயேலுக்கு மேய்ப்பராயிருப்பார்,’#2:6 மீகா 5:2,4
என பதிலளித்தார்கள்.
7அதற்குப் பின்பு ஏரோது அறிஞர்களை இரகசியமாய் அழைத்து, நட்சத்திரம் தோன்றிய சரியான நேரத்தை குறித்து அவர்களிடம் கவனமாய்க் கேட்டு அறிந்துகொண்டான். 8ஏரோது அவர்களிடம், “நீங்கள் போய் கவனமாய் விசாரித்து குழந்தையைத் தேடுங்கள். அவரைக் கண்டதும், நானும் போய் அவரை வழிபடும்படி, உடனே எனக்கும் அறிவியுங்கள்” என்று சொல்லி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பினான்.
9அரசன் கூறியதைக் கேட்டபின், அவர்கள் தங்கள் வழியே சென்றார்கள். அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம், அவர்களுக்கு முன்னாகச் சென்றது. அது குழந்தை இருக்கும் இடம்வரை வந்து, அதற்கு மேலாக நின்றது. 10அவர்கள் நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள். 11அவர்கள் வீட்டிற்குள் நுழைந்து, குழந்தை அதன் தாயாகிய மரியாளுடன் இருக்கக் கண்டு, தரையில் விழுந்து அவரை வழிபட்டார்கள். பின்பு தங்கள் திரவியப் பெட்டியைத் திறந்து தங்கம், நறுமணத்தூள் மற்றும் வெள்ளைப்போளம் ஆகியவற்றைப் பிள்ளைக்குக் காணிக்கையாகக் கொடுத்தார்கள். 12அதற்குப் பின்பு ஏரோதிடம் திரும்பிச் செல்லக்கூடாது என அவர்கள் கனவில் எச்சரிக்கப்பட்டிருந்ததால், தங்கள் நாட்டிற்கு வேறு வழியாய்த் திரும்பிச் சென்றார்கள்.
எகிப்திற்குத் தப்பிச் செல்லுதல்
13அறிஞர்கள் திரும்பிச் சென்றபின் கர்த்தரின் தூதன் ஒருவன் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, “எழுந்திரு! குழந்தையையும் தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்திற்குத் தப்பிப்போ. நான் உனக்குச் சொல்லும்வரை அங்கேயே தங்கியிரு, ஏனெனில் ஏரோது குழந்தையைக் கொல்வதற்காக வகைதேடுகிறான்” என்று சொன்னான்.
14உடனே யோசேப்பு எழுந்திருந்து, குழந்தையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு இரவு நேரத்தில் எகிப்திற்குப் புறப்பட்டுச் சென்றான்; 15அவன் ஏரோது இறக்கும்வரை அங்கேயே இருந்தான். இவ்வாறு கர்த்தர் தனது இறைவாக்கினன் மூலம், “எகிப்திலிருந்து நான் என் மகனை அழைத்தேன்”#2:15 ஓசி. 11:1 என்று கூறியிருந்தது நிறைவேறியது.
16ஏரோது தான் அறிஞர்களால் ஏமாற்றப்பட்டதை அறிந்தபொழுது, கடுங்கோபம் கொண்டான். அதனால் அவன் தான் அறிஞர்களிடம் கேட்டறிந்த காலத்தின்படி, பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ள இரண்டு வயதிற்குட்பட்ட எல்லா ஆண் குழந்தைகளையும் கொலைசெய்தான். 17அப்பொழுது இறைவாக்கினன் எரேமியா மூலமாகக் கூறப்பட்டது நிறைவேறியது:
18“ராமாவிலே ஒரு குரல் கேட்கிறது,
அழுகையும் பெரும் புலம்பலும் கேட்கின்றன,
ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுகிறாள்.
அவர்களை இழந்ததினால்,
ஆறுதல் பெற மறுக்கிறாள்.”#2:18 எரே. 31:15
நாசரேத்திற்குத் திரும்புதல்
19ஏரோது இறந்தபின், கர்த்தருடைய தூதன் எகிப்தில் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, 20“எழுந்திரு, குழந்தையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரயேல் நாட்டுக்குப் போ; குழந்தையின் உயிரையெடுக்கத் தேடினவர்கள் இறந்துவிட்டார்கள்” என்றான்.
21எனவே அவன் குழந்தையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரயேல் நாட்டிற்குச் சென்றான். 22ஆனால் அர்கெலாயு தனது தகப்பனான ஏரோதுவின் இடத்தில், யூதேயாவில் ஆட்சி செய்வதை யோசேப்பு கேள்விப்பட்டபோது, அங்கே போகப் பயந்தான். அப்பொழுது யோசேப்பு கனவிலே எச்சரிக்கப்பட்டபடியால் அப்பகுதியைவிட்டு கலிலேயா மாவட்டத்திற்குப் போனான். 23அங்கு நாசரேத் எனப்படும் ஊருக்குச் சென்று அங்கே குடியிருந்தான். எனவே, “இயேசு நசரேயன் என அழைக்கப்படுவார்” என இறைவாக்கினர்மூலம் சொல்லப்பட்டது இவ்வாறு நிறைவேறியது.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

மத்தேயு 2: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்