மத்தேயு 2:1-11
மத்தேயு 2:1-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஏரோதுராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ளவந்தோம் என்றார்கள். ஏரோது ராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடுங்கூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள். அவன் பிரதான ஆசாரியர் ஜனத்தின் வேதபாரகர் எல்லாரையும் கூடிவரச்செய்து: கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பாரென்று அவர்களிடத்தில் விசாரித்தான். அதற்கு அவர்கள்: யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார்; அதேனென்றால்: யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது என்றார்கள். அப்பொழுது ஏரோது, சாஸ்திரிகளை இரகசியமாய் அழைத்து, நட்சத்திரம் காணப்பட்ட காலத்தைக்குறித்து அவர்களிடத்தில் திட்டமாய் விசாரித்து: நீங்கள் போய், பிள்ளையைக்குறித்துத் திட்டமாய் விசாரியுங்கள்; நீங்கள் அதைக் கண்டபின்பு, நானும் வந்து அதைப் பணிந்துகொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பினான். ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுப் போகையில், இதோ, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது. அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள். அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.
மத்தேயு 2:1-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தபின், ஏரோது அரசனாக இருந்தபொழுது, கிழக்கிலிருந்து அறிஞர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். அவர்கள், “யூதருக்கு அரசனாகப் பிறந்தவர் எங்கே இருக்கிறார்? நாங்கள் அவருடைய நட்சத்திரத்தைக் கிழக்கிலே கண்டோம். அவரை வழிபட வந்திருக்கிறோம்” என்றார்கள். ஏரோது அரசன் இதைக் கேட்டபோது, அவனும் அவனோடுகூட எருசலேம் மக்கள் எல்லோரும் கலக்கமடைந்தார்கள். அப்பொழுது அவன் எல்லா தலைமை ஆசாரியர்களையும், மோசேயின் சட்ட ஆசிரியர்களையும் ஒன்றுகூட்டி, “கிறிஸ்து எங்கே பிறப்பார்?” எனக் கேட்டான். அவர்களோ, “யூதேயாவிலுள்ள பெத்லகேமில்” என்றார்கள், “ஏனெனில் இறைவாக்கினன் எழுதியிருப்பது இதுவே: “ ‘யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேமே, யூதாவை ஆளுபவர்களில் நீ அற்பமானவனல்ல; ஏனெனில், உன்னிலிருந்து ஆளுநர் ஒருவர் வருவார். அவர் எனது மக்களான இஸ்ரயேலுக்கு மேய்ப்பராயிருப்பார்,’” என பதிலளித்தார்கள். அதற்குப் பின்பு ஏரோது அறிஞர்களை இரகசியமாய் அழைத்து, நட்சத்திரம் தோன்றிய சரியான நேரத்தை குறித்து அவர்களிடம் கவனமாய்க் கேட்டு அறிந்துகொண்டான். ஏரோது அவர்களிடம், “நீங்கள் போய் கவனமாய் விசாரித்து குழந்தையைத் தேடுங்கள். அவரைக் கண்டதும், நானும் போய் அவரை வழிபடும்படி, உடனே எனக்கும் அறிவியுங்கள்” என்று சொல்லி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பினான். அரசன் கூறியதைக் கேட்டபின், அவர்கள் தங்கள் வழியே சென்றார்கள். அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம், அவர்களுக்கு முன்னாகச் சென்றது. அது குழந்தை இருக்கும் இடம்வரை வந்து, அதற்கு மேலாக நின்றது. அவர்கள் நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள். அவர்கள் வீட்டிற்குள் நுழைந்து, குழந்தை அதன் தாயாகிய மரியாளுடன் இருக்கக் கண்டு, தரையில் விழுந்து அவரை வழிபட்டார்கள். பின்பு தங்கள் திரவியப் பெட்டியைத் திறந்து தங்கம், நறுமணத்தூள் மற்றும் வெள்ளைப்போளம் ஆகியவற்றைப் பிள்ளைக்குக் காணிக்கையாகக் கொடுத்தார்கள்.
மத்தேயு 2:1-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, “யூதர்களுக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைத் தொழுதுகொள்ள வந்தோம்” என்றார்கள். ஏரோதுராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடுகூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள். அவன் பிரதான ஆசாரியர்கள், மக்களின் வேதபண்டிதர்கள் எல்லோரையும் கூடிவரச்செய்து: “கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பாரென்று” அவர்களிடத்தில் விசாரித்தான். அதற்கு அவர்கள்: “யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார்; அது ஏனென்றால்: யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் மக்களாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது” என்றார்கள். அப்பொழுது ஏரோது, சாஸ்திரிகளை இரகசியமாக அழைத்து, நட்சத்திரம் காணப்பட்ட காலத்தைக்குறித்து அவர்களிடத்தில் திட்டமாக விசாரித்து: நீங்கள் போய், பிள்ளையைக்குறித்துத் திட்டமாக விசாரியுங்கள்; நீங்கள் பிள்ளையைக் கண்டபின்பு, நானும் வந்து பிள்ளையைப் பணிந்துகொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி, அவர்களை பெத்லகேமுக்கு அனுப்பினான். ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுப் போகும்போது, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த இடத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது. அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள். அவர்கள் அந்த வீட்டிற்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாக விழுந்து பிள்ளையைப் பணிந்துகொண்டு, தங்களுடைய பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் காணிக்கையாக வைத்தார்கள்.
மத்தேயு 2:1-11 பரிசுத்த பைபிள் (TAERV)
யூதேயாவிலுள்ள பெத்லகேம் நகரில் இயேசு பிறந்தார். அவர் ஏரோது மன்னன் காலத்தில் பிறந்தார். அதன் பின்பு இயேசு பிறந்தவுடன், சில ஞானிகள் எருசலேமுக்குக் கிழக்கிலிருந்து வந்தனர். அவர்கள் மக்களைப் பார்த்து, “புதிதாகப் பிறந்த யூதர்களின் ராஜாவான குழந்தை எங்கே? அவர் பிறந்துள்ளதை அறிவிக்கும் நட்சத்திரத்தைக் கண்டோம். கிழக்கு திசையில் அந்நட்சத்திரம் மேலெழுவதைக் கண்டோம். நாங்கள் அவரை வணங்க வந்துள்ளோம்” என்று சொன்னார்கள். ஏரோது மன்னன் யூதர்களின் இப்புதிய அரசரைப்பற்றிக் கேள்வியுற்றான். அதைக் கேட்டு ஏரோது மன்னனும் எருசலேம் மக்கள் அனைவரும் கலக்கம் அடைந்தனர். ஏரோது தலைமை ஆசாரியர் மற்றும் வேதபாரகரின் கூட்டத்தைக் கூட்டினான். கிறிஸ்து எங்கே பிறந்திருப்பார் என அவர்களைக் கேட்டான். அதற்கு அவர்கள், “யூதேயாவிலுள்ள பெத்லகேமில் பிறப்பார். ஏனெனில், “‘யூதேயாவிலுள்ள பெத்லகேமே, உனக்கு யூதேயாவின் ஆட்சியாளர்களுக்கிடையில் முக்கியத்துவம் உண்டு. ஆம், உன்னிலிருந்து ஒரு பிரபு தோன்றுவார். அவர் இஸ்ரவேல் என்னும் என் மக்களை வழி நடத்துவார்’ என்று தீர்க்கதரிசி வேத வாக்கியங்களில் எழுதியுள்ளார்” என்று கூறினார்கள். பின், கிழக்கிலிருந்து வந்த ஞானிகளுடன் ஏரோது இரகசியமாகப் பேசி அவர்கள் முதன் முதலில் நட்சத்திரத்தைக் கண்ட காலத்தை அவர்களிடமிருந்து அறிந்தான். ஏரோது அந்த ஞானிகளிடம், “நீங்கள் சென்று அந்தக் குழந்தையைக் கவனமாகத் தேடுங்கள். நீங்கள் அக்குழந்தையைக் கண்டதும் என்னிடம் வந்து சொல்லுங்கள். பின் நானும் சென்று அக்குழந்தையை வணங்க இயலும்” என்று கூறி அவர்களை பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான். மன்னன் இவ்வாறு கூறியதைக் கேட்ட ஞானிகள் அங்கிருந்து செல்லும்போது அவர்கள் கிழக்கில் தாங்கள் கண்ட அதே நட்சத்திரத்தை மீண்டும் பார்த்தனர். ஞானிகள் அந்த நட்சத்திரத்தைப் பின்தொடர்ந்தனர். நட்சத்திரம் அவர்களுக்கு முன்னாலேயே சென்று குழந்தை பிறந்த இடத்திற்கு மேலாக வந்து நின்றது. நட்சத்திரத்தைக் கண்ட ஞானிகள் மிகவும் மகிழ்ந்தனர். குழந்தை இருந்த வீட்டிற்கு ஞானிகள் வந்தனர். அவர்கள் குழந்தையை அதன் தாய் மரியாளுடன் பார்த்தனர். ஞானிகள் குழந்தையைத் தாழவிழுந்து வணங்கினர். குழந்தைக்காகத் தாங்கள் கொண்டு வந்த பரிசுப் பொருட்களை எடுத்து வைத்தனர். அவர்கள் தங்கத்தாலான பொருட்களையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளம் முதலான வாசனைப் பொருட்களையும் கொடுத்தனர்.